பெருங்குடி - 0711. தலங்களில் வரும்கன





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தலங்களில் வரும் (பெருங்குடி)

முருகா!
பிறந்தேன் இறந்தேன் என்று ஆகாமல்,
இந்தப் பிறவியில் உமது திருவடியைப் பெற அருள்.


தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
     தனந்தன தனந்தன ...... தனதான


தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
     தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ்

சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
     தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந்

துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர்
     தொடுந்தொழி லுடன்தம ...... க்ரகபாரஞ்

சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
     சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ

இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
     ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி

இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
     எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே

பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
     ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலூரா

பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
     பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர்
     தழைந்த உதரம் திகழ் ...... தச மாதம்

சமைந்தனர், பிறந்தனர், கிடந்தனர், ருந்தனர்,
     தவழ்ந்தனர், நடந்தனர், ...... சிலகாலம்

துலங்கு நல பெண்களை முயங்கினர், மயங்கினர்,
     தொடும் தொழிலுடன் தம ...... க்ரகபாரம்

சுமந்தனர், மைந்தனர், குறைந்தனர், இறந்தனர்,
     சுடும் பினை எனும் பவம் ...... ஒழியேனோ?

இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள்
     இல் எங்கணும் இலங்கு என ...... முறை ஓதி,

இடுங்கனல், குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட,
     எழுந்தருள் முகுந்தன் நல் ...... மருகோனே!

பெலம் கொடு விலங்கலும் நலங்க, அயில் கொண்டு எறி
     ப்ரசண்ட கர! தண்தமிழ் ...... வயலூரா!

பெரும்பொழில் கரும்புகள், ரம்பைகள் நிரம்பிய
     பெருங்குடி மருங்கு உறை ...... பெருமாளே.


பதவுரை

இலங்கையில் இலங்கிய இலங்களுள் --- இலங்கையில் விளங்கிய இல்லங்களில்,

இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என --- விளங்கவேண்டிய அருள் இல்லாத எல்லா இல்லங்கள் எங்கும் விளங்குவாயாக என்னும்

முறை ஓதி --- முறையை அறிந்து,

இடும் கனல் குரங்கொடு --- தீ மூளும்படிச் செய்த குரங்காகிய அனுமனோடு,

நெடும்கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தன் --- பெரிய கடலும் நடுக்கம் கொள்ளும்படியாக அங்கு எழுந்தருளிய சீராமபிரானுடைய
  
நல் மருகோனே --- நல்ல திருமருகரே!

      பெலம் கொடு --- வலிமையோடு,

     விலங்கலும் நலங்க --- கிரவுஞ்ச மலை பொடியாகும்படி,

     அயில் கொண்டு எறி ப்ரசண்டகர --- வேலாயுதத்தை எறிந்த வீரம் மிக்கவரே!

     தண்தமிழ் வயலூரா --- தண்தமிழ் விளங்கும் வயலூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவரே!

      பெரும் பொழில் --- பெரிய சோலைகளும்,

     கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய --- கரும்பும் வாழையும் வளர்ந்துள்ள

     பெருங்குடி மருங்கு உறை பெருமாளே --- பெருங்குடி என்னும் திருலத்துக்கு அருகில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      தலங்களில் வரும் கன இலம் கொடு --- பூமியில் உள்ள தலங்களில் இருக்கிற பெருமைக்குரிய வீட்டைத் தமது வாழிடமாகக் கொண்டிருந்த

       மடந்தையர் தழைந்த உதரம் --- பெண்களின் தழைத்த வயிற்றில்

     திகழ் தச மாதம் சமைந்தனர் --- செம்மையாக பத்து மாதங்கள் வளர்ந்து இருந்தார்.

      பிறந்தனர் --- பின்னர் பூமியில் குழந்தையாக வந்து பிறந்தார்,

     கிடந்தனர் --- படுக்கையிலும், தாயர் மடித்தலத்தும் படுத்துக் கிடந்தார்,

     இருந்தனர் --- படுக்கையிலும், தாயரின் மடித்தலத்தும் இருந்தார்,

     தவழ்ந்தனர் --- தவழ்ந்து சென்றார்,

     நடந்தனர் --- நடந்து சென்றார்,

      சில காலம் ---  பின்னர் சில காலம்,

     துலங்கு நல பெண்களை முயங்கினர் --- அழகும் நற்குணமும் பொருந்திய பெண்களோடு கூடி இருந்தார்,

     மயங்கினர் --- மோகத்தில் மயங்கி இருந்தார்,

      தொடும் தொழிலுடன் --- மேற்கொண்ட தொழிலைச் செய்து, வருவாயை ஈட்டி,

     தம க்ரகபாரம் சுமந்தனர் --- தமது இல்லறப் பொறுப்பைச் சுமந்தார்,

      அமைந்தனர் --- அதிலேயே பொருந்தி வாழ்ந்து இருந்தார்,

     குறைந்தனர் இறந்தனர் --- பின்பு தமது பொலிவு, வலிமை, வளமை எல்லாம் குன்றி வாழ்நாள் குறைந்து இறந்தது பிணம் ஆனார்,

      சுடும் பினை --- இனி, சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று பிணத்தைச் சுடுங்கள்

     எனும் பவம் ஒழியேனோ --- என்று சொல்லும்படியான இந்தப் பிறவியை ஒழிய மாட்டேனோ?


பொழிப்புரை


இலங்கையில் விளங்கிய இல்லங்களில், விளங்கவேண்டிய அருள் இல்லாத எல்லா இல்லங்கள் எங்கும் விளங்குவாயாக என்னும் முறையை அறிந்து, தீ மூளும்படிச் செய்த குரங்காகிய அனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளும்படியாக அங்கு எழுந்தருளிய சீராமபிரானுடைய நல்ல திருமருகரே!

         வலிமையோடு, கிரவுஞ்ச மலையோடு மற்ற மலைகளும், பொடியாகும்படி, வேலாயுதத்தை எறிந்த வீரம் மிக்கவரே!

     தண்தமிழ் விளங்கும் வயலூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவரே!

         பெரிய சோலைகளும், கரும்பும் வாழையும் வளர்ந்துள்ள பெருங்குடி என்னும் திருலத்துக்கு அருகில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

        பூமியில் உள்ள தலங்களில் இருக்கிற பெருமைக்குரிய வீட்டைத் தமது வாழிடமாகக் கொண்டிருந்த பெண்களின் தழைத்த வயிற்றில் செம்மையாக பத்து மாதங்கள் வளர்ந்து இருந்தார். பின்னர் பூமியில் குழந்தையாக வந்து பிறந்தார்.
படுக்கையிலும், தாயர் மடித்தலத்தும் படுத்துக் கிடந்தார். படுக்கையிலும், தாயரின் மடித்தலத்தும் இருந்தார். தவழ்ந்து சென்றார். நடந்து சென்றார். பின்னர் சில காலம், அழகும் நற்குணமும் பொருந்திய பெண்களோடு கூடி இருந்தார். மோகத்தில் மயங்கி இருந்தார். மேற்கொண்ட தொழிலைச் செய்து, வருவாயை ஈட்டி, தமது இல்லறப் பொறுப்பைச் சுமந்தார். அதிலேயே பொருந்தி வாழ்ந்து இருந்தார். பின்பு தமது பொலிவு, வலிமை, வளமை எல்லாம் குன்றி வாழ்நாள் குறைந்து இறந்தது பிணம் ஆனார். இனி, சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று பிணத்தைச் சுடுங்கள் என்று சொல்லும்படியான இந்தப் பிறவியை ஒழிய மாட்டேனோ?

 
விரிவுரை
 

தலங்களில் வரும் கன இலம் கொடு ---

கனம் - பெருமை. இல்லம் என்னும் சொல், இலம் என்று இடைக் குளைந்து வந்தது.

மடந்தையர் தழைந்த உதரம் ---

மடமை - அழகு, மென்மை. 

தழைத்தல் - செழித்தல், பூரித்தல், வளர்ச்சி அடைதல்.

உதரம் - வழிறு.


திகழ் தச மாதம் சமைந்தனர் ---

திகழ் - விளங்குதல், சிறப்பு உறுதல், உள்ளடக்கிக் கொள்ளுதல்.

தச மாதம் - பத்து மாதங்கள்.

சமைதல் - ஆயத்தம் ஆதல், அமைதல், பொருந்தி இருத்தல், நிரம்புதல்.

கிடந்தனர், இருந்தனர் ---

படுக்கையிலும், தாயர் மடித்தலத்தும் படுத்துக் கிடந்தார், அமர்ந்து இருந்தார்.

தவழ்ந்தனர் ---

பின்னர் தவழ்ந்து சென்றார்.

நடந்தனர் ---

தளர்நடை இட்டுச் சென்றார்,

துலங்கு நல பெண்களை முயங்கினர், மயங்கினர் ---

அழகும் நற்குணமும் பொருந்திய பெண்களோடு கூடி, அவர் தரும் மோக இன்பத்தில் மயங்கி இருந்தார்,

தொடும் தொழிலுடன், தம க்ரகபாரம் சுமந்தனர், அமைந்தனர் ---

க்ரகம் - இல்லம். க்ரக பாரம் - இல்லறப் பொறுப்புக்கள்.

குறைந்தனர் இறந்தனர் ---

பின்பு தமது டல் பொலிவு, உடல் வலிமை, செல்வ வளமை குன்றி வாழ்நாள் குறைந்து இறந்தது பிணம் ஆனார்,

சுடும் பினை ---

பின்னை என்னும் சொலு இடைகு குறைந்து பினை என வந்தது.

எனும் பவம் ஒழியேனோ ---

இப்படியாகச் சொல்லப்படுகின்ற நிலையை உடையது இந்த மானிடப் பிறவி. இன்பம் என்று நினைத்து அறிவு மயக்கம் கொண்டு, துன்பங்களையே அனுபவித்து வருவது மானிட இயல்பு. புலன் வழியே வாழும் மயக்கத்தை உடையது.

பின்வரும் அருட்பாடல்களால் பிறவியானது துன்பம் நிறைந்தது என்பது தெளிவாகும்.

பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால்,
     ப்ரியம் கூர வந்து ...... கரு ஊறி,
பிறந்தார், கிடந்தார், ருந்தார், தவழ்ந்தார்,
     நடந்தார், தளர்ந்து ...... பிணம் ஆனார்,

அருங்கான் மருங்கே எடுங்கோள், சுடுங்கோள்,
     அலங்காரம் நன்று ...... இது என மூழ்கி,
அகன்று,  ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால்
     அலந்தேனை, அஞ்சல் ...... என வேணும்.   --- திருப்புகழ்.

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம்இல் கிருமிச் செலவினில் பிழைத்தும்,
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்,
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்,
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்,
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்,
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்,
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்,
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்,
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்,
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்,
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயர் இடைப் பிழைத்தும்,
ஆண்டுகள் தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்,
காலை மலமொடு, கடும்பகல் பசி, நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்,
கருங்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கி, உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடைபரந்து,
ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்,
பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவா இடைப் பிழைத்தும்,
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்,
நல்குரவு என்னுந் தொல்விடம் பிழைத்தும்,
புல்வரம்பு ஆகிய பல்துறை பிழைத்தும்...  ---  திருவாசகம்.


கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய் எனும்
தூய்மையில் குப்பை தொலைவு இன்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கி, பொருதிறல்
மைஇருள் நிறத்து மதன்உடை அடுசினத்து
ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,
அன்புகொடு மெழுகி, அருள்விளக்கு ஏற்றி,
துன்ப இருளைத் துரந்து, முன்புறம்
மெய் எனும் விதானம் விரித்து, நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப்
பாழ் அறை உனக்குப் பள்ளியறை ஆக்கி,
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
எந்தை நீ இருக்க இட்டனன், இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதி வெள்ளத்து
நுரை எனச் சிதறி இருசுடர் மிதப்ப,
வரைபறித்து இயங்கும் மாருதம் கடுப்ப,
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இது எனக் கலங்கா நின்றுழி,
மற்று அவர் உய்யப் பற்றிய புணையாய்
மிகநனி மிதந்த புகலி நாயக!
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்க! நின்
செல்வச் சிலம்பு மெல் என மிழற்ற,
அமையாக் காட்சி இமயக்
கொழுந்தையும் உடனே கொண்டு இங்கு
ழுந்தருளத் தகும் எம்பெருமானே.        ---  திருக்கழுமல மும்முணிக் கோவை.

சேவித்தும், சென்றுஇரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,
பாவித்தும், பார்ஆண்டும், பாட்டு இசைத்தும் - போவிப்பம்,
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.                ---  நல்வழி.

வயிற்றுப் பசியின் கொடுமையால், பிறரை வணங்கியும், பலர் இடத்தில் சென்று யாசகம் செய்தும்,தெளிந்த நீரை உடைய கடலைக் கடந்து வேற்று நாடுகளுக்குச் சென்றும், அற்பர்களைப் பெரியவர்களாகப் பாவித்தும், உலகை ஆண்டும், செல்வம் உடையோரைப் புகழ்ந்து பட்டுப் பாடியும், படி அரிசிக்காகவே நாம் இந்த உடம்பினைக் கொண்டு வீணில் உழைத்துக் காலத்தைக் கடத்துகின்றோம்.

உண்பது நாழி, உடுப்பது நான்குமுழம்,
எண்பது கோடி நினைந்து எண்ணுவன, - கண் புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.  ---  நல்வழி.

உண்பது ஒரு நாழி அரிசிச் சோறே ஆகும். உடுப்பது நான்கு முழ அளவு உள்ள உடையே ஆகும். இப்படி இருக்க, மனத்தில் நினைத்து எண்ணுகின்ற காரியங்களோ எண்பது கோடிக்கும் மேலாக உள்ளன. எனவே, மனக்கண் குருடாக இருக்கின்ற மனிதர்களின் வாழ்க்கையானது, மண்ணால் செய்த பாண்டம் (கொஞ்ச நாளில் உடைந்து, வேறு ஒரு பாண்டத்தை வாங்கி, அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து பயனற்றுப் போவதைப்) போல, சாவும் நாள் வரையிலும் மன அமைதி இல்லாமலேயே கழிகின்றது.

கொள்ளும் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்து அறம்செய்து உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.          --- நன்னெறி.

உயிரைக் கொண்டு செல்கின்ற  கூற்றுவன் நெருங்கும் உன்னரே, மனம் கனிந்து அறங்களைச் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டி வைக்காதவர், வெள்ளம் பெருகி வரும்போது என்ன செய்ய முடியும்.


பன்னும் பனுவல் பயன்தேர் அறிவு இலார்
மன்னும் அறங்கள் வலிஇலவே, - நல்நுதால்!
காழ்ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ?
தாழ்ஒன்று இலது ஆயின் தான்.               ---  நன்னெறி.

அழகிய நெற்றியை உடையவளே! வயிரம் பொருந்திய உயர்ந்த உயர்ந்த கதவாக இருந்தாலும், பொருந்திய தாழ்ப்பாள் இல்லையானால், அது வலிமை உடையது ஆகாது. அது போல, புகழ்ந்து கூறப்படுகின்ற நூல்களின் பொருளின் பயனை அறியாத அறிவு இல்லாதவர் செய்யும் அறங்கள் பயன் இல்லாதவையே ஆகும்.

ஆசைஎனும் பாசத்தால் ஆடவர்தம் சிந்தைதனை
வீசுமனையாம் தறியில் வீழ்த்தியே, - மாசுபுரி
மாயா மனைவியராம் மாக்கள் மகவென்னும்
நாயால் கடிப்பித்தல் நாடு.                     --- நீதிவெண்பா.

குற்றம் செய்யும் வஞ்சனை செய்பவராகிய தீய மனைவிமார்கள், பெண்ணாசை என்னும் கயிற்றினால் ஆடவர்களின் நெஞ்சமாகிய மிருகங்களை, பெரிய இல்லறம் என்னும் தூணில் கட்டி, குழந்தை குட்டிகள் என்னும் நாய்களால் கடிக்க வைப்பதை நீ ஆராய்ந்து பார்ப்பாயாக.

எனவே, பிறவித் துன்பமானது நீங்கவேண்டுமாயின், இறைவன் திருவடியை மறவாமல் வழிபடவேண்டும்.  பிறவிப் பிணிக்கு மருத்துவராக உள்ள இறைவனை, "பவரோக வயித்தியநாதன்" என்றார் அடிகளார். "கழிவகைப் பவரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதிமருந்து உதவி நிதியே! கனக அம்பல நாத!" என்றார் வள்ளல்பெருமான்.


இப்பி றப்பினில் இணைமலர் கொய்து,நான்
இயல்பொடு அஞ்செழுத்து ஓதித்
தப்பிலாது பொற்கழல்களுக்கு இடாது, நான்
தடமுலையார் தங்கள்
மைப்பு உலாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை,
மலர் அடி இணைகாட்டி
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய
அற்புதம் அறியேனே.                         ---  திருவாசகம்.

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் ககு அய பிரான்அடி பேணார்,
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே. --- திருமந்திரம்.

பிறவியானது இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபடும் பேற்றினைப் பெற்றால், அதுவே இன்பத்தைத் தருவது.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.           ---  அப்பர்.

"அரிது அரிது மானிடராதல் அரிது" என்றபடி பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றவன் அவ்வுயர் பிறவிக்கு ஏற்ப இறை உணர்வு இல்லாது இருப்பானானால், அவன் தோன்றலின் தோன்றாமையே நன்றாம். தோன்றில் புகழொடு தோன்றுக என்னுமாப்போலே, தோன்றில் பிறவிப் பயனை எய்துவிக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு உடையவனாய்த் தோன்றுக. அதுவே மனித்தப்பிறவியின் பயன். அது இல்லையானால், அறிவுக் குறைவு உடைய ஏனைய பிறவிகளாகப் பிறந்திருக்கலாமே.

இதனைத்தான் அப்பர் "இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் சிறப்புடைய இம்மனித்தப் பிறவியும் வேண்டுவதே. காணப்பெறாவிட்டால் இவ்வரிய மானிடப்பிறவியால் பயன் இல்லை. எனவே புல்லாய், பூண்டாய், புழுவாய் விலங்காய், பறவையாய் பிறந்திருக்கலாம் என்று அறிவுறுத்துகிறார். இதனால் பிறவி வேண்டும் என்பது கருத்தல்ல. கிடைத்தற்கரிய பிறவியை அப்பிறவிக்கேற்பப் பயனுடையதாக்குக என்பதே கருத்து.

மேலும் இக்கருத்தை அப்பர் திருநாகைக்காரோணப் பாடல் ஒன்றில்,

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ,ஓர் அம்பால்
செற்றவெம் சிலையர், வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்,
கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்
பெற்றவர் பிறந்தார், மற்றுப் பிறந்தவர் பிறந்து இலாரே.

இறைவன் திருவடியை வணங்கப் பெற்றவர்களே, பிறவியைப் பெற்றவர்கள். மற்றவர்கள் பிறவாத நிலையை உடையவர்களே என்றார்.

இப் படலின் பொருள் ---

மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய் , வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர் . மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார் .

கற்றானை, கங்கைவார் சடையான் தன்னை,
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை,
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம் அன்றே,
மற்று ஆருபம் தன் ஒப்பார் இல்லாதானை,
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானை, பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.              ---  அப்பர்.

இப் பாடலின் பொழிப்புரை ---

எல்லாம் வல்லவன் , கங்கையைத் தாங்கிய நீண்ட சடையன் . ஒரு பக்கத்தில் காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன் . பொருள் அற்றவருக்கும் , தாங்குவார் இல்லாது வருந்துபவருக்கும் , அருளுபவன் . தன்னைத் தவிர வேறு எவரும் தனக்கு ஒப்பில்லாதவன் . தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன் . திருவாரூரிலும் உகந்து தங்கியிருப்பவன் ஆகிய எம்பெருமானை நாம் எல்லாருக்கும் மேலானவன் என்று அறிந்தோம் . ஆதலின் அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .


துறந்தார்தம் தூநெறிக்கண் சென்றேன் அல்லேன்
         துணைமாலை சூட்டநான் தூயேன் அல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசின் அல்லால்
         பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதில்இலங்கைக் கோமான் தன்னைச்
         செறுவரைக்கீழ் அடர்த்துஅருளிச் செய்கை எல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய்
         ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே.  ---அப்பர்.

இப் பாடலின் பொழ்ப்புரை ---

ஆவடுதுறைத் தேவர் பெருமானே ! துறந்தவர் செல்லும் தூய நெறியிலே வாழ்கின்றேன் அல்லேன். உனக்கு இணையான மாலைகளைச் சூட்டும் தூய்மை உடையேன் அல்லேன். உன் திருவருளைப் பற்றிப் பேசியும் அப்படிப் பேசாத நாள்களைப் பயனற்ற நாள்களாகக் கணக்கிட்டும் வாழ்கின்றேன். செறிவாகப் பொருந்திய மதில்களை உடைய இலங்கை அரசனாகிய இராவணனைச் செறிவான கயிலை மலைக்கீழ் நசுக்கிப் பின் அவனுக்கு அருளிய உன் செயல்களை எல்லாம் அறிந்த அடியேனை அஞ்சேல் என்பாயாக .


கல்வாய் அகிலும் கதிர் மாமணியும்
         கலந்து உந்தி வரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுஉறையும்
         நிலவெண்மதி சூடிய நின்மலனே!
நல்வாய் இல் செய்தார் நடந்தார் உடுத்தார்
         நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்றது அறிந்து, அடியேன்
         தொடர்ந்தேன், உய்யப் போவதுஒர் சூழல்சொல்லே.      ---  சுந்தரர்.

இப் பாடலின் பொழிப்புரை ---

மலையிடத்துள்ள அகில்களையும், ஒளியை உடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத்துறையின்கண் என்றும் எழுந்தருளியிருக்கும், நிலவினை உடைய வெள்ளிய பிறையைச் சூடிய மாசற்றவனே! உலகியலில் நின்றோர் அனைவரும், ` நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார் ; இல்லற நெறியிலே ஒழுகினார் ; நன்றாக உண்டார் ; உடுத்தார் ; மூப்படைந்தார் ; இறந்தார் ` என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன். ஆதலின், அடியேன் அச்சொல்லில் இருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

பிறவியின் நோக்கம் அஞ்ஞானத்தை அகற்றுதல். இருள்சேர் இருவினையில் இருந்து விடுதலை பெறுதல். குறைவில் இருந்து நீங்கி நிறைவைப் பெறுதல். குற்றங்களில் இருந்து நீங்கி குணம் பெறுதல். குறைவிலா நிறைவும் கோது இலா அமுதும் ஆகிய இறைவன் திருவடியில் அமைதி பெறுதல்.

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே ---

பெரும் பொழில் - பெரிய சோலைகள்.

அரம்பை - வாழை.

பெருங்குடி என்னும் திருத்தலம் சென்னைக்கு அருகில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளது என்பர் ஒரு சாரார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் வயலூருக்கு அருகில் உள்ள திருத்தலம் என்பர் மற்றொரு சாரார்.

கருத்துரை

முருகா! பிறந்தேன் இறந்தேன் என்று ஆகாமல், இந்தப் பிறவியில் உமது திருவடியைப் பெற அருள்.

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...