பலரில் அரியவர் ஒருவரே





59. பலரில் அரியர் ஒருவர்

பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!
     பாடுவோர் நூற்றில் ஒருவர்!
  பார்மீதில் ஆயிரத்து ஒருவர்விதி தப்பாது
     பாடிப்ர சங்கம் இடுவோர்!

இதன்அருமை அறிகுவோர் பதினா யிரத்துஒருவர்!
     இதை அறிந்து இதயம் மகிழ்வாய்
  ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே
     இலக்கத்திலே ஒருவராம்!

துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்
     தூயர் கோடியில் ஒருவர் ஆம்.
  தொல்உலகு புகழ்காசி ஏகாம்பரம் கைலை
     சூழும்அவி நாசி பேரூர்

அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

இதன் பொருள் ---

     தொல் உலகு புகழ் --- பழைமையான உலகம் புகழுகின்ற,

     காசி ஏகாம்பரம் கைலை சூழும் அவிநாசி பேரூர் அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி அத்தனே --- காசி, காஞ்சிபுரம், திருக் கயிலை, அடியவர்கள் சூழுகின்ற அவிநாசி, திருப்பேரூர், பெருமையுடைய திருவெண்காடு, திருச்செங்கோடு, திருக்காளத்தி ஆகிய தலங்களை இருப்பிடமாகக் கொண்ட முதல்வனே!,

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     சபை மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர் --- சபையில் உள்ளோர் புகழும்படி பேசுவோர் பத்துக்கு ஒருவர்,

     பாடுவோர் நூற்றில் ஒருவர் --- இனிமையாகப் பாடுவோர் நூற்றுக்கு ஒருவர்,

     விதி தப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார் மீதில் ஆயிரத்து ஒருவர் --- முறை தவறாமல் பாடிச் சொற்பொழிவு செய்வோர் உலகில் ஆயிரத்தில் ஒருவர்,

     இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர் --- இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரம் பேரில் ஒருவர்,

     இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் --- இதன் அருமையை உணர்ந்து உள்ளம் மகிழ்ந்து பொருளை அளிப்பவர்கள்,

     புவியிலே அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம் --- உலகில் அருமையாக இலட்சத்தில் ஒருவர் ஆவர்,

     துதி பெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த் தூயர் கோடியில் ஒருவர் ஆம் --- துதித்துப் போற்றுகின்ற முக்காலமும் உணர்ந்த உண்மையான உள்ளத் தூய்மை உடையவர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...