திருப்போரூர் - 0723. சீர் உலாவிய





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சீர் உலாவிய (திருப்போரூர்)

முருகா!
அறிவு இழந்து மாதர் மயலில் அழியாமல்,
தேவரீரை வழிபட்டு உய்ய நல்லறிவினை அருளவேண்டும்.


தான தானன தானன தான தானன தானன
     தான தானன தானன ...... தனதான


சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
     சேய சாயல்க லாமதி ...... முகமானார்

தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
     சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி

தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
     சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே

சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
     தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே

காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
     காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே

காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
     கார ணாகரு ணாகர ...... முருகோனே

போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
     பூப சேவக மாமயில் ...... மிசையோனே

போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
     போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சீர் உலாவிய ஓதிமம் ஆன மாநடை மாமயில்,
     சேய சாயல் கலா மதி ...... முக மானார்,

தேன் உலாவிய மாமொழி, மேரு நேர்இள மாமுலை,
     சேல் உலாவிய கூர்விழி, ...... குமிழ்நாசி,

தார் உலாவிய நீள்குழல், வேய் அளாவிய தோளியர்,
     சார்பிலே திரிவேனை நின் ...... அருளாலே,

சாம வேதியர் வானவர் ஓதி, நாண்மலர் தூவிய
     தாளில் வீழ, வினா மிக ...... அருள்வாயே.

கார் உலாவிய நீள் புன வேடர், மால் வரை மீதுஉறை
     காவல் மாதினொடு ஆவல்செய்து ...... அணைவோனே!

காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய
     காரணா! கருணாகர! ...... முருகோனே!

போர் உலாவிய சூரனை, வாரி சேறு எழ வேல் விடு
     பூப! சேவக! மாமயில் ...... மிசையோனே!

போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு
     போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.


பதவுரை


      கார் உலாவிய நீள் புனவேடர் --- மேகம் உலாவுகின்ற நெடிய புனத்தில் வேடர்கள் வாழ்கின்ற,

     மால்வரை மீது உறை காவல் மாதினொடு --- பெரிய மலையின் மீது காவல் கொண்டு இருந்த வள்ளிநாயகியோடு

     ஆவல் செய்து அணைவோனே --- ஆவலை உள்ளத்தில் கொண்டு அணைந்தவரே!

      காண --- எல்லோரும் அறிந்து கொள்ளும்படியா,

     ஆகமவேத புராண நூல் பல ஓதிய காரணா --- ஆகமங்களையும், வேதங்களையும், புராணம் முதலாகிய நூல்கள் பலவற்றையும் திருஞானசம்பந்தராக எழுந்தருளி வந்து திருப்பதிகங்களில் வைத்து ஓதியருளியவரே!

     கருணாகர முருகோனே --- கருணைக்கு இடமான முருகப் பெருமானே!

      போர் உலாவிய சூரனை --- போர் புரிய வந்த சூரபதுமனை,
    
     வாரி சேறு எழ வேல் விடு பூப --- அவன் ஒளிந்து இருந்த கடலும் வற்றிச் சேறு ஆகுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளிய அரசே!

      சேவக ---  வீரரே!

     மாமயில் மிசையோனே --- அழகிய மயிலை வாகனமாக் கொண்டவரே!

      போதன் --- தாமரை மலரில் வாழும் பிரமன்,

     மாதவன் --- திருமால்,

     மாதுஉமை பாதி ஆதியுமே தொழு --- உமாதேவியைத் தனது திருமேனியில் பாதியாகக் கொண்ட ஆதிமுதல் பரம்பொருளாகிய சிவபெருமான் ஆகிய மூவரும் தொழுகின்,

       போரி மாநகர் மேவிய பெருமாளே --- திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      சீர் உலாவிய ஓதிமம் ஆன மாநடை --- அழகு விளங்கும் அன்னத்தைப் போன்ற அழகிய நடை,

     மாமயில் சேய சாயல் --- சிறந்த மயிலுக்கு ஒப்பான செம்மையான சாயல்,

      கலாமதி முகம் ஆனார் --- கலைகள் நிரம்பிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட விலைமாதர்கள்

      தேன் உலாவிய மாமொழி --- தேன் போலும் இனிய சொற்களை உடையவர்,

     மேரு நேர் இள மாமுலை --- மேரு மலையைப் போன்று பருத்த முலைகளை உடையவர்கள்,

      சேல் உலாவிய கூர் விழி --- சேல் மீன் போலும் கூர்த்த கண்களை உடையவர்கள்,

     குமிழ் நாசி --- குமிழைப் போலும் மூக்கு,

      தார் உலாவிய நீள்குழல் --- மாலை சூடிய நீண்ட கூந்தல்,

     வேய் அளாவிய தோளியர் --- மூங்கில் போலும் தோள்களை உடையவர்கள்,

      சார்பிலே திரிவேனை --- இவர்களின் இணக்கத்திலேயே திரிகின்ற அடியேனை,

     நின் அருளாலே --- உனது திருவருளால்,

      சாமவேதியர் --- மண்ணுலகில் வாழும் சாமவேதம் வல்ல வேதியர்கள்,

     வானவர் --- வானுலகத்தில் உள்ளவர்கள்,

     ஓதி --- திருப்புகழை ஓதி வழிபட்டு,

     நாண்மலர் தூவிய தாளில் வீழ --- அன்றலர்ந்த மலர்களைத் தூவி வணங்கும் திருவடிகளில் விழுந்து யானும் வணங்,

     வினா மிக அருள்வாயே --- நிறை அறிவைத் தந்து அருள் புரிவாயாக.


பொழிப்புரை


         மேகம் உலாவுகின்ற நெடிய புனத்தில் வேடர்கள் வாழ்கின்ற, பெரிய மலையின் மீது காவல் கொண்டு இருந்த வள்ளிநாயகியோடு ஆவலை உள்ளத்தில் கொண்டு அணைந்தவரே!

         எல்லோரும் அறிந்து கொள்ளும்படியா, ஆகமங்களையும், வேதங்களையும், புராணம் முதலாகிய நூல்கள் பலவற்றையும் திருஞானசம்பந்தராக எழுந்தருளி வந்து திருப்பதிகங்களில் வைத்து ஓதியருளியவரே!

     கருணைக்கு இடமான முருகப் பெருமானே!

         போர் புரிய வந்த சூரபதுமனை, அவன் ஒளிந்து இருந்த கடலும் வற்றிச் சேறு ஆகுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளிய அரசே!

         வீரரே!

     அழகிய மயிலை வாகனமாக் கொண்டவரே!

         தாமரை மலரில் வாழும் பிரமன், திருமால், உமாதேவியைத் தனது திருமேனியில் பாதியாகக் கொண்ட ஆதிமுதல் பரம்பொருளாகிய சிவபெருமான் ஆகிய மூவரும் தொழுகின், திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         அழகு விளங்கும் அன்னத்தைப் போன்ற அழகிய நடை. சிறந்த மயிலுக்கு ஒப்பான செம்மையான சாயல். கலைகள் நிரம்பிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட விலைமாதர்கள். தேன் போலும் இனிய சொற்களை உடையவர். மேரு மலையைப் போன்று பருத்த முலைகளை உடையவர்கள். சேல் மீன் போலும் கூர்த்த கண்களை உடையவர்கள். குமிழைப் போலும் மூக்கு. மாலை சூடிய நீண்ட கூந்தல். மூங்கில் போலும் தோள்களை உடையவர்கள். இவர்களின் இணக்கத்திலேயே திரிகின்ற அடியேனுக்கு, உனது திருவருளால், மண்ணுலகில் வாழும் சாமவேதம் வல்ல வேதியர்கள், வானுலகத்தில் உள்ளவர்கள், திருப்புகழை ஓதி வழிபட்டு, அன்றலர்ந்த மலர்களைத் தூவி வணங்கும் திருவடிகளில் விழுந்து வணங், நிறை அறிவைத் தந்து அருள் புரிவாயாக.


விரிவுரை

நின் அருளாலே சாமவேதியர் வானவர் ஓதி, நாண்மலர் தூவிய தாளில் வீழ, வினா மிக அருள்வாயே ---

மண்ணுலகில் வாழ்வோரும், விண்ணுலகில் வாழ்வோரும் நாளும் அன்று அலர்ந்த மலர்களைத் தூவித் துதித்து வழிபடும் முருகப் பெருமானுடைய திருவடிகளில் விழுந்து வழிபட்டுப் பேற்றைப் பெறுவதற்கு உரிய நல்லறிவைத் தந்து அருளுமாறு அடிகளார் இத் திருப்புகழில் வேண்டுகின்றார்.  

வினா - ஆராய்ச்சி அறிவு.  நல்லறிவு.

உலைவு அற, விருப்பாக, நீள்காவின் வாசமலர்
     வகைவகை எடுத்தே தொடா மாலிகா ஆபரணம்
     உனது அடியினில்  சூடவே நாடும் மாதவர்கள் .....இருபாதம்

உளமது தரித்தே வினாவோடு பாடி அருள்
     வழிபட எனக்கே, தயாவோடு தாள் உதவ
     உரகம் அது எடுத்தாடும் மேகார மீதின்மிசை ....வரவேணும்.
                                                                           ---  (தலைவலி) திருப்புகழ்.

மால் அயன் பரனார் இமையோர் முனி-
     வோர் புரந்தரன் ஆதியரே தொழ,
     மாதவம் பெறு தாள்இணையே தினம் ...... மறவாதே,
வாழ்தரும் சிவ போகநல் நூல்நெறி-
     யே விரும்பி வினா உடனே தொழ
      வாழ் வரம் தருவாய், டியேன்இடர் ...... களைவாயே.
                                                                         --- (வேலிரண்டு) திருப்புகழ்.

இறைவனுடைய திருவடிகளைத் தொழுவதற்கு ஒருவனுக்கு நல்லறிவு விளங்கவேண்டும். இறைவனை அறியும் அறிவு உடையோரை வழிபட்டும், அருள் நூல்களைக் குருமுகமாக ஓதியும், வழிபாடு ஆற்றியும் பெறவேண்டியது நல்லறிவு. அந்த நல்லறிவானது இறைவன் திருவருளால் கிடைக்கவேண்டியது என்பதை உணர்த்த "நின் அருளாலே" என்றார்.

"அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

இறைவனுடைய திருவடியைப் பூசித்தலே பிறவியின் பயன் ஆகும். இறைவன் தந்த கரங்களால் அவரைப் பூசிக்கவில்லையானால், நன்றி மறந்த பாவம் வந்து சேரும்.

பூஜா என்ற சொல் தமிழில் ஐகார ஈறுபெற்று பூஜை என்று திரிந்தது. பூ - மலங்களைப் பூர்த்தி செய்வது. ஜா - சிவஞானத்தை உண்டாக்குவது.

வேதநாயகன் இலிங்க பூசனை செயும் மேலோன்
போதன் மாயவன் முவுகும் தொழும் புனிதன்,
ஓதும் ஆங்கவன் பெருமை யார் உரைப்பர், அவ் உரவோன்
பாத தூளியைச் சென்னியில் பலன்பெறத் தரிப்பேன்.     ---  சிவரகசியம்.

பூசை செய்கின்ற நேரமே நம்முடைய நேரம். பூசை செய்கின்ற மனிதப் பிறப்பே உயர்ந்த பிறப்பு. பூசை புரியாத நாள் வீண்நாள் ஆகும்.

உம்பர்கள் சுவாமீ நமோநம
எம்பெருமானே நமோநம
ஒண்தொடி மோகா நமோநம    எனநாளும்
உன்புகழே பாடிநான் இனி
அன்புடன் ஆசார பூசைசெய்து
உய்ந்திட வீண்நாள் படாதுஅருள்     புரிவாயே...
                                                               --- (கொம்பனையார்) திருப்புகழ்.

பூசை செய்யத் தொடங்குமுன் இந்தத் திருப்புகழ் அடிகளைக் கூறி இறைவனைத் தியானிக்க வேண்டும்.

பிறவியாகிய பெருங்கடலில் வாழ்ந்த உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும்.  ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.

ஆதலின், அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வு பெறவேண்டும்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற, வீட்டுலகினை உடையவர் ஆவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இது என்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், -- பிறப்பு அறுக்கும்
மெய்ந்நூல் தலைப்படல் ஆகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல் போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மை நூலை அடையலாம். கண் சென்று பார்த்ததையே விரும்பி உண்மை எனக்ஒகற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

தத்தமது இட்டம் திருட்டம் என, இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர்--பித்தர், அவர்
நூல்களும் பொய்யே, அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று.

தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிது இல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,

மக்கட் பிறப்பில், கற்றற்கு உரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

நெறி என்பது வழி என்க. ஒரு ஊருக்குப் போகவேண்டும் என்று நடப்பவன், கண்ணில் கண்ட வழிகளில் எதுவாயினும் அதிலே நடக்கமாட்டான். எந்த வழியில் சென்றால் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேரலாமோ, அந்த வழியில்தான் நடப்பான்.  அதுபோல், பரகதியை நாடி வந்த நாம், உலகில் காணப்படும் அவநெறிகளில் செல்லாது, தவநெறியில் செல்லுதல் வேண்டும். அத் தவநெறி இறைவன்பால் வேண்டிப் பெறுதல் வேண்டும்.  சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூரில் இறைவர்பால் தவநெறியை வேண்டிப் பெற்றனர்.

"தவநெறி தனை விடு தாண்டு காலியை" என்றார் அடிகள், கூந்தலூர்த் திருப்புகழில். கால்போன வழியிலே நடக்கும் பேதையைப் போல், மனம்போன வழியிலே சென்று இடர்ப்படுவோர் மூடர்கள் ஆவார்கள்.

அறம் எது, அறம் அல்லாதது எது என்று ஆராய்ந்து, அறத்தைக் கடைப்பிடித்து, அறப் பண்புடன் வாழ்தல் வேண்டும்.  அறம் உயிர்க்கு உறுதி செய்வது. "அறனை மறவேல்" என்றார் ஔவைப் பிராட்டியார். இறைவனுக்கு அறமே வடிவாகின்றது.

அறமே மறங்கள் முழுது அளிக்கும்
         அறமே கடவுள் உலகேற்றும்
அறமே சிவனுக்கு ஒருவடிவம்
         ஆம்சிவனை வழிபடுவோர்க்கு
அறமே எல்லாப் பெரும்பயனும்
         அளிக்கும், பார்க்கும் எவ்விடத்தும்
அறமே அச்சம் தவிர்ப்பதுஎன
         அறைந்தான் சரதாதப முனிவன்.     ---  காஞ்சிப் புராணம்.

இறைவன் சூரபன்மனுக்கு எண்ணில்லாத வரங்களை வழங்கியபோது, “1008 அண்டங்களையும் ஆள்வாய், அறநெறியினின்றும் வழுவாயெனின், நமது சத்தி உன்னை வெல்லும்" என்று அருளிச் செய்தனர். ஆதலின், அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது.

உலகிற்கு அறவுரை பகர வந்த ஔவையார், தொடக்கத்திலேயே "அறம் செய விரும்பு" என்று கூறியதையும், திருவள்ளுவர் நீத்தார் பெருமை கூறிய பின், அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரத்தினைக் கூறியதையும் உற்று நோக்குக.

அதிகார இயைபு கூறவந்த பரிமேலழகர், "அம் முனிவரான் உணர்த்தப்பட்ட (அறம்பொருள் இன்பம் என்ற) அம் மூன்றனுள், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன், இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து" கூறுமாறு காண்க.

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு,
ஆக்கம் எவனோ உயிர்க்கு.                   ---  திருக்குறள்.


காண ஆகமவேத புராண நூல் பல ஓதிய காரணா ---

ஆன்மாக்கள் யாவும் இறைநிலையை உணர்ந்து ஓதி உய்வு பெ, ஆகமங்களையும், வேதங்களையும், புராணம் முதலாகிய நூல்கள் பலவற்றையும் திருஞானசம்பந்தராக எழுந்தருளி வந்து திருப்பதிகங்களில் வைத்து ஓதியருளியவர்.

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன.  ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏற்ப வகுக்கப்பட்டன.  ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர்.  திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர்.  "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?.  தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.

இவ்வாறு அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி மாய்ந்தொழிந்தனர்.

அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.

தோடு உடைய செவியன் எனத் தொடங்கி, பல்லாயிரம் திருப்பதிகங்களை, வேதங்களின் பொருளை நிறைத்து, அருமையான தமிழால், பாடி அருளியவர் திருஞானசம்பந்தப் பெருமான். தொண்டர்மனம் களிசிறப்ப,  தூயதிரு நீற்றுநெறி எண்திசையும் தனிநடப்ப, ஏழ்உலகும் களிதூங்க, அண்டர்குலம் அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக,
வண்தமிழ்செய் தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப வந்து திரு அவதாரம் புரிந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

"எல்லை இலா மறைமுதல்மெய்
         யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழால்" இம்
         மாநிலத்தோர்க்கு உரைசிறப்பப்
பல் உயிரும் களிகூரத்
         தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத்
         திருச்செவியைச் சிறப்பித்து.     ---  பெரியபுராணம்.

திருக்குறுக் கைப்பதி மன்னித்
         திருவீரட் டானத்து அமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
         போந்து, அன்னியூர் சென்று போற்றி,
பருக்கை வரைஉரித் தார்தம்
         பந்தணை நல்லூர் பணிந்து,
விருப்புடன் பாடல் இசைத்தார்
         "வேதம் தமிழால் விரித்தார்".        ---  பெரியபுராணம்.

எழுது மாமறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி, முதல்வரைப் போற்றி, முன்
தொழுது போந்து வந்து எய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.      ---  பெரியபுராணம்.


கருணாகர முருகோனே ---

ஆகரம் - உறைவிடம்.  இருப்பிடம்.

கருணையே தனக்கு வடிவமாக உடையவன் இறைவன்.  கருணைக்கு இருப்பிடமாக உள்ளவன் இறைவன். எனவே, கருணாகரன் என்றார்.

 போரி மாநகர் மேவிய பெருமாளே ---

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் திருப்போரூர் உள்ளது. திருப்போரூரில் கந்தசுவாமி என்ற பெயரில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். தாரகனுடன் போர் புரிந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் உள்ளார். போர் நடந்த தலம் என்பதால் அந்த வரலாற்றுப் பின்னணியில் இந்த ஊர் "திருப்போரூர்'' என்று அழைக்கப்படுகிறது. ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார்.
 
கருத்துரை

முருகா! அறிவு இழந்து மாதர் மயலில் அழியாமல், தேவரீரை வழிபட்டு உய்ய நல்லறிவினை அருளவேண்டும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...