வல்லக்கோட்டை - 0715. ஏறு ஆனாலே




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஏறு ஆனாலே (கோடைநகர் - வல்லக்கோட்டை)

முருகா!
தேவரீரின் திருவடியில் கலந்து இன்புற அருள்.


தானா தானா தானா தானா
     தானா தானா ...... தனதானா

ஏறா னாலே நீறாய் மாயா
     வேளே வாசக் ...... கணையாலே

ஏயா வேயா மாயா வேயா
     லாமே ழோசைத் ...... தொளையாலே

மாறா யூறா யீறாய் மாலாய்
     வாடா மானைக் ...... கழியாதே

வாராய் பாராய் சேரா யானால்
     வாடா நீபத் ...... தொடைதாராய்

சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
     சீரார் தோகைக் ...... குமரேசா

தேவா சாவா மூவா நாதா
     தீரா கோடைப் ...... பதியோனே

வேறாய் மாறா யாறா மாசூர்
     வேர்போய் வீழப் ...... பொருதோனே

வேதா போதா வேலா பாலா
     வீரா வீரப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


ஏறு ஆனாலே, நீறு ஆய் மாயா
     வேள் ஏவு வாசக் ...... கணையாலே,

ஏயாய் ஏயாய் மாயா, வேயால்
     ஆம் ஏழு ஓசைத் ...... தொளையாலே,

மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய்
     வாடா மானைக் ...... கழியாதே,

வாராய், பாராய், சேராய் ஆனால்,
     வாடா நீபத் ...... தொடை தாராய்.

சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
     சீர்ஆர் தோகைக் ...... குமரஈசா!

தேவா! சாவா மூவா நாதா!
     தீரா! கோடைப் ...... பதியோனே!

வேறாய் மாறாய் ஆறாம் மாசூர்
     வேர் போய் வீழப் ...... பொருதோனே!

வேதா போதா! வேலா! பாலா!
     வீரா! வீரப் ...... பெருமாளே.

பதவுரை


       சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகைக் குமரேசா --- சீறி எழுந்து பொலிவுடன் மேலே பறந்து பதினான்கு உலகங்களையும் வலம் வந்த, சிறப்பு மிகுந்த மயிலை வாகனமாக உடைய குமாரக் கடவுளே!

      தேவா --- தேவரே!

     சாவா மூவா நாதா --- இறப்பு மூப்பு அற்ற தலைவரே!

     தீரா --- தீரம் உடையவரே  

     கோடைப் பதியோனே --- கோடைப் பதியில் எழுந்தருளி இருப்பவரே!

     வேறாய் மாறாய் ஆறாம் மாசூர் வேர் போய் வீழப் பொருதோனே --- வேறுபட்டு மாறுபட்ட வழியில் சென்றவனான பெரிய சூரபதுமன் தனது வலிமை அற்று அடியோடு விழும்படி போர் புரிந்தவரே!

      வேதா போதா --- பிரமதேவனுக்குப் போதத்தை ஊட்டியவரே!

     வேலா --- வேலாயுதக் கடவுளே!

     பாலா --- குழந்தை முருகா!

     வீரா --- வீரம் மிக்கவரே!

     வீரப் பெருமாளே --- உயிர்களுக்கு வீரத்தை விளைக்கின்ற பெருமையில் மிக்கவரே!

      ஏறு ஆனாலே --- காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினாலும்,

      நீறு ஆய் மாயா வேள் ஏவு வாசக் கணையாலே --- வெந்து பொடியாகி அழிந்தும், அழியாத ஆற்றலை உடைய மன்மதவேள் ஏவுகின்ற மணமுள்ள மலர்க் கணையாலும்,

      ஏயாய் ஏயாய் மாயா --- மனம் பொருந்திப் பொருந்தி கவலையால் வருந்தி

      வேயால் ஆம் ஏழு ஓசைத் தொளையாலே --- வேய்ங்குழலில் உள்ள ஏழு தொளைகளில் உண்டாகும் சுர இசையினாலும்,

      மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானைக் கழியாதே --- உடம்பின் நிறம் மாறுதல் அடைந்து, முடிவில்லாத மையல் மிகுந்து, வாடுகின்ற இந்தப் பெண்ணை நீ தள்ளிவிடாமல்,

      வாராய் பாராய் --- வந்தருளி கருணை நோக்கம் கொண்டு பார்த்து அருளுவாய்,

     சேராயானால் --- தேவரீர் இந்தப் பெண்ணோடு கூடி அருளவில்லையானாலும்,

     வாடா நீபத் தொடை தாராய் --- தேவரீரது திருமார்பில் அணிந்து உள்ள வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளவேண்டும்.


பொழிப்புரை

     சீறி எழுந்து பொலிவுடன் மேலே பறந்து பதினான்கு உலகங்களையும் வலம் வந்த, சிறப்பு மிகுந்த மயிலை வாகனமாக உடைய குமாரக் கடவுளே!

      தேவரே!

     இறப்பு மூப்பு அற்ற தலைவரே!

     தீரம் உடையவரே

     கோடைப் பதியில் எழுந்தருளி இருப்பவரே!

     வேறுபட்டு மாறுபட்ட வழியில் சென்றவனான பெரிய சூரபதுமன் தனது வலிமை அற்று அடியோடு விழும்படி போர் புரிந்தவரே!

      பிரமதேவனுக்குப் போதத்தை ஊட்டியவரே!

     வேலாயுதக் கடவுளே!

     குழந்தை முருகா!

     வீரம் மிக்கவரே!

     உயிர்களுக்கு வீரத்தை விளைக்கின்ற பெருமையில் மிக்கவரே!

      காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினாலும், வெந்து பொடியாகி அழிந்தும், அழியாத ஆற்றலை உடைய மன்மதவேள் ஏவுகின்ற மணமுள்ள மலர்க் கணையாலும், மனம் பொருந்திப் பொருந்தி கவலையால் வருந்தி, வேய்ங்குழலில் உள்ள ஏழு தொளைகளில் உண்டாகும் சுர இசையினாலும்,  உடம்பின் நிறம் மாறுதல் அடைந்து, முடிவில்லாத மையல் மிகுந்து, வாடுகின்ற இந்தப் பெண்ணை நீ தள்ளிவிடாமல், வந்தருளி கருணை நோக்கம் கொண்டு பார்த்து அருளுவாய். தேவரீர் இந்தப் பெண்ணோடு கூடி அருளவில்லையானாலும், தேவரீரது திருமார்பில் அணிந்து உள்ள வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளவேண்டும்.


விரிவுரை

இத் திருப்புகழ்ப் பாடல் அகப்பொருள் துறையில் அமைந்தது. காதல் கொண்ட தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் நிலையைப் பொருளாக வைத்துப் பாடப்பெற்றது. ஆன்மாவாகிய நாயகி, பரமான்மாவாகிய இறைவனை நினைந்து, அவனது அருளை வேண்டி நிற்கும் முறையில் அமைந்தது.

ஏறு ஆனாலே --- 

ஏறு - காளை. ஆன் - பசு.

காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினால் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி வேதனைப்படுவாள்.

நீறு ஆய் மாயா வேள் ஏவு வாசக் கணையாலே ---

வெந்து பொடியாகி அழிந்தும், அநங்கனாக இருந்து தனது அழியாத ஆற்றலால் மன்மதவேள் ஏவுகின்ற மலர்க் கணைகள் தலைவன் தலைவிக்கு விரகதாபத்தை மிகுக்கும்.

மன்மதன் அமரர் மீது மலர் வில்லும், மனிதர் மீது கரும்பு வில்லும் அரக்கர் மீது இரும்பு வில்லும் தரித்துப் போர் புரிவான்.

மால், அயன், இந்திரன் சந்திரன், தேவர், முனிவர் முதலியவர்களைத் தன் வில்லினால் வெற்றி பெற்றவன்.

மன்மதனுடைய மலர்க்கணைகள் பரிமள மிக்க மா, அசோகு, தாமரை, முல்லை, நீலோற்பலம்.

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
     மலர்நீலம் இவைஐந் துமே
  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
     மிகஅசோ கம்து யர்செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
     மேவும்இவை செயும்அ வத்தை;

நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

 தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் ---

தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும்.
சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும்.
குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.
நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன:

எண்ணத்தில் அதுவே கருதுதல்,
மற்றொன்றில் ஆசை நீங்கல்,
பெருமூச்சுடன் பிதற்றுதல்,
உள்ளம் திடுக்கிடல்,
உணவில் வெறுப்பு,
உடல் வெதும்புதல்,
உடல் மெலிதல்,
யாருடனும் பேசாதிருத்தல்,
ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல்

ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
     மேல்விடும் கணைகள் அலராம்;
  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
    சார்இரதி யேம னைவிஆம்;
  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
    அமுதமே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

---     கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
---     அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
---     உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
---     தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
---     குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
---     யானை அழியாத இருளாகும்.
---     மிகுபடை பெண்கள் ஆவர்.
---     உடைவாள் தாழை மடல் ஆகும்.
---     போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்
---      கொடி மகர மீன் ஆகும்.
---     சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
---     பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
---     பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
---     குடை சந்திரன் ஆவான்.
---     காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
---     அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்  முடி ஆகும்.
---     எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின்  அல்குல் ஆகும்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

தான் விரும்பிய தலைவனைப் பெறாது ஒழியின்,  தலைவி அளவற்ற துன்பமடைந்து தவிப்பள்.

உண்டாரை மட்டும் மயக்கும் கள்.
கண்டாரையும் மயக்கும் காமம்.
உண்டாரை மட்டும் கொல்லும் நஞ்சு.
கண்டாரையும் கொல்லும் காமம்.
அருகில் சென்றால் கொல்லும் நெருப்பு.
நீங்கினாலும் கொல்லும் காமம்.

நீருள் குளித்தும், குன்று ஏறி ஒளித்தும், நெருப்பின் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத்தினால் வரும் துன்பத்தை அவ்வாறு போக்கிக் கொள்ள முடியாது. ஆதலினால், கள்ளினும், நெருப்பினும், நஞ்சினும் காமம் கொடியது என உணர்க.  அதனின்றும் பிழைத்து உய்யவேண்டும்.

ஊர்உள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீர்உள் குளித்தும் உயல்ஆகும்; - நீர்உள்
குளிப்பினும் காமம் சுடுமே, குன்றுஏறி
ஒளிப்பினும் காமம் சுடும்.                    ---  நாலடியார்.

ஏயாய் ஏயாய் மாயா ---

ஏய்தல் - பொருந்துதல்.

தலைவனையே நினைந்து தலைவியின் மனம் கவலையால் வருந்தி வாட்டமுறும்.

வேயால் ஆம் ஏழு ஓசைத் தொளையாலே ---

வேய்ங்குழலில் உண்டாகும் ஏழு தொளைகளில் உண்டாகும் சுர இசை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயல்பு உடையது.

கண்ணன் குழல் ஊதினான். ஆனாய நாயனார் குழல் ஊதினார்.

ஆனாய நாயனார் வேய்ங்குழலைத் தமது மணிவாயில் வைத்து, திருவைந்தெழுத்தை இசையில் அமைத்து வாசிக்கத் தொடங்கினார். அந்த இசை அமுதமானது எல்லா உயிர்களிலும் பாய்ந்தது. அறுகம்புல்லை மேய்ந்து கொண்டு இருந்த பசுக்கள், அதனை விடுத்து அவரைச் சூழ்ந்தன. நுரைவயுடன் பால் ஊட்டிக் கொண்டு இருந்த இளம்பசுக்கள் தங்களை மறந்தன. எருதுகளும், மான் முதலிய காட்டு மிருகங்களும் மயிர் முகிழ்த்து, அங்கு வந்து சேர்ந்தன. ஆடும் மயில்கள் அசையாது அணுகின. மற்றப் பறவை இனங்கள் எல்லாம் மயங்கி நெருங்கின. மாடு மேய்த்துக் கொண்டு இருந்த கோவலர்கள் அப்படியே நின்றார்கள். நாகலோக வாசிகள் பிலங்கள் வழியாக வந்தார்கள். மலையில் வாழும் தெய்வப் பெண்கள் இசையில் தேங்கி நின்றார்கள். வஞ்சையர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள் முதலியோர் விமானங்களில் போந்தார்கள். கற்பக மரங்களின் அருகில் இருந்து, கிளிகளுக்கு அமுது ஊட்டிக் கொண்டு இருந்த தேவப் பெண்கள், அந்தக் கிளிகளுடன் தங்களின் கூந்தல் அலைய விமானங்களில் விரைந்து ஏறி எந்து அமுத இசையைப் பருகினார்கள். வலியார் மெலியார் எல்லாம் ஒன்றுபட்டமையால், பாம்புகள் மயில் மீது விழுகின்றன. சிங்கங்களும் யானைகளும் ஒன்று சேர்ந்து வாழ்கின்றன. மான்கள் புலியோடு செல்கின்றன. காற்று அசையவில்லை. மரக்கிளைகள் அசையவில்லை. மலையில் இருந்து விழுகின்ற அருவிகளும், காட்டாறுகளும் கலித்து ஓடவில்லை. மேகங்கள் அசையவில்லை, முழங்கவும் இல்லை. மழை பொழியவில்லை. கடல் ஒசை எழவில்லை.

ஆனாயரின் குழலோசையில் அண்ட சராசரங்கள் எல்லாம் ஒன்றி நின்றன. வையத்தையும் வானையும் வசப்படுத்தி விட்டது நாயனாரின் குழலோசை. எஞ்சி நின்றது சிவம் ஒன்றே. அந்த சிவத்தின் திருச்செவியிலும் ஆனாயரின் குழலோசை நுழைந்தது. பொய்யன்புக்கு எட்டாத பொற்பொதுவில் ஆடுகின்ற பெருமான், உமாதேவியாருடன் காட்சி தந்து ஆட்கொண்டு அருளினார்.

பின்வரும் பெரியபுராணப் பாடல்களை ஓதி இன்புறுக.

முந்தைமறை நூல்மரபின் மொழிந்தமுறை எழுந்தவேய்
அந்தம் முதல் நால்இரண்டில் அரிந்து, நரம்பு உறுதானம்
வந்த துளை நிரைஆக்கி, வாயுமுதல் வழங்கு துளை
அந்தம் இல்சீர் இடையீட்டின் அங்குலி எண்களின் அமைத்து,

எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து ஐந்தும்
தொடுத்தமுறை ஏழிசையின் சுருதி பெற வாசித்துத்
தடுத்த சரா சரங்கள் எலாம் தங்க வரும் தம்கருணை
அடுத்த இசை அமுதுஅளித்துச் செல்கின்றார் அங்குஒருநாள்.

வாசமலர்ப் பிணைபொங்க மயிர்நுழுதி, மருங்கு உயர்ந்த
தேசுஉடைய சிகழி கையில் செறிகண்ணித் தொடைசெருகிப்
பாசிலைமென் கொடியின்வடம் பயிலநறு விலிபுனைந்து
காசுஉடைநாண் அதற்குஅயலே கரும்சுருளின் புறம்கட்டி.

வெண்கோடல் இலைச்சுருளில் பைந்தோட்டு விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த வடிகாதின் ஒளிதயங்கத்
திண்கோல நெற்றியின்மேல் திருநீற்றின் ஒளிகண்டோர்
கண்கோடல் நிறைந்துஆராக் கவின் விளங்க மிசை அணிந்து.

நிறைந்தநீறு அணிமார்பின் நிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடம்தாழத் திரள்தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப் பூம்பட்டுப் பொலிந்து அசைய.

சேவடியில் தொடுதோலும் செங்கையினில் வெண்கோலும்
மேவும்இசை வேய்ங்குழலும் மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்ஆயர் கன்று உடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார் நிரைகாக்கப் புறம்போந்தார்.

நீலமா மஞ்ஞை ஏங்க, நிரைக்கொடிப் புறவம் பாட,
கோல்வெண் முகைஏர் முல்லை கோபம்வாய் முறுவல்காட்ட,
ஆலும் மின் இடைசூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள்
ஞாலம் நீடு அரங்கில் ஆட, கார் எனும் பருவ நல்லாள்.

எம்மருங்கும் நிரைபரப்ப எடுத்தகோல் உடைப்பொதுவர்
தம்மருங்கு தொழுதுஅணையத் தண்புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்தசினை அலர்மருங்கு மதுஉண்டு
செம்மருந்தண் சுரும்புசுழல் செழுங்கொன்றை மருங்குஅணைந்தார்.

சென்று அணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என
மன்றல் மலர்த் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறும் கொன்றையினை நேர்நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்பால் மடைதிறந்தார்.

அன்புஊறி மிசைப்பொங்கும் அமுதஇசைக் குழல்ஒலியால்
வன்பூதப் படையாளி எழுத்துஐந்தும் வழுத்தித்தாம்
முன்புஊதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும்
என்புஊடு கரைந்து உருக்கும் இன்னிசைவேய்ங் கருவிகளில்.

ஏழுவிரல் இடைஇட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத்
தாழுமலர் வரிவண்டு தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன்று எழநின்று தூயபெருந் தனித்துளையில்
வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத.

முத்திரையே முதல் அனைத்தும் முறைத்தானம் சோதித்து
வைத்ததுளை ஆராய்ச்சி வக்கரனை வழிபோக்கி
ஒத்தநிலை உணர்ந்ததற்பின் ஒன்றுமுதல் படிமுறையால்
அத்தகைமை ஆர்ஓசை அமர்ஓசைகளின் அமைத்தார்.

மாறுமுதல் பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறிய தாரமும் உழையும் கிழமைகொள இடுந்தானம்
ஆறுஉலவும் சடைமுடியார் அஞ்செழுத்தின் இசைபெருகக்
கூறிய பட்டடைக் குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி.

ஆயஇசைப் புகல்நான்கின் அமைந்தபுகல் வகை எடுத்து
மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரல்நிரையில்
சேயஒளி இடை அலையத் திருவாளன் எழுத்து அஞ்சும்
தூயஇசைக் கிளைகொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார்.

மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல்தொழில்கள் அளவுபெற அசைத்து இயக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும் துளைவாயும் தொடக்கு உண்ண.
  
எண்ணியநூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும்
வண்ணஇசை வகை எல்லாம் மாதுரிய நாதத்தில்
நண்ணிய பாணியலும் தூக்குநடை முதல் கதியில்
பண்அமைய எழும்ஓசை எம்மருங்கும் பரப்பினார்.
 
வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்உறை அஞ்செழுத்துஆக ஓங்கி எழும் மதுர ஒலி
வெள்ளம் நிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர்தருவிளைதேன்
தெள்அமுதின் உடன்கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க.

ஆன்நிரைகள் அறுகு அருந்தி அசைவிடாது அணைந்து அயரப்
பால்நுரைவாய்த் தாய்முலையில் பற்றும் இளங்கன்றுஇனமும்
தான்உணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும்
மான்முதலாம் கான்விலங்கும் மயிர்முகிழ்த்து வந்துஅணைய.

ஆடுமயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி இசைநிறைந்த உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந்து உணர்வுஒழிய மருங்குதொழில் புரிந்துஒழுகும்
கூடியவன் கோவலரும் குறைவினையின் துறைநின்றார்.
          
பணி புவனங்களில் உள்ளார் பயில்பிலங்கள் வழி அணைந்தார்;
மணிவரைவாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்;
தணிவில்ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்
அணிவிசும்பில் அயர்வுஎய்தி விமானங்கள் மிசைஅணைந்தார்.

சுரமகளிர் கற்பகப்பூஞ் சோலைகளின் மருங்கு இருந்து
கரமலரின் அமுது ஊட்டும் கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறும் குழல் அலைய விமானங்கள் விரைந்துஏறிப்
பரவியஏழ் இசை அமுதம் செவிமடுத்துப் பருகினார்.

நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால்,
மலிவாய் வெள்எயிற்று அரவம் மயில்மீது மருண்டுவிழும்
சலியாத நிலைஅரியும் தடங்கரியும் உடன்சாரும்
புலிவாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும்.

மருவியகால் விசைத்து அசையா, மரங்கள் மலர்ச் சினைசலியா,
கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா,
பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்வு ஒழியப் புனல்சோரா,
இருவிசும்பின் இடைமுழங்கா, எழுகடலும் இடைதுளும்பா.

இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசைமயமாய்
மெய்வாழும் புலன்கரணம் மேவிய ஒன்று ஆயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையார் அடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல் வாசனை உருக்க.

மெய்அன்பர் மனத்துஅன்பின் விளைத்த இசைக் குழல்ஓசை
வையம் தன்னையும் நிறைத்து, வானம்தன் வயம்ஆக்கி,
பொய்அன்புக்கு எட்டாத பொற்பொதுவில் நடம்புரியும்
ஐயன்தன் திருச்செவியின் அருகு அணையப் பெருகியதால்.

ஆனாயர் குழல்ஓசை கேட்டு அருளி, அருட்கருணை
தான்ஆய திருவுள்ளம் உடைய தவ வல்லியுடன்
கான அதி காரணராம் கண்ணுதலார் விடை உகைத்து
வான்ஆறு வந்து அணைந்தார் மதிநாறும் சடைதாழ.

திசைமுழுதும் கணநாதர் தேவர்கட்கு முன்நெருங்கி
மிசைமிடைந்து வரும்பொழுது வேற்று ஒலிகள் விரவாமே
அசையஎழும் குழல்நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும்
இசைவிரும்பும் கூத்தனார் எழுந்துஅருளி எதிர்நின்றார்.

முன்நின்ற மழவிடைமேல் முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல் வாசனை கேட்க
"இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய்" என,அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார், ஐயர்திரு மருங்கு அணைந்தார்.

விண்ணவர்கள் மலர்மாரி மிடைந்து உலக மிசைவிளங்க,
எண்இல் அரு முனிவர்குழாம் இருக்குமொழி எடுத்து ஏத்த,
அண்ணலார் குழல்கருவி அருகுஇசைத்து அங்கு உடன்செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப் பொற்பொதுவின் இடைப்புக்கார்.
  
மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானைக் கழியாதே வாராய் பாராய் ---

உடம்பின் நிறம் மாறுபட்டு, உள்ளம் ஊறு அடைந்து, முடிவில்லாத துன்பத்தை அடைந்து வாடுகின்ற இந்தப் பெண்ணைத் தள்ளிவிடாமல், வந்தருளிக் கடைக்கண் நோக்கம் வைத்தருள வேண்டும் என்கின்றார்.

சேராயானால் வாடா நீபத் தொடை தாராய் ---

திருக்கடைக்கண் நோக்கம் வைத்தருளி தேவரீர் இந்தப் பெண்ணோடு கூடிக் கலந்து இன்பத்தைத் தரவேண்டும். கலந்து அருளும் பக்குவம் இன்னமும் வாய்க்கவில்லை என்று கருதி, தேவரீர் அணைந்து மகிழவில்லையானாலும், தேவரீரது திருமார்பில் அணிந்து உள்ள வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளவேண்டும் என்று வேண்டுகின்றார்.

நீலம் கொள் மேகத்தின் ...... மயில்மீதே,
   நீ வந்த வாழ்வைக் கண்டு, ...... அதனாலே
மால்கொண்ட பேதைக்கு, உன் ...... மணநாறும்
   மார் தங்கு தாரைத் தந்து ...... அருள்வாயே.  ---  திருப்புகழ்.

விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த,
     மிகவானில் இந்து ...... வெயில்காய,
மிதவாடை வந்து தழல்போல ஒன்ற,
     வினைமாதர் தம்தம் ...... வசைகூற,

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
     கொடிதுஆன துன்ப ...... மயல்தீர,
குளிர்மாலையின் கண் அணிமாலை தந்து
     குறைதீர வந்து ...... குறுகாயோ?          ---  திருப்புகழ்.

கோடைப் பதியோனே ---

கோடைப் பதி, இக் காலத்தில் "வல்லக்கோட்டை" என வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்துக்கு அருகில் உள்ளது வல்லக்கோட்டை. ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். ஏழு அடி உயர முருகன் திருவுருவம் அழகு. வள்ளி, தெய்வயானை இருபுறமும் விளங்க முருகப் பெருமான் இங்கு வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

கருத்துரை

முருகா! தேவரீரின் திருவடியில் கலந்து இன்புற அருள்.

No comments:

Post a Comment

நல்லவனாக வாழ்வது எளிதா?

நல்லவனாக வாழ்வது எளிதா? --- நல்லவனாக வாழ்வது எளிதா? நல்லவர்களிடையே வாழ்வது எளிதா? இந்த ஒரு வினாவை எழுப்பிச் சிந்திப்போமானால், நல்லவனாக ஒரு...