அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உருக்குஆர் வாளி
(திருப்போரூர்)
முருகா!
விலைமாதர் வலை வீழ்ந்து வீணாகாமல்
காத்து அருள் புரிவாய்.
தனத்தா
தான தந்த தனத்தா தான தந்த
தனத்தா தான தந்த ...... தனதான
உருக்கார்
வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம்
உருச்சேர்
நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட
லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள்
அருக்கா
மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி
அசட்டால்
மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே
எருக்கார்
தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே
இருக்கா
லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா
செருக்கா
லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே
தினைக்கோர்
காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
உருக்கு
ஆர் வாளி கண்கள், பொருப்பு ஆர் வார் தனங்கள்,
உகப்பு ஆர் வால சந்த்ரன் ...... நுதல், நூலாம்
உருச்சேர்
நீள் மருங்குல், பணைத்தோள், ஓதி கொண்டல்,
உவப்பா மேல் விழுந்து ...... திரிவோர்கள்,
அருக்கா
மாதர் தங்கள் வரைக்கே ஓடி, இன்ப
வலைக்கே பூணு நெஞ்சன், ...... அதிபாவி,
அசட்டால்
மூடுகின்ற மசக்கால் மாயும், இந்த
அவத்தால் ஈனம் இன்றி ...... அருள்வாயே.
எருக்கு
ஆர் தாளி தும்பை மருச் சேர் போது கங்கை-
யினைச்
சூடு ஆதி நம்பர் ...... புதல்வோனே!
இருக்காலே
நினைந்து துதிப்பார் நாவில், நெஞ்சில்
இருப்பாய், யானை தங்கு ...... மணிமார்பா!
செருக்காலே
மிகுந்த கடல் சூர் மாள வென்ற,
திறல் சேர் வேல் கை கொண்ட ...... முருகோனே!
தினைக்கு
ஓர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க!
திருப்போரூர் அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
எருக்கு --- எருக்க மலரையும்,
ஆர் --- ஆத்தி மலரையும்,
தாளி --- தாளி அறுகம்புல்லையும்,
தும்பை --- தும்பைப் பூவையும்,
மருச் சேர் போது --- மணம் மிக்க
மலர்களையும்,
கங்கையினைச் சூடு ஆதி நம்பர் புதல்வோனே ---
கங்கை
நதி ஆகிய இவைகளைச் சூடியுள்ள முதற் பரம்பொருளாகிய சிவபெருமானது திருப்புதல்வரே!
இருக்காலே நினைந்து
துதிப்பார் நாவில் --- இருக்கு மொழிகளால் தேவரீரை உளமார நினைந்து துதிக்கின்ற
அடியவர்களின் நாவிலும்,
நெஞ்சில் இருப்பாய் --- அவர்களின்
உள்ளத்திலும் இருக்கின்ற
பெருமானே!
யானை தங்கும் மணி மார்பா --- தேவயானை அம்மையை
அணைத்துள்ள அழகிய திருமார்பரே!
செருக்காலே மிகுந்த
கடல் சூர் மாள வென்ற --- ஆணவத்தால் மிக்கு இருந்து, கடலில் மாமரமாய் ஒளிந்து நின்ற, சூரபதுமன் அழியும்படி வென்ற
திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே ---
வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்திய முருகப் பெருமானே!
தினைக்கு ஓர் காவல் கொண்ட குறத் தேன் மாது பங்க --- தினைப் புனத்தை
ஒப்பற்ற காவல் கொண்டிருந்த, குறவர் குலத்திலே
வளர்ந்தவள் ஆகிய அழகிய வள்ளிநாயகியைப் பக்கத்தில் கொண்டவரே!
திருப் போரூர்
அமர்ந்த பெருமாளே --- திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில்
கொண்டருளிய பெருமையில் மிக்கவரே!
உருக்கு ஆர் வாளி
கண்கள்
--- உலையிலே உருக்கி வார்த்த அம்பினைப் போன்ற கண்கள்,
பொருப்பு ஆர் வார் தனங்கள் --- மலை போன்ற, கச்சு அணிந்த தனங்கள்,
உகப்பு ஆர் வால
சந்த்ர நுதல்
--- உகப்பினைத் தரும் இளம் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றி,
நூலாம் உருச் சேர் நீள் மருங்குல் ---
நூல் போலும் மெல்லிய நீண்ட இடை,
பணைத் தோள் --- மூங்கில் போன்ற
தோள்கள்,
ஓதி கொண்டல் --- மேகத்தை ஒத்த
கூந்தல்,
(ஆகியவற்றை உடைய விலைமாதர்கள்)
உவப்பா மேல் விழுந்து
திரிவோர்கள்
--- மகிழ்வுடன் மேலே விழுந்து திரிகின்றவர்கள்.
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே ஓடி ---
இத்தகையவர்கள் ஆன அழகிய பொதுமாதர்களின் இருப்பிடத்தினை நாடிச் சென்று,
இன்ப வலைக்கே பூணு
நெஞ்சன்
--- அவர்கள் தருகின்ற இன்பம் என்னும் வலைக்குள் என் மனத்தைப் பூட்டிக் கொண்டவன்
நான்.
அதிபாவி --- பெரும் பாவங்களைப்
புரிந்தவன்.
அசட்டால் --- கீழ்மைத்
தனத்தாலும்,
மூடுகின்ற மசக்கால் --- மூடி உள்ள
அறிவு மயக்கத்தாலும்,
மாயும் இந்த அவத்தால் --- அழிந்து
போகின்ற இந்தக் கேட்டினால்,
ஈனம் இன்றி அருள்வாயே --- அடியேன்
இழிவு அடையாமல் காத்து அருள்வாயாக.
பொழிப்புரை
எருக்க மலரையும், ஆத்தி மலரையும், தாளி அறுகம்புல்லையும், தும்பைப் பூவையும், மணம் மிக்க மலர்களையும், கங்கை நதி ஆகிய இவைகளைச் சூடியுள்ள
முதற் பரம்பொருளாகிய சிவபெருமானது திருப்புதல்வரே!
இருக்கு மொழிகளால் தேவரீரை உளமார
நினைந்து துதிக்கின்ற அடியவர்களின் நாவிலும், உள்ளத்திலும் இருக்கின்ற பெருமானே!
தேவயானை அம்மையை அணைத்துள்ள அழகிய
திருமார்பரே!
ஆணவத்தால் மிக்கு இருந்து, கடலில் மாமரமாய் ஒளிந்து நின்ற, சூரபதுமன் அழியும்படி வென்ற வெற்றிவேலைத் திருக்கையில் ஏந்திய முருகப்
பெருமானே!
தினைப் புனத்தை ஒற்றப்ப காவல் கொண்டிருந்த, குறவர் குலத்திலே
வளர்ந்தவள் ஆகிய அழகிய வள்ளிநாயகியைப் பக்கத்தில் கொண்டவரே!
திருப்போரூர் என்னும் திருத்தலத்தில்
திருக்கோயில் கொண்டருளிய பெருமையில் மிக்கவரே!
உலையிலே உருக்கி வார்த்த அம்பினைப் போன்ற
கண்கள், மலை போன்ற, கச்சு அணிந்த தனங்கள், உகப்பினைத் தரும் இளம் பிறைச்சந்திரனை
ஒத்த நெற்றி, நூல் போலும் மெல்லிய
நீண்ட இடை, மூங்கில் போன்ற
தோள்கள், மேகத்தை ஒத்த கூந்தல் ஆகியவற்றை உடையவர்கள் விலைமாதர்கள். மகிழ்வுடன் மேலே விழுந்து
திரிகின்றவர்கள். இத்தகையவர்கள் ஆன
அழகிய பொதுமாதர்களின் இருப்பிடத்தினை நாடிச் சென்று, அவர்கள் தருகின்ற இன்பம் என்னும்
வலைக்குள் என் மனத்தைப் பூட்டிக் கொண்டவன் நான். பெரும் பாவங்களைப் புரிந்தவன். கீழ்மைத் தனத்தாலும், மூடி உள்ள அறிவு மயக்கத்தாலும், அழிந்து போகின்ற கேட்டினால் அடியேன் இழிவு அடையாமல் காத்து
அருள்வாயாக.
விரிவுரை
தாளி ---
அறுகம்புல்லைத்
திருமுடியில் தரித்தவர் சிவபெருமான்.
"தாளி
அறுகின் தாராய் போற்றி" என்றும், "தாளி
அறுகு ஆம் உவந்த தார்" என்றும் மணிவாசகப் பெருமான் அருளி இருத்தல் காண்க.
இருக்காலே
நினைந்து துதிப்பார் நாவில்,
நெஞ்சில்
இருப்பாய்
---
ஒருக்கால்
நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே! --- (அருக்கார்) திருப்புகழ்.
ஒருமுறை
நினைத்து இரு திருவடிகளைத் துதி செய்தாலும் அந்த அடியார்களின் உள்ளத்தில் முருகன்
உறைவான். இது அப் பெருமானுடைய கருணையின்
எளிமையை உணர்த்துகின்றது.
"ஒருகால்
நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா
என்று ஓதுவார்முன்"
"இரு
கால்" என்பது சந்தத்தை நோக்கி "இருக்கால்" என வந்தது.
அன்றி, "இருக்கால்"
என்பது இருக்கு வேத மந்திரத்தால் துதி செய்பவர் எனினும் பொருந்தும்.
இருக்கொடு
தோத்திரம் இயம்பினர் ஒருபால் ---
திருவாசகம்.
அடியவர்கள்
எப்போதும் இறைவன் திருவடியை மறவாதிருக்கும் பெற்றி உடையவர்கள். இந்த நிலையை
அவர்கள் ஆண்டவனிடமும் வேண்டிப் பெறுவார்கள். “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல், உன்னை என்றும் மறவாமை வேண்டும்” என்று
வேண்டுகின்றார் காரைக்காலம்மையார். “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்னடி என்மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்” என்கிறார் அப்பர்.
எழுவகைப்
பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
எய்துக, பிறப்பில் இனிநான்
எய்தாமை
எய்துகினும் எய்திடுக, இருமையினும்
இன்பம் எய்தினும் எய்துக,
வழுவகைத்
துன்பமே வந்திடினும் வருக,
மிகுவாழ்வு வந்திடினும் வருக,
வறுமை
வருகினும் வருக, மதிவரினும் வருக, அவ
மதிவரினும் வருக, உயர்வோடு
இழிவகைத்து
உலகின் மற்று எதுவரினும் வருக, அலது
எது போகினும் போக, நின்
இணைஅடிகள்
மறவாத மனம் ஒன்று மாத்திரம்
எனக்கு அடைதல் வேண்டும் அரசே,
கழிவகைப்
பவரோகம் நீக்கும் நல்அருள் என்னும்
கதிமருந்து உதவு நிதியே
கனகஅம்
பலநாத கருணைஅம் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
பெருமானே!
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற இந்த ஏழுவகைப் பிறவிகளில்
எந்தப் பிறவியிலேனும் அடியேன் பிறக்கத் தயார். அது பற்றிச் சிறியேனுக்குக்
கவலையில்லை.
ஒருவேளை
பிறவாமை வந்தாலும் வரட்டும். இம்மையிலும் மறுமையில் இன்பமே வருவதேனும் வரட்டும்.
அல்லது துன்பமே வருவதாயினும் சரி;
அதுபற்றியும்
அடியேனுக்குக் கவலையில்லை.
சிறந்த
வாழ்வு வந்தாலும் வரட்டும்; பொல்லாத வறுமை
வருவதாயினும் நன்றே;
எல்லோரும்
என்னை நன்கு மதிப்பதாயினும் மதிக்கட்டும்; அல்லது சென்ற சென்ற இடமெல்லாம் கல்லை
விட்டு எறிந்து கருப்புக்கொடி காட்டி `வராதே!
திரும்பிப்போ’ என்று அவமதி புரிந்தாலும் புரியட்டும்.
உயர்வும்
தாழ்வும் கலந்துள்ள இந்த உலகிலே மற்று எது வந்தாலும் வரட்டும்; எது போனாலும் போகட்டும்.
இறைவனே!
எனக்கு இவைகளால் யாதும் கவலையில்லை.
ஒரே
ஒரு வரம் உன் பால் யாசிக்கின்றேன்.
உனது
இரண்டு சரணாரவிந்தங்களையும் சிறியேன் மறவாமல் இருக்கின்ற மனம் ஒன்றுமட்டும்
வேண்டும். அந்த வரத்தை வழங்கியருளும்” என்று வடலூர் வள்ளல் வேண்டுகின்றார். என்ன
அழகிய வரம்?
நாரதர்
ஒரு சமயம் முருகனை வேண்டித் தவம் புரிந்தனர். முருகவேள் தோன்றி, “என்ன வரம்வேண்டும்?” என்று
கேட்டருளினார். நாரதர், “ஐயனே! உன் திருவடியை
மறவாத மனம் வேண்டும்” என்றார். முருகன் அந்த வரத்தை நல்கி விட்டு, “இன்னும் ஏதாவது வரங்கேள்; தருகிறேன்” என்றார். நாரதர் “பெருமானே!
இன்னொரு வரத்தைக் கேட்கின்ற கெட்ட புத்தி வராமல் இருக்க வேண்டும்” என்று கேட்டார்.
“இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும்எனது
இதயமும் மணக்கும்இரு பாதச்சரோருகனும்”
--- வேடிச்சி
காவலன் வகுப்பு
“மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமான் காண்” --- (திருமகள்
உலாவும்) திருப்புகழ்.
“துரியநிலையே கண்ட முத்தர் இதயா கமலம்
அதனில் விளையா நின்ற
புத்தமிர்த போதசுக
சுயபடிக மாஇன்ப பத்மபதம்” ---
(சுருதிமுடி) திருப்புகழ்.
கொந்து வார் குரவு அடியினும், அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும், நெறிபல
கொண்ட வேத நல் முடியினும்
மருவிய ....குருநாதா! --- திருப்புகழ்.
மறவாத
சிந்தை அடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு ...... தருபாலா. --- (விதிபோலும்)
திருப்புகழ்.
துறவாதே
யாக்கை துறந்தான் தன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே
எவ்வுயிர்க்குந் தானே ஆகிப்
பெண்ணினோடு ஆண்உருவாய் நின்றான் தன்னை
மறவாதே
தன்திறமே வாழ்த்தும் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத்
திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. ---
அப்பர்.
கல்மனவீர்!
கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே?
நல்
மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன்மலையில்
வெள்ளிக்குன்று அதுபோலப் பொலிந்து இலங்கி,
என்
மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே! ---
அப்பர்.
யானை
தங்கும் மணி மார்பா ---
யானை
- தேவயானை அம்மை.
தேவயானையாகிய
அயிராவதத்தினால் வளர்க்கப்பட்ட அம்மை தேவயானை என வழங்கப்பட்டார்.
மறவர்
நாயக! ஆதி விநாயகர் இளைய நாயக! காவிரி நாயக!
வடிவின் நாயக! ஆனை தன் நாயக!
......எங்கள்மானின்
மகிழும்
நாயக! தேவர்கள் நாயக!
கவுரி நாயகனார் குரு நாயக!
வடிவு அது ஆம், மலை யாவையும் மேவிய ....தம்பிரானே. --- (தறையின்)
திருப்புகழ்.
திருப் போரூர் அமர்ந்த பெருமாளே ---
இத்
திருத்தலம் செங்கற்பட்டு இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 16 கல்.
சிதம்பர சுவாமிகள் பாடியருளிய திருப்போரூர் சந்நிதிமுறை மிகமிக உயர்ந்த
வாக்கு.
தாரகன்
என்ற ஒரு அவுணன் வலிமையால் ஒப்பும் உயர்வும் இன்றி இருந்தான். (சூரபன்மனுடைய
தம்பியாகிய தாரகன் வேறு. இவன்
திரிபுரர்களது தந்தை.) அந்த அசுரவேந்தன்
பிரமதேவரை வேண்டி ஐம்பதினாயிரம் ஆண்டு தவம் புரிந்து, பற்பல வரங்களை அவர்பால் பெற்றனன். சிவபெருமானிடமும் பல வரங்களைப் பெற்றனன். அதனால்
மூவுலகங்களில் உள்ள தேவரையும் மூவரையும் வென்று அரசு புரிந்தனன். சிவாநுக்கிரகத்தால் தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்ற மூன்று புதல்வர்களைப்
பெற்றான்.
தாரகன்
தன் புதல்வர்களை நோக்கி, "என் அருந்தவச்
செல்வங்களே! எனக்கு இந்த மேன்மை தவத்தினால் எய்தியது. நீங்களும் சிவ பரம்பொருளை வேண்டி அருந்தவம்
புரிந்து, அரிய வரங்களைப்
பெற்று சீரும் சிறப்பும் பெறுவீர்கள்" என்று கூறினான். அவ்வண்ணமே அந்தப்
புதல்வர்கள் மூவரும் சிவத்தைக் குறித்துத் தவத்தைச் செய்தார்கள். மால் அயன் முதலிய
வானவர்கள் "என் செய்வோம்" என்று சிந்தாகுலம் அடைந்து, அவன்பால் ஏவலுக்குப் போகாமல், வைகுண்டத்தில் இருந்து யோசித்தார்கள்.
"தாரகனால் நாம் அளவிடமுடியாத அல்லலை அடைந்தோம். இனி அவன் புதல்வர்கள் தவம்
புரிந்து சிவமூர்த்தியிடம் வரம் பெறுவரேல், நம் கதி யாதாகும்" என்று மிகமிக
வருந்தி, அவர்களை அழிப்பதற்கு
அபிசார ஓமம் புரிந்தார்கள்.
அதனை
அறிந்த தாரகன், "திருமால் திசைமுகன்
முதலிய எல்லாத் தேவர்களையும் இத் தருணமே வேருடன் அழிப்பேன்" என்று வெகுண்டு
வைகுண்டம் சென்றான். பிரமவிட்டுணு முதலிய தேவர்கள் நடுநடுங்கி, புகலிடம் காணாது ஓடி பொன்மேரு மலையில்
சென்று குகைகளில் புகுந்து ஒளிந்தனர்.
தாரகன் பெரும் சினத்துடன்,
"பேடிகளே!
ஓடி ஒளிந்தீர்களோ? உங்களை விடேன்"
என்று விரட்டி மேருமலையை வேருடன் பறித்துச் சுழற்றிக் குலுக்கினான். கனிந்த நாவல்
பழங்கள் காற்றினால் உதிர்வதுபோல் அமரர்கள் மண்மிசை வீழ்ந்து ஓடி, திருக்கயிலை மலையைச் சார்ந்தனர்.
தாரகன்
தனது மாநகரம் சென்று உலகங்களை எல்லாம் தன்வயப்படுத்தி ஆண்டு வந்தனன். மால் அயன்
முனிவர் முதலியோர் உருமாறி காடு மலை கடல்களில் வசித்தார்கள். இந்திரன் அவனுடன் போர் புரிந்து வஜ்ராயுதத்தை
எறிய, அது இரும்பு முன்
துரும்பு போல் முறிந்தது. சசிதேவியும் சயந்த குமாரனும் தொடர, ஒரு வனத்தை அடைந்து முனி உருக்கொண்டு
தவம் புரிந்தனன்.
அக்கினிதேவன்
தாரகனிடம் சமைத்தல் தொழிலில் அமர்ந்தான்.
வருணன் தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தனன். வாயுதேவன் அரண்மனையைக் கூட்டுவானாயினான். ஏனைய வானவரும் குற்றேவல் புரிந்தனர். மனோவதி நகரை விட்டு, வாணிகேள்வன் தோணிபுரம் வந்து முனிவர்
வடிவுடன் சிவபூசை செய்துகொண்டு இருந்தான்.
அதனால், அந்த சீகாழி என்னும்
பதி பிரமபுரம் என்னும் பெயர் பெற்றது.
திருமால் தாரகனுடன் போர் புரிந்து தோற்று, வைகுண்டத்தில் வைகுவதற்கு அஞ்சிக்
கடலில் மீன் வடிவுடன் வாழ்ந்தனர்.
எல்லோரையும்
வென்றும் கொன்றும் கடந்தான். ஆதலின் அவன்
தாரகன் - கடந்தவன் என்னும் நாமத்திற்கு உரியவன் ஆனான். தாரகன் வைகுண்டத்தில்
சித்திரசபையில் இருந்து அரசு புரிந்தனன்.
ஓடி
ஒளிந்த உம்பர்கள் நம்பனுடைய வெள்ளி மலையை அடைந்து சிவபெருமானைப் பலகாலும் பணிந்து, "பரம கருணாநிதி!
தாரகனால் படும் துயரத்திற்கு எல்லை இல்லை.
படமுடியாது இனித் துயரம்,
பட்டதெல்லாம்
போதும். பரிந்து அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றனர்.
கண்ணுதற்கடவுள்
கருணை பூத்தனர். உடனே ஆறு திருமுகங்களும், பன்னிரு விழிகளும், அபயம், வாள், சூலம், சக்கரம், முசலம், வேல் என்பன அமைந்த வலக்கரங்கள் ஆறும், வரதம், கொடி, கேடகம், அங்குசம், பாசம், குலிசம் என்பன அமைந்து இடது
திருக்கரங்கள் ஆறும், கோடி
சூரியப்பிரகாசமும் உடையவராய் முருகக் கடவுள் சிவபெருமானுடைய இதயத்தினின்றும்
தோன்றியருளினார்.
சிவபெருமான்
அவரை நோக்கி, "குமார! தாரகனை
வதைத்து, இமையவர் இடரை
நீக்குதி" என்று பணித்து அருளினார்.
குமாரக் கடவுள் படைகளோடும் சென்று பத்துநாள் தாரகனுடன் போர்செய்து, வெள்ளிக்கிழமை இரவிலே அவனை மாய்த்து, மாலயனாதி வானவரை வாழவைத்து அருளினார்.
அத்
தாரகன் இருந்த இடம் கூவம் என்று அறிக. அவனுடன் ஆறுமுகக் கடவுள் போர்புரிந்த இடம்
திருப்போரூர். அதனால் அத் திருத்தலம், போரூர் - சமராபுரி என்ற நாமங்களைப்
பெற்றது.
திருப்போரூர்
அழகான முருகர் திருத்தலம். அவசியம் அன்பர்கள்
தரிசித்தற்கு உரியது. வரதமான மூர்த்தி.
ஏதுபிழை
செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித்
தீதுபுரியாத
தெய்வமே --- நீதி
தழைக்கின்ற
போரூர்த் தனிமுதலே, நாயேன்
பிழைக்கின்ற
வாறுநீ பேசு. --- திருப்போரூர் சந்நிதிமுறை.
கருத்துரை
முருகா! விலைமாதர் வலை
வீழ்ந்து வீணாகாமல் காத்து அருள் புரிவாய்.
No comments:
Post a Comment