உத்தரமேரூர் - 0727. நீள்புயல் குழல்மாதர்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நீள்புயல் குழல்மாதர் (உத்தரமேரூர்)

முருகா!
அடியேன் ஈடேற அருட்பார்வை வைத்து அருள்வாய்

தானனத் தனதான தானனத் தனதான
     தானனத் தனதான ...... தனதான

நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
     நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய்

நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
     நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே

பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
     பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச

பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
     பார்வைசற் றருளோடு ...... பணியாயோ

ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
     மாகமப் பொருளோரு ...... மனைவோரும்

ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
     மாயிரத் திருநூறு ...... மறையோரும்

வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
     வாகுசித் திரதோகை ...... மயிலேறி

மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
     மான்மகட் குளனான ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


நீள்புயல் குழல்மாதர் பேரினில் க்ருபையாகி,
     நேசம்உற்று, அடியேனும் ...... நெறிகெடாய்,

நேமியில் பொருள்தேடி, ஓடிஎய்த்து உளம்வாடி,
     நீதியில் சிவவாழ்வை ...... நினையாதே,

பாழினுக்கு இரைஆய நாமம்வைத்து, ருகோடி
     பாடல் உற்றிடவே செய் ...... திடும், மோச

பாவி எப்படி வாழ்வன்?  நேயர்கட்கு உளதுஆன
     பார்வை சற்று அருளோடு ...... பணியாயோ?

ஆழியில் துயில்வோனும், மாமலர்ப் பிரமாவும்,
     ஆகமப் பொருளோரும், ...... அனைவோரும்,

ஆனை மத்தகவோனும், ஞானம் உற்று இயல்வோரும்,
     ஆயிரத்து இருநூறு ...... மறையோரும்,

வாழும் உத்தரமேருர் மேவி, அற்புதமாக
     வாகு சித்திர தோகை ...... மயில்ஏறி,

மாறு எனப் பொருசூரன் நீறு எழப் பொரும்வேல!
     மான்மகட்கு உளன்ஆன ...... பெருமாளே!

பதவுரை

      ஆழியில் துயில்வோனும் --- திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும்,

     மா மலர்ப் பிரமாவும் --- தாமரையில் வீற்றிருக்கும் பிரம தேவனும்,

     ஆகமப் பொருளோரும் --- சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராகிய சிவபெருமானும்,

     அனைவோரும் --- மற்ற அனைவரும்,

      ஆனை மத்தகவோனும் --- ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும்,

     ஞானம் உற்று இயல்வோரும் --- ஞானம் அடைந்துள்ள ஞானிகளும்,

      ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர் அற்புதமாக மேவி --- ஆயிரத்து இரு நூறு வேதியர்களும் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் திருத்தலத்தில் அற்புதமாக வீற்றிருந்து,

      வாகு சித்திர தோகை மயில் ஏறி --- அழகிய தோகையைக் கொண்ட மயிலின் மேல் ஏறி,

      மாறு எனபொருசூரன் நீறு எழ பொரும் வேல --- மாறுபட்டுப் போர் புரியும் சூரபதுமன் தூளாக போர் செய்த வேலாயுதக் கடவுளே! 

      மான் மகட்கு உளன் ஆன பெருமாளே --- மான் மகளான வள்ளிநாயகிக்கு உரியவராக விளங்கி நிற்கும் பெருமையில் சிறந்தவரே!

      நீள்புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி --- மேகம் போல் கரிய நீண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து,

      நேசம் உற்று --- மிகவும் நேசம் அடைந்து

     அடியேனும் நெறி கேடாய் --- அடியேனும் நன்னெறியினின்றும் பிறழ்ந்து,

      நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து --- பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து,

     உள்ளம் வாடி --- மனம் சோர்ந்து,

      நீதியில் சிவ வாழ்வை நினையாதே --- நீதிமுறையிலே மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல்,

      பாழினுக்கு இரை ஆய --- பாழுக்கே இரையாகுமாறு,

      நாமம் வைத்து ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு --- பிறர் பேரில் பல பாடல்களைப் பாடி வீணிலே உழல்கின்ற

     மோச பாவி எப்படி வாழ்வன் --- மோச வாழ்வை வாழுகின்ற பாவியாகிய நான் எப்படி வாழ்வேன்? (இப்படித்தான் பாழ் போவேன்)

      நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ --- தேவரீர் தமது அன்பர்கள் பால் வைத்துள்ள அருட்பார்வை அடியேனுக்கும் சற்றேனும் கிடைக்காதா?

பொழிப்புரை

     திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவனும், சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராகிய சிவபெருமானும், மற்ற அனைவரும், ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்துள்ள ஞானிகளும், ஆயிரத்து இரு நூறு வேதியர்களும் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் திருத்தலத்தில் அற்புதமாக வீற்றிருந்து, அழகிய தோகையைக் கொண்ட மயிலின் மேல் ஏறி, மாறுபட்டுப் போர் புரியும் சூரபதுமன் தூளாக போர் செய்த வேலாயுதக் கடவுளே! 

         மான் மகளான வள்ளிநாயகிக்கு உரியவராக விளங்கி நிற்கும் பெருமையில் சிறந்தவரே!

         மேகம் போல் கரிய நீண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து, மிகவும் நேசம் அடைந்து அடியேனும் நன்னெறியினின்றும் பிறழ்ந்து, பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து, நீதிமுறையிலே மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல், பாழுக்கே இரையாகுமாறு, பிறர் பேரில் பல பாடல்களைப் பாடி வீணிலே உழல்கின்ற மோச வாழ்வை வாழுகின்ற பாவியாகிய நான் எப்படி வாழ்வேன்? (இப்படித்தான் பாழ் போவேன்) தேவரீர் தமது அன்பர்கள் பால் வைத்துள்ள அருட்பார்வை அடியேனுக்கும் சற்றேனும் கிடைக்காதா?


விரிவுரை

ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர் ---

உத்தரமேரூர் என்னும் திருத்தலத்தில் ஆயிரத்து இருநூறு வேதியர்கள் வாழ்ந்ததாகத் தெரிகின்றது.

திருப்பெருந்துறையிலே 300 வேதியர்களும்,திரு ஆக்கூர்த் தான்தோன்றிமாடத்தில் ஆயிரம் வேதியர்களும், திருவீழிமிழலையில் 500 வேதியர்களும் இருந்து வழிபட்டார்கள்.

கருத்துரை

முருகா! அடியேன் ஈடேற அருட்பார்வை வைத்து அருள்வாய்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...