உலகப் பற்றுக்களை விட்டொழிக்க வேண்டும்.





43.  உலகப் பற்றுக்களை விட்டொழிக்க வேண்டும்.

வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய்
      மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர்,
கல்கட்டு ஆகிய மடமும், காணியும், செம்
      பொனும் தேடும் கருமம் எல்லாம்,
பொன்கொத்து ஆம் செந்நெல் வயல் தண்டலையா
      ரே! சொன்னேன் பொன்நாடு ஆகும்
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
      ராட்டினத்தைச் சுமந்த வாறே.

இதன் பொருள் ---

     பொன் கொத்து ஆம் செந்நெல் வயல் தண்டலையாரே --- பொன்கொத்துப் போல கொத்துக் கொத்தாக விளைந்துள்ள செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டருளிய சிவபெருமனே!

     வர்க்கத்தார் தமை வெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர் --- உறவினர்களை வெறுத்த அறிவிலே முதியவராய் உண்மை அறிவே ஒரு வடிவம் எனக் காணப்படுவோர்,

     கல்கட்டு ஆகிய மடமும் --- கல்லால் கட்டப்பட்ட மடத்தையும்,

     காணியும் --- காணி நிலத்தையும்,

     செம்பொனும் --- செழுமையான பொன்னையும்,

     தேடும் கருமம் எல்லாம் --- தேடுகின்ற செய்கைகள் எல்லாம்,

     பொன் நாடு ஆகும் சொர்க்கத்தே போம்போதும் --- பொன்னுலகம் என்னும் தேவலோகத்திற்குப் போகும்போதும்,

     கக்கத்தே ராட்டினத்தைச் சுமந்த ஆறே --- கை அடியில் இராட்டினத்தைக் கொண்டு செல்லும் தன்மயைப் போல் ஆகும்.

விளக்கம் ---

பொன் நாடு எனப்படும் தேவலோகத்தில், நினைத்தவை எல்லாவற்றையும் தருகின்ற கற்பக மரம் உள்ளது. சிந்தாமணி உள்ளது. காமதேனு என்னும் தெய்வப் பசு உள்ளது. அப்படி இருக்க, பூவுலகில் வறுமையில் வாடும்போது பிழைப்புக்காக வைத்திருந்த இராட்டினத்தை ஏன் கொண்டு செல்லவேண்டும். இது அறியாமை அல்லவா? உலகப் பொருள்களில் பற்று வைக்கலாமா?

இராட்டினம் என்பது நூல் நூற்கும் கருவி. நூல் நூற்பதனாலே கிடைக்கும் வருவாய் சிறிதாகும். அது வறுமையின் அடையாளம். அக் கருவியைப் பொன்னாட்டிற்கும் சுமந்து செல்வது நகைப்புக்கு இடமானது.

பேரின்ப வீட்டிற்குச் செல்லும் நிலையிலுள்ள உண்மை அறிவினர், உலகியல் நிலையில் உழலுங்கால் ஒரோவழி உலகியல் பொருளில் மயங்குவர். அஞ்ஞான கன்மப் பிரவேசம் நிகழும். அதனைத் திருவருள் வலத்தால் ஒழித்தல் வேண்டும்.
  
‘சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே இராட்டினத்தைச் சுமத்தல்' என்பது பழமொழி.

வர்க்கத்தார் --- சுற்றத்தார். விருத்தர்  --- முதியவர். கற்கட்டு --- கருங்கல் கட்டடம். கக்கம் --- தோளின்கீழ்ப் பகுதி, அக்குள். இராட்டினம் --- நூல் நூற்கும் சக்கரம்.

 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...