பகை ஆவது




பாடல் எண். 61
தாய் பகை அன்பு அற்றாளேல், தந்தை கடன்காரன் ஆகில்
வாய் பகை, மனைவி நல்ல மதிஇழந்து இருப்பாள் ஆகில்
பேய் பகை, அறிவு உண்டாகும் பெருமைநூல் கல்லாவிட்டால்
சேய் பகை, ஒருவர்க்கு ஆகும், தெளிந்தவர் உரை இது ஆமே.

இதன் பதவுரை ---

     ஒருவர்க்கு --- உலகில் தோன்றிய ஒருவனுக்கு,

     அன்பு அற்றாளேல் தாய் பகை ஆகும் --- தாயானவள் அன்பு இல்லாமல் இருப்பாளே ஆகில் அவள் பகை ஆவாள்.

     தந்தை கடன்காரன் ஆகில் வாய் பகை ஆகும் --- தந்தையும் கடன்பட்டு வாழ்ந்து, தனது மகனுக்குக் கடனை உண்டாக்கி வைப்பானானால் அவன் தன் மகனுக்கு வாய்த்த பகை ஆவான்.

     மனைவி நல்ல மதி இழந்து இருப்பாள் ஆகில் பேய் பகை ஆகும் --- மனைவியானவள் நல்ல அறிவை இழந்து இருந்தால் அவள் பேய் ஆவதோடு, அவனுக்குப் பகையும் ஆவாள்.

     அறிவு உண்டாகும் பெருமை நூல் கல்லாவிட்டால், சேய் பகை ஆகும்  --- ஞானம் உண்டாகின்ற பெருமைக்கு உரிய நூல்களை, கல்லாவிட்டால் மகனும் பகை ஆவான்.

     இது --- அந்த நீதி ஆனது

     தெளிந்தவர் உரை ஆமே --- நூல்களைக் கற்று ஆராய்ந்து தெளிந்த அறிவினை உடையவரின் சொற்கள் ஆகும்.

விளக்கம் ---

பகை --- எதிர்ப்பு, மாறுபாடு, வெறுப்பு, தீங்கு. இந்த உணர்வு நற்பயனை ஒருவனுக்குத் தராது. கேட்டையே விளைவிக்கும்.

உள்ளத்தில் அன்பு இல்லாத தாயாலும், உழைத்து வருவாய் ஈட்டி வாழாமல் சோம்பேறியாக வாழ்வதோ, அல்லது வருவாய்க்கு மீறி, கடன் பட்டு வாழ்க்கை நடத்துவதோ கொண்ட தந்தையாலும், நல்லறிவு இல்லாத மனைவியாலும், அறிவு நூல் கல்லாத மகனாலும் கேடு விளையும் என்பது சொல்லப்பட்டது.

அன்பில் சிறந்தது தாய் அன்பு. அதற்கு ஈடாக வேறு எதையும் காட்ட முடியாது. அன்பின் வடிவமாக இருக்கவேண்டிய தாய் அன்பு இல்லாது இருப்பது ஒருவனுக்கு நன்மையைத் தராது.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...