அவளிவணல்லூர்




திருஅவளிவணல்லூர்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

      கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன.

     திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.


இறைவர்           : சாட்சி நாதர், தம்பரிசுஉடையார்

இறைவியார்      : சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி

தல மரம்          : பாதிரி

தீர்த்தம்           : சந்திர புஷ்கரணி

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - கொம்பிரிய வண்டுலவு.
                                      2. அப்பர்   - தோற்றினான் எயிறுகவ்வி.

         தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்யத் தலங்கள் என்று ஐந்து திருத்தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து திருத்தலங்களை வரிசையாகச் சொல்வதானால்

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்காலம்
2. அவளிவணல்லூர் (பாதிரி வனம்) -  காலை.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் -  உச்சிக்காலம்.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாமம்.

         பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதிசைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக் கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

         இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய முகப்பு வாயில் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார்.  உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்புலிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

         உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "சரதத்தால் ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி ஓதும் அவளிவணல்லூர் உடையோய்" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 372
வந்து பந்தர்மா தவிமணம் கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழல்இணை தாழ்ந்தே,
"அந்தம் இல்லவர் வண்ணம்ஆர் அழல்வண்ணம்" என்று
சிந்தை இன்புஉறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.

         பொழிப்புரை : வந்து, பந்தலில் படர்ந்து ஏறிய முல்லைகள் மணம் கமழ்கின்ற `திருக்கருகாவூரில்' எழுந்தருளியிருக்கும் இசையமைதி உடைய பெருமறைகளைத் தந்த இறைவரின் திருவடிகளை வணங்கி, என்றும் அழியாமல் நிலைபெற்றிருக்கும் சிவபெருமானின் நிறம் தீயின் நிறமேயாம் என்ற கருத்தும் முடிபும் உடையதாய செந்தமிழ்ப் பதிகத்தை உள்ளம் மகிழப் பாடினார்.


பெ. பு. பாடல் எண் : 373
பதிக இன்இசை பாடிப்போய், பிறபதி பலவும்
நதிஅ ணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி,
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர்சி லம்புஅடி யார்மகிழ் அவளிவ ணல்லூர்.

         பொழிப்புரை : இவ்வாறாய இன்னிசைப் பதிகங்களைப் பாடிச் செல்பவர் பிற பதிகளிலுள்ள கங்கையாற்றை அணிந்த சிவபெருமானின் கோயில்களை அடைந்து வணங்கிப் பொன்னம்பலத்தில் கூத்தாடுகின்ற ஒலிக்கும் சிலம்பினையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற `திருஅவள்இவள்நல்லூரை\' இனிய முத்தமிழும் பொருந்திய திருவாக்கையுடைய பிள்ளையார் அணைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 374
மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள், தம்பரிசு உடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப் பாற்சென்று பணிவார்.

         பொழிப்புரை : நிலைபெற்ற அத்திருப்பதியில் தேவர்களும் போற்ற மகிழ்ந்து எழுந்தருளும் இயல்பு கொண்ட இறைவரின் கோயிலுக்குள் புகுந்து, `தம்பரிசு உடையார்\' என்ற பெயரும் வெளிப் பட வைத்துப் போற்றித் திருமுன்பு வணங்கிச் சொல்லுதற்குரிய சிறப்புடைய பதிகள் பலவற்றிலும் சென்று வணங்குபவராய்,

         குறிப்புரை : திருஅவள்இவள்நல்லூரில் அருளிய பதிகம் `கொம்பிரிய' (தி.3 ப.82) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் முதற் பாடலில் தம்பரிசினோடு சுடுநீறு தரவந்து இடபம் ஏறி, எனவருவதால் தம்பரிசுடையார் என்ற நாமமும் வெளிப்பட என்றார். இறைவர், தம்பரிசுடையார் சாட்சிநாதர் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகின்றார். ஈண்டுப் பன்னுசீர்ப் பதிபலவும் என்றவை எவை எனத் தெரிந்தில.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 082  திருஅவளிவணல்லூர்   திருவிராகம்   பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கொம்புஇரிய வண்டுஉலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்துஇடபம் ஏறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவில் ஆக
அம்புஎரிய எய்தபெரு மான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர் . முப்புரிநூல் அணிந்த திருமார்பினர் . திருவெண்ணீறு பூசியவர் . இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர். ஆகாயத்தில் திரிந்த பொன் , வெள்ளி , இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை , மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருஅவளிவணல்லூர் ஆகும் .


பாடல் எண் : 2
ஓமையன கள்ளியன வாகையன கூகைமுரல் ஓசை
ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநடம் ஆடித்
தூய்மைஉடை அக்கொடுஅர வம்விரவி மிக்குஒளிது லங்க
ஆமையொடு பூணும்அடி கள்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : ஓமை , கள்ளி , வாகை முதலிய மரங்கள் நிறைந்ததும் , கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன கொள்ளி நெருப்புச் சூழ்ந்த சுடலை வாசமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் சிவபெருமான் . தூய்மையான எலும்பும் , பாம்பும் கலந்து ஒளி துலங்க , ஆமையோட்டினை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
நீறுஉடைய மார்பில்இம வான்மகளொர் பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடிஅழ காயதுஒரு கோலம்
ஏறுஉடைய ரேனும்இடு காடுஇரவில் நின்றுநடம் ஆடும்
ஆறுஉடைய வார்சடையி னான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில் வீற்றிருப்பவர் . சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர் . கங்கையை நீண்ட சடையில் தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
பிணியும்இலர் கேடும்இலர் தோற்றம்இலர் என்றுஉலகு பேணிப்
பணியும்அடி யார்கள்அன பாவம் அற, இன்அருள்ப யந்து
துணிஉடைய தோலும்உடை கோவணமும் நாகம்உடல் தொங்க
அணியும்அழ காகஉடை யான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : பிணியும் , இறப்பும் , பிறப்பும் இல்லாதவர் என்று உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும் அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து , இன்னருள் புரிபவர் . கிழிந்த தோலையும் , கோவணத்தையும் ஆடையாக உடுத்ததுடன் , பாம்பை அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும் அவர் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை இண்டைபுனை வார்கடவுள் என்றுஅமரர் கூடித்
தொழலும்வழி பாடும்உடை யார்துயரும் நோயும்இலர்ஆவர்
அழலும்மழு ஏந்துகையி னான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு இண்டைமாலை கட்டி , சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித் தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ` இவரே முழுமுதற் கடவுள் ` என்று தொழுது போற்றுவர் . அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்கட்கு , உள்ளத்தால் வரும் துயரும் , உடலால் வரும் நோயும் இல்லை . அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன் , நெருப்புப்போல் ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
துஞ்சல்இல ராய்அமரர் நின்றுதொழுது ஏத்த,அருள் செய்து
நஞ்சுமிட றுஉண்டுகரிது ஆய,வெளிது ஆகிஒரு நம்பன்
மஞ்சுஉறநி மிர்ந்து,உமைந டுங்க,அக லத்தொடுவ ளாவி
அஞ்சமத வேழஉரி யான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத் தொழுது போற்ற , நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள்செய்து , கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல் வெண்மையாகவும் விளங்குபவர் சிவபெருமான் . மதம் பிடித்த யானை அஞ்சும்படி , வானளாவ நிமிர்ந்து அதன் தோலை உரித்து , உமை நடுங்கத் தம் மார்பில் போர்த்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
கூடுஅரவம் மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப்
பீடுஅரவம் ஆகுபடர் அம்புசெய்து, பேர்இடப மோடும்
காடுஅரவம் ஆகுகனல் கொண்டு,இரவில் நின்றுநட மாடி
ஆடுஅரவம் ஆர்த்தபெரு மான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : மொந்தை , குழல் , யாழ் , முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள கங்கைநீர் அம்பு போலப் பாய , பெரிய இடப வாகனத்தோடு , சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நெருப்பையேந்தி இரவில் நடனமாடி , படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 8
ஒருவரையும் மேல்வலிகொ டேன்என எழுந்தவிற லோன்இப்
பெருவரையின் மேலொர்பெரு மானும்உளனோ எனவெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடை யோனை
அருவரையில் ஊன்றிஅடர்த் தான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : எனக்கு மேல் ஒருவரையும் வலிமையுடைய வராகக் காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து , இக்கயிலை மலையின் மேல் ஒரு பெருமான் உளனோ என வெகுண்டு , மலையைப் பெயர்த்த பெரியமலை போன்றும் , ஆழமான கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான இராவணனைத் தன்காற் பெருவிரலை ஊன்றி , அம்மலையின்கீழ் நெரியும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
பொறிவரிய நாகம்உயர் பொங்குஅணை அணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டுஅறைய விண்டமலர் மேல்விழுமி யோனும்
செறிவுஅரிய தோற்றமொடு ஆற்றன்மிக நின்றுசிறி தேயும்
அறிவுஅரியன் ஆயபெரு மான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : புள்ளிகளையுடைய நெடிய பாம்பை உயர்ந்த படுக்கையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ்மிக்க திருமாலும் , வாசனையறிகின்ற கீற்றுகளையுடைய வண்டு ஒலித்து ஊத , அதனால் விரிந்த தாமரைமேல் வசிக்கின்ற பிரமனும் , பிறர்க்கு அரிய வலிமையுடைய தோற்றத்தோடு தமது ஆற்றல் முழுவதையும் செலுத்தித் தேடியும் , சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
கழிஅருகு பள்ளியிட மாக,வடு மீன்கள்கவர் வாரும்,
வழிஅருகு சாரவெயில் நின்றுஅடிசில் உள்கிவரு வாரும்
பழிஅருகி னார்ஒழிக பான்மையொடு நின்றுதொழுது ஏத்தும்
அழிஅருவி தோய்ந்தபெரு மான்உறைவது அவளிவண லூரே.

         பொழிப்புரை : ஆற்றங்கழி அருகிலிருக்கும் சமணப் பள்ளி இடமாக நின்று , சமைத்து உண்பதற்குரிய மீன்களைக் கவரும் போலிச் சமணர்களும் தெருக்களில் உச்சிவேளையில் நின்று உணவு ஏற்க வரும் புத்தர்களும் கூறும் பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை உடையவர்கள். இவர்கள் ஒழியுமாறு, பக்தியால் தொழுதேத்தும் அடியவர்கள் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
ஆனமொழி யானதிற லோர்பரவும் அவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழி கள்ஆயபுகழ் தோணிபுர ஊரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்,துயர்கள் தீயதுஇலர் தாமே.

         பொழிப்புரை : பொருளுடைய புகழ்மொழிகளால் மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற அவளிவணல்லூர் என்னும் திருத்தலத்தைத் திசைகள் தோறும் பரவிய நன்மொழியால் புகழ்போற்றும் தோணி புரத்தில் அவதரித்த சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் அருளிய தேன் போன்ற இனிமையான மொழிகளால் ஆன இப்பாமாலையால் புகழ்ந்து போற்றுபவர் துயரற்றவர் ஆவர் . அவர்களைத் தீமை அணுகாது .

திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 197
நாவுக்கு மன்னர்திரு நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள் மேவுறநா ளும்செய்து
பாஉற்ற தமிழ்மாலை பலபாடிப் பணிந்துஏத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்துஒழுகிச் செல்லுநாள்.

         பொழிப்புரை : நாவரசர், திருநல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமானிடம் மனம் பொருந்தத் திருப்பணிகள் பலவற்றை நாளும் செய்தும், தமிழ்மாலை பலவற்றையும் பாடி வணங்கிப் போற்றியும், தெய்வத் திருத்தொண்டைச் செய்துவரும் நாள்களில்,

         குறிப்புரை : தமிழ்மாலை பல பாடிய குறிப்பு இதனால் பெறப்படு கின்றது எனினும் `அட்டுமின்` (தி.4 ப.97) எனத் தொடங்கும் திருவிருத்தப் பதிகம் ஒன்றே இதுபொழுது கிடைக்கப் பெற்றுள்ளது.


பெ. பு. பாடல் எண் : 198
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்துஅருளும்
திருஆவூர் திருப்பாலைத் துறைபிறவும் சென்றுஇறைஞ்சிப்
பெருகுஆர்வத் திருத்தொண்டு செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே உள்உருகிப் பணிகின்றார்.

         பொழிப்புரை : நெற்றியில் திருவிழியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கருகாவூர் முதலாகவுள்ள திருஆவூர், திருப்பாலைத்துறை முதலாய பிற பதிகளுக்கும் சென்று வணங்கி, ஆர்வம் பெருகும் திருத்தொண்டுகளைச் செய்து, திருநல்லூரை ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகி அங்குத் தங்கியிருப்பவர்.

         குறிப்புரை : இப்பாடற்கண் குறிக்கப் பெற்ற திருப்பதிகளுள் திரு ஆவூருக்கு உரிய பதிகம் கிடைத்திலது. ஏனைய இரண்டாம்:

1. திருக்கருகாவூர்: `குருகாம்` (தி.6 ப.15) - திருத்தாண்டகம்.
2. திருப்பாலைத் துறை: `நீலமாமணி` (தி.5 ப.51) - திருக்குறுந்தொகை.
 
இனிப் `பிறவும் சென்றிறைஞ்சி` என்பதால் குறிக்கத்தகும் பதிகள் மூன்றாம்:

1.திருஅவளிவண நல்லூர்: - `தோற்றினான்` (தி.4 .59) திருநேரிசை.
2. திருவெண்ணியூர்: (அ). `முத்தினை` (தி.5 ப.17) - திருக்குறுந்தொகை.
                            (ஆ). `தொண்டிலங்கும்` (தி.6 ப.59) - திருக்குறுந் தொகை.
3. திருப்பூவனூர்: `பூவனூர்ப் புனிதன்` (தி.5 ப.65) - திருக்குறுந்தொகை.


திருநாவுக்கரசர் திருப்பதிகம்

4. 059   திருஅவளிவணல்லூர்            திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தோற்றினான் எயிறு கவ்வித்
         தொழில்உடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்
         சிக்கெனத் தவிரும் என்று
வீற்றினை உடையன் ஆகி
         வெடுவெடுத்து எழுந்த வன்தன்
ஆற்றலை அழிக்க வல்லார்
         வளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : தீத்தொழிலை உடைய இராவணன் கோபத்தால் தன் பற்கள் உதட்டைக் கவ்வ வெகுட்சியடைந்த போது அவன் கோபத்தைத் தணிக்க வேண்டித் தேரோட்டி உறுதியாகக் கோபத்தை விடுக்குமாறு சொல்ல , தற்பெருமை உடையவனாகிக் கயிலையைப் பெயர்க்க விரைந்து எழுந்த அவனுடைய ஆற்றலை அழித்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .


பாடல் எண் : 2
வெம்பினார் அக்கர் எல்லாம்
         மிகச்சழக்கு ஆயிற்று என்று
செம்பினால் எடுத்த கோயில்
         சிக்கெனச் சிதையும் என்ன
நம்பினார் என்று சொல்லி
         நன்மையால் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய எய்தார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்த செயல் பெரிய குற்றமாயிற்று . ஆதலால் அச் செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நன்மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்டினாராக , ` நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் ` என்று விரும்பி நோக்கி , இராமபிரான் அம்பினால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமானாவார் .


பாடல் எண் : 3
கீழ்ப்படக் கருத லாமோ
         கீர்த்திமை உள்ளது ஆகில்
தோள்பெரு வலியி னாலே
         தொலைப்பன்நான் மலையை என்று
வேள்பட வைத்த வாறே
         விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : புகழாந் தன்மை என்மாட்டு இருக்குமாயின் எந்நிலையிலும் அப்புகழ் கீழ்ப்பட நினைக்கலாமோ ? ` என் தோள் வலிமையாலே இம்மலையை இடம் பெயர வைக்கிறேன் ` என்று தன் விருப்பம் நிறைவேற இராவணன் செயற்பட்ட அளவிலே அவன் நடுநடுங்கி விழுந்து அடியவனாகுமாறு கருதி விரலால் அழுத்திய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .


பாடல் எண் : 4
நிலைவலம் வல்லன் அல்லன்
         நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலம் கொண்ட செல்வன்
         சீரிய கயிலை தன்னைத்
தலைவலம் கருதிப் புக்குத்
         தாக்கினான் தன்னை அன்று
அலைகுலை ஆக்கு வித்தார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : நிலைத்த வெற்றியை அடையவல்லவன் அல்லனாய் , நேர்மையை நினைக்காமல் , வில்லின் வெற்றியைக் கொண்ட செல்வராய தம்முடைய கயிலைமலையைத் தலைகளின் வலிமையை நினைத்துப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அன்று உடல் வருந்திக் குலையச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .


பாடல் எண் : 5
தவ்வலி ஒன்றன் ஆகித்
         தனதுஒரு பெருமை யாலே
மெய்வ்வலி உடையன் என்று
         மிகப்பெரும் தேரை ஊர்ந்து
செவ்வலி கூர்வி ழி(ய்)யால்
         சிரம்பத்தால் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும் , செருக்கினாலே தன்னை உண்மையான வலிமை உடையவன் என்று கருதி மிகப் பெரிய தேரை ஊர்ந்து சென்று சிவந்த கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை நோக்கித் தன் பத்துத் தலைகளாலும் அதனைத் தூக்க முற்பட்ட இராவணனுடைய வலிமையைப் போக்கிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .


பாடல் எண் : 6
நன்மைதான் அறிய மாட்டான்,
         நடுஇலா அரக்கர் கோமான்,
வன்மையே கருதிச் சென்று
         வலிதனைச் செலுத்தல் உற்று,
கன்மையான் மலையை ஓடிக்
         கருதித்தான் எடுத்து வாயால்
அம்மைஓ என்ன வைத்தார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : நியாய உணர்வில்லாத இராவணன் தனக்கு நன்மையாவது இன்னது என்று அறிய இயலாதவனாய் , தன் உடல் வலிமையையே பெரியதாகக் கருதித் தன் வலிமையைச் செயற்படுத்த முற்பட்டு , கல்லாந் தன்மையுடைய மலையை ஓடிச்சென்று தூக்கமுற்பட்டு வருந்தி , வாயினால் அம்மையோ என்று அலற வைத்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகிறார் .


பாடல் எண் : 7
கதம்படப் போது வார்கள்
         போதும்அக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
         சிக்கெனத் தவிரும் என்று
மதம்படு மனத்த னாகி
         வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத்து உருவு செய்தார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : ` சிவபெருமான் வெகுளும் வகையில் அவனை எதிர்த்துச் செயற்படுபவர்கள் அழிந்து விடுவார்கள் என்ற எண்ணத்தால் இதற்கு முன் எல்லாச் செயல்களிலும் வெற்றியையே அடைந்த தாங்கள் தோல்வி தரக்கூடிய இச்செயலைத் தவிர்த்து விடுங்கள்` என்ற தேரோட்டி சொல்லை மதியாது செருக்குக் கொண்ட மனத்தினனாய்த் தன் உடல் வன்மையால் கயிலையைப் பெயர்க்க மிகவும் முயல, அவ்விராவணன் உடம்பை அத்திப்பழம் போலச் சிவந்தும் குழைந்தும் நசிந்தும் போகுமாறு செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .


பாடல் எண் : 8
நாடுமிக்கு உழிதர் கின்ற
         நடுஇலா அரக்கர் கோனை
ஓடுமிக்கு என்று சொல்லி
         ஊன்றினான் உகிரி னாலே
பாடிமிக்கு உய்வன் என்று
         பணியநல் திறங்கள் காட்டி
ஆடுமிக்கு அரவம் பூண்டார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : பல நாடுகளிலும் சுற்றித் திரிந்த நியாய உணர்வில்லாத இராவணனை இவ்விடத்தை விட்டு விரைந்தோடு என்று அதட்டிக் கால்விரல் நகத்தினாலே அவனை ஊன்ற , நசுங்கிய அவன் மிகுதியாகப் பாடி உயிர் பிழைப்பேன் என்று எண்ணி , பாடிப் பணிய அவனுக்குப் பலநன்மைகளைச் செய்தவராய்ப் படமெடுத்து ஆடும் பாம்புகளை மிகுதியாக அணிந்தவராகிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .


பாடல் எண் : 9
ஏனமாய் இடந்த மாலும்,
         எழில்தரு முளரி யானும்,
ஞானந்தான் உடையர் ஆகி
         நன்மையை அறிய மாட்டார்,
சேனம்தான் இலா அரக்கன்
         செழுவரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : பன்றி வடிவெடுத்துப் பூமியைத் தோண்டிச் சென்ற திருமாலும் , அழகிய தாமரையில் உறையும் பிரமனும் ஞானம் உடையவராய்த் தமக்கு நன்மை எது என்று அறியமாட்டாதவராய் இருந்தனர் . பருந்துபோலப் பல இடங்களிலும் உலாவும் தன்மையை உள்ள இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க அவனை அழுத்திப் பின் அவனுக்கு மகிழ்ச்சி தரும் அருள்களைச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .


பாடல் எண் : 10
ஊக்கினான் மலையை ஒடி
         உணர்விலா அரக்கன் தன்னைத்
தாக்கினான் விரலி னாலே
         தலைபத்தும் தகர ஊன்றி,
நோக்கினான் அஞ்சத் தன்னை
         நோன்புஇற ஊன்று சொல்லி,
ஆக்கினார் அமுதம் ஆக
         அவளிவ ணல்லூ ராரே.

         பொழிப்புரை : ஓடிச் சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அறிவில்லாத இராவணனைக் கால்விரலால் அழுத்திப் பத்துத் தலைகளும் நொறுங்கச் செய்து அவன் அஞ்சுமாறு அவனுடைய நோன்பின் பயன்களுங் கெட நோக்கிய பெருமான் பின் அவனை அழுத்தியதால் ஏற்பட்ட துயரைப் போக்கி அமுதம் போல் உதவி அவனை அழியாமற் காத்தார் அவளிவணல்லூரார்.

திருச்சிற்றம்பலம்

1 comment:

  1. நல்ல பொழிப்புரை
    பாராட்டி வணங்குகிறேன்

    ReplyDelete

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...