43. நல்லினம் சேர்தல்
சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
தருவும்அவ்
வாசனை தரும்;
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
சாயல்பொன்
மயமேதரும்;
பந்தம்மிகு பாலுடன்வ ளாவியத ணீரெலாம்,
பால்போல்
நிறங்கொடுக்கும்;
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப்
படியே
குணங்கொடுக்கும்;
அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்,
அடுத்ததும்
பசுமையாகும்;
ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்,
அவர்கள் குணம்
வருமென்பர்காண்
மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
மருக!மெய்ஞ்
ஞானமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
முன் மந்தர
நெடுங்கிரியின் கடல் கடைந்த அரி மருக --- முன்னொரு காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினை மத்தாக நிறுவிக்
கடலைக் கடைந்த திருமாலின் திருமருமகனே!,
மெய்ஞ்ஞான
முருகா --- உண்மையறிவான முருகக்
கடவுளே!!
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சந்தன
விருட்சத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ்வாசனை தரும் --- சந்தன மரத்தைச் சார்ந்து நிற்கின்ற பலவகையான மரங்களும்
சந்தன மணத்தையே பெறும்.
தங்க மகமேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன்மயமே தரும் --- பொன்மயமான மகா மேரு மலையைச் சேர்ந்த
காக்கையும் பொன் நிறத்தைப் பெறும்.;
பந்தம் மிகு
பாலுடன் வளாவிய தணீரெலாம் பால்போல் நிறம் கொடுக்கும் --- பாலுடன் சேர்த்து வளாவிய தண்ணீரும் பால் போலவே வெண்ணிறம் கொடுக்கும்.
படிகமணிகட்கு
உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் --- படிகமணிகளைக் கோத்த நூலும் படிகம் போலவே நிறம் கொடுக்கும்.
அந்தம் மிகு
மரகதக் கல்லைத் திரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் --- அழகு மிகுந்த மரகதக் கல்லை அணிந்தால் அதனைச் சார்ந்ததும் பசுமை நிறமாகவே
இருக்கும்.
ஆன பெரியோர்களொடு
சகவாசம் அது செயின், அவர்கள் குணம் வரும் என்பர் --- அறிவு மிக்க பெரியோர்களுடன் நட்புக் கொண்டால், அவர்களுடைய குணமே வரும் என்பர் பெரியோர்.
விளக்கம் --- உலகத்துப் பொருள்கள் யாவும் சார்ந்ததன் எண்ணம் ஆகும். அது போலவே, மனிதர்களும் நல்லோரைச் சேர்ந்து இருந்தால் நன்மையை அடைவர் என்பது
கருத்து.
ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது என்பது சித்தாந்தம்.
பெரியாரைத் துணைக் கொள்வதால் வரும் சிறப்பினைக் காட்ட, "பெரியாரைத் துணைக்கோடல்" என்னும் அதிகாரத்தையும், பெரியோரைப் பிழைப்பதால் விளையும் தீமையைக் காட்ட, "பெரியோரைப் பிழையாமை" என்னும் அதிகாரத்தையும் திருவள்ளவ
நாயனார் வைத்தது காண்க.
பெரியோர் இணக்கம் செய்யும் நன்மையைக் குறித்து, "நீதி வெண்பா" என்னும் நூல் கூறுமாறு காண்க.
கங்கைநதி பாவம், சசி தாபம், கற்பகம் தான்
மங்கல் உறும் வறுமை மாற்றுமே, - துங்கமிகும்
இக்குணம்ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்
அக்கணமே போமf என்று அறி.
கங்கை ஆறு பாவத்தையும், திங்கள் வெப்பத்தையும், கற்பகமரம் எல்லா நன்மைகளையும் மங்குமாறு செய்யும் வறுமையையும் நீக்கும். பாவம் தாபம் வறுமை ஆகிய இந்த மூன்று தீய குணங்களும் உயர்வு மிக்க பெரியோரிடம் சேர்ந்தால், அந்தக் கணத்திலேயே அழிந்து போகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.
அவ்வாறே தீயோர் கூட்டுறவால் விளையும் தீமை குறித்தும் "நீதி
வெண்பா" கூறுமாறு காண்க.
நன்றுஅறியாத் தீயோர்க்கு இடம் அளித்த நல்லோர்க்கும்
துன்று கிளைக்கும் துயர் சேரும், - குன்றிடத்தில்
பின்இரவில் வந்த கரும் பிள்ளைக்கு இடம் கொடுத்த
அன்னம் முதல் பட்டது போல்ஆம்.
No comments:
Post a Comment