வல்லக்கோட்டை - 0716. சாலநெடுநாள்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சாலநெடு நாள் (கோடைநகர் - வல்லக்கோட்டை)


முருகா!
அடியேன் நரகில் புகாமல்,
தேவரீரது திருவடிகள் பொருந்த அருள்வாய்.


தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான


சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
     சாமளவ தாக வந்து ...... புவிமீதே

சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
     தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்

பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
     பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்

பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
     பாதமலர் சேர அன்பு ...... தருவாயே

ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
     ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே

ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
     ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
     கோவையமு தூற லுண்ட ...... குமரேசா

கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


சாலநெடு நாள் மடந்தை காயம் அதிலே அலைந்து,
     சாம் அளவு அதாக வந்து, ...... புவிமீதே

சாதகமும் ஆன பின்பு, சீறி அழுதே கிடந்து,
     தாரணியிலே தவழ்ந்து, ...... விளையாடி,

பாலன் எனவே மொழிந்து, பாகுமொழி மாதர் தங்கள்
     பார தனம் மீது அணைந்து, ...... பொருள்தேடி,

பார் மிசையிலே உழன்று, பாழ்நரகு எய்தாமல், ஒன்று
     பாத மலர் சேர அன்பு ...... தருவாயே.

ஆலம் அமுதாக உண்ட ஆறுசடை நாதர், திங்கள்,
     ஆடு அரவு பூணர் தந்த ...... முருகோனே!

ஆனை மடு வாயில் அன்று மூலம் என ஓலம் என்ற
     ஆதிமுதல் நாரணன் தன் ...... மருகோனே!

கோலமலர் வாவி எங்கும் மேவு புனம் வாழ் மடந்தை
     கோவை அமுது ஊறல் உண்ட ...... குமரஈசா!

கூடிவரு சூர் அடங்க மாள, வடிவேல் எறிந்த
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பதவுரை


         ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் --- நஞ்சை அமுதமாக உண்டவரும், கங்கை நதியை சடையில் தரித்தவரும் ஆகிய நாதரும்,

         திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே --- பிறைச் சந்திரனையும், படம் எடுத்து ஆடும் பாம்பையும் திருமுடியில் பூண்டவரும் ஆகிய சிவபெருமான் அருளால் வந்த முருகப் பெருமானே!

         ஆனை மடு வாயில் அன்று மூலம் என ஓலம் என்ற --- கஜேந்திரம் என்னும் யானை, அன்று குளத்தில் முதலை வாயில் அகப்பட்டு, ஆதிமூலமே என்று ஓலம் இட்டு அழைத்தபோது வந்தருளிய

         ஆதிமுதல் நாரணன் தன் மருகோனே --- ஆதி முதல்வனான நாராயணனின் திருமருகரே!

         கோல மலர் வாவி எங்கும் மேவு புனம் வாழ் மடந்தை ---அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் பொருந்தி இருந்த தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளிநாயகியின்

         கோவை அமுது ஊறல் உண்ட குமர ஈசா --- கொவ்வைக் கனி போன்ற வாயில் ஊறிய அமுதை அருந்திய குமாரக் கடவுளே!

         கூடி வரு சூர் அடங்க மாள வடிவேல் எறிந்த --- இரண்டு கூறாகப் பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரபதுமன் அடங்கி ஒடுங்குமாறு கூர்மையான வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!  

         கோடைநகர் வாழ வந்த பெருமாளே --- கோடைநகர் என்னும் திருத்தலத்தில் அன்பர்களின் வாழ்வாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

         சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து --- மிக நீண்ட காலமாகப் பல பிறவிகளிலும் பெண்ணின் கருப்பையிலே கிடந்து அலைந்து,

         சாம் அளவதாக வந்து --- சாகும்படியான துன்பத்துக்கு ஆளாகி வந்து,

        புவி மீதே சாதகமும் ஆன பின்பு --- இந்தப் புவி மீது பிறந்த பின்னர்,

         சீறி அழுதே கிடந்து -- வீறிட்டு அழுது கிடந்து,

        தாரணியிலே தவழ்ந்து விளையாடி --- தரையில் தவழ்ந்து விளையாடி,

         பாலன் எனவே மொழிந்து --- இளங்குழந்தையாய் இருந்து குதலை மொழிகள் பேசி,

      பாகு பொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து --- பாகுபோல இனிய சொற்களைக் கொண்ட மாதர்களின் பருத்த மார்பகங்களை அணைந்து, 

           பொருள் தேடிப் பார்மிசையிலே உழன்று --- பொருள் தேடவேண்டி பூமியிலே சுற்றித் திரிந்து,

         பாழ் நரகு எய்தாமல் --- பாழான நரகிலே அடையாமல்

         ஒன்று பாதமலர் சேர அன்பு தருவாயே --- பொருந்த வேண்டிய தேவரீரது திருப்பாத கமலங்களை அடைவதற்குரிய அன்பைத் தந்து அருள்வாயாக.

பொழிப்புரை

     நஞ்சை அமுதமாக உண்டவரும், கங்கை நதியை சடையில் தரித்தவரும் ஆகிய நாதரும், பிறைச் சந்திரனையும், படம் எடுத்து ஆடும் பாம்பையும் திருமுடியில் பூண்டவரும் ஆகிய சிவபெருமான் அருளால் வந்த முருகப் பெருமானே!

     கஜேந்திரம் என்னும் யானை, அன்று குளத்தில் முதலை வாயில் அகப்பட்டு, ஆதிமூலமே என்று ஓலம் இட்டு அழைத்தபோது வந்தருளிய ஆதி முதல்வனான நாராயணனின் திருமருகரே!

     அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் பொருந்தி இருந்த தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளிநாயகியின் கொவ்வைக் கனி போன்ற வாயில் ஊறிய அமுதை அருந்திய குமாரக் கடவுளே!

     இரண்டு கூறாகப் பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரபதுமன் அடங்கி ஒடுங்குமாறு கூர்மையான வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!  

     கோடைநகர் என்னும் திருத்தலத்தில் அன்பர்களின் வாழ்வாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

     மிக நீண்ட காலமாகப் பல பிறவிகளிலும் பெண்ணின் கருப்பையிலே கிடந்து அலைந்து, சாகும்படியான துன்பத்துக்கு ஆளாகி வந்து, இந்தப் புவி மீது பிறந்த பின்னர், வீறிட்டு அழுது கிடந்து,  தரையில் தவழ்ந்து விளையாடி, இளங்குழந்தையாய் இருந்து குதலை மொழிகள் பேசி, பாகுபோல இனிய சோற்களைக் கொண்ட மாதர்களின் பருத்த மார்பகங்களை அணைந்து,  பொருள் தேடவேண்டி பூமியிலே சுற்றித் திரிந்து,
பாழான நரகிலே அடையாமல், பொருந்தவேண்டிய தேவரீரது திருப்பாத கமலங்களை அடைவதற்குரிய அன்பைத் தந்து அருள்வாயாக.


விரிவுரை

சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து, சாம் அளவதாக வந்து ---

பெண்ணின் கருப்பையில் முன்னூறு நாள்கள் இருந்து பின்  குழந்தையாக வெளிப்படுவது நாம் காண்பது. அடிகளார் "சால நெடுநாள்" என்றார். எத்தனையோ மனிதப் பிறவிகளை இந்த உயிரானது எடுத்து உழல்கின்றது என்பதைக் குறிக்கவே இது.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாய் அடியேனும் அறிந்திலன்,
இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ?
என் செய்வேன்? கச்சி ஏகம்ப நாதனே?

என்னும் பட்டினத்து அடிகளார் பாடலால் இதனைத் தெளியலாம்.

உயிர்கள் தாம் செய்த நல்வினைகளால் புண்ணிய உலகமாகிய ஒளி உலகையும், தீவினைகளால் நரகவுலகமாகிய இருள் உலகையும் அடைந்து இன்பதுன்பங்களை நுகர்ந்து பின்னர், கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு இறைவன் ஆணையால் விண்ணிலிருந்து மழை வழியாக இப்பூதலத்தைச் சேர்கின்றன. காய், கனி, மலம், நீர், தானியம் முதலியவற்றில் கலந்து நிற்கின்றன. அவற்றை உண்ட ஆணிடம் நியதியின்படி சேர்ந்து அறுபது நாட்கள் கருவிலிருந்து பின் பெண்ணிடம் சேர்கின்றன.

அமாவாசை, பௌர்ணமி,ஷஷ்டி, அஷ்டமி, துவாதசி இந்த நாட்களில் சேர்க்கை கூடாது.

சந்ததி வளர்ச்சியை விரும்பிய நாயக நாயகிகள் சயன அறையில் மனம் ஒருமித்தவர்களாயும், மகிழ்ச்சி உடையவர்களாயும், கலக்கம் இல்லாதவர்களாயும் இருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் அவர்கள் எந்த குணத்துடன் இருக்கிறார்களோ அதே குணத்துடன்தான் குழந்தைகள் பிறக்கும். ஆதலால் சற்புத்திரர்கள் பிறக்க வேண்டும் என்ற நோக்கமுடைய சதிபதிகள் கடவுள் பக்தி நிறைந்த உள்ளத்துடனும், தூய்மையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

கருவிற் குழந்தை வளர்கிற வகையை,மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தில் கூறுவதைப் பிரமாணமாகக் கொண்டு தெளிக காண்க...

யானை முதலா எறும்பு ஈறுஆய
ஊனம்இல் யோனியின் உள்வினை பிழைத்தும்,
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம்இல் கிருமிச் செலவினில் பிழைத்தும்,
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்,
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்,
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்,
ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்,
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்,
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்,
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்,
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்,
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்,
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்......
 
யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மனிதப் பிறப்பில், தாயின் வயிற்றில் கருவுறும்பொழுது அதனை அழித்தற்குச் செய்யும் குறைவில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுள்ள கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இரண்டாம் மாதத்தில் விளைகின்ற விளைவினால் உருக்கெடுவதனின்று தப்பியும், மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காம் மாதத்தில் அம்மத நீர் நிறைவினால் உண்டாகும் பெரிய இருளுக்குத் தப்பியும்,  ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இறத்தலினின்று தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்று தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்று தப்பியும்,  ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வருந்துன்பத்தினின்று தப்பியும்,  குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்திலே தான் வெளிப்படுங்கால் தாய் படுகின்றதனோடு தானும் படுகின்ற,  கடல் போன்ற துன்பத்தோடு துயரத்தினின்று தப்பியும் பூமியில் பிறக்கும் குழந்தை.

பத்தாவது மாதத்தில் தனஞ்சயன் என்கிற வாயுவினால் தள்ளப்பட்டுத் தலைகீழாக வந்து குழந்தை உதிக்கின்றது. அந்த வேளையில், மலையின் மேலிருந்து ஒருவன் உருண்டால் எத்துணைத் துன்பம் உண்டாகுமோ அத்துணைத் துன்பம் உண்டாகும். அதனால் அல்லவோ நம் பெரியோர்களெல்லாம் “பிறவாதிருக்க வரந்தரல் வேண்டும்” என்று ஆண்டவனை வேண்டினார்கள்.

எனவே, அடிகளார் "சாம் அளவு அதாக வந்து" என்று அருளினார்.

புவி மீதே சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து ---

சாதகம் - பிறப்பு.

பிறந்த பின்னர் பசி முதலிய துன்பங்களால் குழந்தையானது வீறிட்டு அழும்.

தாரணியிலே தவழ்ந்து விளையாடி, பாலன் எனவே மொழிந்து ---

இளங்குழந்தைப் பருவம் வளர வளர திருந்தாத குதலை மொழிகள் பேசஇப் பழகும்.

பாகு மொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து ---

விடலைப் பருவம் அடைந்த பின்னர், காம இச்சை மீதூரப்பட்டு, இனமையான சொற்களைப் பேசுகின்ற மாதர்களின் பருத்த மார்பகங்களை அணைந்து சுகித்து இருப்பான்.  

பொருள் தேடிப் பார்மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ---

சுகமான வாழ்க்கைக்கு வேண்டிய பொருளைத் தேடி உழலவேண்டும்.

இப்படி உடம்பையே பொருளாக மதித்து, அது பருப்பதற்கும், சுகித்து இருப்பதற்கும் பொருளைத் தேடித் தேடி அலைந்து, வாழ்நாளை வறிதே கழித்து, அரிய நூல்களை ஓதி நல்லறிவு பெற்று, அதன் பயனாக இறைவன் திருவடியைத் தொழுது, மீண்டும் பிறவாத நிலையைப் பெற்று, இறைவன் திருவடியில் சகித்து இருக்க வழி தேடாமல், இறந்து, பிறந்து உழன்று நலமத் துப்த்தையே அடையும் மாந்தர் பலர்.


ஒன்று பாதமலர் சேர அன்பு தருவாயே ---

ஆன்மா பொருந்தி இருக்கவேண்டியது இறைவன் திருவடித் தாரரேயே ஆகும். அபனை அடைவதற்கு உரிய இறையன்பு தனது உள்ளத்தில் பொருந்த இறைவன் திருவருள் வேண்டும்.

"நின்தன் வார்கழற்கு அன்பு எனக்கு நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே" என்றார் மணிவாசகப் பெருமான்.

ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் ---

சிவபெருமான் ஆலம் உண்ட வரலாறு

மால் அயன் ஆதி வானவர்கள் இறவாமையைப் பெறுதல் வேண்டி, திருப்பற்கடலைக் கடையல் உற்றனர். மந்தரகிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு, தேவாசுரர் பன்னெடும் காலம் வருந்தி, பலப்பல ஔடதங்களைக் கடலில் விடுத்து, மெய்யும் கையும் தளரக் கடைந்தனர். அமிர்தத்திற்கு மாறாக, ஆலகால விடம் தோன்றியது. அது கண்ட அரி, அயன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அஞ்சி, அந்தோ ஒன்றை நினைக்க ஒழிநிதிட்டு வேறு ஒன்று ஆகியதே இதனுடைய வெம்மை உலகங்களை எல்லாம் கொளுத்துகின்றது. நமது உயிர் வெதும்புகின்றது. என் செய்வோம் என்று புலம்பி, வாடி, திருக்கயிலையை அடைந்தனர். திருநந்தி தேவரிடம் விடை பெற்று, திருக்கோயிலுள் சென்று, சிவபெருமானுடைய திருவடியில் வீழ்ந்து, எழுந்து கரங்களைக் கூப்பி முறையிடுவாரானார்கள்.

"எந்தையே! சிந்தையில் தித்திக்கும் தெள்ளமுதே! கருணைக் கடலே! கண்ணுதல் கடவுளே! அடியேங்கள் தேவரீருடைய திருவருளால் அமரத்துவம் பெற நினையாமல், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற முயன்றோம். அதற்கு மாறாக ஆலகால விடம் வெளிப்பட்டது. அதன் வெம்மையால் உலகங்களும், உயிர்களும் யாமும் துன்புறுகின்றேம். எமக்கு இன்றே இறப்பும் எய்தும் போலும். தேவரீரே எமக்குத் தனிப்பெரும் தலைவர். முதலில் விளைந்த விளைவுப் பொருளைத் தலைவருக்குத் தருதல் உலக வழக்கு. அடியேங்கள் பெரிதும் முயன்று பாற்கடலைக் கடைந்த போது, முதலில் விளைந்த பொருள் விடம். அதனைத் தங்கட்குக் காணிக்கையாகத் தருகின்றோம்.  அதனை ஏற்றுக் கொண்டு எம்மை ஆட்கொள்வீர்" என்று இனிமையாகவும், கனிவுடனும் முறையிட்டனர். அதனைக் கேட்டு அருளிய அந்திவண்ணராகிய அரனார் சுந்தரரைக் கொண்டு, ஆலகால விடத்தைக் கொணர்வித்து, நாவல் பழம் போல் திரட்டி, உண்டால் உள்முகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும், உமிழ்ந்தால் வெளிமுகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும் திருவுள்ளம் கொண்டு, உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்திலு தரித்து, நீலகண்டர் ஆயினார். அன்று எம்பெருமான் அவ்விடத்திலே அவ் விடத்தை உண்ணாராயின், தேவர் அனைவரும் பொன்றி இருப்பர். அத்தனை பேருக்கும் வந்த கண்டத்தை நீக்கியது பெருமானுடைய கண்டம். இனிய ஒரு உணவுப் பொருளைக் கூட நம்மால் கண்டத்தில் நிறுத்த முடியாது. வாயிலோ வயிற்றிலோ வைக்கலாமேயன்றி, கண்டத்தில் நிலைபெறச் செய்ய முடியாது. எனில், எம்பெருமான் ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தது எத்துணை வியப்பு.

கோலாலம் ஆகிக் குரைகடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர்தான் ஏன், ஏடீ!
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல்ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ.   ---  திருவாசகம்.
 
ஆலங்குடி யானை, ஆலாலம் உண்டானை,
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார், ஆலம்
குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம்
மடியாரோ மண் மீதிலே.                 --- காளமேகப் புலவர்.

வானவரும் இந்திரரும் மால்பிரமரும் செத்துப்
போன இடம் புல்முளைத்துப் போகாதோ --- ஞானம்அருள்
அத்தர் அருணேசர் அன்பாக நஞ்சுதனை
புத்தியுடன் கொள்ளாத போது.        --- அருணாசலக் கவிராயர்.

சிவபெருமான் கங்கையைச் சடைக்கு அணிந்த வரலாறு

திருக்கயிலாய மலையில் மணித்தவிசின் மீது பவளமலை போலே சிவபெருமான் வீற்றிருந்தருளினார். மரகதக் கொடி போன்ற உமாதேவியார் ஒரு திருவிளையாடல் காரணமாகச் சிவபெருமானுடைய பின்புறமாக வந்து, மெல்ல அவரது திருக்கண்களைத் தமது திருக்கரங்களால் மூடினார். அதனால், அகில உலகங்களும் இருண்டுவிட்டன. உலகில் உள்ள ஒளிப் பொருள்கள் யாவும் இறைவனுடைய கண்களின் ஒளியே என்பதை உலகம் அப்போது உணர்ந்தது. இறைவனுக்கு ஒரு கணமாகிய அந்த நேரம், ஏனைய தேவர்கட்கும் மனிதர்கட்கும் பல யுகங்கள் ஆயின. ஆன்மாக்கள் இருளில் இடர்ப்பட்டன போது, இறைவர் தமது நெற்றியில் உள்ள ஞானாக்கினிக் கண் மலரைச் சிறிது திறந்தருளினார். அதனால் ஒளி உண்டாக உலகங்களின் உடர் நீங்கியது. அப்போது, அம்மை அஞ்சி தமது மலர்க்கரங்களை எடுத்தனர். அக் கரமலர்களின் பத்து விரல்களினின்றும் பத்து கங்கைகள் தோன்றின. அவைகள் அகில உலகங்களிலும் ஓடிப் பரந்து வியாபித்தன. அதனைக் கண்ட அமரர்கள் இறைவனிடம் ஓடி முறையிட்டனர். கருணை வள்ளலாகிய சிவபெருமான், அக் கங்கையைத் தமது சடையில் ஏற்று அருளினார். உலகமெல்லாம் பரவி அழிக்கத் தொடங்கிய கங்கை இறைவருடைய சடையில் ஒரு உரோமத்தில் அடங்கியது.

மாலயனாதி வானவர்கள் சிவபெருமானை வணங்கி நின்று, ஞானாம்பாளுடைய திருக்கரங்களில் தோன்றியதனாலும், தேவரீருடைய திருச்சடைமுடியில் தங்கியதனாலும் உயர்ந்த இக் கங்கை நீரில் சிறிது எமது உலகங்கட்கும் தந்து உதவவேண்டும் என்று இரந்தார்கள்.

மேதினி அண்டம் முற்றும் விழுங்கி கங்கை உன்தன்
பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால், உனது சென்னி
மீதினில் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில், எங்கள்
மூதெயில் நகரம் வைகச் சிறிதுஅருள் முதல்வ என்றார்.     ---  கந்தபுராணம்.

அவ்வண்ணமே சிவமூர்த்தி தமது திருமுடியில் விளங்கிய கங்கையில் சிறிது அமரர்க்கு வழங்கி அருளினார். அதைப் பெற்ற மால் பிரமன் முதலியோர் தத்தம் உலகில் கொண்டுபோய் அமைத்து, கங்கையால் புனிதம் பெற்றார்கள்.

சத்திய உலகில் தங்கிய கங்கையைப் பகீரதமன்னன் வேண்ட மீண்டும் சிவபெருமான் அதனைத் தமது சென்னியில் ஏந்தி, பூமிக்கு அனுப்பி அருளினார். அது பாகீரதி என்ற பெயருடன் பாதலத்தில் கபிலரால் எலும்புக் குவியலாய்க் கிடந்த அறுபதினாயிரம் வீரர்களாகிய சகரர்கட்கு அருள் செய்தது.

மலைமலகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்று ஒருத்தி
சலமுகத்தால் அவன் சடையில் பாயும் அது என், ஏடீ!
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலலேள், தரணி எல்லாம்
பிலமுகத்தே புகப் பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ.    --- திருவாசகம்.

திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே ---

சிவபெருமான் சந்திரனைத் தரித்த வரலாறு

மலர்மிசை வாழும் பிரமனது மானத புத்திரருள் ஒருவனாகியத் தட்சப் பிரசாபதி வான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம் புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்து, பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இருவரும் பேரழகு உடையராய் இருத்தலால் அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாரான் ஆயினன். மற்றைய மாதர்கள் மனங்கொதித்து தம் பிதாவிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, குமுதபதியாகிய சந்திரனை விளித்து “நின் அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒரு கலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தனன்.

அவ்வாறே சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் ஏகித் தனக்கு உற்ற இன்னல்களை எடுத்து ஓதி “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர் பால் இதனைக் கூறுதியேல், அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் சதுர்முகனைச் சரண்புக, மலரவன் “சந்திரா! தக்கன் தந்தை என்று என் சொல்லைக் கேளான்; ஆதலால் நீ திருக்கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண்புகுவாயேல், அப்பரம பிதா நின் அல்லலை அகற்றுவார்” என்று இன்னுரை பகர, அது மேற்கண்ட சந்திரன் திருக்கயிலைமலைச் சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங்கடல் ஆகியச் சிவபெருமானை முறையே வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரமதயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன்.
மலைமகள் மகிணன் மனமிரங்கி, அஞ்சேலென அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தம் முடியில் தரித்து, “நின் கலைகளில் ஒன்று நம் முடிமிசை இருத்தலால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.

எந்தை அவ் அழி மதியினை நோக்கி, நீ யாதும்
சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றும் நின் கலையெலாம் நாடொறும் மரபால்.     ---  கந்தபுராணம்.

சிவபெருமான் நாகங்களை ஆபரணமாகக் கொண்ட வரலாறு

தாருகாவனத்து முனிவர்கள் தவமே சிறந்தது என்றும் அவர் பன்னியர் கற்பே உயர்ந்தது என்றும், கர்மமே பலனைக் கொடுக்கும் என்றும் கருதி, கண்ணுதற் கடவுளை கருதாது மமதையுற்று வாழ்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த நம்பன் திருவுளங்கொண்டு திகம்பரராய்ப் பிட்சாடனத் திருக்கோலங்கொண்டும், திருமாலை மோகினி வடிவு கொள்ளச் செய்தும் அம்முனிவர் தவத்தையும், முனிபன்னியர் கற்பையும் அழித்தனர். அக்காலத்து அரிவையர் முயக்கில் அவாவுற்று தமது இருக்கை நாடிய அந்தணர், தம்தம் வீதியில் கற்பழிந்து உலவுங் காரிகையரைக் கண்டு, “நம் தவத்தை அழித்து நமது பத்தினிகளின் கற்பை ஒழித்தவன் சிவனே; அவன் ஏவலால் அரிவையாக வந்தவன் அச்சுதனே” என்று ஞானத்தால் அறிந்து, விஷ விருட்சங்களைச் சமிதையாக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து அதனின்று எழுந்த பல பொருள்களையும் பரமபதியின் மீது பிரயோகிக்க, சிவபரஞ்சுடர் அவற்றை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை முதலியனவாகக் கொண்டனர்.

தவமுனிவர் தாம் பிரயோகித்தவை முழுதும் அவமாயினதைத் கண்டு யாகாக்கினியினின்றும் எழுந்த சர்ப்பங்களைச் சம்பு மேல் விடுத்தனர். அந் நாக இனங்கள் அஞ்சும் தன்மையின் அவனி அதிரும்படி அதிவேகமாகத் தமது காளி, காளாஸ்திரி, யமன், யமதூதன் என்னும் நான்கு நச்சுப் பற்களில் விடங்களைச் சொரிந்து கொண்டு காளகண்டன் பால் வந்தன. மதனனை ஏரித்த மகாதேவன், ஆதிகாலத்தில் கருடனுக்கு அஞ்சித் தம்பால் சரண் புகுந்த சர்ப்பங்களைத் தாங்கியிருந்ததுடன் இப் பாம்புகளையும் ஏற்று “உமது குலத்தாருடன் ஒன்று கூடி வாழுங்கள்” என்று திருவுளம் செய்து அப் பன்னாகங்கள் அஞ்சும்படித் திருக்கரத்தால் பற்றிச் சிறிது நேரம் நடித்து, திருக்கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய ஆபரணங்களாக அணிந்து கொண்டனர்.

ஏந்திய பின்னர் வேள்வி எர அதற்கு இடையே எண்ணில்
பாந்தள் அம் கொழுந்து தீயோர் பணியினார் சீற்றங்கொண்டு
போந்தன, அவற்றை மாயோன் புள்ளினுக்கு அஞ்சித் தன்பால்
சேர்ந்ததோர் பணிகளோடு செவ்விதில் புனைந்தான் எம்கோன்.    --- கந்தபுராணம்.


ஆனை மடு வாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதிமுதல் நாரணன் தன் மருகோனே ---

நாராயணர் யானைக்கு அருளிய வரலாறு

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணல் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், அப்சர மாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து, தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது. கஜேந்திரம் உணவு இன்மையாலும், முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்ய முடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கு அற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான்மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர்.

சிவபெருமான் தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தல் கடவுள். ஆதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

மதசிகரி கதறி, முது முதலை கவர் தர, நெடிய
 மடுநடுவில் வெருவி ஒரு விசை ஆதிமூலம் என
 வரு கருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ள போது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத் தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டும் என்று அப்பணியாளன்  வாளா இருந்தால், தலைவனால் தண்டிக்கப்படுவான் அல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

கோடைநகர் வாழ வந்த பெருமாளே ---

கோடை நகர் என்பது, இக் காலத்தில் "வல்லக்கோட்டை" என வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்துக்கு அருகில் உள்ளது வல்லக்கோட்டை. ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். ஏழு அடி உயர முருகன் திருவுருவம் அழகு. வள்ளி, தெய்வயானை இருபுறமும் விளங்க முருகப் பெருமான் இங்கு வீற்றிருந்து அருள் புரிகின்றார்.


"கோவல் நகர் வாழ வந்த பெருமாளே" என்றும், "கூடல் நகர் வாழ வந்த பெருமாளே" என்றும் படாபேதங்கள் உண்டு.

கருத்துரை

முருகா! அடியேன் நரகில் புகாமல், தேவரீரது திருவடிகள் பொருந்த அருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...