திருமயிலை - 0699. அறம்இலா அதிபாதக





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அறமிலா அதி (திருமயிலை)

முருகா!
அறத்தையே புரிந்த மனத்தினனாய்,
இன்பவாழ்வு வாழ இன்னருள் புரிவாயாக.


தனன தானன தானன தந்தத் ...... தனதான


அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே

அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே

திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே

விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா

விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே

மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா

மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.

    
பதம் பிரித்தல்


அறம் இலா அதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே,

அடியனேன் மெலிவு ஆகி, மனம் சற்று ...... இளையாதே,

திறல் குலாவிய சேவடி வந்தித்து, ...... அருள்கூட,

தினமுமே மிக வாழ்வு உறும் இன்பைத் ...... தருவாயே.

விறல் நிசாசரர் சேனைகள் அஞ்சப் ...... பொரும்வேலா!

விமல, மாது அபிராமி தரும் செய்ப் ...... புதல்வோனே!

மறவர் வாள்நுதல் வேடை கொளும்பொன் ...... புயவீரா!

மயிலை மாநகர் மேவிய கந்த! ...... பெருமாளே.


பதவுரை

      விறல் நிசாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா ---வீரமுள்ள அசுரர்களின் படைகள் அஞ்சி ஓடும்படியாகப் போர் புரிந்த வேலவரே!

      விமல --- தூய்மையானவரே!

     மாது அபிராமி தருஞ்செய்ப் புதல்வோனே --- அபிராமி அன்னை தந்த செம்மையான குழந்தையே!

      மறவர் வாள் நுதல் வேடைகொளும் பொன் புய வீரா --- வேடர்குலத்தில் வளர்ந், ஒளிபடைத்த நெற்றியுள்ள வள்ளிபிராட்டி மீது வேட்கை கொண்ட அழகிய தோள்கள் அமைந்த வீரரே!

      மயிலை மாநகர் மேவிய கந்த ---  திருமயிலை என்னும் மாநகரில் வீற்றிருக்கும் கந்த சுவாமியே!

      பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

     அறம் இலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே --- அற வழியில் நில்லாத, மிக்க பாவம் நிறைந்த வஞ்சகச் செயல்களாலே,

      அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே --- அடியவனாகிய நான் உடலால் தளர்ச்சி அடைந்து, மனம் கொஞ்சமும் சோர்வு படாமல்,

      திறல் குலாவிய சேவடி வந்தித்து --- வெற்றி விளங்கும் உமது திருவடி மலர்களை வணங்கித் துதித்து,

      அருள்கூட --- உமது திருவருளைப் பெற்று,

     தினமுமே மிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே --- நாள்தோறும் நல் வாழ்வு வாழும் இன்பத்தைத் தந்து அருள்வாயாக.

பொழிப்புரை


     வீரமுள்ள அசுரர்களின் படைகள் அஞ்சி ஓடும்படியாகப் போர் புரிந்த வேலவரே!

       தூய்மையானவரே!

     அபிராமி அன்னை தந்த செம்மையான குழந்தையே!

     வேடர்குலத்தில் வளர்ந், ஒளிபடைத்த நெற்றியுள்ள வள்ளிபிராட்டி மீது வேட்கை கொண்ட அழகிய தோள்கள் அமைந்த வீரரே!

      திருமயிலை என்னும் மாநகரில் வீற்றிருக்கும் கந்த சுவாமியே!

     பெருமையில் மிக்கவரே!

     அற வழியில் நில்லாத, மிக்க பாவம் நிறைந்த வஞ்சகச் செயல்களாலே, அடியவனாகிய நான் உடலால் தளர்ச்சி அடைந்து, மனம் கொஞ்சமும் சோர்வு படாமல், வெற்றி விளங்கும் உமது திருவடி மலர்களை வணங்கித் துதித்து, உமது திருவருளைப் பெற்று, நாள்தோறும் நல் வாழ்வு வாழும் இன்பத்தைத் தந்து அருள்வாயாக.

விரிவுரை

அறம் இலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே ---

அறுப்பது அறம். தருவது தருமம்,  கொடுப்பது கொடை, ஈவது ஈகை.

அறம் என்னும் சொல் அறுதல் என்னும் வினைச்சொல்லில் இருந்து வந்தது. இச் சொல்லுக்கு, அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, வழியை உருவாக்கு, வேறுபடுத்து, துண்டி என்று பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இந்தச் சொல் ஆராய்ச்சியினை அடிப்படையாக வைத்துப் பார்ப்போமானால், மனிதன் தனக்கு என வரையறுத்துக் கொண்ட ஒழுக்க நெறிகளின் வடிவமே அறம் எனப்படும். பிறவிகள் தோறும் மனதினைப் பற்றி வருகின்ற துன்பங்களில் இருந்து விடுபட, அவன் புரிந்த தீவினைகளில் இருந்து வடுபடுவது அறம் ஆகும்.

தனி மனிதன் ஒருவனால் வாழ்ந்து காட்டப்பட்டு, அதனால் எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலையைப் பிறரும் பின்பற்றிய போது, அது அறம் ஆனது.

எண்ணம் தூய்மையாக இருந்தால், சொல்லும் செயலும் தூய்மையானதாக அமையும். எனவே, எண்ணமானது எழுவதற்குக் காரணமாக இருக்கும் மனமானது தூய்மையாகவும், மாசு அற்றதாகவும் இருத்தல் வேண்டும். மனத்தில் உண்டாகும் மாசினை அறுப்பதே அறம் எனப்பட்டது. மனத்தை மாசு படுத்துவது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்னும் இந்நான்கு ஆகும் என்பதால், அவை இல்லாமல் இருப்பதே அறம் ஆகும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார்,

"மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்,
ஆகுல நீர பிற"

"அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"

என்று காட்டினார். அறத்தை வலியுறுத்தி, அறன் வலியுறுத்தல் என்று ஒரு அதிகாரத்தையே வைத்தார்.

"வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை --- நினைத்தஅதனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்".

முன் செய்த வினையின் பயன் இப்போது வருகின்ற துன்பம் என்று எண்ணாமல் அறவு அற்ற மூடர்கள் வருந்துவார்கள். ஆனால், கற்று அறிந்த பெரியோர்களோ, இப்போது படுகின்ற துன்பத்திற்கு எல்லாம் காரணம் முன் செய்த தீவினை என்று உணர்ந்து தீவினை விட்டொழித்து, நல்வினை செய்ய முற்படுவார்கள் என்கிறது நாலடியார்.

அறத்தினை வலியுறுத்திக் கபிலர் பாடிய அகவலில் ஒரு பகுதியைக் காணலாம்...

நான்முகன் படைத்த நானாவகை உலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்
ஆண் முதிதோ? பெண் முதிதோ? அன்றி அலி முதிதோ?
நாள் முதிதோ? கோள் முதிதோ?
நல்வினை முதிதோ? தீவினை முதிதோ?
செல்வம் சிறப்போ? கல்வி சிறப்போ?
அல்லது, உலகில் அறிவு சிறப்போ?

தொல்லை மாஞாலம் தோற்றமோ? படைப்போ?
எல்லாப் பிறப்பும் இயற்கையோ? செயற்கையோ?
காலத்தால் சாவரோ?  பொய்ச் சாவு சாவரோ?
நஞ்சுஉறு தீவினை துஞ்சுமோ? துஞ்சாதோ?
துஞ்சும்போது, அந்தப் பஞ்சேந்திரியம்

என் செயா நிற்குமோ? எவ்விடத்து ஏகுமோ?
ஆற்றல் உடையீர்! அருந்தவம் புரிந்தால்
வேற்று உடம்பு ஆகுமோ? தமது உடம்பு ஆகுமோ?
உண்டியை உண்குவது உடலோ? உயிரோ?
கண்டு இன்புறுவது கண்ணோ? கருத்தோ?

இதன் பொருள் ---

நான்முகன் படைத்த --- நான்கு திருமுகங்களை உடைய பிரமதேவனால் படைக்கப்பட்ட

நானா வகை உலகில் --- பல வகையான உலங்களில்,

ஆன்ற சிறப்பின் --- நிறைந்த சிறப்பினை உடைய,

அரும்பொருள் --- அருமையான பொருளை,

கூறுங்கால் --- ஆராய்ந்து அறிந்து சொல்லப் புகுந்தால்,

ஆண் முதிதோ --- ஆண் பிறப்பு உயர்ந்ததோ,

பெண் முதிதோ --- பெண் பிறப்பு உயர்ந்ததோ,

அலி முதிதோ --- ஆணும் பெண்ணும் அல்லாத பேடிப் பிறப்பு உயர்ந்ததோ,

நாள் முதிதோ --- பிறந்த நாள் உயர்ந்ததோ,

கோள் முதிதோ --- கிரகங்கள் உயர்ந்தனவோ, 

நல்வினை முதிதோ --- செய்த புண்ணியச் செயல்கள் உயர்ந்தனவோ,

தீவினை முதிதோ --- செய்த பாவச்செயல்கள் உயர்ந்தனவோ,

செல்வம் சிறப்போ --- ஈட்டிய செல்வம் உயர்ந்ததோ,

கல்வி சிறப்போ --- கற்ற கல்வியால் பெற்ற அறிவு உயர்ந்ததோ,

அல்லது உலகில் அறிவு சிறப்போ --- அல்லது இந்த உலகில் பெற்ற அனுபவ அறிவு உயர்ந்ததோ,

தொல்லை மாஞாலம் தோற்றமோ படைப்போ --- பழமையான இந்த உலகமானது இயற்கையாகத் தோன்றியதா அல்லது நான்முகனால் படைக்கப்பட்டதா,

எல்லாப் பிறப்பும் இயற்கையோ செயற்கையோ --- உலகத்தில் தோன்றும் எல்லாமும் இயற்கையாகவே உண்டாயினவா அல்லது செயற்கையாக உண்டாக்கப்பட்டனவா,

காலத்தால் சாவரோ --- விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் அழிந்து பொவார்களோ,

பொய்ச் சாவு சாவரோ --- அல்லது உடல் மட்டும் அழிவதான பொய்யான சாவினை அடைவார்களோ,

நஞ்சு உறு தீவினை துஞ்சுமோ துஞ்சாதோ --- விடத்தைப் போன்ற கொடுமை வாய்ந்த தீவினைகளானவை, நல்வினைகளைச் செய்வதனால் ஒழியுமோ, ஒழியாமல் நிற்குமோ,

துஞ்சும்போது --- தாங்குகின்ற போது,

அந்தப் பஞ்சேந்திரியம் என் செயா நிற்குமோ --- அந்த ஐந்து ஞானேந்திரியங்களுக்கு இடமான கன்மேந்திரியங்கள் ஐந்தும் என்ன செய்யுமோ,

எவ்விடத்து ஏகுமோ --- எந்த இடத்தில் செல்லுமோ,

ஆற்றல் உடையீர் - தவத்தைப் புரிதலில் ஆற்றல் மிகுந்தவர்களே!

அருந்தவம் புரிந்தால் --- செய்வதற்கு அருமையான தவத்துப் புரிந்தால்,

வேற்று உடம்பு ஆகுமோ --- இந்த மனித உடம்பு போய் வேறு உடம்பு ஆகுமோ,

தமதுஉடம்பு ஆகுமோ --- இந்த மனித உடம்பே நிலைக்குமோ,

உண்டியை உண்குவது உடலோ உயிரோ --- உணவை உண்பது இந்த உடலா அல்லது உடம்பிலே உறையும் உயிரா,

கண்டு இன்புறுவது கண்ணோ கருத்தோ --- பொருள்களைக் கண்டு இன்பத்தை அடைவது உடம்பில் பொருந்தி உள்ள கண்ணா, அல்லது மனமா


உலகத்திரே! உலகத்தீரே!
நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து
சாற்றக் கேண்மின், சாற்றக் கேண்மின்,
மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை;
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்;
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்;
ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்;
எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே;


இதன் பொருள் ---

உலகத்திரே உலகத்தீரே --- இந்த உலகில் வாழ்பவர்களே

நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து சாற்றக் கேண்மின் சாற்றக்கேண்மின் --- நாவில் தழும்பு உண்டாகும்படி, வாயால் பறையை முழக்குவது போல, நான் சொல்தைச் செவி மடுப்பீர்களாக,

மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை --- பிறந்த மனிதர்க்கு வாழ்நாள் என்பது நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை,

ஐம்பது இரவில் அகலும் துயிலினால் --- அவ்வாறு விதிக்கப்பட்ட வாழ்நாளில், ஐம்பது ஆண்டுகள் உறக்கத்தில் கழியும்,

ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும் --- பொருந்தி வந்த இளமைப் பருவத்தில் ஐந்து ஆண்டுகள் கழிந்து போகும்,

ஆக்கை இளமையில் ஐம் மூன்று நீங்கும் --- இளமைப் பருவமாகப் பதினைந்து ஆண்டுகள் கழியும்,

எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே --- ஆ, இவ்வாறு எழுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சி இருப்பவை முப்பது ஆண்டுகளே,
  
 அவற்றுள்
இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று
துன்புறு நாளும் சிலவே, ஆதலால்
பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்கு ஆற்று
இடிகரை ஒத்தது இளமை,
இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும், அந் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்
           
இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்
நாளை நாளை என்பீர் ஆகில், நாளை
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்

இதன் பொருள் ---

அவற்றுள் --- அவ்வாறு எஞ்சி நின்ற அந்த முப்பது ஆண்டுகளுள்ளும்,

இன்பு உறு நாளும் சிலவே --- மகிழ்ச்சியோடு வாழ்வதும் சில நாள்களே,

அதா அன்று --- அதுவும் அல்லாமல்,

துன்பு உறு நாளும் சிலவே --- துன்பத்தை அடைகின்றதும் சில நாள்களே,

ஆதலால் --- எனவே,

பெருக்கு ஆறு ஒத்தது செல்வம் --- தோன்றிச் சில நாள்களிலே குறைந்து போகின்ற நீர்ப் பெருக்கினை ஒத்தது செல்வம் ஆகும்.

பெருக்கு ஆற்று இடிகரை ஒத்தது இளமை --- நீர்ப் பெருக்கால் அழிந்து போகின்ற வலிமை அற்ற கரையைப் போன்றது, தேடிய செல்வத்தை அனுபவித்தற்கு உரிய இளமை என்னும் செழுமை,

இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள் --- செல்வத்தோடு இருந்து நீங்கள் வாழுகின்ற நாள்கள், இடிந்து போகின்ற வலிமை அற்ற கரையின் மேல் உள்ள மரங்களைப் போன்றது ஆகும்,

ஆதலால் --- ஆகையினாலே,

ஒன்றே செய்யவும் வேண்டும் ---  நீங்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டும்,

அவ்வொன்றும் நன்றே செய்யவும் வேண்டும் --- அந்த ஒரு செயலும் அறச் செயலாகவே செய்ய வேண்டும்,

 அந் நன்றும் இன்றே செய்யவும் வேண்டும் --- அந்த அறச் செயலையும் இன்றைய நாளிலேயே செய்யவேண்டும்,

அவ்வின்றும் இன்னே செய்யவும் வேண்டும் --- அதையும் இந்தப் பொழுதிலேயே செய்ய வேண்டும்,

அவ்வின்னும் நாளை நாளை என்பீர் ஆகில் --- அந்தப் பொழுதையும் நாளைய பொழுது செய்வோம் என்று, இருக்கின்ற காலத்தை வீணாகக் கழிப்பீர்களானால்,

நாளை நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர் --- நாளைப் பொழுது என்பது நம்முடைய உயிர் நிலைத்திருக்கும் நாள் தானா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது,

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர் --- நாளை என்கின்ற அந்த நாள், நமது உயிரைக் கொண்டு போக வருகின்ற இயமனுடைய நாளாக இருக்கலாம் என்பதும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது.

சமயங்கள் சொல்லும் உண்மை என்னவென்று ஔவைப் பிராட்டியார் காட்டி நம்மை நல்வழிப்படுத்துகின்றார்...

புண்ணியம் ஆம், பாவம் போம், போனநாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் --- எண்ணுங்கால்
ஈது ஒழிய வேறு இல்லை, எச் சமயத்தோர் சொல்லும்
தீது ஒழிய நன்மை செயல்.

புண்ணியம் என்னும் நல்வினை,  பாவம்  என்னும் தீவினை ஆகிய இரண்டு செயல்களே எல்லோரையும் வழி நடத்துகின்றது. போன பிறவியில் செய்த புண்ணியச் செயல்களே இந்தப் பிறவியில் நல்வாழ்வைத் தரும். தீமையை விட்டு நல்ல செயல்களையே செய்யவேண்டும் என்று  எல்லா மதங்களும் கூறுகின்றன.

எனவே, மனமானது மாசுபட்டு, அறம் அல்லாத வழிகளில் சென்று, பாதகமான செயல்களையே செய்து, அதனால் பின்னர் மனம் வருந்தி, உடல் வருந்தி, இளைத்துப் போகாமல்படிக்கு வாழ்க்கை நடந்திட வேண்டுமானால், பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்துள்ள பரம்பொருளை வழிபட வேண்டும்.

நம்முடைய செயல்கள் அனைத்தும் இறைவனால் கண்காணிக்கப்படுகின்றன என்னும் அச்சம் இருக்கவேண்டும்.

"கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்
கண்காணி ஆகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே".

என்றார் திருமூல நாயனார்.

அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு பொழுதும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர்.

இதனையே, குமரகுருபர அடிகள் பின்வருமாறு காட்டினார்..

வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தேம் என்று மகிழன்மின், - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொல் என்றுஅஞ்சி
அங்கம் குலைவது அறிவு.                            

          வஞ்சித்து - பிறருக்கு வஞ்சனை செய்து. மதியிலிகாள் அறிவற்றவர்களே. வஞ்சித்த - பிறரை வஞ்சித்த செயல்களை. எங்கும் உளன் ஒருவன் - பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்துள்ள பரம்பொருள். அங்கம் குலைவது அறிவு - அச்சத்தால் உடம்பு நடுங்குதல் அறிவுடைமையாகும்.

இப் பாடலின் பதவுரை ---

வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் --- (பொய்க்கோலம் பூண்டு) பிறரை வஞ்சித்து நடக்கும் மதியீனர்களே!,

யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் --- எல்லாரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்.

வஞ்சித்த --- வஞ்சித்த செயல்களை எல்லாம்,

எங்கும் உளன் ஒருவன் காணும் என்று அஞ்சி --- எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றான் என்று நடுங்கி,  

அங்கம் குலைவது --- (உங்கள்) உடல் பதறுவதே,

அறிவு --- உங்களுக்கு அறிவு ஆகும்.        


திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள்கூட ---

எனவே, அஞ்ஞானத்தை வெற்றிகொண்டு, ஞானத்தை அருளும் இறைவனது திருவடிகளை நாளும் வந்தனை புரியவேண்டும்.

தினமுமே மிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே ---

அப்படி வந்தனை புரிந்து வந்தால், இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை என்னும்படி இன்புற்று வாழலாம்.

எந்தை கந்தவேளின் அருள் இருந்தால் எப்படி வாழலாம் என்பதை அருணை அடிகளே கடைக்கணியல் வகுப்பில் அருளுமாறு காண்க.

அலைகடல் வளைந்து உடுத்த எழுபுவி புரந்து இருக்கும்
          அரசு என நிரந்தரிக்க வாழலாம்,    

அளகை அரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும்
          அரசு என அறம் செலுத்தி ஆளலாம்,     

அடைபெறுவது என்று முத்தி அதிமதுர செந்தமிழ்க்கும்
          அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்,         .

அதிரவரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க
          அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்,    

இலகிய நலம் செய் புட்பகமும், உடல் நிறம் வெளுத்த
          இப அரசு எனும் பொருப்பும் ஏறலாம்,    

இருவர்அவர் நின்ற இடத்தும், எவர்எவர் இருந்த இடத்தும்,
          ஒருவன்இவன் என்று உணர்ச்சி கூடலாம், 

எமபடர் தொடர்ந்து அழைக்கில், அவருடன் எதிர்ந்துஉள் உட்க
          இடி என முழங்கி வெற்றி பேசலாம். 

கருத்துரை

முருகா! அறத்தையே புரிந்த மனத்தினனாய், இன்பவாழ்வு வாழ இன்னருள் புரிவாயாக.

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...