வல்லக்கோட்டை - 0720. வாசித்த நூல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வாசித்த நூல் (கோடைநகர் - வல்லக்கோட்டை)

வேலாயுதரே, வள்ளமணாளரே, சிவகுமாரரே, கோடைநகர் மேவிய குமாரக் கடவுளே, உலகில் அடயோக மார்க்கம் நீங்கி, சிவயோக நெறி வளர்வதாக.

தானத்த தான தந்த தானத்த தான தந்த
     தானத்த தான தந்த ...... தனதான


வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
     வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக

மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
     வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி

யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
     ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக

யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
     லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ

வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
     மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா

வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
     வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே

கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
     கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே

கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார, கண்ட
     கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


வாசித்த நூல், மதங்கள் பேசி, கொடாத விந்து,
     வாய்மை ப்ரகாசம் என்று, ...... நிலையாக

மாசிக் கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற
     வாயுப் பிராணன் ஒன்று ...... மடைமாறி,

யோசித்து அயார் உடம்பை நேசித்து, உறாது அலைந்து
     ரோமத் துவாரம் எங்கும் ...... உயிர்போக,

யோகச் சமாதி கொண்டு, மோகப் பசாசு மண்டு
     லோகத்தில் மாய்வது என்றும் ...... ஒழியாதோ?

வீசு அப் பயோதி துஞ்ச, வேதக் குலாலன் அஞ்ச,
     மேல்இட்ட சூர் தடிந்த ...... கதிர்வேலா!

வீர! ப்ரதாப! பஞ்ச பாணத்தினால் மயங்கி
     வேடிச்சி காலில் அன்று ...... விழுவோனே!

கூசிப் புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த
     கூளப் புராரி தந்த ...... சிறியோனே!

கோழிப் பதாகை கொண்ட கோலக் குமார! கண்ட!
     கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.


பதவுரை


      வீசு அப் பய உததி துஞ்ச --- அலைகள் வீசுகின்ற பயங்கரமான கடல் வற்றவும்,

      வேதக் குலாலன் அஞ்ச --- வேதத்தில் வல்ல குலாலனாகிய பிரமதேவன் அஞ்சி நிற்கவும்,

      மேலிட்ட சூர் தடிந்த கதிர்வேலா --- மேலே எதிர்த்து வந்த சூரனை வதம் செய்த ஒளிபொருந்திய வேற்படையை உடையவரே!

      வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி --- வீரமும் கீர்த்தியும் உடைய மன்மதனுடைய ஐந்து கணைகளினால் மயங்கி,

     வேடிச்சி காலில் அன்று விழுவோனே --- வள்ளி நாயகியாரது திருவடியில் அந்நாளில் விழுந்தவரே!

      கூசிப் புகா ஒதுங்க --- யாகத்தில் வந்திருந்த தேவர்கள் நாணி ஒதுங்கி நிற்க,

     மாமன் திகாது அரிந்த --- மாமனாகிய தக்கனது தலையைத் தடைபடாது அரிந்தவரும்ன

     கூளப் புராரி தந்த சிறியோனே --- எளிய திரிபுரத்தை எரித்தவரும் ஆகிய சிவபெருமான் பெற்ற இளம்பூரணரே!

      கோழிப் பதாகை கொண்ட கோலக் குமார --- கோழிக் கொடியைக் கொண்ட அழகிய குமாரக் கடவுளே!

         அகண்ட --- எங்கும் உள்ளவரே!

        கோடைக்குள் வாழ வந்த பெருமாளே --- கோடைநகருள் உயிர்கள் வாழும்பொருட்டு எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

         வாசித்த நூல் மதங்கள் பேசி --- கற்றுள்ள நூல்களைக் கொண்டு தத்தம் மதங்களைப் பற்றி தருக்கித்துப் பேசி,

     கொடாத விந்து --- கோடுதல் இல்லாத விந்துவை,

     வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக --- உண்மை ஒளி என்று கொண்டு, நிலையாக இருக்கும்பொருட்டு,

       மாசிக் கபால மன்றில் --- கும்பம் போல் இருக்கின்ற கபால வெளியில்

     நாசிக்குள் ஓடுகின்ற வாயுப் பிராணன் ஒன்று --- நாசிக்குள்ளே செல்லுகின்ற புராண வாயுவானது பொருந்துமாறு,

     மடைமாறி --- புருவநடுவில் உள்ள மடையை மாற்றி,

      யோசித்து அயார் உடம்பை நேசித்து --- பிராணனையும் அபானனையும் கூட்டி, அதனால் அயர்ச்சி அடைகின்ற உடம்பை மிகவும் அன்பு செய்து,

     உறாது அலைந்து --- மேல்நிலையைப் பொருந்தாமல் அலைந்து,

      உரோமத் துவாரம் எங்கும் உயிர் போக --- மயிர்க் கால்கள் தோறும் உயிர் நீங்க,

      யோகச் சமாதி கொண்டு --- யோக மார்க்கத்தில் சமாதி நிலையை மேற்கொண்டு,

     மோகப் பசாசு மண்டு --- அந்த அடயோகத்தின் மீது மோகமாகிய பைசாசம் பிடித்து,

     லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ --- தொலைந்து போகும் தன்மை, உலகிலே என்றும் ஒழிந்து போகாதோ?


பொழிப்புரை

         அலைகள் வீசுகின்ற பயங்கரமான அந்தக் கடல் வற்றவும், வேதத்தில் வல்ல குலாலனாகிய பிரமதேவன் அஞ்சி நிற்கவும், மேலே எதிர்த்து வந்த சூரனை வதம் செய்த ஒளிபொருந்திய வேற்படையை உடையவரே!

         வீரமும் கீர்த்தியும் உடைய மன்மதனுடைய ஐந்து கணைகளினால் மயங்கி, வள்ள நாயகியாரது திருவடியில் அந்நாளில் விழுந்தவரே!

         யாகத்தில் வந்திருந்த தேவர்கள் நாணி ஒதுங்கி நிற்க, மாமனாகிய தக்கநது தலையைத் தடைபடாது அரிந்தவரும், எளிய திரிபுரத்தை எரித்தவரும் ஆகிய சிவபெருமான் பெற்ற இளம்பூரணரே!

         கோழிக் கொடியைக் கொண்ட அழகிய குமாரக் கடவுளே!

         எங்கும் உள்ளவரே!

         கோடைநகருள் உயிர்கள் வாழும்பொருட்டு எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

         கற்றுள்ள நூல்களைக் கொண்டு தத்தம் மதங்களைப் பற்றி தருக்கித்துப் பேசி, கோடுதல் இல்லாத விந்துவை, உண்மை ஒளி என்று கொண்டு, நிலையாக இருக்கும்பொருட்டு, கும்பம் போல் இருக்கின்ற கபால வெளியில் நாசிக்குள்ளே செல்லுகின்ற புராண வாயுவானது பொருந்துமாறு, புருவநடுவில் உள்ள மடையை மாற்றி, பிராணனையும் அபானனையும் கூட்டி, அதனால் அயர்ச்சி அடைகின்ற உடம்பை மிகவும் அன்பு செய்து, மேல்நிலையைப் பொருந்தாமல் அலைந்து, மயிர்க் கால்கள் தோறும் உயிர் நீங்க, யோக மார்க்கத்தில் சமாதி நிலையை மேற்கொண்டு, அந்த அடயோகத்தின் மீது மோகமாகிய பைசாசம் பிடித்து, தொலைந்து போகும் தன்மை, உலகிலே என்றும் ஒழிந்து போகாதோ?


விரிவுரை


வாசித்த நூல் மதங்கள் பேசி ---

சமயவாதிகள் சயமநூல்களைப் படித்து, அதன் பயனை அறியாமல், தத்தம் சமயமே மேலானது என்று மயங்கி, ஒருவருடன் ஒருவர் மாறுபட்டு ஒழியாமல் தர்க்கம் புரிந்து முடிவு காணாமல் முடிவு பெறுவர்.

சமயவாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்...            ---  திருவாசகம்.

தருவை நிகரிடு புலமையும் அலம்அலம்
உருவும் இளமையும் அலம்அலம் விபரித
சமய கலைகளும் அலம்அலம்... --- (அருவமிடை) திருப்புகழ்.

சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
     சங்கற்பித்து ஓதும் வெகுவித ...... கலைஞானச்
சண்டைக்குள் கேள்வி அலம்அலம், அண்டற்குப் பூசையிடும்அவர்
     சம்பத்துக் கேள்வி அலம்அலம், ...... இமவானின்
மங்கைக்குப் பாகன் இருடிகள் எங்கட்குச் சாமி எனஅடி
     வந்திக்கப் பேசி அருளிய ...... சிவநூலின்
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி அலம்அலம்
     வம்பில்சுற் றாது பரகதி ...... அருள்வாயே..    ---  திருப்புகழ்.

ஆதலின் சமய வேற்றுமைகளை ஒழித்து, ஒற்றுமை காண்பது அறிவுடைமை.

கொடாத விந்து ---

"கோடாத" என்ற சொல் குறுகல் விகாரம் பெற்று "கொடாத" என்று வந்தது.

விந்துவைக் கோடாதபடி அமைக்க அதனால் ஒளி உண்டாகும்.

மாசிக் கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயுப் பிராணன் ஒன்று ---

மாசி - கும்பம். குடம்போல் உள்ள கபாலம். மன்று - வெளி.  கபால வெளி.

நாசி வழியாக ஓடுகின்ற பிராணவாயுவை அதோமுகமாகக் கழியவிடாமல் அடக்கிப் பிடித்து, பிரமரந்திர வழியாகச் செலுத்தி, கபால வெளியில் சேர்ப்பது.

மடை மாறி ---

மூலாதாரத்தில் எழும் பிராணவாயு புருவநடு வரை சென்று நாசி வழியே கீழே இறங்கிவிடுகின்றது. அப்படி இறங்கவிடாமல், மடைமாற்றி, புருவநடுவில் உள்ள கதவைத் திறப்பித்து, மேலே செல்லுமாறு செய்வது. இது நெடிது காலம் அருமுயற்சி செய்த யோக சாதனையால் சித்திப்பது. 

யோசித்து - கூட்டி.  பிராணனையும் அபானனையும் ஒன்றுபடுத்துதல்.

அயார் உடம்பை நேசித்து ---

அயார் - அயருகின்,

அடயோகிகள் வாயுவைக் கும்பித்து அதனால் வருந்துவார். அவ்வாறு கும்பிப்பதன் பயன் உடல் சிலகாலம் நீடித்து நிற்கும்.  புலால் உடம்பைப் பெரிதாகக் கருதி, இதை நிலை நிறுத்தும்பொருட்டு செய்யும் அடயோகம் கண்டிக்கத் தக்கது.

அனித்தம் ஆன ஊன்நாளும் இருப்ப தாக வே,நாசி
     அடைத்து வாயு ஓடாத ...... வகைசாதித்து,
அவத்தி லேகு வால்மூலி புசித்து வாடும் ஆயாச
     அசட்டு யோகி ஆகாமல், ...... மலமாயை

செனித்த காரிய உபாதி ஒழித்து, ஞான ஆசார
     சிரத்தை ஆகி, யான்வேறு,என் ...... உடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
     சிவச்சொ ரூபமாயோகி ...... எனஆள்வாய்..    --- திருப்புகழ்.

துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து
அருத்தி உடம்பை ஒறுக்கில் என்ஆம்...   ---  கந்தர் அலங்காரம்.

உறாது அலைந்து ---

உண்மை நிலையைப் பொருந்தாமல் அவமே அலைவர்.

ரோமத் துவாரம் எங்கும் உயிர் போக ---

பிராணவாயுவை வெளியே விடாமல் அடைத்து வைப்பதனால், அப் பிராணன் ரோமத்துவார வழியே நீங்கும்.

யோகச் சமாதி கொண்டு, மோகப் பசாசு மண்டு லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ ---

யோகம் - கூடுவது. இது பல பேதங்களை உடையது. 

சிவயோகம் கொள்ளத் தக்கது. 
அடயோகம் தள்ளத் தக்கது. 

அருணகிரிநாதர் பல இடங்களில் இந்த யோக நுட்பதிட்பங்களைப் பற்றி இனிது கூறி அருளினார்.

சந்த்ர சூரியர் தாமும் அசபையும்
     விந்து நாதமும் ஏக வடிவம்
          அதன்சொ ரூபம தாக உறைவது ...... சிவயோகம்
தங்கள் ஆணவ மாயை கருமம
     லங்கள் போய்,உப தேச குருபர
          சம்ப்ர தாயமொடு ஏயும் நெறிஅது ...... பெறுவேனோ..
                                                                        --- (ஐந்துபூதமும்) திருப்புகழ்.

உடலும்உடல் உயிரும்நிலை பெறுதல்பொருள் எனஉலகம்
    ஒருவிவரும் மநுபவன  ......  சிவயோக சாதனையில்
ஒழுகும்அவர் பிறிதுபர வசம்அழிய விழிசெருகி
    உணர்வுவிழி கொடுநியதி  ......  தமதூடு நாடுவதும்,

உருஎனவும் அருஎனவும் உளதுஎனவும் இலதுஎனவும்
    உழலுவன பரசமய  ......  கலைஆர வாரம்அற         
உரைஅவிழ உணர்வுஅவிழ உளம்அவிழ உயிர்அவிழ
    உளபடியை உணரும்அவர்  ......  அநுபூதி ஆனதுவும்.    --- சீர்பாத வகுப்பு.

சிவயோகத்தின் தன்மையை அறியாமல், அடயோக முதலிய கடுமையான சாதனங்களை மேற்கொண்டு, அந்த மோகமாகிய பேயினால் பிணியுண்டு மாய்ந்து ஒழிவர் பலர்.  இந்த நெறி உலகில் என்றுதான் ஒழியுமோ என்று கருணை வடிவான அருணையடிகள் இறைவனிடத்தில் வேண்டுகின்றனர்.

வீசப் பயோதி துஞ்ச ---

வீசு அப் பய உததி துஞ்ச.

உததி என்ற சொல் இடைக்குறையாக உதி என வந்தது. 

ஆழத்தாலும் அலைகள் இடையறாமல் வீசுவதனாலும், இருள் நிறைந்து இருப்பதனாலும் கடல் அச்சத்தைத் தருகின்றது.  இறைவன் வேலை விட்டபோது, வேலை (கடல்) வற்றி வறண்டு விட்டது.

வேதக் குலாலன் அஞ்ச ---

பிரமதேவனைக் குயவன் என்பது மரபு. குயவன் மட்பாத்திரங்களை அநாயாசமாகச் செய்து அடுக்கி வைக்கின்றான். பிரமதேவன் அண்டங்களை உண்டாக்கி அடுக்கி வைத்து இருக்கின்றனன்.

அன்றியும் அவரவர் கன்மங்களுக்கு ஏற்றவாறு இந்த உடம்பாகிய தோண்டியைத் தந்திருக்கின்றான். ஒன்பது ஓட்டையை வைத்து, இதற்குள் உரிய காலம் வரை உயிராகிய தண்ணீரை நிறைத்து வைத்து இருக்கின்றனன்.
  
மாக இந்த்ரதனு மின்னை ஒத்துஇலக
              வேதம் ஓதியகு லாலனார்
     வனைய, வெய்யதடி கார னானயமன்
               வந்து அடிக்கும்ஒரு மட்கலத்
தேக மானபொய்யை, மெய் எனக்கருதி
               ஐய, வையமிசை வாடவோ,
     தெரிவ தற்கரிய பிரம மேஅமல
               சிற்சு கோதய விலாசமே.          --- தாயுமானார்.

 வாய்த்த குயவனார் பண்ணு பாண்டம்-இது
 வறகோட்டுக்கு ஆகாது என்றாடு பாம்பே”

நந்த வனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நால்ஆறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான்ஒரு தோண்டி-அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுஉடைத்தாண்டி”

என்று சித்தர்கள் பாடுகின்றார்கள்.

வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி, வேடிச்சி காலில் அன்று விழுவோனே ---

காமனை எரித்த நெற்றிக் கண்ணிலே உதித்த அருட்பெருஞ் சோதி ஆண்டவர் கந்தவேள். அவர் ஞானாகரர். ஞானந்தான் உருவாகிய நாயகர்.

காமம் என்பது அஞ் ஞானத்தினால் வருவது.  ஞானவடிவினராகிய எந்தை மன்மத பாணத்தினால் மயங்கினாரில்லை. நெருப்பு மாலைக்கு அருகில் கொசுக்கள் நெருங்கா. முருகனை நினைக்கின்ற அடியவர்க்கே காமம் இன்றி நீங்கும்.

கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்
திடத்தில் புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்
படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்
தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.     ---  கந்தர் அலங்காரம்.

தவமே வடிவாகிய அம்மை வள்ளிநாயகியை ஆட்கொள்ளும் பொருட்டு ஞானபண்டிதன் மன்மத பாணத்தினால் மயங்கியது போல் நடித்து, அவரைத் தொழுதனர். மனவாக்குக்கு எட்டாத மறைமுடிப் பொருளின் திருவிளையாடலை யாரே அறிய வல்லார்.

கூசிப் புகா ஒதுங்க ---

தட்சயாகத்தில் அவியுணவுக்காக வந்திருந்த அமரர்கள் வீரபத்திரரைக் கண்டவுடன் உள்ளம் அஞ்சி ஒருபுறம் ஒதுங்கி ஓடினார்கள்.  தேவர்கள் தோன்றா எழுவாய்.

மாமன் திகாது அரிந்த கூளப் புராரி ---

தக்கன் நெடுங்காலம் தவம் கிடந்து பராசத்தியை மகளாகப் பெற்று, பரமசிவத்தை மருமகனாகப் பெற்றான். அகந்தை கொண்டு சிவநிந்தை செய்து, சிவத்தை மதியாது மகம் புரிவானாயினான். ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் இல்லாத எம்பெருமான், மாமன் என்ற செருக்குடன் நிமிர்ந்து இருந்த தக்கன் தலையைத் தடிந்து, மகத்தைக் கடிந்து அருள் புரிந்தனர்.  வானோருக்கும் ஏனோருக்கும் அரிய திரிபுரம் இறையவருக்கு எளிதாக இருந்தது. அதனால் கூளப் புராரி என்றனர்.

கூளம் - எளிமையானது.

கோழிப் பதாகை கொண்ட ---

எந்தை கந்தவேள் அடிவர்க்கு அருள் புரியும் பொருட்டு, மயில்பரியின் மீது விரைந்து செல்லும்போது, அவரது வரவை முன்னரே அறிவிக்கும் பொருட்டு, பிரணவ ஒலியுடன் குவும் நாதமயமான சேவலைக் கையில் ஏந்தி இருப்பர்.

சென்றே இடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்...           --- (அன்பாக) திருப்புகழ்.

சேவல் - நாத தத்துவம்.

சேவலின் நாதத்தினால் நாடோறும் உலகம் துயில் உணர்ந்து விழிப்புறதல் கண்கூடு.

முருகவேள் துன்பக் கடலில் மூழ்கிய சயந்தனுக்கு அருள் புரிய அவன் கனவில் சென்று காட்சி தந்தபொழுது சேவல் கொடியுடன் சென்றனர்.

ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள்    பெருமாளே.--- (மூலமந்திரம்) திருப்புகழ்.

அணிசேவல் எனப்பாடும் பணியே பணியா அருள்வாய்.. ---  கந்தர் அநுபூதி.


கருத்துரை

வேலாயுதரே, வள்ளமணாளரே, சிவகுமாரரே, கோடைநகர் மேவிய குமாரக் கடவுளே, உலகில் அடயோக மார்க்கம் நீங்கி, சிவயோக நெறி வளர்வதாக.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...