வல்லக் கோட்டை - 0717. ஞாலம் எங்கும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஞால மெங்கும் (கோடைநகர் - வல்லக்கோட்டை)

முருகா!
உன்னைப் பிரிந்து வாடும் இந்தப் பெண்ணை அணைந்து இன்பம் தந்தருள்வாய்.


தான தந்த தனத்த தத்த ...... தனதானா


ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே

நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே

ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே

ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே

கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா

கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா

கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர்

கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.

    
பதம் பிரித்தல்


ஞாலம் எங்கும் வளைத்து அரற்று ...... கடலாலே,

நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் ...... வசையாலே,

ஆலம் உந்து மதித் தழற்கும் ...... அழியாதே,

ஆறு இரண்டு புயத்து அணைக்க ...... வருவாயே.

கோலம் ஒன்று குறத்தியைத்  ...... தழுவுமார்பா!

கோடை அம்பதி உற்று நிற்கும் ...... மயில்வீரா!

காலன் அஞ்ச வரைத் தொளைத்த ...... முதல்! வானோர்

கால் விலங்குகளைத் தறித்த ...... பெருமாளே.


பதவுரை


         கோலம் ஒன்று குறத்தியைத் தழுவு மார்பா --- அழகு பொருந்திய குறத்தியாகிய வள்ளிநாயகியை அணைக்கும் திருமார்பரே!

         கோடை அம் பதி உற்று நிற்கும் மயில்வீரா --- அழகிய திருத்தலமாகிய கோடை நகரில் திருக்கோயில் கொண்டு இருக்கும் மயில் வீரரே!

         காலன் அஞ்ச வரைத் தொளைத்த முதல் --- காலனும் நடுங்குமாறு கிரெளஞ் சமலையைத் தொளை செய்த முதல் பரம்பொருளே!

         வானோர் கால் விலங்குகளைத் தறித்த பெருமாளே --- தேவர்களுக்குப் பூட்டப்பட்டிருந்த கால் விலங்குகளை தறித்த பெருமையில் மிக்கவரே!

         ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே --- உலகத்தைச் சூழ்ந்து ஓயாமல் அலை ஓசையோடு இரைச்சல் இடுகின்ற கடலாலும்,

         நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே --- நாள்தோறும் வஞ்சிக்கொடி போன்ற பெண்கள் கூறுகின்ற வசைச் சொற்களாலும்,

         ஆலம் உந்து மதித் தழற்கும் அழியாதே --- விஷத்தைச் செலுத்துகின்றது போல் சந்திரன் வீசும் நெருப்பாலே, அழிந்து போகாதவாறு,

         ஆறு இரண்டு புயத்து அணைக்க வருவாயே --- தேவரீர் பன்னிரு தோள்களிலும்  இவளை அணைத்து இன்பம் தர வந்து அருளவேண்டும்.

பொழிப்புரை

     அழகு பொருந்திய குறத்தியாகிய வள்ளிநாயகியை அணைக்கும் திருமார்பரே!

     அழகிய திருத்தலமாகிய கோடை நகரில் திருக்கோயில் கொண்டு இருக்கும் மயில் வீரரே!

         காலனும் நடுங்குமாறு கிரெளஞ்ச மலையைத் தொளை செய்த முதல் பரம்பொருளே!

     தேவர்களுக்குப் பூட்டப்பட்டிருந்த கால் விலங்குகளை தறித்த பெருமையில் மிக்கவரே!

     உலகத்தைச் சூழ்ந்து ஓயாமல் அலை ஓசையோடு இரைச்சல் இடுகின்ற கடலாலும், நாள்தோறும் வஞ்சிக்கொடி போன்ற பெண்கள் கூறுகின்ற வசைச் சொற்களாலும், விஷத்தைச் செலுத்துகின்றது போல் சந்திரன் வீசும் நெருப்பாலே அழிந்து போகாதவாறு,  தேவரீர் தமது பன்னிரு தோள்களிலும்  இவளை அணைத்து இன்பம் தர வந்து அருளவேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழ்ப் பாடல் அகத்துறையில் அமைந்துள்ளது.

காதலர்களின் பிரிவுத் துன்பத்தை மிகுப்பன இவைஇவை என்கின்றது பின்வரும் திருவிசைப்பாப் பாடல்....

செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள், கங்குல்,
   திரைவீரை, தீங்குழல், சேவின்மணி
எழுந்து இன்று என் மேற்பகை ஆட வாடும்
   எனை நீ நலிவது என்? என்னே! என்னும் ;
அழுந்தா மகேந்திரத்து அந்தரப்புட்கு
   அரசுக்கு அரசே ! அமரர் தனிக்
கொழுந்தே!என்னும்; ‘குணக் குன்றே!என்னும் ;
   குலாத்தில்லைஅம்பலக் கூத்தனையே.        

ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே ---

ஞாலுதல் - தொங்குதல்.

எப்புறமும் பிடிப்போ தாங்குவதோ இல்லாமல் தொங்கும் உலகம் என்பது, ஞாலம் என்பதன் பொருள்.

பூமி இருண்டை ஆனது விண்வெளியில் தொங்கிக்கொண்டே தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றி வருவது.

வளைத்தல் - சுழ்ந்து இருத்தல். இந்த உலகமானது யாற்புறமும் கடலால் சூழப்பட்டு உள்ளது.

அரற்றுதல் - புலம்புதல், ஒலித்தல்.

கடலில் எப்பொழுதும் எழும் அலையோசை.

இந்த அலையின் ஓசையானது தலைவனைப் பிரஇந்து இருக்கும் தலைவிக்கு விரகதாபத்தை மிகுக்கும்.

நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே ---

விரகதாபம் கொண்டவரை வருந்தச் செய்வது ஊரில் உள்ள பெண்கள் பேசுகின்ற வசைச்சொல்.

தெருவினில் நடவா மடவார்
     திரண்டு ஒறுக்கும் ...... வசையாலே
தினகரன் என வேலையிலே
     சிவந்து உதிக்கும் ...... மதியாலே

பொருசிலை வளையா இளையா
     மதன்தொ டுக்குங் ...... கணையாலே
புளகித முலையாள் அலையா
     மனம் சலித்தும் ...... விடலாமோ?        ---  திருப்புகழ்.

ஆலம் உந்து மதித் தழற்கும் அழியாதே ---

சந்திரனின் குளிர்ந்த ஒளிக் கிரணங்கள் காதல் வயப்பட்டுத் தனிமையில் உள்ளோரை வருத்தும்.

பரவையாரை நினைந்து உருகும் சுந்தரர் பெருமான் திருவாக்கா, தெய்வச் சேக்கிழார் பெருமான் இவ்வாறு கூறுகின்றார்.

ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழல்கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டுகொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடும் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்று இலை தண்மதி.

குளிர்ந்த சந்திரனே! யான் பரவையாரால் படும் துன்பத்தைக் கண்டபின்னும், என்னிடத்து நெருப்பை வீசும் ஒளிக் கதிர்களைத் தூவுவதோ? என்னை அடிமை கொண்டு ஆண்ட சிவபெருமானின் வெள்ளப் பெருக்கையுடைய அலைவீசுகின்ற கங்கைப் பேராற்றையுடைய நீண்ட சடைமுடியில் அணிந்திருக்கின்ற வெண் மதியைப்போல் அமைந்தாய் அல்லையோ! 


காலன் அஞ்ச வரைத் தொளைத்த முதல் ---

வரை - மலை. இங்கு கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.

கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். வினைத் தொகுதி உள்ளவரை உழிர்கள் பிறந்து இறந்து அல்லல்படும். வினைகள் அற்றால் பிறப்பு அறும்.  வினைகளை அறுக்கும் ஆற்றல் இறைவன் அருளாகிய ஞானத்துக்கு மட்டுமே உண்டு.

வேல் - என்பது ஞானசத்தியைக் குறிக்கும்.

வினைத் தொகுதியை ஞானத்தால் அறுத்து, உயிர்கள் படுகின்ற
துன்பத்தைத் தொலைத்தவர் முருகப் பெருமான் என்பதால், "வரைத் தொளைத்த முதல்" என்றார் அடிகளார்.

இந்த உண்மை பின்வரும் பாடலால் தெளிவாகும்...

இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில் வேல் சூர் தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டு அருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.

வானோர் கால் விலங்குகளைத் தறித்த பெருமாளே ---

"அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில்.


கோடை அம் பதி உற்று நிற்கும் மயில்வீரா ---

அழகிய திருத்தலமாகிய கோடை நகரில் திருக்கோயில் கொண்டு இருந்து அருள் புரிபவர் முருகப் பெருமான்.

கருத்துரை

முருகா! உன்னைப் பிரிந்து வாடும் இந்தப் பெண்ணை அணைந்து இன்பம் தந்தருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...