42. ‘காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்'
நேற்று
உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ?
ஆதலினால், நினைந்த போதே
ஊற்று
உள்ள பொருள் உதவி, அறம் தேடி
வைப்பது அறிவுடைமை அன்றோ?
கூற்று
உள்ளம் மலையவரும் தண்டலையா
ரே! சொன்னேன்! குடபால் வீசும்
காற்றுஉள்ள
போது எவரும் தூற்றிக்கொள்-
வது நல்ல கருமம் தானே?
இதன்
பொருள் ---
கூற்று உள்ளம் மலையவரும் தண்டலையாரே --- மார்க்கண்டேயருக்காக எமனுடைய
மனம் கலங்க வந்து அருளிய திருத்தண்டலை
இறைவரே!
எவரும் குடபால் வீசும் காற்று உள்ளபோது
தூற்றிக்கொள்வது நல்ல கருமம் தானே --- யாவரும் மேலைக்காற்று
வீசும்போதே தூற்று வேண்டுவதைத்
தூற்றிக்கொள்வது
நல்ல நல்ல செயல் ஆகும் அன்றோ?
நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ ---
நேற்று இருந்தவர் இன்று இருப்பது உறுதி அல்லவே?,
ஆதலினால் --- ஆமையால்,
நினைந்த போதே --- உள்ளத்தில் எண்ணம் உண்டான
போதே,
ஊற்று உள்ள பொருள் உதவி --- வருகின்ற பொருளைப்
பிறர்க்கு உதவி,
அறம் தேடி வைப்பது அறிவுடைமை அன்றோ ---
அறத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வது அறிவுடைமை ஆகும் அல்லவா?
விளக்கம் ---
ஊற்று உள்ள பொருள் --- வருவாயாக உள்ள பொருள்.
செலவழிப்பதற்கு ஆதரவாக உள்ள பொருள்.
மலைதல் --- கலங்குதல்.
கூற்று --- உடலில் இருந்து உயிரைக் கூறுபடுத்துகின்ற
இயமன்.
குடபால் --- மேற்குத் திசை.
"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். கரும்பு
உள்ளபோதே ஆடிக் கொள்" என்பன பழமொழிகள்.
No comments:
Post a Comment