பெரியோர் சொல்லைத் தட்டாது பெருமை உற்றவர்




45. பெரியோர் சொற்படி நடந்தவர்கள்

தந்தைதாய் வாக்யபரி பாலனம் செய்தவன்
     தசரத குமாரராமன்;
தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள்
     தருமனுக்கு இளைய நால்வர்;

சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம்
     செய்தவன் அரிச்சந்திரன்;
தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம்
     செய்தவன் தான கன்னன்;

நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன்
     நீள்பலம் மிகுந்த அனுமான்;
நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம்
     நிலத்தினில் நளாயினி செய்தாள்;

மந்தைவழி கோயில் குளமும் குலவு தும்பிமுகன்
     மகிழ்தர உகந்த துணைவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

     மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பிமுகன் மகிழ்தர உகந்த துணைவா --- மந்தையிலும், வழியிலும், கோயிலிலும், குளக்கரையிலும் திருக்கோயில் கொணடுள்ள யானைமுகக்கடவுள் மகிழ்ந்து விரும்பிய தம்பியே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தந்தைதாய் வாக்கிய பரிபாலனம் செய்தவன் தசர தகுமார ராமன் --- தாய் தந்தையர் சொல்லைக் காத்து நடந்தவன் தசரதன் மகனான இராமபிரான்;

     தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் --- அண்ணன் சவன்ன சொல்லைக் கடவாது காத்தவர் தருமபுத்திரனுக்குத் தம்பியரான நால்வர்கள்;

     சிந்தையில் உணர்ந்து குரு வாக்கிய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் --- உள்ளத்திலே உணர்ந்து குருநாதன் சொற்படி நடந்தவன் அரிச்சந்திரன்;

     தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்கிய பரிபாலனம் செய்தவன் தான கன்னன் --- இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத சொல்லைக் காப்பாற்றியவன் தானத்தில் சிறந்தவன் ஆகிய கர்ணன்;

     நிந்தை தவிர் வாக்கிய பரிபாலனம் செய்வதன் நீள் பலம் மிகுந்த அனுமான் --- பழித்தல் இல்லாத இராமபிரானுடைய சொல்லைக் காப்பாற்றியவன் வலிமை மிக்கவனான அனுமான்;

     நிறையுடன் பத்தாவின் வாக்கிய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள் --- கற்பு நெறியிலே நின்று, கணவன் சொல்லை உலகத்தில் நளாயினி காப்பாற்றினாள்.

     விளக்கம் --- இராமன் தன் தந்தையான தசரதன் சொன்னதா, தாய் கைகேயி சொன்ன சொல்லைக் காப்பாற்றக் காட்டிற்குப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிந்தான். "மன்னவன் பணி அன்று ஆகில் நும் பணி மறுப்பனோ" என்னும் அற்புத வாக்கியம் சிந்தையை உருக்கும்.

பொறுமேயோடு இருங்கள் என்று தருமன் கூறிய போதெல்லாம் வீமன் அருச்சுனன் நகுலன் சகாதேவன் ஆகிய நான்கு தம்பியரும் அணை கடவாத வெள்ளம்போல் அடங்கி இருந்தனர்.

அரிச்சந்திரன் தனது ஆசிரியரான வசிட்டரின் சொல்லைக் காப்பதற்குப் பொய்யாநெறி பூண்டான்.

உயிர் உள்ளவரையில் அறத்தைச் செய்து வந்ததோடு நில்லாமல், எல்லாம் இழந்து உயிருக்குப் போராடும் நிலையிலும், அதுவரையில் தான் செய்த அறத்தின் பயனையே தானமாகக் கொடுத்து, இறவாத புகழைப் பெற்றவன் கர்ணன். கர்ணன் என்னும் சொல் தமிழில் கன்னன் என்று வந்தது.

பின்வரும் தண்டலையார் சதகப் பாடல், பகற்பில் சிறந்த நளாயினி முதலான கற்பு நிறைப் பெண்களின் அருமையை விளக்கும்.

முக்கணர்தண் டலைநாட்டில் கற்புடைமங்
     கையர்மகிமை மொழியப் போமோ?
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே
     டனை எரித்தாள் ஒருத்தி! மூவர்
பக்கம்உற அமுது அளித்தாள் ஒருத்தி, எழு
     பரிதடுத்தாள் ஒருத்தி! பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ? கொங்கணவா!'
     என்று ஒருத்தி கூறி னாளே!

         எரி குளிர வைத்தவள் சீதை --- அநுமான் இராம பிரான் ஆணைப்படி சீதையைத் தேடிச் சென்று இலங்கையில் அசோக வனத்தில் கண்டான். அவனை அரக்கர் பற்றிச் சென்று அவன் வாலிலே தீயிட்டனர். இதனை அறிந்த சீதை தீக்கடவுளை வேண்டி அநுமானைச் சுடாது இருக்குமாறு செய்தாள்.

          வில்வேடனை எரித்தவள் தமயந்தி --- காட்டில் நளனைப் பிரிந்த தமயந்தி கலக்கமுடன் அலையும்போது ஒரு வேடன் அவளைக் கற்பழிக்க நெருங்கினான். தமயந்தி, சீற்றமுடன் அவனைப் பார்த்தாள். அவ்வளவில்  வில் வேடன் எரிந்து சாம்பர் ஆனான்.

         மூவர் பக்கம் உற அமுது அளித்தவள் அனுசூயை --- பிரமன் திருமால் சிவன் என்னும் முத்தேவரும் அனுசூயை கற்பைச் சோதிக்க எண்ணித் துறவிகளாக வடிவெடுத்துச் சென்றனர். அனுசூயை அவர்களை அதிதிகளாக வரவேற்றாள். அவர்கள் தங்களுக்கு அவள் ஆடை இல்லாமல்  வந்து உணவு அளிக்க வேண்டும் என்றனர். அவள் உடனே தனது கற்பின் வலிமையால் அவர்களைச் சிறு குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டு, தன் ஆடைகளைக் களைந்து விட்டு வந்து பாலூட்டினாள். மும்மூர்த்திகளும் அவளுடைய கற்பின் திறத்தை வியந்தனர்.

     எழுபரி தடுத்தவள் நளாயினி --- நளன்  மகளான  இவள்  தன் கணவரைக் கூடையில் நள்ளிரவிலே அவர் விரும்பிய தாசி வீட்டிற்குச் சுமந்து செல்லுகையில் கழுவில் இருந்த  மாண்டவியரின் காலில் கூடை தட்டியது. வலிபொறுக்க முடியாத மாண்டவியர், தன் கணவன் பணிவிடையில் உள்ள ஊக்கத்தாலே தன்னைக் கவனியாமல் சென்றாள் என்று சினந்து, ‘விடிந்தவுடன் நளாயினி தன் தாலியை இழப்பாள்' எனச் சபித்தார். நளாயினி திடுக்கிட்டுப், ‘பொழுது விடியாமல் போகட்டும்' என்று சபித்தாள். அவ்வாறே விடியாமற் போனதால், தேவர்கள் தலையிட்டு நளாயினியின் கணவன் இறவா வண்ணம் மாண்டவியரைக் கூறச்செய்து பொழுது விடியுமாறு நளாயினியைக் கூறச்செய்தனர்.

     கொக்கு என்று நினைத்தனையோ?' என்றவள் வாசுகி --- போகரின் மாணவராகிய கொங்கணவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். நண்பகலிலே ஊருக்குள்  சென்று  உணவு வாங்கி உண்பது அவரது வழக்கம். ஒருநாள் அவ்வாறு செல்கையில், வழியில் ஒரு மரநிழலிலே தங்கினார். ஒரு  கொக்கு மரத்திலிருந்து அவர் மேல் எச்சம் இட்டது. அவர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். அக் கொக்கு உடனே எரிந்தது. தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட அவர், திருவள்ளுவர் வீட்டிலே உணவுக்குச் சென்றார். திருவள்ளுவர் மனைவி, இவர் வாயிலில் வந்து நின்று கேட்டவுடனே வராமல் தன் கணவருக்கு உணவு படைத்தபின் உணவு கொண்டு வந்தாள். சினம் கொண்ட கொங்கணவர் அவளை உறுத்துப் பார்த்தார். வாசுகி அம்மையார் நகைத்துக் "கொக்கு என்று நினைத்தனையோ, கொங்கணவா" என்று வாசுகி தனது கற்புத் திறத்தால் அறிந்து கூறினாள்.

            பெரியோர் சொல்லைத் தட்டாதவர் பெருமை அடைவர் என்பது கருத்து.                                                                   

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...