காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு





39. காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு.


ஓத அரிய வித்தை வந்தால் உரியசபைக்கு
     அழகு ஆகும்; உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவு வந்தால் இனிய குணங்-
     களுக்கு அழகாய் இருக்கும் அன்றோ?
நீதிபெறு தண்டலையார் திருநீறு
     மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும்;
காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே
     அழகாகிக் காணும் தானே.


இதன் பொருள் ---

காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே அழகு ஆகிக் காணும் --- காதில் அழகிய கடுக்கனை அணிந்தால் முகத்திற்கு அழகு தரும்.

நீதி பெறு தண்டலையார் திருநீறு மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும் --- அறம் நிறைந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் உழுந்தருளி உள்ள இறைவரின் திருநீறு தன்னை அணிந்தால், உடம்பு முற்றிலும் அழகாகத் தோன்றும்..

(அது போவே)

ஓத அரிய வித்தை வந்தால் உரிய சபைக்கு அழகு ஆகும் ---- புகழ்ந்து மாளாத மிகுந்த கல்வி அறிவு ஒருவருக்கு இருக்குமானால், அந்தக் கல்விக்குத் தக்க அவையில் அழகாய் இருக்கும்;
  
உலகில் யார்க்கும் ஈதலுடன் அறிவு வந்தால், இனிய குணங்களுக்கு அழகாய் இருக்கும் அன்றோ --- உலகினில் தோன்றிய எவருக்கும் வறியவருக்குக் கொடுத்து உதவும் ஈகைப் பண்புடன், அறிவும் கூடினால், அப்படிப்பட்டவரிடம் பொருந்தி உள்ள மற்ற இனிய பண்புகளுக்கு அழகாக அமையும் அல்லவா?,


விளக்கம் --- நூல்களை ஓதிப் பெறுவதால் உண்டாகின்ற அறிவானது, பிறர் வியக்கும் அளவுக்கு அமைவது சிறப்பு உடையது தான். வியக்க வைக்கும் அறிவை விட, பயன் விளையும் அறிவே சிறந்தது என்பதை,

அறிவினால் அகுவது உண்டோ? பிறிதின் நோய்
தன் நோய்போல் போற்றாக் கடை

என்ற திருக்குறளின் மூலம் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

பிற உயிர் படும் துன்பத்தைத் தான்படும் துன்பமாக மதித்து நடந்துகொள்ளாத போது, ஒருவன் பெற்ற அறிவால் பயன் விளைவது இல்லை என்பது நாயனார் காட்டிய அருள்நெறி.

திருமருகல் என்னும் திருத்தலத்தில் பாம்பு தீண்டி இறந்தான் ஒரு வணிக மகன். அவனுடன் வந்தவள் துணை இன்றிப் புலம்புகின்றாள். திருத்தல வழிபாட்டுக்காகத் திருக் கோயிலுக்கு வந்த திருஞானசம்பந்தப் பெருமானின் திருச் செவிகளில் அந்த அபலைப் பெண்ணின் அழுகுரல் விழுகின்றது. திருக்கோயிலுக்குச் செல்லாமல், நேரே அந்தப் பெண் அழுது புலம்புகின்ற மடத்திற்குச் சென்று, அவளது நிலையை அறிந்து, இறைவரை நோக்கி, "திருமருகல் பெருமானே! இந்தப் பெண் வருந்துவது தகுமோ?" என்று, "சடையாய் எனுமால்" என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். பாம்பு தீண்டி இறந்த வணிகமகன் உயிர் பெற்று எழுந்தான். இருவருக்கும் திருமணத்தை நிகழ்த்தினார் திருஞானசம்பந்தப் பெருமான். பிற உயிர்கள் படும் துன்பத்தைத் தீர்ப்பதே சிறந்த இறைவழிபாடு ஆகும் என்பதை உணர்த்தியவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

உயிர்கள் படும் துன்பத்தை அனுபவமாக உணர்வது உயிர் அனுபவம். அந்த உயிர் அனபவம் இருந்தால் தான், அருள் அனுபவம் வாய்க்கும் என்று அருளினார் வள்ளல்பெருமான்.

அது போலவே, பாம்பு தீண்டி இறந்த அப்பூதி அடிகளின் மகனை இறையருளால் உயிர்ப்பித்தார் அப்பர் பெருமான்.

முதலை உண்ட பிள்ளையை, அதன் வாயில் இருந்து இறையருளால் வரவழைத்துத் தந்து, மகனை இழந்து வருந்திய பெற்றோரை மகிழ்வித்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

எனவே தான், ஓத அரிய வித்தை வந்தால் சபைக்கு அழகாக இருக்கும் என்று சொல்லிய ஆசிரியர், அந்த அறிவோடு ஈகைக் குணமும் பொருந்தி இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்றார்.

ஆண்கள் காதில் கடுக்கன் அணியும் வழக்கம் அக் காலத்தில் இருந்தது. கடுக்கன் அணிந்தால் முக அழகு மிக்கு விளங்கும் என்றார். அந்த முகத்திலே திருநீற்றை அணிந்தால் உடம்பு முழுதுமே அழகாக விளங்கும் என்றார். "காண இனியது நீறு", "கவினைத் தருவது நீறு", "பூச இனியது நீறு", பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு" என்று திருஞானசம்பந்தப் பெருமான், திருநீற்றின் பெருமைகளை வைத்துத் திருப்பதிகம் பாடி உள்ளதை ஓதி உணர்க.

கருத்து --- கற்ற கல்வியால் அறிவு அழகு பெறும். அறிவோடு கூடிய ஈகைப் பண்பால் ஒருவனுக்கு எல்லாக் குணங்களும் அழகு பெறும். காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு தரும். முகத்தில் திருநீறு பூசினால், உடம்பே அழகு பெறும்.

‘காதுக்குக் கடுக்கன், முகத்துக்கு அழகு' என்பது பழமொழி.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...