அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தோடுஉறும் குழையாலே
(மாடம்பாக்கம்)
முருகா!
மாதர் வசமாகி அடியேன்
மடியாமல்,
திருவடியில் அமைதி பெற அருள்.
தான
தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
தோடு
றுங்குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம
மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட
கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய ......
விலைமாதர்
பாவ
கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது ......
கருதாயோ
நாட
ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி
தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாட
யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென ......
அரனார்முன்
வாச
கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
தோடு
உறும் குழையாலே, கோல்வளை
சூடு செங்கைகளாலே, யாழ்தரு
கீத மென் குரலாலே, தூமணி ...... நகையாலே,
தூம
மென்குழலாலே, ஊறிய
தேன் இலங்கு இதழாலே, ஆல
விலோசனங்களினாலே, சோபித ...... அழகாலே,
பாடகம்
புனை தாளாலே, மிக
வீசு தண்பனி நீராலே, வளர்
பார கொங்கைகளாலே, கோலிய ...... விலைமாதர்,
பாவகங்களினாலே, யான் மயல்
மூழ்கி நின்று அயராதே, நூபுர
பாத பங்கயம் மீதே ஆள்வது ......
கருதாயோ?
நாட
அரும் சுடர் தானா ஓது,
சிவாகமங்களின் நானா பேத
அநாத! தந்த்ர கலா மா போதக! ......
வடிவாகி
நால்
விதம் தரு வேதா! வேதமும்
நாடி நின்றதொர் மாய அதீத,
மனோலயம் தரு நாதா! ஆறு இரு ......
புயவேளே!
வாள்
தயங்கிய வேலாலே பொரு
சூர் தடிந்து அருள் வீரா! மாமயில்
ஏறு கந்த! விநோதா! கூறு என, ...... அரனார்முன்
வாசகம்
பிறவாத ஓர் ஞான
சுக உதயம் புகல் வாசா தேசிக!
மாடை அம்பதி வாழ்வே! தேவர்கள் ......
பெருமாளே.
பதவுரை
நாட அரும் சுடர் தானா
ஓது ---
நாடிக் காண்பதற்கு அரிதான ஒளிப்பொருளாக உள்ளது சிவபரம்பொருள் என்று ஓதுகின்ற
சிவ ஆகமங்களின் நானா பேத அநாத --- சிவ
ஆகமங்களில் பலவிதமான பலவாறு போற்றப்படுகின்ற
தனக்கு மேலாக ஒருவர் இல்லாத தலைவரே!
தந்த்ர கலா மாபோதக
வடிவாகி ---
நூல்களில் கூறப்படும் சிறந்த அறிவு வடிவாகி,
நால்விதம் தரு வேதா --- நால் வகையான
வேதங்களையும் ஓதுகின்ற பிரமதேவனும்,
வேதமும் --- வேதங்களும்,
நாடி நின்றது ஒர் மாயா அதீத --- நாடி
நிற்கின்ற ஒப்பற்ற மாயையைக் கடந்தவரே!
மனோலயம் தரு நாதா --- மன ஒடுக்கத்தை
அருள்கின்ற தலைவரே!
ஆறு இரு புயவேளே --- பன்னிரு திருத்தோள்களை
உடையவரே!
வாள் தயங்கிய வேலாலே --- ஒளி பொருந்திய
வேலாயுதத்தைக் கொண்டு
பொருசூர் தடிந்து அருள் வீரா --- போர்
புரிந்த சூரபதுமனை அழித்தருளிய வீரரே!
மாமயில் ஏறு கந்த --- சிறந்த மயிலை
வாகனமாகக் கொண்ட கந்தக் கடவுளே!
விநோதா --- திருவிளையாடல்களைப்
புரிபவரே!
கூறு என --- கூறியருளுக எனவும்,
அரனார் முன் --- சிவபெரும்பொருளின்
திருமுன்னர்,
வாசகம் பிறவாத ஓர் ஞான சுகஉதயம் ---
வாக்கால் உணர்த்த அரிதான ஞானானந்தப் பொருளை அருளிய,
புகல் வாசா தேசிக --- திருவாய்
மலர்ந்து அருளிய குருமூர்த்தியே!
மாடையம் பதி வாழ்வே --- மாடம்பாக்கம்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் செல்வரே!
தேவர்கள் பெருமாளே --- தேவர்கள்
போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
தோடு உறும் குழையாலே
--- தோடுகளையும், குண்டலங்களையும்
அணிந்துள்ள காதுகளினாலும்,
கோல்வளை சூடு செம் கைகளாலே ---
வளையல்களை அணிந்துள்ள சிவந்த கைகளாலும்,
யாழ் தரு கீத
மென்குரலாலே
--- யாழைப் போல இனிய இசை கொண்ட மென்மையான குரலாலும்,
தூமணி நகையாலே --- ஒளி வீசும்
பற்களாலும்,
தூமம் மென்குழலாலே --- அகில்புகை
ஊட்டிய மெல்லிய கூந்தலாலும்,
ஊறிய தேன் இலங்கு இதழாலே --- தேன்
ஊறியது போல் விளங்கும் வாயிதழாலும்,
ஆல விலோசனங்களினாலே --- விடத்தைப் போன்ற கண்களாலும்,
சோபித அழகாலே --- ஒளிரும் அழகாலும்,
பாடகம் புனை தாளாலே --- பாடகம் என்னும் அணிகலனைப்
புனைந்துள்ள கால்களாலும்,
மிகவீசு தண் பனிநீராலே --- வீசும்
குளிர்ந்த பனி நீராலும்,
வளர் பார கொங்கைகளாலே --- வளருகின்ற
பருத்த கொங்கைகளாலும்,
கோலிய விலைமாதர் --- வளைக்கும் விலைமாதர்களுடைய
பாவகங்களினாலே --- பாசாங்குகளினால்,
யான் மயல் மூழ்கி நின்று அயராதே ---
அடியேன் காம மயக்கத்தில் முழுகி இருந்து சோர்வு படாமல்,
நூபுர பாத பங்கயம்
மீதே ஆள்வது கருதாயோ --- சிலம்பு அணிந்த திருவடித் தாமரையில்
ஆண்டுகொள்ளக் கருதி அருள்வாயாக.
பொழிப்புரை
நாடிக் காண்பதற்கு அரிதான ஒளிப்பொருளாக
உள்ளது சிவபரம்பொருள் என்று ஓதுகின்ற சிவ ஆகமங்களில் பலவிதமான பலவாறு போற்றப்படுகின்ற தனக்கு
மேலாக ஒருவர் இல்லாத தலைவரே!
நூல்களில் கூறப்படும் சிறந்த அறிவு வடிவாகி,
நால் வகையான வேதங்களையும் ஓதுகின்ற பிரமதேவனும், வேதங்களும், நாடி நிற்கின்ற ஒப்பற்ற மாயையைக்
கடந்தவரே!
மன ஒடுக்கத்தை அருள்கின்ற தலைவரே!
பன்னிரு திருத்தோள்களை உடையவரே!
ஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கொண்டு, போர் புரிந்த சூரபதுமனை அழித்தருளிய வீரரே!
சிறந்த மயிலை வாகனமாகக் கொண்ட கந்தக்
கடவுளே!
திருவிளையாடல்களைப் புரிபவரே!
கூறியருளுக எனவும், சிவபெரும்பொருளின் திருமுன்னர், வாக்கால்
உணர்த்த அரிதான ஞானானந்தப் பொருளை அருளிய, திருவாய்
மலர்ந்து அருளிய குருமூர்த்தியே!
மாடம்பாக்கம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருக்கும் செல்வரே!
தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
தோடுகளையும், குண்டலங்களையும் அணிந்துள்ள காதுகளினாலும், வளையல்களை அணிந்துள்ள சிவந்த கைகளாலும், யாழைப் போல இனிய இசை கொண்ட மென்மையான
குரலாலும், ஒளி வீசும்
பற்களாலும், அகில்புகை ஊட்டிய மெல்லிய கூந்தலாலும், தேன் ஊறியது போல் விளங்கும்
வாயிதழாலும், விடத்தைப் போன்ற
கண்களாலும், ஒளிரும்
அழகாலும், பாடகம் என்னும் அணிகலனைப்
புனைந்துள்ள கால்களாலும், வீசும் குளிர்ந்த பனி
நீராலும், வளருகின்ற
பருத்த கொங்கைகளாலும் வளைக்கும் விலைமாதர்களுடைய வஞ்சகச் செயல்களால் அடியேன் காம மயக்கத்தில்
முழுகி இருந்து சோர்வு படாமல்,
சிலம்பு
அணிந்த தேவரீரது திருவடித் தாமரையில் ஆண்டுகொள்ளக் கருதி அருள்வாயாக.
விரிவுரை
தோடு
உறும் குழையாலே ................. யான் மயல் மூழ்கி நின்று அயராதே, நூபுர பாத பங்கயம்
மீதே ஆள்வது கருதாயோ ---
இத்
திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதர்கள் தங்களின் தோற்றப் பொலிவால் ஆடவர்களை
மயக்கும் வஞ்சகச் செயல்களைப் புரிவார்கள் என்கின்றார். அந்த வஞ்சகச் செயல்களில்
மனதைப் பறிகொடுத்து, காம மயக்கம்
கொண்டு,
உடல்
வலிமையும்,
உயிர்
உணர்வும் சோர்வு படாமல் இருக்கவேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.
இதற்கு
ஒப்புமையாக அமைந்த தாயுமான அடிகளார் பாடல் ஒன்றினைக் காண்போம்...
தெட்டிலே
வலியமட மாதர்வாய் வெட்டிலே,
சிற்றிடையிலே, நடையிலே,
சேல்ஒத்த
விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
சிறுபிறை நுதல்கீற்றிலே,
பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனைகந்த
பொடியிலே, அடியிலே, மேல்
பூரித்த
முலையிலே, நிற்கின்ற நிலையிலே,
புந்திதனை நுழைய விட்டு,
நெட்டிலே
அலையாமல்; அறிவிலே, பொறையிலே,
நின்னடியர் கூட்டத்திலே,
நிலைபெற்ற
அன்பிலே, மலவு அற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்திலே, உன்இருதாள்
மட்டிலே
மனதுசெல நினது அருளும் அருள்வையோ?
வளமருவு தேவை அரசே!
வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
வளர் காதலிப்பெண் உமையே.
இப்
பாடலின் பொருள் ---
எல்லா
வளமும் பொருந்திய தேவை நகருக்கு அரசியே, வடபெருங்கல்
எனப்படும் இமயமலையரையனுக்கு இரு கண்மணியாகத் திருத்தோற்றம் காட்டியருளிய
மலைவளர்காதலிப் பெண் உமையே, வன்மையாகிய இளமை
வாய்ந்த மயக்கும் பெண்களின் வஞ்சகச் செயலிலும், வாயினின்று வரும் வெட்டுமொழியிலும்
துவளும் சிறிய இடையிலும் அன்னம்போல் நடக்கும் நடையிலும், கயல்மீன் போன்ற கண்களின் கள்ளப்
பார்வையிலும், இனிமை போற் சொல்லும்
சொல்லிலும், இளம் பிறைபோன்ற
நெற்றியில் காணப்படும் கீற்றுவரையிலும், நெற்றிப்
பொட்டிலும், அவர் அழகுற உடுத்தி
உழலும் பட்டிலும், பூசப்படும் வெண்
பொடியிலும், அவர் காலடியிலும், மேலிடத்துப் பருத்துக் காணப்படும் ஈர்க்கு
இடைபோகா இளமுலையிலும், அவர் நிற்கும்
தனிநிலையிலும் அடியேனுடைய புல்லறிவினை மனம் போகும் போக்கிலே போகவிட்டு நீள உழன்று
ஒழியாமல், நன்னெறி
ஒழுக்கத்திலும், திருவருளால் உண்டாம்
அளவிறந்த பொறுமையிலும், நின்னுடைய அடியார்
திருக்கூட்டத்திலும் இறவாத இன்பத்திற்கு ஏதுவாகிய உறுதியான அன்பிலும், மாசற்ற மெய்யுணர்வினால் பெறப்படும்
மெய்ப்பொருள் உண்மையிலும், உன்னுடைய இரண்டு
திருவடிகள் மட்டிலும் அடியேன் நெஞ்சம் இடையறாது சென்று, பொன்றாப் பயன் துய்க்க உன்னுடைய
திருவருளையும் அருள்வாயோ?
நாட
அரும் சுடர் தானா ஓது சிவ ஆகமங்களின் நானா
பேத அநாத ---
நாடுதல்
- ஆராய்தல்.
வேதம்
- வாழ்வியல் நூல்.
ஆகமம்
- வழிபாட்டு நூல்.
வழிபாடு
என்பது புறவழிபாடு, அகவழிபாடு என்று
இருவகைப்படும்.
பதி
பூசை முதலநல் கிரியையால் மனம்எனும்
பசுகரணம் ஈங்கு அசுத்த
பாவனை அறச, சுத்த பாவனையில் நிற்கும், மெய்ப்
பதியோக நிலைமை அதனால்
மதிபாசம்
அற்று அதின் அடங்கிடும், அடங்கவே,
மலைவுஇல் மெய்ஞ்ஞான மயமாய்,
வரவு போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே
வந்து, உணர்வு தந்த குருவே!
துதிவாய்மை
பெறுசாந்த பதமேவு மதியமே!
துரிசறு சுயஞ் சோதியே!
தோகை வாகனமீது இலங்கவரு தோன்றலே!
சொல்லரிய நல்ல துணையே!
ததிபெறும்
சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வ மணியே. --- திருவருட்பா.
மாசுற்ற
நினைவு இல்லாதாதல். மாசாகிய இருளையே வள்ளல் பெருமான் “அசுத்த பாவனை” என்றார். பாவனை --- நினைவு. அசுத்த நினைவுகள்
நீங்கியபோது, தூய ஞான இன்ப நினைவுகள்
நிறைவது பற்றி, "அசுத்த பாவனை அற மனம்
சுத்த பாவனையில் நிற்கும்” என்று கூறுகிறார்.
திருவள்ளுவரும், மெய்ப் பொருளை
உணர்ந்த போது “இருள் நீங்கி இன்பம் பயக்கும்”என்று காட்டிய
உண்மையை உணரவேண்டும். தூய ஞான நினைவானது,
மெய்ப்பொருளைக்
காட்டி அதனை அடையச் செய்விக்கும் என்பதை,
“சுத்த பாவனையில் நிற்கும்
மெய்ப்பதியோக நிலைமை”என்றார்.
யோகம் --- கூடுதல்.
ஆன்மா
சிவயோகம் பெற்றால், அதனைப் பற்றியிருக்கும்
“பாசம் அற்று அதில் அடங்கிடும்” என்று கூறுகிறார்.
ஆன்மாவும்
சிவமும் சேனப் பொருள்கள். அசேதனமாகிய பாசம் சிவத்தின்கண்
ஒடுங்கியிருக்கும் மாயையாகிய அசிற்சத்தியில் அடங்கும் என்பதை உணர்த்தற்கு “அதில்” எனச் சுட்டினார். மலமாகிய பாசம் "சகசம்"
என்றும், மாயை கன்மங்களாகிய பாசம்
"ஆகந்துகம்" என்றும் ஆன்றோரால் மதித்துரைக்கப்படுவது பற்றி “மதிபாசம்” என்றார். பாசம் நீங்கிய ஆன்மா சுத்த சித்துருவாய்
ஞானப்பொருளாகிய சிவத்தின் அருளொளியால் நெருப்பில் காய்ந்து சிவந்த இரும்பு போலச் சிவஞான
இன்ப வடிவம் உறுதல் தோன்ற “மலைவில் மெய்ஞ்ஞான மயமாய்
வரவு போக்கற்ற நிலை கூடும்” என உபதேசிக்கப் பெற்றதாக
வள்ளலார் கூறுகின்றார். மலைவு
--- மயக்கம்.
பாசம் அற்ற போது மயக்கம் இன்மை கூடும் என்பதால், “மலைவு இல் மெய்ஞ் ஞானம்” என்றார். சிவத்தை எய்தினோர் மீளப் பிறப்பும்
இறப்பும் இலராதலால், “வரவு போக்கு அற்றநிலை
கூடும்” என்றும், இச்சிவஞான யோகக் கருத்துக்களை முருகப் பெருமான்
குருவாய் மனத்தின்கண் எழுந்தருளி உபதேசித்தான் என்பதை, “எனது உளே வந்து உணர்வு தந்த குருவே” என்று அருளினார்.
இறைவன்
ஒளிப்பொருளாய் உள்ளவன். ஆனாலும்,
அவனைப்
புறக்கண்ணால் தேடிக் காண இயலாது. மனக்கண்ணாலும் தேடிக் காண இயலாது. அருட்கண்ணால்
தேடிக் காணவேண்டும். அதற்கு அவனருள் துணை நிற்கவேண்டும். "அவன் அருளாலே அவன்
தாள் வணங்கி" என்றாற்போல.
புறக்கண்களால்
தேடிக் காண முடியாத பொருள் ஞானானந்தப் பரம்பொருள். அகக் கண் கொண்டு தேடவேண்டும்.
ஊனக்கண்ணாலும், பாசத்தாலும் உணர
முடியாத நிலையில் உள்ள அனுபவப் பொருள் அது.
"உள்ளக்கண்
நோக்கும் அறிவு ஊறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே" என்று அடிகள் வேண்டினார்
பிறிதொரு திருப்புகழில்.
முகத்தில்
கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!
அகத்தில்
கண்கொண்டு காண்பதே ஆனந்தம்,
மகட்குத்
தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச்
சொல் எனில் சொல்லும்ஆறு எங்ஙனே.
என்கின்றார்
திருமூல நாயனார்.
நாடுதல்
என்பது அறிவால் ஆராய்ந்து தேடுதல் என்கின்றது சிவஞானபோதம்.
ஊனக்
கண் பாசம் உணராப் பதியை
ஞானக்
கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத்
தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்ணிழ
லாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே.
இதன்
பதவுரை ---
ஊனக்
கண் --- குறையுடைய உயிரறிவு எனப்படும் பசு ஞானத்தாலும்,
பாசம்
--- பாசமாகிய கருவிகளால் உண்டாகும் அறிவாலும்
பாசஞானத்தாலும்
உணராப்
பதியை --- உணர முடியாத இறைவனை
ஞானக்
கண்ணினில் --- அவனது அறிவு எனப்படும் பதிஞானத்தையே கண்ணாகக் கொண்டு
சிந்தை
--- உனது அறிவினுள்ளே
நாடி
--- ஆராய்ந்து உணர்வாயாக
(அவ்வாறு பதிஞானத்தால்
காணுங்கால்,, அவன் உன் அறிவினுள்ளே
காட்சிப் படுவான். அங்ஙனம் பதியை அறிவதற்கு அப்பதிஞானம் எவ்வாறு கிடைக்கும் எனில்)
பாசம்
--- தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பாசக் கூட்டம் அனைத்தும்
உராத்
துனைத் தேர்த்து என ஒருவ - நிலையில்லாது விரைவில் நீங்கக் கூடிய கானல் நீரைப்
போன்றவை எனத் தெளிந்து
அவற்றின்மீது
வைத்துள்ள பற்றை நீக்கினால்
பதி
தண் நிழல் ஆம் --- அந்தப் பதிஞானமானது பிறவி வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சியைத்
தரும் நிழலாய் உன் அறிவின்கண் வெளிப்பட்டுத் தோன்றும்.
அஞ்செழுத்து
--- (அங்ஙனம் தோன்றிய அது உன் அறிவின்கண் நீங்காது
நிலைபெறுதற்குத்) திருவைந்தெழுத்து
விதி
எண்ணும் --- விதிப்படி உச்சரிக்கப்படும்
முதல்வன், குறை அறிவாகிய பசு ஞானத்தாலும் பாச
ஞானத்தாலும் உணரப்படாதவன். அவனை அவனது அறிவாகிய பதி ஞானத்தையே கண்ணாகக் கொண்டு
சாதகன் தனது அறிவினுள்ளே ஆராய்ந்து உணர வேண்டும்.
அப்
பதிஞானத்தை எவ்வாறு பெறுவது எனில்,
மாயையின்
காரியங்களாகிய பாசப் பொருள்கள் அனைத்தும் நிலைத்துள்ளவை போலத் தோன்றினாலும் மிக
விரைவில் கானல் நீர் போல நில்லாது நீங்கிப் போவன என்னும் உண்மையைச் சிந்தித்து
உணர்ந்து, அவற்றின் மேல்
பற்றுச் செய்யாது விட்டொழித்தால்,
அப்பொழுது
அந்தப் பதிஞானமாகிய திருவருள் பிறவியாகிய கோடை வெயிலைத் தணிக்கின்ற குளிர்ந்த
நிழலாய் உயிரறிவில் வெளிப்படும்.
அந்தப்
பதிஞானத்தால் முதற்பொருளாகிய சிவத்தைத் தனது அறிவினுள்ளே காணலாம். அவ்வாறு கண்ட
காட்சி இடையே மறைந்து, முன்பு பலகாலும் பழகி
வந்த பழக்கத்தால் பாசப் பொருள்களை நோக்க நேரிடலாம். அந்நிலையில் அத்திருவருட்
காட்சி நீங்காது நிலைபெறுதல் பொருட்டுத் திருவைந்தெழுத்து அதற்கேற்ற முறையில்
வைத்துக் கணிக்கப்படும் என்கின்றது சிவஞானபோதம்.
தந்த்ர
கலா மாபோதக வடிவாகி ---
தந்திரம்
- நூல்கள்.
கலை
- அறிவு. அறியாமையைக் கலைப்பதால்,
கலை
என்ற பெயர் உண்டாயிற்று.
நூல்களில்
கூறப்படும் அறிவு வடிவமாக உள்ளவன் இறைவன். நூலறிவு ஒன்றைப் பற்றியே அவனை
உணரமுடியாது. நூலறிவு நுண்ணறிவாகப் பரிணமிக்க வேண்டும்.
இந்த
உண்மையைக் கண்ணப்ப நாயனார் வரலாற்றின் மூலம் தெளியலாம்.
கண்ணப்பருடைய
அன்பும் அவருடைய புனித வரலாறும் மாற்றம் மனம் கழிய நின்றவை ஆகும். மானுடராகப்
பிறந்த ஒவ்வொருவரும் கண்ணப்பருடைய கதையை ஓத வேண்டும். உன்னுதல் வேண்டும். உணருதல்
வேண்டும். அன்பால் உருகுதல் வேண்டும். அன்புக்குக் கட்டளைக் கல் கண்ணப்பர் ஆவார்.
வாளா
பொழுது கழிக்கின்றார் மானுடவர்,
கேளார்
கொல், அந்தோ கிறிப்பட்டார், –-- கீள்ஆடை
அண்ணற்கு
அணுக்கராய்க் காளத்தி உள்நின்ற
கண்ணப்பர்
ஆவார் கதை.
என்கின்றார்
தக்கோர் புகழும் நக்கீர தேவர். "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை
கண்டபின்" என்பார் அன்புக் களஞ்சியமாகிய மணிவாசகனார்.
விதி
மார்க்கத்தில் சென்றவர் சிவகோசரியார்.
அன்பு
மார்க்கத்தில் நின்றவர் கண்ணப்பர்.
வேதாகமங்களை
முறைப்படி ஓதி உணர்ந்து, அவற்றில் கூறியவாறு
ஒழுகி, முறைப்படி இறைவனை
வழிபட்டு மாறுபாடு இன்றி நிற்பது விதிமார்க்கம் ஆகும்.
அன்பு
மார்க்கமாவது, ஓரே அன்பு மயமாக நிற்பது
ஆகும். அன்பு நெறியில் கலைஞானம் கூறும் விலக்குகள் எல்லாம் தீ முன் எரியும்
பஞ்சுபோல் பறந்து ஒழியும்.
விதிமார்க்கத்தில்
செல்பவர் அன்பு மார்க்கத்தினை அடைதல் வேண்டும். அதனாலே தான், சிவபெருமான் கண்ணப்பர் கனவிலே போய், "திண்ணப்பா நீ ஊன்
வேதிப்பதும், வாயில் உள்ள நீரை
உமிழ்வதும், செருப்பு அணிந்த
காலுடன் திருக்கோயிலுக்குள் வருவதும் நமக்கு அருவருப்பை விளைக்கின்றன. அவைகளை இனி அவ்வாறு
செய்யாதே. நமது அன்பன் சிவகோசரியார் வந்து பூசை செய்யும் விதியையும், மதியையும் எனக்குப் பின் ஒளிந்து
இருந்து நீ தெரிந்து கொள்" என்று கூறியருளவில்லை.. ஏனெனில், அன்பு மார்க்கத்திற்கு
விதிமார்க்கத்தைக் காட்ட வேண்டியது இல்லை.
அன்பும்
அறிவும் உடைய அருமை நேயர்கள் இதனை உற்று நோக்குதல் வேண்டும். சிவபெருமான்
விதிமார்க்கத்திற்கு அன்புநெறியைக் காட்டுவார் ஆகி, சிவகோசரியார் கனவிலே போய்
உரைத்தருளுகின்றார்.
அன்றுஇரவு
கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின்திகழும்
சடைமவுலி வேதியர்தாம் எழுந்தருளி
"வன்திறல் வேடுவன்
என்று மற்றுஅவனை நீ நினையேல்
நன்றுஅவன்தன்
செயல்தன்னை நாம்உரைப்பக் கேள்"என்று.
"அவனுடைய வடிவுஎல்லாம்
நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய
அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவுஎன்றும்
அவனுடைய
செயல்எல்லாம் நமக்குஇனிய ஆம் என்றும்
அவனுடைய
நிலைஇவ்வாறு அறிநீ" என்று அருள்செய்வார்.
"அன்பனே, திண்ணனாகிய அண்ணல் வேடன் வந்து என்மீது
உள்ள பழைய மலர்களைச் செருப்பு அணிந்த காலால் நீக்குகின்றனன். அது எனது இளங்குமரன் திருமுருகன் செய்ய
திருவடியினும் சிறப்பாக நமக்கு இன்பத்தைத் தருகின்றது”.
"பொருப்பினில் வந்து, அவன் செய்யும்
பூசனைக்கு முன்பு, என்மேல்
அருப்பு
உறும் மென்மலர் முன்னை
அவை நீக்கும் ஆதரவால்,
விருப்பு
உறும் அன்பு என்னும்
வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த
செருப்பு
அடி, அவ்விளம்பருவச்
சேய் அடியின் சிறப்பு உடைத்தால்”,
"அவன் நமக்கு
நீராட்டும் பொருட்டு உமிழும் எச்சில் நீரானது, கங்கை முதலிய புண்ணிய நீரினும்
புனிதமானது”.
"உருகிய அன்பு, ஒழிவு இன்றி
நிறைந்த அவன் உரு என்னும்
பெருகிய
கொள்கல முகத்தில்
பிறங்கி, இனிது ஒழுகுதலால்
ஒருமுனிவன்
செவி உமிழும்
உயர்கங்கை முதல் தீர்த்தப்
பொருபுனலின், எனக்கு அவன்தன்
வாய்உமிழும் புனல் புனிதம்",
"அவ் வேடர் கோமான்
தனது அழுக்கு அடைந்த தலை மயிராகிய குடலையில் கொணர்ந்து நமக்கு அன்புடன் சூட்டும்
மலர்களுக்கு மாலயனாதி வானவர்கள் மந்திரத்துடன் சூட்டும் மலர்கள் யாவும் இணையாக
மாட்டா”.
"இம்மலை வந்து எனை
அடைந்த
கானவன் தன் இயல்பாலே
மெய்ம்மலரும்
அன்புமேல்
விரிந்தன போல் விழுதலால்,
செம்மலர்மேல்
அயனொடு மால்
முதல்தேவர் வந்து புனை
எம்மலரும்
அவன் தலையால்
இடும் மலர்போல் எனக்கு ஒவ்வா”,
அவன்
"வெந்து உளதோ" என்று மெல்ல கடித்தும், "சுவை உளதோ" என்று நாவினால்
அதுக்கியும் பார்த்துப் படைத்த ஊனமுது வேள்வியின் அவி அமுதினும் இனியதாகும்.
"வெய்யகனல் பதம்கொள்ள
வெந்துளதோ எனும் அன்பால்
நையும்
மனத்து இனிமையினில்
நையமிக மென்றிடலால்
செய்யும்
மறை வேள்வியோர்
முன்பு தரும் திருந்து அவியில்
எய்யும்
வரிச் சிலையவன்தான்
இட்ட ஊன் எனக்கு இனிய",
முனிவர்கள்
கூறும் வேதாக மந்திரங்களினும், அச் சிலை வேடன்
நெக்கு உருகி அன்புடன் கூறும் கொச்சை மொழிகள் மிகவும் நன்றாக என் செவிக்கு
இனிக்கின்றன.
"மன்பெருமா மறைமொழிகள்
மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும்
இன்ப
மொழித் தோத்திரங்கள்
மந்திரங்கள் யாவையினும்,
முன்பு
இருந்து மற்று அவன்தன்
முகம் மலர அகம் நெகிழ
அன்பில்
நினைந்து என்னைஅல்லால்
அறிவுறா மொழி நல்ல”.
என்று
சிவபெருமான் கூறியருளிய திருமொழிகள் கல் மனத்தையும் கரைத்து உருக்குவனவாம்.
பொக்கணத்து
நீற்றை இட்ட ஒருத்தனார்க்கு
புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்
பச்சிலைக்கும், வாய்க்குள் எச்சிலுக்கும், வீக்கு
பைச் சிலைக்கும் ஆட்கொள் ...... அரன்வாழ்வே! --- (மச்சமெச்சு)
திருப்புகழ்.
நால்விதம்
தரு வேதா, வேதமும், நாடி நின்றது ஒர்
மாயா அதீத, மனோலயம் தரு நாதா ---
வேதங்களை
ஓதுவது ஒன்றின் மூலமே இறைவனை உணர முடியாது. அவன் மாயைக்கு அப்பாற்பட்டவன் என்பதால்
"மாயா அதீத" என்றார். மாயையால்
சூழப்படாத மன ஒருக்கத்தைத் தருகின்றவன் இறைவன் என்பார், "மாயா அதீத மனோலயம் தரு நாதா" என்றார்.
அனித்தம்
ஆன ஊன்நாளும் இருப்பதாகவே, நாசி
அடைத்து, வாயு ஓடாத ...வகைசாதித்து,
அவத்திலே குவால்மூலி புசித்து வாடும் ஆயாச
அசட்டுயோகி
ஆகாமல், ...மலமாயை
செனித்த
காரிய உபாதி ஒழித்த ஞான ஆசார
சிரத்தைஆகி, யான்வேறு என் ...உடல்வேறு
செகத்தியாவும்
வேறாக நிகழ்ச்சியா மனோதீத
சிவச்
சொரூப மாயோகி ...என ஆள்வாய். --- திருப்புகழ்.
வேதாகம
ஞான விநோத, மனோ
தீதா, சுரலோக சிகா மணியே. ---
கந்தர் அனுபூதி.
அரனார்
முன், வாசகம் பிறவாதோர்
ஞான சுகஉதயம் புகல் வாசா தேசிக ---
முருகப்
பெருமான் சிவபெருமானுக்குப் பிரண உபதேசம் புரிந்த வரலாற்றைக் குறிக்கின்றது.
கயிலைமலையின்
கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,
சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த அமரர்கள் அனைவரும் குகக் கடவுளை வனங்கிச் சென்றனர்.
அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை, அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும்
புரிந்து தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை 'மலை இடை வைத்த மணி விளக்கு' என வெளிப்படுத்தினர்.
பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்
கணிருந்த கந்தக் கடவுள் தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர்.
பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி
மோந்து முதுகுதைவந்து “குமரா! நின் பெருமையை உலகமெவ்வாறு அறியும். மறைகளால்
மனத்தால் வாக்கால் அளக்கவொண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார்
யாவர்?” என்று புகழ்ந்து அதனை
விளக்கத் திருவுள்ளம் பற்றி,
எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இல்லாமல் மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும்
உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல்
பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,
“அமரர் வணங்குங் குமர
நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல்
நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு
பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும்
செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வைரம் கொள்ளார்.
ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன்.
அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையிலிருத்தி, எல்லார்க்குஞ் செய்யும் வணக்கமும்
நினக்கே எய்துந் தகையது; அறு சமயத்தார்க்கும்
நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை
கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன்
உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித்
தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான்
“மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்றெறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே!
எந்தப் பொருளையும் உபதேச முறையினாலன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழற வல்லேம்” என்றனர்.
அரனார்
கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத
உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்ததென்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும்
தணிகை வெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறு ஊர்ந்து
தணிகைமாமலையைச் சார்ந்தனர்.
குமாரக்
கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய
உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பாலவென்று உலகங்கண்டு
தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி
மண்டபம் எனப்படூஉம் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு
கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் உஞற்றியதால்
அத்தணிகைமலை, "கணிகவெற்பு",
"கணிகாசலம்" எனப் பெயர் பெற்றது
என்பர்..
கண்ணுதல்
கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,
கதிர்வேல் அண்ணல் தோன்றலும், ஆலமுண்ட அண்ணல்
எழுந்து குமரனை வணங்கி வடதிசை நோக்கி நின்று பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும்
பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து பிரணவோபதேசம் பெற்றனர்.
எதிர்
உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,
அங்கு
அதிர்கழல்
வந்தனை அதனொடும், தாழ்வயிற்
சதுர்பட
வைகுபு, தா அரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என முது
தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே. --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று
அரனர்
ஓதாய் என, ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர் பரம சங்கரன் கும்பிடுந்
தம்பிரானே”
--- (கொடியனைய) திருப்புகழ்.
பிரணவப்
பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது; ஆதலால்
சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக்
காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார்
அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி
உபதேசித்தருளினார்.
அரவு
புனிதரும் வழிபட
மழலை
மொழிகொடு தெளிதர, ஒளிதிகழ்
அறிவை
அறிவது பொருள் என அருளிய பெருமாளே.
--- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்
மாடையம்
பதி வாழ்வே
---
சென்னையை
அடுத்த வண்டலூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், கிழக்குத் தாம்பரத்தில் இருந்து ஆறு கி.மீ.
தொலைவிலும்,
இராஜகீழ்ப்பாக்கம்
என்னும் ஊரில் இருந்து மூன்று கி.மீ. தொலைவிலும் உள்ள மாடம்பாக்கம் என்னும் திருத்தலத்தினை, அடிகளார் "மாடையம்பதி"
என்றார்.
இறைவர்
தேனுபுரீசுவரர், இறைவி தேனுகாம்பாள், தலமரம் வில்வம், தீர்த்தம் கபில தீர்த்தம். மூலவர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் மூன்று விரல்கிடை
அகல இலிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன்
தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கஜபிருஷ்ட விமானத்துடன்
அமைந்த கருவறை. (யானையின் பின்புறம் - மாடம் போன்ற அமைப்பு)
கபில
முனிவர் சிவபூசை செய்வதற்கு இலிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்தூவி
வழிபட்டதாகவும், கையில் இலிங்கத்தை வைத்து
வழிபட்ட முறை சரியல்ல எனக் கூறி, சிவன் அவரை பசுவாகப் பிறக்கச்
சாபம் அளித்ததாகவும், பசுவாகப் பிறந்த கபிலர்
இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றதாகவும் வரலாறு உள்ளது. பசு வடிவில் கபிலர்
வழிபட்ட தலம் என்பதால் சுவாமி,
"தேனுபுரீசுவரர்' எனப்பட்டார்.
கருத்துரை
முருகா!
மாதர் வசமாகி அடியேன் மடியாமல்,
திருவடியில் அமைதி பெற அருள்.
No comments:
Post a Comment