பலபட்டடைச் செக்கநாதப் புலவர் பாடிய பாடல் ஒன்று...
"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீது,
உன் அருகு இருந்து,
"நீ முத்தம் தா" என்று அவர் கொஞ்சும்
வேளையில், நித்தம்
நித்தம்
வேய்முத்தரோடு என் குறைகள் எல்லாம்
மெல்ல மெல்லச் சொன்னால்,
வாய்முத்தம் சிந்திவிடுமோ?
நெல்வேலி வடிவன்னையே."
இதன் பொருள் ----
திருநெல்வேலி என்னும் திருத்தலத்திலே வடிவாம்பிகை என்னும் திருப்பெயரோடு
எழுந்தருளி உள்ள அம்மையே!
முத்துக்களால் ஆன பந்தலின் கீழ் உள்ள மெல்லிய படுக்கையின் மீது,
உன் அருகில் சிவபெருமான் அமர்ந்து கொண்டு, "முத்தம் தா" என்று உன்னிடம் அவர்
கொஞ்சிப் பேசும்போது, நாள்தோறும் மூங்கில் அடியில் முத்தைப் போல வீற்றிருக்கும் அந்த
வேய்முத்தரிடம் எனது குறைகளை எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால் உன் வாயிலே உள்ள முத்துக்கள்
சிந்திவிடுமோ, அம்மா!
திருநெல்வேலியில் திருக்கோயில் கொண்டு இருக்கும் சிவபெருமானுக்கு,
நெல்லையப்பர், வேய்முத்தர், வேணுவனநாதர் என்றும், அம்மைக்கு
காந்திமதியம்மை, வடிவம்மை என்றும் பெயர்.
வேணு - வேய் = மூங்கில்.
நாமும் அன்னையிடம் வேண்டுவோமே.
அருமை
ReplyDelete