திருப்போரூர் - 0724. திமிர மாமன





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திமிர மாமன (திருப்போரூர்)

தனன தானன தானன தனன தானன தானன
     தனன தானன தானன ...... தனதான


திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
     திமிர மேயரி சூரிய ...... திரிலோக

தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
     சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே

குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
     குணக லாநிதி நாரணி ...... தருகோவே

குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
     குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம்

பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
     பசுர பாடன பாளித ...... பகளேச

பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
     பரவு பாணித பாவல ...... பரயோக

சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
     சமய நாயக மாமயில் ...... முதுவீர

சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
     சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.


பதம் பரித்தல்


திமிரம் ஆம் மன மாமட மடமையேன், இடர் ஆணவ
     திமிரமே யரி சூரிய! ...... திரிலோக

தினகரா! சிவ காரண! பனக பூஷண ஆரண
     சிவசுதா! அரி நாரணன் ...... மருகோனே!

குமரி, சாமளை, மாதுஉமை, அமலி, யாமளை, பூரணி,
     குணகலாநிதி, நாரணி, ...... தருகோவே!

குருகுகா! குமர ஈசுர! சரவணா! சகள ஈசுர!
     குறவர் மாமகள் ஆசைகொள் ...... மணியே! சம்-

பமர பார ப்ரபா! அருண படல! தாரக! மாசுக!
     பசுர பாடன! பாளித ...... பகள ஈச

பசித பாரண! வாரண துவச! ஏடக மா அயில்
     பரவு பாணித! பாவல! ...... பரயோக

சம பரா! மத சாதல, சமயம் ஆறிரு தேவத!
     சமய நாயக! மாமயில் ...... முதுவீர!

சகல லோகமும் ஆசறு சகல வேதமுமே தொழு
     சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.

பதவுரை

      திமிரம் ஆம் மன மாமட மடமையேன் இடர் --- இருள் நிறைந்த மனத்துடன் கூடிய,  பெரிய மூடனாகிய எனது துன்பத்தையும்,

     ஆணவ திமிரமே அரி சூரிய --- அதற்குக் காரணமாகிய  ஆணவ இருளை நீக்கும் ஞான சூரியரே!

      திரி லோக தினகரா --- மூவுலகங்களுக்கும் ஒளி தரும் சூரியனே! 

      சிவ காரண --- நன்மைக்குக் காரணமானவரே!

      பனக பூஷண ஆரண சிவசுதா --- நாகாபரணரும் வேத முதல்வருமான சிவபெருமானுடைய திருக்குமாரரே!

     அரி நாரணன் மருகோனே --- பாவங்களைப் போக்குபவராகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே!

      குமரி சாமளை மாது உமை --- கன்னிகையும், பசுமை நிறம் உடையவரும்,  அழகிய உமாதேவியும்,

      அமலி யாமளை பூரணி --- மாசு அற்றவளும், இளமை உடையவரும், எங்கும் நிறைந்தவளும்,

     குண கலாநிதி நாரணி தரு கோவே --- அருட்குணங்களுடன் கூடிய கல்விக் களஞ்சியமானவரும், துர்க்கையும் ஆகிய பார்வதி அம்மையார் பெற்றருளிய பிள்ளைப் பெருமானே!

      குருகுகா குமரேசுர சரவணா சகள ஈசுர --- குருநாதராக விளங்கி, ஆன்மாக்களின் இதய குகையில் வாழ்பவரே! குமாரக் கடவுளே! சரவணப் பொய்கையில் தோன்றியவரே!  உருவத் திருமேனி கொண்ட தலைவரே!

      குறவர் மாமகள் ஆசைகொள் மணியே --- குறவர் குலத்தில் வந்த பெருமை பொருந்திய வள்ளியம்மையார் காதலிக்கின்ற இரத்தின மணியே!

      சம் பமர பார ப்ரபா அருண படல --- மிகுதியான வண்டுகள் மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை அணிந்தவரே!

      தாரக --- ப்ரணவப் பொருளானவரே!

     மாசுக --- பெரிய சுகத்தைத் தருபவரே!

      பசுர பாடன --- பாசுரங்களை (தேவாரத்தை) பாடி உலகுக்கு பாடம் கற்பித்தவரே!

     பாளித பகள ஈச பசித பாரண --- சந்தனக் குழம்பை அணிந்த அம்பிகைக்கு நாயகருடைய திருநீற்றில் திருப்தி அடைபவரே!

      வாரண துவச --- சேவலைக் கொடியில் வைத்தவரே!

      ஏடு அக --- மேன்மைக்கு இருப்பிடமானவரே!

      மா அயில் பரவு பாணித --- பெருமை தங்கிய வேலாயுதத்தை ஏந்திய துதிக்கத் தக்க திருக்கரத்தினரே!

      பாவல பரயோக --- புலவர் பெருந்தகையே!  மேலான யோக மூர்த்தியே!

      சம பராமத சாதல --- தர்க்கித்துப் போரிடும் புற மதங்களான புத்தம், சமணம் இவற்றின் நசிவுக்குக் காரணரே!

      சமயம் ஆறிரு தேவத --- அகச்சமயம் ஆறிலும், புறச்சமயம் ஆறிலும் இலங்கும் தெய்வமே!

      சமய நாயக --- தக்க சமயத்தில் உதவும் தலைவரே!

     மாமயில் முதுவீர --- அழகிய மயில்மீது எழுந்தருளி வரும் திண்ணிய வீரரே!

      சகலலோகமும் ஆசறு சகல வேதமுமே தொழு --- எல்லா உலகங்களும், குற்றமற்ற எல்லா வேதங்களும் பரம்பொருள் என்று வணங்குகின்ற

      சமர மாபுரி மேவிய பெருமாளே --- பெருமை மிக்க திருப்போரூரில் வாழுகின்ற பெருமையின் மிக்கவரே!


பொழிப்புரை


         இருள் நிறைந்த மனத்துடன் கூடிய,  பெரிய மூடனாகிய எனது துன்பத்தைத் தரும் ஆணவமாகிய இருளை நீக்கும் ஞான சூரியரே!

     மூவுலகங்களுக்கும் ஒளி தரும் சூரியனே!  

     நன்மைக்குக் காரணமானவரே!

     நாக ஆபரணரும் வேத முதல்வருமான சிவபெருமானுடைய திருக்குமாரரே!

     பாவங்களைப் போக்குபவராகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே!

     கன்னிகையும், பசுமை நிறம் உடையவரும்,  அழகிய உமாதேவியும், மாசு அற்றவளும், இளமை உடையவரும், எங்கும் நிறைந்தவளும், அருட்குணங்களுடன் கூடிய கல்விக் களஞ்சியமானவரும், துர்க்கையும் ஆகிய பார்வதி அம்மையார் பெற்றருளிய பிள்ளைப் பெருமானே!

     குருநாதராக விளங்கி, ஆன்மாக்களின் இதய குகையில் வாழ்பவரே! குமாரக் கடவுளே!

     சரவணப் பொய்கையில் தோன்றியவரே! 

     உருவத் திருமேனி கொண்ட தலைவரே!

     குறவர் குலத்தில் வந்த பெருமை பொருந்திய வள்ளியம்மையார் காதலிக்கின்ற இரத்தின மணியே!

     மிகுதியான வண்டுகள் மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை அணிந்தவரே!

     பிரணவப் பொருள் ஆனவரே!

     பெரிய சுகத்தைத் தருபவரே!

     பாசுரங்களைப் (தேவாரத்தைப்) பாடி உலகுக்கு பாடம் கற்பித்தவரே!

     சந்தனக் குழம்பை அணிந்த அம்பிகைக்கு நாயகருடைய திருநீற்றில் திருப்தி அடைபவரே!

     சேவலைக் கொடியில் வைத்தவரே!

     மேன்மைக்கு இருப்பிடமானவரே! 

     பெருமை தங்கிய வேலாயுதத்தை ஏந்திய துதிக்கத் தக்க திருக்கரத்தினரே!

     புலவர் பெருந்தகையே! 

     மேலான யோக மூர்த்தியே!

     தர்க்கித்துப் போரிடும் புற மதங்களான புத்தம், சமணம் இவற்றின் நசிவுக்குக் காரணரே!

     அகச்சமயம் ஆறிலும், புறச்சமயம் ஆறிலும் இலங்கும் தெய்வமே!

     தக்க சமயத்தில் உதவும் தலைவரே!

     அழகிய மயில்மீது எழுந்தருளி வரும் திண்ணிய வீரரே!

     எல்லா உலகங்களும், குற்றமற்ற எல்லா வேதங்களும் பரம்பொருள் என்று வணங்குகின்ற பெருமை மிக்க திருப்போரூரில் வாழுகின்ற பெருமையின் மிக்கவரே!


விரிவுரை

இத் திருப்புகழ் வேண்டுகோள் ஏதும் இன்றி, துதிமயமாக அமைந்தது. 

திமிர மாமன மாமட மடமையேன் ---

திமிரம் - இருள். ஞானவிளக்கு ஏற்றாதவர் மனம் இருண்டு கிடக்கும். கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தோன்றாதது போல, இருண்ட மனத்தில் இறைவன் தோன்றமாட்டான்.

மாமட மடமை --- மிகப் பெரிய அறியாமை.

இன்பத்தைத் துன்பமாகவும், துன்பத்தை இன்பமாகவும் அறிவது அறியாமையாகும். ஒன்றை மற்றொன்றாக மாறுபட அறிவதும், இல்லாததை இருப்பதாக அறிவதும் அதன் கிளைகள் ஆகும்.

இடர்ஆணவ திமிரம் ---

ஆணவ இருள் மிக வன்மையானது.  இருள் நம்மையும் காட்டாமல், அடுத்த பொருள்களையும் காட்டாது தடுக்கும்.  ஆனால் தன்னைக் காட்டும். ஆணவ இருள் அதனினும் ழந்மை உடையதாய் தன்னையும் காட்டாமல் மறைத்துவிடும். ஆலகால விடத்தினும் கருமை மிக்கது. உயிர்களுக்கு விளையும் துன்பம் அத்தனைக்கும் மூல காரணமாய் நிற்பது ஆணவ மலமே ஆகும்.

அரி சூரிய ---

அரித்தல் - போக்குதல். ஆணவமல இருளை நீக்கும் சூரியராக விளங்குபவர் முருகக் கடவுள்.

திரிலோக தினகரா ---

பாதல உலகத்தில் சூரியன் ஒளி புகுவதில்லை.  விண்ணுலகம் சூரியன் இன்றியே ஒளிரும்.  முருகவேள் மூன்று உலகங்கட்கும் ஒளியைத் தருபவர்.

சிவகாரண ---

சிவம் - நன்மை. உலகங்கட்கெல்லாம் நன்மை விளைவதற்குக் காரணமாக இருப்பவர் முருகப் பெருமான்.

பனக பூஷண ---

பன்னகம் - பாம்பு.  பத்நகம் என்பது பன்னகம் என்று ஆயிற்று.  காலினால் நகராதது என்பது பொருள். கொடிய விடமுடைய உயிர்களானாலும் அவைகளை நான் சாந்தப்படுத்துவேன் என்று எம்பிரான் நாகங்களை அணிகலமாகப் பூண்டனர்.

வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
பாம்பனைத்தும் தோளில் பரித்தனையே....     ---  திருவருட்பா.

பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்...--- திருவாசகம்.

குமரி ---

அம்பிகை என்றும் கன்னியாக இருப்பவள்.

அகிலாண்ட கோடிஈன்ற அன்னையே, பின்னையும்
கன்னிஎன மறைபேசும் ஆனந்த ரூபமயிலே..  --- தாயுமானார்.

பவன்பிரம சாரியாகும், பான்மொழி கன்னியாகும்..   ---  சிவஞானசித்தியார்.

கலாநிதி ---

உமாதேவியே கலைகளுக்கு எல்லாம் இருப்பிடமானவர்.  அவருடைய திருமுலைப்பால் உண்டதும் திருஞானசம்பந்தர் தமிழ்மறை பாடத் தொடங்கியதும், அவருடைய தம்பலம் அருந்தியதும் காளமேகப் புலவர் கவிமழை பொழிந்ததும், அவருடை கருணா கடாக்ஷத்தால் அபிராமிபட்டர் பாமாலை புனைந்ததும் ஆகிய அருள் வரலாறுகளால் அறிக.

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம்அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமைஇலாக் கலைஞானம் உணர்வுஅரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.      ---  பெரியபுராணம்.

சகளேசுர --- 

சகளம் - உருவத் திருமேனி.
நிஷ்களம் - அருவத் திருமேனி. 

இறைவன் உருவமாகவும் அருவமாகவும் உருஅருவமாகவும் விளங்குகின்றான்.

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" என்ற அநுபூதி வாக்கினை உன்னுக.

அந்த உருவம் மாயா சம்பந்தமான ஏழு தாதுக்களாலே ஆகிய உருவம் அன்று. திருவருளே இறைவனுக்கு வடிவம்.  அருளுருவம் கொண்டு அடியவர்க்குக் காட்சி தருவன்.

அகளமாய் யாரும் அறிவரிது அப்பொருள்
சகளமாய் வந்தது என்று உந்தீபற
தானாகத் தந்தது என்று உந்தீபற.         ---  திருவுந்தியார்.

உருமேனி தரித்துக்கொண்டது என்றலும் உருஇறந்த
அருமேனி அதுவும் கொண்டோம் அருவுரு ஆனபோது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவுதானே.     ---  சிவஞானசித்தியார்.


சம் பமர பார ப்ரபா அருண படல ---

சம் - மிகுதி. பமரம் - வண்டு. பாரம் - சுமை.  ப்ரபை - ஒளி.  அருணம் - சிவப்பு. படலம் - தழையுடன் கூடிய மாலை. இங்கு வெட்சி மாலையைக் குறிக்கின்றது. வேலாயுதக் கடவுளுக்கு வெட்சிமாலை விருப்பமானது.

ப்ரமரம் என்ற வடசொல் பமரம் என வந்தது. 

ப்ரமரம் - வண்டு.

தாரக ---

தாரக என்ற சொல்லை அருண படல என்ற சொற்றொடருடன் கூட்டினால், தாரகன் - தரித்தவன் என்று பொருள் படும்.

தாரகம் - பிரணவம். பிரணவப் பொருளாக விளங்குபவர் முருகக் கடவுள்.

நன்முகம் இருமூன்று உண்டாம் நமக்குஅவை தாமேகந்தன்
தன்முகம் ஆகிஉற்ற தாரகம் பிரமமாகி
முன்மொழி கின்றநந்தம் மூவிரண்டு எழுத்தும்ஒன்றா
உன்மகன் நாமத்து ஓராறுஎழுத்துஎன உற்றஅன்றே. 

ஈசன் மேவரு பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாசமாய்எலா எழுத்திற்கு மறைகட்கு முதலாய்க்
காசிதன்னிடை முடிபவர்க்கு எம்பிரான் கழறு
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்.    ---  கந்த புராணம்.
 
தாரகம் - ஆதாரம் என்றும் பொருள்படும்.  
எல்லா உலகங்கட்கும் உயிர்கட்கும் ஆதாரமானவர்.

இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம், பெறும்
எனக்குநின் அருள் தாரகம்.                   ---  தாயுமானார்.

மா சுக ---

மா சுகம் - பெரிய சுகம்.  பேரின்பத்தை அருளவல்லவர்.

அது, பதியுடன் ஆன்மா ஒன்றுபடும் அத்துவித ஆனந்தம்.

நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம்
அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா....
                                                                        ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

பேரின்பமான பிரமக் கிழத்தியோடு
ஓர்இன்பத்து உள்ளான் என்று உந்தீபற
உன்னையே ஆண்டது என்று உந்தீபற.    ---  திருவுந்தியார்.

பசுர பாடன ---

பாசுரம் என்பது பசுரம் என்று குறுகல் விகாரம் பெற்றது.

திருஞானசம்பந்தர் மதுரையில் சென்று அனல் வாது செய்து, புனல் வாது செய்யப் புகுந்தபோது பாடியருளிய "வாழ்க அந்தணர்" என்று தொடங்கும் திருப்பதிகத்திற்குத் திருப்பாசுரம் என்று பேர். அத் திருப்பாசுரமே அன்றும் இன்றும் உலகை உய்யக் கொண்டது. திருப்பாசுரத்தைப் பாடியதால் சைவம் ஓங்கியது. புன்னெறி சென்றது. நன்னெறி நின்றது.

மாசுசேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற,
ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும், அவரை விட்டு,
தேசுடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்க,
பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற.

வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்,
சிறியேன் அறிவுக்கு அவர் தம் திருப்பாதம் தந்த
நெறியே சிறிது, யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்.     ---  பெரியபுராணம்.

அருணகிரிநாத சுவாமிகள் திருஞானசம்பந்தருடைய தேவாரப் பதிகங்களை நன்கு உணர்ந்து அதன் மயமாக நின்றவர்.

அனல் வாதத்தில் இட்ட திருநள்ளாற்றுத் திருப்பதிகமாகிய போகமார்த்த பூண்முலையாள் என்ற ஏடு பச்சென்று இருந்தது.

இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டுவார் குழல் வனமுலை மலைமகள் பாகத்து
அட்டமூர்த்தியைப் பொருள்என உடைமையால் அமர்ந்து
பட்டதீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.        ---  பெரியபுராணம்.

கனலில் வேகாது பனை ஏடு பச்சையாக இருக்குமாறு செய்தது திருநள்ளாற்றுப் பச்சைநாயகியின் திருவருள். அதனை நன்கு சிந்தித்த அருணகிரிநாத சுவாமிகள், திருநள்ளாற்றில் சென்று திருப்புகழ் பாடத் தொடங்கியபோது, பச்சையென்று எடுத்து, பாதி வரை அம்பிகையைப் பற்றியே பாடி மகிழ்கின்றனர்.

பச்சை ஒண்கிரி போல் இரு மாதனம்
    உற்று, தம்பொறி சேர்குழல் வாள்அயில்
          பற்று புண்டரிகாம் என ஏய்கயல் ...... விழிஞான
பத்தி வெண்தர ளாம்எனும் வள்நகை
     வித்ரு மஞ்சிலை போல்நுத லார்இதழ்
          பத்ம செண்பக மாமநு பூதியின் ...... அழகாள்என்று

இச்சை அந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவின் ஆலிலை போல்வயிறி,
          இற்ப சுங்கிளி ஆனமின் நூல்இடை ...... அபிராமி
எக்கு லங்குடி லோடு உலகு யாவையும்
     இற்ப திந்து இரு நாழிநெலால் அறம்
          எப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... உருகேனோ?

கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
     பொற்பு யங்களும் வேலுமி ராறுள
          கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா

நச்சு வெண்பட மீதணை வார்முகில்
     பச்சை வண்புய னார்கரு டாசனர்
          நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
     யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
          நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.
   
பகளேச பசித பாரண ---

பகளா என்பது அம்பிகையின் ஒரு சத்தி. அது மிக மிகச் சிறந்த சத்தி. பகளா என்ற நாமத்தைக் கூறிய மாத்திரத்தில் அநேக நன்மைகள் உண்டாகும். காற்றும் விரைந்து வீசாது. அந்த மந்திரத்தை உச்சரித்த இடத்தில் பேய் பூதகணங்கள் விலகும்.  அந்த பகளா என்ற சத்திக்கு நாயகராகிய சிவபிரான் பூசும் திருநீற்றினால் திருப்தி அடைகின்றவர்.

பசித – பஜித.  பஜித்தல் - துதித்தல்.

பாரணம் - திருப்தி.  சிவபிரான் பஜிப்பதனால் மகிழ்கின்றவர் எனவும் பொருள்படும்.

இப்படிக்கு இன்றி பகளம் என்ற சொல்லை மொழிமாற்றாகப் பளகம் எனக் கொண்டு, மலைக்கு நாயகன் எனக் கூறுவாறும் உளர்.

பளகம் - மலை.  விசிறி -  சிவிறி என வருதல்போல் என்று அறிக.

இத் திருப்புகழில் வடசொற்களே மிகுதியாகப் பயின்று வருவதனால், பகளேச என்று கொள்ளுவது சிறப்பு என்றும் அறிக.

பசித பாரண என்பதற்கு, பசிதம் திருநீறு. திருநீற்றில் திருப்தி உடையவர். பகளேசருடைய திருநீற்றில் மகிழ்பவர்.

"பலன் உற விளங்கலில் பசிதம் என்பரால்" என்ற தணிகைப் புராணத் திருவாக்கின்படி, அறியாமையை நீக்கி, சிவஞானத்தை விளங்கச் செய்வதனால் திருநீறு பசிதம் எனப்பட்டது.

நீறுபடு மாழைபொரு மேனியவ...     --- (ஆறுமுகம்) திருப்புகழ்.

நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர்
நினைந்து திருநீறு அணிந்தது ஒருபால்.... ---  கொலு வகுப்பு.

பஜித என்பதற்கு, துதிக்கின்ற என்று பொருள் கொண்டு, பகளேசராகிய பரமசிவம் துதிக்க மகிழ்கின்றனர் என்றும் கூறலாம்.

விசும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
  பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
  நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது
                                                      உணர்த்தியருள் ...... வாயே....
                                                               --- (அகரமுதலென) திருப்புகழ்.
  
ஏடக --- 

ஏடு - மேன்மை. அகம் - உறைவிடம். மேன்மைக்கு உறைவிடமானவர்.

மாஅயில் பரவு பாணித ---

மா - பெருமை.  அயில் - கூர்மை.  அது ஆகு பெயராய் கூர்மை உடைய வேலாயுதத்தை உணர்த்துகின்றது. 

பரவுதல் - புகழ்தல்.  பாணித – கரங்களை உடையவர்.  எல்லோராலும் புகழப்படுகின்ற பெருமை தங்கிய வேலை உடைய திருக்கரத்தினர்.
  
சம பராமத சாதல ---

சமம் - போர்.  பராமதம் - வேற்றுச் சமயங்கள்.  பரமதம் என்பது சந்தத்தை ஒட்டி பராமதம் என வந்தது.

ஒன்றோடு ஒன்று பிணங்கி, ஒன்றை ஒன்ரு அழிப்பதற்காகப் போரிடுகின்ற சமயங்களை முருகவேள் குன்றச்செய்வர். 

சாதல் - அழிதல்.  அழிதலைச் செய்பவர்.  சமம் என்ற சொல் போர் என்று வரும் கம்பராமாயணச் செய்யுளையும் பார்க்க.

இனி, சமம் - புலனடக்கம்.  பரர் - ஊக்கமுடையவர்கள்.  சமபரர் - புலனை வென்ற முனிவர்கள். அமத – பகைவர்கள். சாதல – கொல்கின்றவன்.  முனிவர்களது பகைவர்களைக் கொல்கின்றவர் என்றும் பொருள்படும்.

ஆறிரு சமய தேவத ---

அகப்புறச் சமயம் ஆறு.  அகச்சமயம் ஆறு.  ஆக பன்னிரு சமயங்களையும் குறிக்கின்றன.

அகப்புறச் சமயம் ---  பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம்.

அகச்சமயம் --- பாஷாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈஸ்வரவவிகாரவாத சைவம், சிவாத்வித சைவம்.

இவைகளின் விரிவுகளை சிவஞான மாபாடியத்தும், சங்கற்ப நிராகரணத்தும் காண்க.

சகலலோகமும் ஆசறு சகல வேதமுமே தொழு ---

எல்லா உலகங்களாலும், எல்லா வேதங்களாலும் பரம்பொருள் என்று தொழப்படுகின்ற தெய்வம் முருகக் கடவுளே.

நவலோகமும் கைதொழு நிசதேவ...    ---  (சிவனார்மனம்) திருப்புகழ்.

 குருகு கொடியுடன் மயிலிலேறி மந்தரம்
     புவனகிரி சுழல மறை ஆயிரங்களும்
     குமரகுரு எனவலிய சேடனஞ்சவந் திடுவோனே”   ---  (ஒருவரையும்) திருப்புகழ்.


சமர மாபுரி மேவிய பெருமாளே ---

சமராபுரி என்பது திருப்போரூர். இத் திருத்தலம் செங்கற்பட்டு இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 16 கல்.  சிதம்பர சுவாமிகள் பாடியருளிய திருப்போரூர் சந்நிதிமுறை மிகமிக உயர்ந்த வாக்கு.

தாரகன் என்ற ஒரு அவுணன் வலிமையால் ஒப்பும் உயர்வும் இன்றி இருந்தான். (சூரபன்மனுடைய தம்பியாகிய தாரகன் வேறு.  இவன் திரிபுரர்களது தந்தை.)  அந்த அசுரவேந்தன் பிரமதேவரை வேண்டி ஐம்பதினாயிரம் ஆண்டு தவம் புரிந்து, பற்பல வரங்களை அவர்பால் பெற்றனன். சிவபெருமானிடமும் பல வரங்களைப் பெற்றனன்.  அதனால் மூவுலகங்களில் உள்ள தேவரையும் மூவரையும் வென்று அரசு புரிந்தனன்.  சிவாநுக்கிரகத்தால் தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்ற மூன்று புதல்வர்களைப் பெற்றான்.

தாரகன் தன் புதல்வர்களை நோக்கி, "என் அருந்தவச் செல்வங்களே! எனக்கு இந்த மேன்மை தவத்தினால் எய்தியது.  நீங்களும் சிவ பரம்பொருளை வேண்டி அருந்தவம் புரிந்து, அரிய வரங்களைப் பெற்று சீரும் சிறப்பும் பெறுவீர்கள்" என்று கூறினான்.  அவ்வண்ணமே அந்தப் புதல்வர்கள் மூவரும் சிவத்தைக் குறித்துத் தவத்தைச் செய்தார்கள்.  மால் அயன் முதலிய வானவர்கள் "என் செய்வோம்" என்று சிந்தாகுலமுற்று, அவன்பால் ஏவலுக்குப் போகாமல், வைகுண்டத்தில் இருந்து யோசித்தார்கள்.  "தாரகனால் நாம் அளவிடமுடியாத அல்லலை அடைந்தோம்.  இனி அவன் புதல்வர்கள் தவம் புரிந்து சிவமூர்த்தியிடம் வரம் பெறுவரேல், நம் கதி யாதாகும்" என்று மிகமிக வருந்தி, அவர்களை அழிப்பதற்கு அபிசார ஓமம் புரிந்தார்கள்.

அதனை அறிந்த தாரகன், "திருமால் திசைமுகன் முதலிய எல்லாத் தேவர்களையும் இத் தருணமே வேருடன் அழிப்பேன்" என்று வெகுண்டு வைகுண்டம் சென்றான்.  பிரமவிட்டுணு முதலிய தேவர்கள் நடுநடுங்கி, புகலிடம் காணாது ஓடி பொன்மேரு மலையில் சென்று குகைகளில் புகுந்து ஒளிந்தனர்.  தாரகன் பெரும் சினத்துடன், "பேடிகளே! ஓடி ஒளிந்தீர்களோ? உங்களை விடேன்" என்று விரட்டி மேருமலையை வேருடன் பறித்துச் சுழற்றிக் குலுக்கினான்.  கனிந்த நாவல் பழங்கள் காற்றினால் உதிர்வதுபோல் அமரர்கள் மண்மிசை வீழ்ந்து ஓடி, திருக்கயிலை மலையைச் சார்ந்தனர்.

தாரகன் தனது மாநகரம் சென்று உலகங்களை எல்லாம் தன்வயப்படுத்தி ஆண்டு வந்தனன்.  மால் அயன் முனிவர் முதலியோர் உருமாறி காடு மலை கடல்களில் வசித்தார்கள்.   இந்திரன் அவனுடன் போர் புரிந்து வஜ்ராயுதத்தை எறிய, அது இரும்பு முன் துரும்பு போல் முறிந்தது.  சசிதேவியும் சயந்த குமாரனும் தொடர, ஒரு வனத்தை அடைந்து முனி உருக்கொண்டு தவம் புரிந்தனன்.

அக்கினிதேவன் தாரகனிடம் சமைத்தல் தொழிலில் அமர்ந்தான்.  வருணன் தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தனன்.  வாயுதேவன் அரண்மனையைக் கூட்டுவானாயினான்.  ஏனைய வானவரும் குற்றேவல் புரிந்தனர்.  மனோவதி நகரை விட்டு, வாணிகேள்வன் தோணிபுரம் வந்து முனிவர் வடிவுடன் சிவபூசை செய்துகொண்டு இருந்தான்.  அதனால், அந்த சீகாழி என்னும் பதி பிரமபுரம் என்னும் பெயர் பெற்றது.  திருமால் தாரகனுடன் போர் புரிந்து தோற்று, வைகுண்டத்தில் வைகுவதற்கு அஞ்சிக் கடலில் மீன் வடிவுடன் வாழ்ந்தனர்.

எல்லோரையும் வென்றும் கொன்றும் கடந்தான்.  ஆதலின் அவன் தாரகன் - கடந்தவன் என்னும் நாமத்திற்கு உரியவன் ஆனான்.  தாரகன் வைகுண்டத்தில் சித்திரசபையில் இருந்து அரசு புரிந்தனன்.

ஓடி ஒளிந்த உம்பர்கள் நம்பனுடைய வெள்ளி மலையை அடைந்து சிவபெருமானைப் பலகாலும் பணிந்து, "பரமகருணாநிதி! தாரகனால் படும் துயரத்திற்கு எல்லையில்லை.  படமுடியாது இனித் துயரம், பட்டதெல்லாம் போதும்.  பரிந்து அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றனர்.

கண்ணுதற்கடவுள் கருணை பூத்தனர்.  உடனே ஆறு திருமுகங்களும், பன்னிரு விழிகளும், அபயம், வாள், சூலம், சக்கரம், முசலம், வேல் என்பன அமைந்த வலக்கரங்கள் ஆறும், வரதம், கொடி, கேடகம், அங்குசம், பாசம், குலிசம் என்பன அமைந்து இடது திருக்கரங்கள் ஆறும், கோடி சூரியப்பிரகாசமும் உடையவராய் முருகக் கடவுள் சிவபெருமானுடைய இதயத்தினின்றும் தோன்றியருளினார்.

சிவபெருமான் அவரை நோக்கி, "குமார! தாரகனை வதைத்து, இமையவர் இடரை நீக்குதி" என்று பணித்து அருளினார்.  குமாரக் கடவுள் படைகளோடும் சென்று பத்துநாள் தாரகனுடன் போர்செய்து, வெள்ளிக்கிழமை இரவிலே அவனை மாய்த்து, மாலயனாதி வானவரை வாழவைத்து அருளினார்.

அத் தாரகன் இருந்த இடம் கூவம் என்று அறிக.  அவனுடன் ஆறுமுகக் கடவுள் போர்புரிந்த இடம் திருப்போரூர் என்று அறிக.  அதனால் அத் திருத்தலம், போரூர் - சமராபுரி என்ற நாமங்களைப் பெற்றது.

திருப்போரூர் அழகான முருகர் திருத்தலம்.  அவசியம் அன்பர்கள்  தரிசித்தற்கு உரியது.  வரதமான மூர்த்தி.

ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித்
தீதுபுரியாத தெய்வமே --- நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே, நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு.      ---  திருப்போரூர் சந்நிதி முறை.


கருத்துரை

ஆணவ மல இருளை அகற்றும் ஞானபானுவே, சிவகுமாரரே, திருமால் மருகரே, பார்வதி பாலரே, வெட்சிமாலை தரித்த தாரகப் பிரமமே, திருப்பாசுரம் பாடியவரே, சேவல் கொடியினரே, யாவரும் தொழும் திருப்போரூர் மேவிய தேவதேவரே.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...