எமன் வரமாட்டான்




ஒப்பிலாமணிப் புலவர் பாடல் ஒன்று...

சீமானும் நாமகள் கோமானும் ஏத்தித் தினம் பணிந்து
பூமாலை சாத்திய ரத்னசபாபதிப் பொன்னடிக்கு
பாமாலை சாத்தி நின்றேன், அவனால் மிகப் பாடுபட்ட
ஏமா! உன்னால் இனி ஆமோ என்பால் சினந்துஎய்துதற்கே.

இதன் பொருள் ---

திருமகள் நாயகன் ஆகிய திருமாலும், கலைமகளின் நாயகன் ஆன பிரமனும் நாள்தோறும் வாழ்த்தி வணங்கி, பூமாலையை சாத்திய இரத்தினசபாபதி ஆகிய சிவபெருமானுக்கு, நான் பாடல்களால் ஆன மாலையைச் சாத்தி வழிபடுகின்றேன். அந்தச் சிவபெருமானால் மிகவும் துன்பப்பட்ட இயமனே! இனி என்மேல் சினம் கொண்டு என் உயிரைக் கொண்டுபோவதற்கு உன்னால் இயலுமோ?

விளக்கம் --- 

"சீமான்" என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் "ஸ்ரீமான்" என வழங்கும். "சீ" என்னும் எழுத்து "சீதேவி" ஆகிய திருமகளைக் குறிக்கும். வடமொழியில் ஸ்ரீதேவி என வழங்கும்.

எமா - எமனே. "எமா" என்னும் சொல் முதல் குறைந்து "ஏமா" ஆனது.

திருமாலும் பிரமனும் சிவபெருமானுடைய திருவடியையும், திருமுடியையும் தேடிக் காண முடியாமல், தங்களின் அகந்தை ஒழிந்து, முழுமுதற்கடவுளான சிவபெருமானை, பூமாலைகள் சாத்தி வழிபட்டுப் பேறு பெற்றனர்.

பூக்களால் ஆன மாலை வாடிவிடும். எப்போதும் எக்காலத்திலும் வாடாத மாலை என்பது பாடல்களால் ஆன உணர்வு மிக்க மாலையே. இதனை "மாத்ருகா புஷ்ப மாலை" என்றார் அருணகிரிநாதர். "சொல் மாலை" என்றார் அப்பர் பெருமான். "பாமாலை" என்பது இதுவே.

சிவனை பூமாலைகளால் வழிபட்டு வந்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த இயமனை, சிவபெருமான் தனது திருவடியால் உதைத்து வாட்டினார். இப்போது நான் சிவபெருமானைப் பாமாலைகளைச் சாத்தித் துதிக்கின்றேன். அப்போது சிவபெருமானால் பட்ட துன்பத்தை இயமன் மறந்து இருக்கமாட்டான். அதனால், இப்போது என் உயிரைக் கோபத்தோடு வந்து கவர இயமனால் முடியாது என்றார் புலவர். சிவனை வழிபடுகின்ற என்னை இயமனால் நெருங்க முடியாது.

இதே கருத்தில், இன்னொரு புலவர் பின்வருமாறு முருகப் பெருமானைப் பாடி உள்ளார்.

வேண்டாமடா காலா! வேலாயுதப் பெருமான்
ஆண்டுகொண்டது என்னை, அறியாயோ? --- தீண்டாதே,
அப்புறத்தே போடா, அறுமுகவன் கண்டக்கால்
தப்பாமல் கொல்வான் கணம்.

இதன் பொருள்  ---

ஏ காலா! என்னை வேலாயுதப் பெருமான் ஆண்டுகொண்டான். இதை நீ அறியவில்லையா? என்னை வந்து தீண்டாதே. விலகிச் செல். நீ என்னிடம் வருவதை ஆறுமுகப் பெருமான் பார்த்தால், கண நேரத்தில் உன்னைக் கொன்று விடுவான்.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...