உத்தரமேரூர் - 0726. தோல் எலும்பு






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தோல் எலும்பு (உத்தரமேரூர்)

முருகா! 
பிறவிநோய் நீங்கி அடியேன் உய்யும்பொருட்டு 
தேவரீரை எப்போதும் மறவாமல் நினைக்க அருள் புரிவீர்.

 
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
     தான தந்த தான தந்த ...... தனதான

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
     சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான

தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
     சோரு மிந்த நோய கன்று ...... துயராற

ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
     னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும்

ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
     யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
     வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
     வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
     வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
     மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


தோல், எலும்பு, சீ, நரம்பு, பீளை, துன்று கோழை, பொங்கு
     சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான,

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து, நான் மெலிந்து
     சோரும், ந்த யோய் அகன்று, ...... துயர்ஆற,

ஆலம் உண்ட கோன், அகண்ட லோகம் உண்ட மால், விரிஞ்சன்
     ஆரணங்கள், கமங்கள் ...... புகழ்தாளும்,

ஆனனங்கள் மூ இரண்டும், ஆறு இரண்டு தோளும், ங்கை
     ஆடல் வென்றி வேலும் என்று ...... நினைவேனோ?

வால சந்த்ர சூடி, சந்த வேத மந்த்ர ரூபி, அம்பை,
     வாணி, பஞ்ச பாணி தந்த ...... முருகோனே!

மாயை ஐந்து, வேகம் ஐந்து, பூதம் ஐந்து, நாதம் ஐந்து,
     வாழ் பெரும் சராசரங்கள் ...... உறைவோனே!

வேலை அன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
     வேடர் மங்கை ஓடி அஞ்ச ...... அணைவோனே!

வீர மங்கை, வாரி மங்கை, பாரின் மங்கை, மேவுகின்ற
     மேருமங்கை ஆள வந்த ...... பெருமாளே.


பதவுரை

      வால சந்த்ர சூடி --- இளம் திங்களைச் சூடியவரும்,

     சந்த வேத மந்த்ர ரூபி --- சந்த சுரங்களுடன் கூடிய வேத மந்திரத்தின் வடிவினை உடையவரும்,

     அம்பை --- அம்பிகையும்,

     வாணி --- கலைவடிவாக விளங்குபவரும்,

     பஞ்ச பாணி தந்த முருகோனே --- ஐந்து வகையான பண்ணின் பயனாகத் திகழிபவரும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய முருகப் பெருமானே!

       மாயை ஐந்து --- அசுத்த மாயைக்கு உரிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்ற ஐந்துக்குள்ளும்,

     வேகம் ஐந்து --- ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், சுவை என்ற ஐந்து தன்மாத்திரைகளுக்குள்ளும்,

     பூதம் ஐந்து --- மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐம்பூதங்களுக்குள்ளும்,

     நாதம் ஐந்து --- சிவம், சத்தி, சதாசிவம், ஊசுரம், சுத்தவித்தை என்று ஐந்துக்குள்ளும்,

     வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே --- உலகில் உள்ள பெரிய இயங்குதல் உள்ளதும், இயங்குதல் இல்லாததும் ஆகிய உயிர்கள் எல்லாவற்றுக்குள்ளும் பிரியாது உறைபவரே!

      வேலை அன்பு கூர வந்த --- வேண்டிய காலத்தில் அன்பு மிகுந்த வந்த,

     ஏக தந்த யானை கண்டு --- ஒற்றைக் கொம்பை உடைய விநாயகமூர்த்தியாகிய யானையைக் கண்டு,

     வேடர் மங்கை ஒடி அஞ்ச அணைவோனே --- வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளி அம்மையார் அஞ்சி ஓடி அபயம் புகத் தழுவியவரே!

      வீரமங்கை --- வெற்றித் திருமகளும்,

     வாரிமங்கை --- கங்காதேவியும்,

     பாரின்மங்கை --- பூமாதேவியும்

     மேவுகின்ற --- விரும்பி வாழ்கின்ற

     மேருமங்கை ஆள வந்த பெருமாளே --- உத்தரமேரூர் என்னும் திருத்தலத்தை ஆட்சி புரியுமாறு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு --– தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை ஆகியவைகளும், நிறைந்த கோழையும், பொங்கிக் கொண்டு இருக்கும் உதிரமும் சேர்ந்து, ஒரு உருண்டையாகி உருண்டு

       வடிவான  தூல பங்க காயம் வம்பிலே சுமந்து ---  வடிவம் பெற்று வந்த அழியும் தன்மையான இந்த யாக்கையை வீணாகச் சுமந்து திரிந்து,

     நான் மெலிந்து சோரும் --- அடியேன் மிகவும் மெலிவை அடைந்து சோர்கின்ற

     இந்த நோய் அகன்று --- இந்தப் பிறவிநோய் நீங்கி,

     துயர் ஆற --– துன்பமெல்லாம் விலகுமாறு,

      ஆலம் உண்ட கோன் --- ஆலகால விடத்தை உண்ட சிவபெருமானும்,

     அகண்ட லோகம் உண்ட மால் --- எல்லா உலகங்களையும் உண்ட திருமாலும்,

     விரிஞ்சன் --- பிரமதேவனும்,

     ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும் --- வேதங்களும், ஆகமங்களும் புகழ்கின்ற தேவரீரது திருவடிகளையும்,

      ஆனனங்கள் மூவிரண்டும் --- ஆறு திருமுகங்களையும்,

     ஆறு இரண்டு தோளும் --- பன்னிரு புயங்களையும்,

     அங்கை ஆடல் வென்றி வேலும் --- அழகிய திருக்கரத்தில் விளங்குகின்ற வேலாயுதத்தையும்,

     என்றும் நினைவேனோ --- எக்காலத்திலும் மறவாமல் அடியேன் நினைக்க மாட்டேனா?
  
பொழிப்புரை

         இளம் திங்களைச் சூடியவரும், சந்த சுரங்களுடன் கூடிய வேத மந்திரத்தின் வடிவினை உடையவரும், அம்பிகையும், கலைவடிவாக விளங்குபவரும், ஐந்து வகையான பண்ணின் பயனாகத் திகழிபவரும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய முருகப் பெருமானே!

         அசுத்த மாயைக்கு உரிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்ற ஐந்துக்குள்ளும், ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், சுழை என்ற ஐம்பொறிகளுக்குள்ளும், மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐம்பூதங்களுக்குள்ளும், சிவம், சத்தி, சதாசிவம், ஊசுரம், சுத்தவித்தை என்று ஐந்துக்குள்ளும், உலகில் உள்ள பெரிய இயங்குதல் உள்ளதும், இயங்குதல் இல்லாததும் ஆகிய உயிர்கள் எல்லாவற்றுக்குள்ளும் பிரியாது உறைபவரே!

         வேண்டிய காலத்தில் அன்பு மிகுந்த வந்த, ஒற்றைக் கொம்பை உடைய விநாயகமூர்த்தியாகிய யானையைக் கண்டு, வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளி அம்மையார் அஞ்சி ஓடி அபயம் புகத் தழுவியவரே!

         வெற்றித் திருமகளும், கங்காதேவியும், பூமாதேவியும் விரும்பி வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் திருத்தலத்தை ஆட்சி புரியுமாறு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை ஆகியவைகளும், நிறைந்த கோழையும், பொங்கிக் கொண்டு இருக்கும் உதிரமும் சேர்ந்து, ஒரு உருண்டையாகி உருண்டு வடிவம் பெற்று வந்த, அழியும் தன்மையான இந்த யாக்கையை வீணாகச் சுமந்து திரிந்து, அடியேன் மிகவும் மெலிவை அடைந்து சோர்கின்ற இந்தப் பிறவி நோய் நீங்கி, துன்பமெல்லாம் விலகுமாறு, ஆலகால விடத்தை உண்ட சிவபெருமானும், எல்லா உலகங்களையும் உண்ட திருமாலும், பிரமதேவனும், வேதங்களும், ஆகமங்களும் புகழ்கின்ற தேவரீரது திருவடிகளையும், ஆறு திருமுகங்களையும், பன்னிரு புயங்களையும், அழகிய திருக்கரத்தில் விளங்குகின்ற வேலாயுதத்தையும், எக்காலத்திலும் மறவாமல் அடியேன் நினைக்க மாட்டேனா?

  
விரிவுரை

தோலெலும்பு …......       …......  வடிவான தூலம் ---

இந்த உடம்பானது நெடுநாளைக்கு நிற்பது என்றும், மிகவும் சிறந்தது என்றும், புனிதமானது என்றும், இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும் என்றும் கருதி அலைகின்ற அறிவிலிகட்கு அடிகள் அறிவுறுத்துகின்றனர்.

இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.
இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல.
தோல் எலும்பு உதிரம் முதலியவைகளால் ஆனது என்பார்.

இத்துடன் வாழவே கருதி அவாவி அலைகின்றீர்களே, இது பீளை கோழை முதலிய அருவருப்பான பொருள்களுடன் கூடியது என்பார்.

தோல் எலும்பு நரம்பு உதிரத்தால் ஆன உடம்பு விரைவில் அழிந்துபடும் என்பதனையும் குறிப்பில் உணர்த்துகின்றனர்.  அவ்வண்ணம் அழியும் முன் உய்வண்ணம் அடைதல் வேண்டும்.

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல  கசுமாலம்"

என்பார் பழநித் திருப்புகழில்.

பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து ---

பங்கம் - அழிவு.

இவ்வாறு அழியும் உடம்பை நாம் பெற்றது உடம்புள் உறையும் உத்தமனைக் கண்டு, அழிவற்ற தன்மையை அடையும் பொருட்டே. அதனை மறந்து, உண்டும் உடுத்தும் உறங்கியும் உலாவியும் வீணாக இந்த உடம்பைச் சுமந்து அலைந்து திரிந்து மெலிகின்றேன் என்கின்றார்.

இங்கே நன்றாக உண்டு உண்டு உடம்பு தடிக்கின்றது.  மெலிவதாவது, உயிரைக் குறிக்கின்றது. உடம்பு வலுக்கின்றது, தடிக்கின்றது. ஆனால் உயிர் மெலிகின்றது, நலிகின்றது.

சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற ---

திருவருள் நெறி சென்று இறையுடன் இரண்டறக் கலக்கும் செம்மையைப் பெறாததனால், பலப்பல பிறப்புகள் எடுத்து உயிர்கள் சோர்வு அடைகின்றன என்பார் திருவாதவூரர். இந்தப் பிறவி நோயை நீக்க முயல்வதே தக்கார்களது முதல் முயற்சி. ஏனைய முயற்சிகளெல்லாம் அயர்ச்சியைத் தருவனவே. பிறவி நோயை அகற்றும் மருத்துவர் தலைவர் முருகவேளே.

"பவரோக வயித்திய நாதப் பெருமாளே" என்பார் திருத்தணிகைத் திருப்புகழில்.

ஆலமுண்ட கோன் …..      …..   புகழ்தாளும் ---

முருகப் பெருமானுடைய திருவடிகளை ஆலம் உண்ட நீலகண்டரும், உலகம் உண்ட கமலக்கண்ணனும், பிரமதேவரும், வேதங்களும் ஆகமங்களும் புகழ்கின்றன.

என்றும் நினைவேனோ ---

பொன்னையும், பொருளையும், வீட்டையும், மாட்டையும், மனைவியையும், மக்களையும் எப்பொழுதும நினைத்து நினைத்து வேதனை அடைகின்றனர். இந்த எல்லா நினைவுகளையும் தவிர்க்க வேண்டுமானால், இறைவனை நினைக்க வேண்டும்.  இடையறாது இறைவனை நினைப்பதுவே துன்ப நீக்கத்திற்கும், இன்ப ஆக்கத்திற்கும் பரம சாதனமாம்.

"தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ" என்பார் அப்பர்.

"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும்சுடரே
வைவைத்த வேல்படை வானவனே, மறவேன் உனைநான்.."

என்பார் அடிகள் கந்தர் அலங்காரத்தில்.

பிறவாது இருக்க வரம் தரல் வேண்டும் பிறந்துவிட்டால்
இறவாது இருக்க மருந்து உண்டு காண், இது எப்படியோ?
அறம் ஆர் புகழ்த் தில்லை அம்பலவாணர் அடிக் கமலம்
மறவாது இரு, மனமே! அதுகாண் நல் மருந்து உனக்கே.

என்பார் திருவெண்காடர்.

ஆதலின், அருகாத நன்மையை அருளும் முருகவேளுடைய திருவடிகளையும், ஆறுதிருமுகங்களையும், பன்னிரு புயாசலங்களையும், வேலாயுதத்தையும், மயிலையும் சதா நினைந்து உய்யவேண்டும்.


வால சந்த்ர சூடி ---

அம்பிகை இறைவனுடைய ஒரு பாதி ஆதலின், சந்த்ர சூடி என்றனர். திங்கள் தூய்மையும் வெண்மையும் தண்மையும் உடையது. திங்களைத் தலைமிசை முடித்துள்ளார் என்பதனால் அம்பிகையின் அறிவு அத் தன்மையது என்பது குறிப்பு.

சந்த வேத மந்த்ர ரூபி ---

வேதத்தில் பல சந்தங்கள் உண்டு.  வேத மந்திரமே அம்பிகைக்கு வடிவம். மந்திர ரூபிண்யை நம: என்ற நாமத்தையும் காண்க.

"வேத மந்த்ர சொரூபா நமோ நம" என்பார் திருவாவினன்குடித் திருப்புகழில்.

பஞ்ச பாணி ---

அம்பிகை பண்ணின் மயமானவர். ஆதலின் பாணி எனப்பட்டனர். பண்பாடுவோர் பாணர் எனப்பட்டது போல் என்று அறிக.

பண், குறிஞ்சிப் பண், முல்லைப் பண், நெய்தல் பண், மருதப் பண், பாலைப் பண் என ஐவகைப்படும்.

"ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய், என்னுடைய
தோழனுமாய், யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி,
மாழைஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதியில்லா
ஏழையேன் பிரிந்துஇருக்கேன் என்ஆரூர் இறைவனையே"

என்பார் வன்தொண்டர்.

மாயை ஐந்து ---

அநந்த தேவர் சத்தி கலக்கக் கலக்குண்ட அசுத்தமாயா தத்துவத்தினின்றும் காலம், நியதி, கலை வித்தை, அராகம் என்ற ஐந்து தத்துவங்களும் தோன்றும்.

கால தத்துவம் --- நெடுங்காலம் நுகர்ந்தான், சிறிதுகாலம் நுகர்ந்தான் எனப் புருடனுக்குப் போகத்தை வரையறுத்தல் இதன் தொழில்.

நியதி தத்துவம் --- ஆன்மாக்கள் அவரவரால் செய்யப்பட்ட கன்மாக்கள் அவரவரே நுகரப்படும் என நியமித்தல் இதன் தொழில்.

கலா தத்துவம்  --- ஆன்மாக்களுக்கு அநாதியே செம்பில் களிம்பு போலச் சகசமான மலசத்தியில் சிறிது நீக்கி, ஆன்மரூபத்தை விளக்குதல் இதன் தொழில்.

வித்யா தத்துவம் --- விடயத்தில் பற்றிய புத்தியை புருடனிடத்தில் கொண்டு செலுத்துதல்                           இதன் தொழில்.

அராக தத்துவம் ---  விடயங்களில் ஆசையைப் பெருக்குதல் இதன் தொழில்.

இவ் ஐந்து தத்துவங்களின் விரிவுரைகளை சிவஞானபோதம், இரண்டாம் சூத்திரம், இரண்டாம் அதிகரணத்தில் காண்க.

இந்த ஐந்து தத்துவங்களுள், அராகம் வித்தை கலை என்ற மூன்றும் ஆன்மாவின் இச்சை ஞானக் கிரியைகளை விளக்கிப் போகத்தை நுகர்தல் பொருட்டு, புத்தி தத்துவத்தில் செலுத்தியும், நியதி தத்துவம் இதனையே நுகர்க எனப் போகத்தின் கண்ணே ஆன்மாவை நியமித்து நிறுத்தியும், காலதத்துவம் இதனை இத்துணைப் பொழுது மாத்திரையில் நுகர்க எனப் போகத்தின்கண்ணே வரையறுத்துச் செலுத்தியும், இவ்வாறு இவ் ஐந்தும் ஆன்மாவுக்கு உபகாரமாய் நிற்கும். 

ஏனைக் கருவிகள் போல அவத்தைப் படுவதற்கு ஏதுவாய் இடையிடையே கூடுதலும் நீக்குதலும் இன்றி, எக்காலத்தும் ஆன்மாவின் உடனாய் கஞ்சுகம் போலப் பதிந்து நிற்றலின், இவை பஞ்சகஞ்சுகம் என்று உபசரித்துக் கூறப்படும்.

இந்த ஐந்தினையும் உடைய ஆன்மா புருடதத்துவம் என நிற்பன்.

இவ்வாறு கலை முதலிய பஞ்சகஞ்சுகம் உடையனாய், போக நுகர்ச்சியின்கண் சென்ற ஆன்மாவிற்குக் குணம் முதல் மண் முடிவாகிய போக்கியங்கள் முறையே உளவாதற்கு ஏதுவாகக் கலையினின்றும் மூலப்பகுதி என்னும் தத்துவம் தோன்றியது.  அது, சீகண்டருத்திரர் சத்தி கலக்கக் கலக்குண்டு தன்னினின்றும் குணதத்துவத்தைத் தோற்றுவிக்கும்.

மண் முதல் அகங்காரம் வரையான இருபத்திரண்டு தத்துவங்கட்கும் மேலாய புத்தி தத்துவத்திற்குக் காரணம் இந்தக் குணதத்துவம். இது சாத்துவிகம், இராசதம், தாமதம் என மூவகைத்தாய் முறையே சுகம், துக்கம், மோகங்கட்குக் காரணமாக இருக்கும்.

இதனை அடுத்து நிற்கும், புத்தி அகங்காரம் மனம் என்ற தத்துவங்கள் மூன்றும் அந்தக்கரணம் எனப்படும். இம்மூன்றும் அகத்து நின்று தொழில்படுத்துவதால், அந்தக் கரணம் எனப் பெற்றன.

இவற்றுள் மனத்தின் தொழில், ஒரு பொருளைச் சங்கற்பித்தலும், செவி முதலிய புலன்களைப் புறத்தே செலுத்தலும் ஆம்.

அகங்காரத்தின் தொழில், அபிமானம் செய்தலும், பிராணன் முதலிய வாயுக்களை இயக்குதலும் ஆம்.

புத்தியின் தொழில், ஒருபொருளைத் துணிதலாம்.  துணிதலாவது, இது இப்பி அல்ல, வெள்ளிலே என்று நிச்சயித்தல்.

இதனை அடுத்து, காது, கண், நாதி, நாக்கு, மெய் என்பன ஞானேந்திரியங்கள்.

அடுத்து வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்பன கன்மேந்திரியங்கள்.

வேகம் ஐந்து ---

தன்மாத்திரைகள் ஐந்து. இவைகள் புலன்களை வேகிப்பதனால் வேகம் என்று கூறினார். இவை, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும்.

பூதம் ஐந்து ---

மண், நீர், தீ, வளி, வெளி என்னும் ஐம்பூதங்கள்.

நாதம் ஐந்து ---

சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் சிவதத்துவம் ஐந்தும் ஆம்.

சிவதத்துவத்தை நாத தத்துவம் எனவும் சொல்லலாம்.

இந்த ஐந்து தத்துவமும் சிவபெருமானுக்கு முறையே அதிகார தத்துவம், போக தத்துவம், இலய தத்துவம் எனப் பெயர் பெறுதற்கு நிமித்தமாய் இருக்கும்.

எனவே, 36 தத்துவங்களுக்குள்ளும் இறைவன் நின்று அவைகளை இயக்கி, அவைகட்கு அப்பாலாய் தத்துவாதீதனாக நிற்பன்.

தத்துவம் 36 ---  அவைகளாவன.... 

மண், நீர், தீ, வளி, வெளி (பூதங்கள்) 5
நாற்றம், சுவை, ஒலி, ஊறு, ஓசை (தன்மாத்திரைகள்) 5
வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் (கன்மேந்திரியங்கள்) 5
மெய், வாய், கண், மூக்கு, செவி (ஞானேந்திரியங்கள்) 5
மனம், புத்தி, அகங்காரம் (அந்தக் கரணங்கள்) 3
குணம் 1,
மூலப்பகுதி 1
புருடன் 1
காலம், நியதி, கலை, வித்தை, அராகம் 5
சிவம், சத்தி, சதாசிவம், ஈசுவரம், சுத்தவித்தை 5

ஆக, முப்பத்தாறு ஆகும்.

"ஆறுஆறையும் நீத்து, அதன் மேல் நிலையை
பேறா அடியேன் பெறுமாறு உளதோ"      ---  கந்தர் அநுபூதி.

"ஆறுஆறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே"   
                                    --– (மாலாசை)திருப்புகழ்.

இவைகளின் நுட்பங்களை மெய்கண்ட சாத்திரங்களில் கண்டு தெளிக.
   
வேலை அன்பு கூர …  …அணைவோனே ---

விநாயகமூர்த்தி யானைவடிவு கொண்டு வர, வள்ளி நாயகியார் அஞ்சி, முருகவேளை அபயம் புக, எம்பெருமான் அவரை அணைத்து அருள் புரிந்தனர்.

விநாயகர் பிரணவ சொரூபம். ஆன்மாவாகிய வள்ளிநாயகிக்கு பிரணவோபதேசம் நிகழ்ந்த மாத்திரை, பந்த பாசத்தினின்றும் நீங்கி, பற்றற்ற பரமனைப் பற்றி நின்றனர்.

வீரமங்கை           மேரு மங்கை ---

உத்தரமேரூரில் இலக்குமிதேவி, கங்காதேவி, பூமிதேவி என்ற இந்த மூன்று தேவிகளின் ஆலயங்களும் உண்டு. உத்தரமேரூர் மிகவும் புனிதமான திருத்தலம்.

ஆழியில் துயில்வோனும், மாமலர்ப் பிரமாவும், ஆகமப் பொருளோரும், அனைவோரும் ஆனை மத்தகவோனும், ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர்....

வேதமும்கிரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்புவியில் தாபித்தருள்
வேர்விழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ்   மறையோர்வாழ்
மேருமங்கையில் அத்தா....

என்று மிகமிக அழகாக இத்தலத்தைப் பற்றி அடிகள் புகழ்ந்து பாடுகின்றனர்.

அழகிய ஆலயமும், வழிபாடும் அமைந்துள்ள அற்புதத் திருத்தலம்.

இத் திருத்தலம், செங்கற்பட்டு புகைவண்டி நிலையத்தில் இருந்து, தென்மேற்கில் 18 கல் தொலைவில் உள்ளது.

கருத்துரை

பார்வதி பாலரே! எங்கும் எல்லாவற்றினும் கலந்து உறையும் பரிபூரணரே! வள்ளி மணாளரே! உத்தரமேரூர் உரையும் எம்பெருமானே! பிறவிநோய் நீங்கி அடியேன் உய்யும்பொருட்டு தேவரீரை எப்போதும் மறவாமல் நினைக்க அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...