உத்தரமேரூர் - 0725. சுருதிமறைகள்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சுருதி மறைகள் (உத்தரமேரூர்)

முருகா! 
 ஆராலும் காண முடியாத தேவரீரது அடிமலரை 
அடியேன் காண 
அறிவுக்குள் அறியும் அறிவைத் தந்து அருள் புரிவீர்.

தனன தனன தனதான தனன தனன தனதான
     தனன தனன தனதான ...... தனதான
  
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
     துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர்

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
     தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
     அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி

அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
     அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
     மகர சலதி அளறாக ...... முதுசூரும்

மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
     மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
     நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி

நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
     நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சுருதி மறைகள், ருநாலு திசையில் அதிபர், முநிவோர்கள்,
     துகள் இல் இருடி எழுபேர்கள், ...... சுடர்மூவர்,

சொலஇல் முடிவுஇல் முகியாத பகுதி புருடர், நவநாதர்,
     தொலைவில் உடுவின் உலகோர்கள், ...... மறையோர்கள்,

அரிய சமயம் ஒருகோடி, அமரர் சரணர் சதகோடி,
     அரியும் அயனும் ஒருகோடி, ...... இவர்கூடி,

அறிய அறிய அறியாத அடிகள் அறிய, அடியேனும்
     அறிவுள் அறியும் அறிவுஊற ...... அருள்வாயே.

வரைகள் தவிடு பொடியாக, நிருதர் பதியும் அழிவாக,
     மகர சலதி அளறுஆக, ...... முதுசூரும்

மடிய, அலகை நடம்ஆட, விஜய வனிதை மகிழ்வுஆக,
     மவுலி சிதறி, இரைதேடி ...... வருநாய்கள்,

நரிகள், கொடிகள், பசியாற, உதிர நதிகள் அலைமோத,
     நமனும் வெருவி அடிபேண, ...... மயில்ஏறி

நளின உபய கரவேலை முடுகு முருக! வடமேரு
     நகரி உறையும் இமையோர்கள் ...... பெருமாளே.


பதவுரை

      வரைகள் தவிடு பொடி ஆக --- மலைகள் தவிடுபோல் பொடிபட்டு அழியவும்,

     நிருதர் பதியும் அழிவு ஆக --- அசுரர்களது ஊர்கள் அழிந்து போகவும்,
    
     மகர சலதி அளறு ஆக --- மகர மீன்கள் வாழும் கடலானது வற்றிச் சேறு படவும்,

      முதுசூரும் மடிய ---  பழமையான சூரபன்மனும் அவனைச் சேர்ந்தவர்களும் மாய்ந்து ஒழியவும்,

     அலகை நடம் ஆட --- பேய்கள் மகிழ்ச்சியினால் நர்த்தனம் செய்யவும்,

     விஜய வனிதை மகிழ்வு ஆக –-- வெற்றித் திருமகள் மகிழ்ச்சி பெறவும்,

      மவுலி சிதறி --- அவுணர்களுடைய தலைகள் சிதறி,

     இரை தேடி வரு நாய்கள் நரிகள் கொடிகள் பசியாற --- இரையை விரும்பி வரும் நாய்களும், நரிகளும், காக்கைகளும், நிரம்பத் தசைகளை உண்டு பசியாறவும்,

     உதிர நதிகள் அலைமோத --- இரத்த ஆறுகள் பொங்கி அலைமோதவும்,

     நமனும் வெருவி அடிபேண --- கூற்றுவனும் அஞ்சித் திருவடியை வணங்கவும்,

     மயில் ஏறி --- மயிலின் மீது ஏறி,

      நளின உபய கர வேலை முடுகும் முருக --– பதுமநிதியைத் தருவதாகிய திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதத்தை வேகமாக விடுத்தருளிய முருகப் பெருமானே!

      வடமேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே --- உத்தரமேரூர் என்னும் திருத்தலத்தில் வாழும் தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

      சுருதி, மறைகள் --- உபநிடதங்கள், வேதங்கள்,

     இருநாலு திசையில் அதிபர் --- எண்திசைக்கு அதிபர்களாக உள்ள இந்திரன் முதலிய தலைவர்களும்,

     முநிவோர்கள் --- முனிவர்களும்,

     துகள் இல் இருடி எழுபேர்கள் --- குற்றமில்லாத ஏழு இருடிகளும்,

     சுடர் மூவர் --- கதிர், மதி, கனல் என்னும் மூன்று ஒளித் தேவர்களும்,

      சொல இல் முடிவு இல் முகியாத பகுதி புருடர் --- இத் தன்மைத்து என்று சொல்லுதற்கு இயலாதவரும் யுகமுடிவில் முடியாதவரும் ஆகிய பிரகிருதி புருடர்கள்,

     நவநாதர் --- நவநாதர்கள் என்னும் ஒன்பதின்மரும்,

     தொலைவில் உடுவின் உலகோர்கள் --- நெடுந்தொலைவில் உள்ள நட்சத்திர உலகில் வாழ்பவர்களும்,

     மறையோர்கள் --- வேதியர்களும்

      அரிய சமயம் ஒரு கோடி --- அரிய கருத்துக்களுடன் கூடிய ஒரு கோடி சமயத்தார்களும்,

     அமரர் சரணர் சத கோடி --- நூறு கோடி தேவர்களும் அடியார்களும்,

     அரியும் அயனும் ஒரு கோடி --- ஒரு கோடி விட்டுணுக்களும் பிரமர்களும்,

     இவர் கூடி --- ஆகிய இவர்கள் எல்லோரும் ஒருங்கு கூடி

      அறிய அறிய அறியாத அடிகள் அடியேனும் அறிய --- எவ்வகையாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தேவரீரது திருவடிகளை அடியேன் அறிந்துகொள்ளுமாறு,

     அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே --- அறிவினுக்குள் அறிவு ஊற்று எடுக்குமாறு அருள் புரிவீர்.

பொழிப்புரை

         மலைகள் தவிடுபோல் பொடிபட்டு அழியவும், அசுரர்களது ஊர்கள் அழிந்து போகவும், மகர மீன்கள் வாழும் கடலானது வற்றிச் சேறுபடவும், பழமையான சூரபன்மனும் அவனைச் சேர்ந்தவர்களும் மாய்ந்து ஒழியவும், பேய்கள் மகிழ்ச்சியினால் நர்த்தனம் செய்யவும், வெற்றித் திருமகள் மகிழ்ச்சி பெறவும், அவுணர்களுடைய தலைகள் சிதறி, இரையை விரும்பி வரும் நாய்களும், நரிகளும், காக்கைகளும், நிரம்பத் தசைகளை உண்டு பசியாறவும், இரத்த ஆறுகள் பொங்கி அலைமோதவும், கூற்றுவனும் அஞ்சித் திருவடியை வணங்கவும், மயிலின் மீது ஏறி, பதுமநிதியைத் தருவதாகிய திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதத்தை வேகமாக விடுத்தருளிய முருகப் பெருமானே!

         உத்தரமேரூர் என்னும் திருத்தலத்தில் வாழும் தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

         உபநிடதங்கள், வேதங்கள், எண்திசையில் உள்ள இந்திரன் முதலிய தலைவர்களும், முனிவர்களும், குற்றமில்லாத ஏழு இருடிகளும், கதிர், மதி, கனல் என்னும் மூன்று ஒளித் தேவர்களும், இத் தன்மைத்து என்று சொல்லுதற்கு இயலாதவரும் யுகமுடிவில் முடியாதவரும் ஆகிய பிரகிருதி புருடர்கள், ஒன்பது நவநாதர்கள், நெடுந்தொலைவில் உள்ள நட்சத்திர உலகில் வாழ்பவர்களும், வேதியர்களும், அரிய கருத்துக்களுடன் கூடிய ஒரு கோடி சமயத்தார்களும், நூறு கோடி தேவர்களும் அடியார்களும், ஒரு கோடி விட்டுணுக்களும் பிரமர்களும், ஆகிய இவர்கள் எல்லோரும் ஒருங்கு கூடி, எவ்வகையாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தேவரீரது திருவடிகளை அடியேன் அறிந்துகொள்ளுமாறு, அறிவினுக்குள் அறிவு ஊற்றெடுக்குமாறு அருள் புரிவீர்.


விரிவுரை

சுருதி ---

சுருதி - உபநிடதங்கள். வேத முடிவாக – ஞானகாண்டமாக விளங்குவது உபநிடதங்கள். எழுதிப் படிக்காமல் செவியினால் கேட்கப்படுவதனால் இப் பெயர் எய்தியது. மிகமிக நுணுக்கமான பகுதிகளை உடையது. இத்தகைய உபநிடதங்களாலும் முருகவேளுடைய திருவடியை அறிய முடியவில்லை.

தோன்றுபர சாக்கிரமும் கண்டோம், அந்தச்
     சொப்பனமும் கண்டோம், மேல் சுழுத்தி கண்டோம்,
ஆன்றபர துரியநிலை கண்டோம், அப்பால்
     அதுகண்டோம், அப்பாலாம் அதுவும் கண்டோம்,
ஏன்றஉப சாந்தநிலை கண்டோம், அப்பால்
     இருந்தநிலை காண்கிலோம், என்னே என்று
சான்றஉப நிடங்களெல்லாம் வழுத்த நின்ற
     தன்மயமே, சின்மயமே, சகசத் தேவே.     ---  திருவருட்பா.

உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர்
     உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை
     வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி,
கருத்தழிந்து தனித்தனியே சென்று, வேதங்
     களைவினவ, மற்றுஅவையுங் காணேம் என்று
வருத்தமுற்று, ங்கு அவரோடு புலம்ப நின்ற
     வஞ்சவெளியே இன்ப மயமாம் தேவே.   ---  திருவருட்பா.

பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
     பார்த்து அளந்து காண்டும்எனப் பல்கால் மேவி
ஆயிரம் ஆயிரமுகங்க ளாலும் பன்னாள்
     அளந்து அளந்துஓர் அணுத்துணையும் அளவு காணா
தே,இரங்கி அழுது,சிவ சிவ ஏன்று ஏங்கித்
     திரும்ப, அருட் பரவெளிவாழ் சிவமே! ஈன்ற
தாய்இரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
     தண்ணருளால் வளர்த்துஎன்றும் தாங்குந் தேவே.  ---  திருவருட்பா.


மறைகள் ---

அநேக பொருள்கள் இலைமறை காய்போல தன்னகத்தே மறைய விளங்குவதால், வேதம் மறை எனப்பட்டது. வேதம் என்பது அறிவுநூல் எனப்படும். அத்தகை மறைகளும் இளம்பூரணன் இணையடியைக் காணாது திகைக்கின்றன.

அந்தரம்இங்கு அறிவோம்மற்று அதனில் அண்டம்
     அடுக்கடுக்காய் அமைந்தஉளவு அறிவோம், ஆங்கே
உந்துறும்பல் பிண்டநிலை அறிவோம், சீவன்
     உற்றநிலை அறிவோம்மற்று அனைத்தும் நாட்டும்
எந்தைநினது அருள்விளையாட்டு அந்தோ அந்தோ
     எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
முந்துஅனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
     முழுமுதலே, அன்பர்குறை முடிக்கும் தேவே.     ---  திருவருட்பா.

இரு நாலு திசையில் அதிபர் –--

எட்டுத் திசைகளையும் பாதுகாவல் புரிபவர்கள். இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்பவர்கள். இவர்களாலும் திருமுருகன் திருவடிகளைக் காண இயலவில்லை.

முனிவோர்கள் ---

முன் - நினைப்பு. எப்போதும் இறைவனை நினைப்பவர்களாதலின், முனிவர் எனப்பட்டனர். இனி, முனிவை முனிபவர்களாதலின், முனிவர் எனினும் அமையும்.

சினத்தை நிந்தனை செயும் முனிவரர்
தொழ மகிழ்வோனே.       ---  (உனைத்தினம்) திருப்புகழ்.

இருடி எழு பேர்கள் ---

ரிஷிகள் எழுவர் --- அத்திரி, ஆங்கீரசர், கௌதமர், சமதக்நி, பரத்வாசர், வசிட்டர், விசுவாமித்திரர்.

சுடர் மூவர் ---

ஒளிக்கடவுள் மூவர்.  சூரியன், சந்திரன், அக்கினி.  இந்தச் சுடர் மூவரும் முருகனடியைக் காண்கின்றிலர்.

பகுதி புருடர் ---

பிரகிருதி என்பது பகுதி என மருவியது.  இவர் பிரகிருதிக்கு அதிதேவதையாக இருப்பவர்.

நவநாதர் ---

சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்.

தொலைவின் உடுவின் உலகோர்கள் ---

நட்சத்திரம் மிகத் தொலைவில் இருப்பதனால், அவ்வுலகில் உள்ளாரும் காண்கின்றிலர் என்பார்.

ஒளியானது விநாடி ஒன்றுக்கு, இலட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் செல்லுகின்றது. இந்த அளவில் வரும் ஒளி, நட்சத்திரத்தில் இருந்து இந்த பூமிக்கு வர நான்கு வருடங்கள் செல்லும். இந்த நட்சத்திரம் தான் எல்லா நட்சத்திரங்களிலும் அருகில் உள்ளது. ஏனையவை எல்லாம் மிகமிகச் சேய்மையில் உள்ளவை. மேற்கண்ட வேகத்தில் வரும் ஒளி 200 வருடங்களில் பூமிக்கு வரக் கூடிய நட்சத்திரங்களும் உண்டு என வானநூலார் முடிவு கட்டுகின்றனர்.

மறையோர்கள் ---

எப்போதும் வேதங்களை ஓதுவதையே தொழிலாக உடையவர்கள் வேதியர். அவர்களும் காண்கின்றிலர்.

அரிய சமயம் ஒரு கோடி ---

சமயம் - நுண்ணுணர்வால் அமைந்தது. சமய பேதங்கள் பல.

புறப்புறச் சமயம் 6 --- உலகாயதம், மாத்மியகம், யோகாசாரம், சௌராந்திகம், வைபாடிகம், ஆருகதம்.

புறச் சமயம் 6 --- தருக்கும், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம்.

அகப்புறச் சமயம் 6 --- பாசுபதம், மாவிதரம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம்.

அகச் சமயம் 6 --- பாஷானவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்வித சைவம்.

இங்ஙனம் பல் வேறு சமயங்கள் உள.

"சமயகோடிகள் எல்லாம் தம்தெயவம் எம்தெய்வம் என்று, எங்கணும் தொடர்ந்து, எதிர் வழக்கு ஆடவும் நின்றது" என்பார் தாயுமானார். இத்தகைய பல சமயங்களும் படிகளாக அமைய, மேலாக முடிமணியாக விளங்குவது வைதிகசித்தாந்த சைவம்.


அமரர் சரணர் சதகோடி ---

கோடிக்கணக்கான தேவர்களும், கோடிக்கணக்கான அடியார்களும் ஐயன் அடிமலரைக் காணாது திகைக்கின்றனர்.


அரியும் அயனும் ஒரு கோடி ---

அண்டங்கள் தோறும் அயனும், அரியும் வேறு வேறாக இருந்து படைத்தல் தொழிலையும், காத்தல் தொழிலையும் புரிகின்றனர்.  அவ்வண்ணம் புரியும் ஒரு கோடி பிரமவிட்டுணுக்களும் எம்பிரானது இணையைடியைக் கண்டாரில்லை.

அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே ---

அத்தகைய ஞானமே வடிவாகிய திருவடிகளை, அறியும் பொருட்டு அறிவுக்குள் அறியும் பரஞானத்தை வேண்டுகின்றார்.

ஞானமே மோட்சத்திற்குச் சாதனம். ஆதலின் அறிவினை அறிதலே பொருள். இதனையே, சிவபெருமானுடைய திருச்செவியில் குமரவேள் உபதேசித்தனர்.

அரவுபுனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகாடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருள்என அருளிய     பெருமாளே.
                                                                 ---  (குமரகுருபர) திருப்புகழ்

தாயுமானார், இந்த அடியை எடுத்து பொன்போல போற்றிப் பாராட்டுகின்றனர்..

அறிவை அறிவதுவே ஆகும்பொருள் என்று
உறுதிசொன்ன உண்மையினை ஓரும்நாள் எந்நாளோ.

கருத்துரை

அவுணரை அழித்த அண்ணலே! உத்தரமேரூர் மேவும் முருகவேளே! ஆராலும் காண முடியாத தேவரீரது அடிமலரை அடியேன் காண அறிவுக்குள் அறியும் அறிவைத் தந்து அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...