அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அனுத்தேன் நேர்மொழி
(திருப்போரூர்)
முருகா!
விலைமாதர் மேல் வைத்த ஆசையை
விட்டொழிக்கத்
திருவருள் புரிவாய்.
தனத்தா
தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன ...... தனதான
அனுத்தே
னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
லடுத்தே தூதுகள் நூறா றானதும் ......
விடுவார்கள்
அழைத்தே
வீடினி லேதா னேகுவர்
நகைத்தே மோடிக ளாவார் காதலொ
டடுத்தே மாமுலை மீதே மார்புற ......
அணைவார்பின்
குனித்தே
பாகிலை யீவார் பாதியில்
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
குடிப்பார் தேனென நானா லீலைகள் ......
புரிவார்கள்
குறித்தே
மாமய லாலே நீள்பொருள்
பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக
குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ......
அருள்வாயே
வனத்தே
வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...விறல்வீரா
மலர்த்தே னோடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர் ......
மருகோனே
சினத்தே
சூரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
திருத்தோ ளாஇரு பாதா தாமரை ......
முருகோனே
திருத்தேர்
சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அனுத்
தேன் நேர் மொழியாலே, மாமயல்
உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில்,
அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும்
.....விடுவார்கள்,
அழைத்தே
வீடினிலே தான் ஏகுவர்,
நகைத்தே மோடிகள் ஆவார், காதலொடு
அடுத்தே மாமுலை மீதே மார்புஉற
.....அணைவார்,பின்
குனித்தே
பாகிலை ஈவார், பாதியில்
கடிப்பார் வாய்இதழ், வாய் நீர் ஆனது
குடிப்பார் தேன் என, நானா லீலைகள்
...... புரிவார்கள்,
குறித்தே
மா மயலாலே நீள் பொருள்
பறிப்பார், ஆசுகள் சூழ் மா பாதக
குணத்தார், மாதர்கள் மேல் ஆசா விட......அருள்வாயே.
வனத்தே
வேடுவர் மாதாம் ஓர் மினை
எடுத்தே தான் வரவே, தான் யாவரும்
வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் ......விறல்வீரா!
மலர்த்தேன்
ஓடையில் ஓர் மா ஆனதை
பிடித்தே நீள் கர வாதாடு ஆழியை
மனத்தால் ஏவிய மா மால் ஆனவர்
......மருகோனே!
சினத்தே
சூரர்கள் போராய் மாளவும்,
எடுத்து ஓர் வேல் விடு தீரா! தார் அணி
திருத்தோளா! இரு பாதா தாமரை ......
முருகோனே!
திருத்
தேர் சூழ்மதிள் ஏர்ஆர் தூபிகள்
அடுக்கு ஆர் மாளிகையே நீள் ஏர்உள
திருப்போரூர் உறை தேவா! தேவர்கள்
...... பெருமாளே.
பதவுரை
வனத்தே வேடுவர் மாது
ஆம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் --- காட்டில் வேடர் குலத்துப்
பெண்ணாகிய மின்னல் கொடி போன்ற வள்ளி நாயகியாரைத் தேவரீர் கொண்டு போகவும்,
யாவரும் வளைத்தே சூழவும் --- வேடர்கள் யாவரும் தேவரீரை
வளைத்துச் சூழவும்,
ஓர் வாளால் வெலும்
விறல் வீரா
--- ஒப்பற்ற வாள் கொண்டு வென்ற பெருமை வாய்ந்தவரே!
மலர்த் தேன் ஓடையில் --- மலர்களின் தேன் சொட்டி ஓடுகின்ற ஓடையில்
ஓர் மா ஆனதை பிடித்தே --- ஒரு பெரிய
யானை ஆகிய கஜேந்திரனைப் பிடித்துக் கொண்டு,
நீள் கர வாதாட --- நீண்ட முதலையானது போர் செய்ய,
ஆழியை மனத்தால் ஏவிய மா மால் ஆனவர்
மருகோனே --- திருச்சக்கரத்தை முதலையின் மீது உள்ளத்தில் கருணை கொண்டு
செலுத்தியவர் ஆகிய பெருமை மிக்க திருமாலின் திருமருகரே!
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா --- சினத்துடன்
போருக்கு வந்த சூரர்கள் மாளும்படியாக ஒப்பற்ற வேலாயுதத்தை விடுத்து அருளிய தீரரே!
தார் அணி திருத் தோளா --- மாலை
அணிந்த திருத் தோள்களை உடையவரே!
இரு பாதா தாமரை முருகோனே --- தாமரை
மலர் போலும் இரு திருவடிகளை உடைய முருகப் பெருமானே!
திருத் தேர் --- அழகிய தேரும்,
சூழ் மதிள் --- சூழ்ந்துள்ள மதிலும்,
ஏர் ஆர் தூபிகள் --- அழகு பொருந்திய
சிகரங்களும்,
அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள --- அடுக்குகள் கொண்ட மாளிகைகளும் நிறைந்த சிறப்புள்ள
திருப்போரூர் உறை தேவா --- திருப்போரூர்
என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமானே!
தேவர்கள் பெருமாளே --- தேவர்கள்
போற்றும் பெருமையில் மிக்கவரே!
அனுத் தேன் நேர் மொழியாலே ---
தேன் போலும் இனிய சொற்களாலும்,
மா மயல் உடைத்தார் போலவும் --- மிக்க
மோகத்தை உடையவர் போலவும்,
ஓர் நாள் ஆனதில் அடுத்தே --- ஒரே நாளில்
மேன்மேலும்,
தூதுகள் நூறு ஆறு ஆனதும் விடுவார்கள் ---
நூற்று ஆறு முறையும் தூதுகளை விடுவார்கள்.
அழைத்தே வீடினிலே
தான் ஏகுவர்
--- வந்தால் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குள்ளே போவார்கள்.
நகைத்தே மோடிகள் ஆவார் --- சிரிப்புடனே
பகட்டும், பிணக்கமும் செருக்கும்
காட்டுவர்.
காதலொடு அடுத்தே --- அன்புடையவர்
போல் மிக நெருங்கி,
மா முலை மீதே மார்பு உற அணைவார் --- தங்களின்
பெருத்த முலைகள் வந்தவரின் மார்பிலே பொருந்துமாறு அணைவார்கள்.
பின் குனித்தே பாகு
இலை ஈவார்
--- பின்னர், அன்போடும்
பணிவோடும் தருவது போல் குனிந்து பாக்கு வெற்றிலை கொடுப்பர்.
பாதியில் கடிப்பார் --- அங்ஙனம் கொடுக்கும்போது பாதியில் வாயில் இருப்பதைத் தங்கள் வாயில் எடுத்துக் கடிப்பார்கள்.
வாய் இதழ் வாய் நீரானது குடிப்பார் ---
வாய் இதழில் ஊறுகின்ற நீரைக் குடிப்பர்.
தேன் என நானா லீலைகள் புரிவார்கள் ---
இனிமையாக நானா விதமான காம விளையாடல்களைப் புரிவர்.
குறித்தே மா மயலாலே
நீள் பொருள் பறிப்பார் --- பொருளைக் குறித்து, மிக்க காமத்தை விளைவித்து, உள்ள பொருள்
அத்தனையும் பறித்துக் கொள்வர்.
ஆசுகள் சூழ் மா பாதக குணத்தார் --- குற்றங்கள்
நிறைந்த பெரும்பாவ குணத்தை உடையவர்கள்.
மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே ---
இத்தகைய விலைமாதர்கள் மீது கொள்ளும் ஆசையை விட்டொழிக்க அருள் புரிவாயாக.
பொழிப்புரை
காட்டில் வேடர் குலத்துப் பெண்ணாகிய
மின்னல் கொடி போன்ற வள்ளி நாயகியாரைத் தேவரீர் கொண்டு போகவும், வேடர்கள்
யாவரும் தேவரீரை வளைத்துச் சூழவும்,
ஒப்பற்ற
வாள் கொண்டு வென்ற பெருமை வாய்ந்தவரே!
மலர்களின் தேன் சொட்டி ஓடுகின்ற ஓடையில் ஒரு
பெரிய யானை ஆகிய கஜேந்திரனைப் பிடித்துக் கொண்டு, நீண்ட முதலையானது போர் செய்ய, உள்ளத்தில் கருணை கொண்டு, திருச்சக்கரத்தை முதலையின் மீது
செலுத்தியவர் ஆகிய பெருமை மிக்க திருமாலின் திருமருகரே!
சினத்துடன் போருக்கு வந்த சூரர்கள் மாளும்படியாக
ஒப்பற்ற வேலாயுதத்தை விடுத்து அருளிய தீரரே!
மாலை அணிந்த திருத் தோள்களை உடையவரே!
தாமரை மலர் போலும் இரு திருவடிகளை உடைய முருகப்
பெருமானே!
அழகிய தேரும், சூழ்ந்துள்ள மதிலும், அழகு பொருந்திய சிகரங்களும், அடுக்குகள் கொண்ட மாளிகைகளும் நிறைந்த
சிறப்புள்ள திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி
இருக்கும் பெருமானே!
தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
தேன் போலும் இனிய சொற்களாலும், மிக்க மோகத்தை உடையவர் போலவும், ஒரே நாளில் மேன்மேலும், நூற்று ஆறு முறையும் தூதுகளை விடுவார்கள். வந்தால் அழைத்துக் கொண்டு தங்கள்
வீட்டுக்குள்ளே போவார்கள். சிரிப்புடனே பகட்டும், பிணக்கமும் செருக்கும்
காட்டுவர். அன்புடையவர் போல் மிக
நெருங்கி, தங்களின் பெருத்த
முலைகள் வந்தவரின் மார்பிலே பொருந்துமாறு அணைவார்கள். பின்னர், அன்போடும் பணிவோடும் தருவது போல் குனிந்து பாக்கு
வெற்றிலை கொடுப்பர். அங்ஙனம் கொடுக்கும்போது பாதியில் வாயில் இருப்பதைத் தங்கள் வாயில் எடுத்துக் கடிப்பார்கள். வாய் இதழில் ஊறுகின்ற நீரைக் குடிப்பர். இனிமையாக நானா விதமான காம
விளையாடல்களைப் புரிவர். பொருளைக் குறித்து, மிக்க காமத்தை விளைவித்து, உள்ள பொருள்
அத்தனையும் பறித்துக் கொள்வர். குற்றங்கள் நிறைந்த பெரும்பாவ
குணத்தை உடையவர்கள். இத்தகைய
விலைமாதர்கள் மீது கொள்ளும் ஆசையை விட்டொழிக்க அருள் புரிவாயாக.
விரிவுரை
இத்
திருப்புகழில் அடிகளார் விலைமாதர்கள் புரிகின்ற சாகசச் செயல்களை எடுத்துச் சொல்லி, உயிருக்கு ஆக்கத்தைத் தராது, அழிவையே தருகின்ற
அவர்களின் மீது கொள்ளுகின்ற ஆசையை விட்டொழிக்கத் திருவருள் புரியுமாறு திருப்போரூரில்
திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள முருகப் பெருமானை வேண்டுகின்றார்.
வனத்தே
வேடுவர் மாது ஆம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான், யாவரும் வளைத்தே சூழவும், ஓர் வாளால் வெலும்
விறல் வீரா
---
முருகவேள்
தினைப்புனம் சென்று, திருவிளையாடல்
செய்வார் போல்,
வள்ளியம்மையைத்
தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த
பாங்கி,
வெளி
வந்து,
பெருமானைப்
பணிந்து,
"ஐயா!
நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள்.
இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம்
ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி
வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.
தாய்துயில்
அறிந்து,
தங்கள்
தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில்
அறிந்து,
மற்றுஅந்
நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில்
கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில்
கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.
(இதன்
தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில்
திருவருளாகிய பாங்கி, பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப்
பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில்
மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)
வள்ளி
நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு
இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று
தொழுது நின்றார்.
பாங்கி
பரமனை நோக்கி,
"ஐயா!
இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும்.
இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, உமது பதிக்குப் போய், இவளைக் காத்து
அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத்
தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன்
சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி
விடுத்து,
குகைக்குள்
சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில்
தங்கினார்.
விடியல்
காலம்,
நம்பியின்
மனைவி எழுந்து,
தனது
மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான்
அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம்
கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல
ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது. எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.
முருகவேள், "பெண்ணரசே!
வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள்
போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி
வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து
அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி
வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக்
கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை
விட்டு நீங்க,
அம்மையாரும்
ஐயனைத் தொடர்ந்து சென்றார்.
இடையில்
நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக்
கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும்
சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு
வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார்
"அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன்
எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு
திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின்
அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே
இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள்
என்ன செய்வோம்? தாயே தனது
குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக
எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப்
பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.
மலர்த்
தேன் ஓடையில் ஓர் மா ஆனதை பிடித்தே நீள் கர வாதாட, ஆழியை மனத்தால் ஏவிய மா மால் ஆனவர்
மருகோனே
---
மா
- விலங்கு. இங்கு யானையைக் குறித்தது.
கரா
- முதலை. இறுதிக் குறைந்து "கர" ஆனது.
கஜேந்திர
ஆழ்வாருக்குத் திருமால் அருள் புரிந்த வரலாற்றை இது குறிக்கின்றது.
திருப்பாற்
கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம்
உடையதாயும், பெரிய ஒளியோடு
கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு
பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள்
நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த
நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணல் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து
அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், அப்சர மாதர்களும்
வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல
தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது.
அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம்.
அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற
ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே
சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண்
யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக்
கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக்
கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி
பெறும் சக்தி இன்றித் தவித்தது. கரையில் இருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு அந்த
யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும்
ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது. கஜேந்திரம்
உணவு இன்மையாலும் முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது.
யாதும் செய்ய முடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,
உடனே
கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு
முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம்
தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட
நாராயணர் காத்தல் கடவுளாதலால், உடனே ஓடிவந்து
கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது
முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை
பொதுவாக ஆதிமூலம் என்று அழைத்தபோது, நாராயணர் வந்து
காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான்
கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன்
நீ இந்த வேலையைச் செய் என்று ஒருவனுக்குக் கொடுத்துள்ள போது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன்
கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமை அல்லவா? தலைவனைத் தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன் வாளா
இருந்தால், தலைவனால் தண்டிக்கப்படுவான்
அல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை
நிறைவேற்ற நாராயணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
வாரணம்
மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு
வாவியின் மாடு இங்கர் பாழ்படவே எறிந்த
மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்
...... மருகோனே.
--- (பூரணவார) திருப்புகழ்.
திருப்போரூர்
உறை தேவா ---
திருப்போரூர்
என்னும் திருத்தலம் சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், செங்கற்கட்டில் இருந்து 25 கி. மீ. தொலைவிலும்
உள்ள அழகிய முருகன் திருத்தலம்.
கருத்துரை
முருகா!
விலைமாதர் மேல் ஆசையை விட்டொழிக்கத் திருவருள் புரிவாய்.
No comments:
Post a Comment