அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இகல வருதிரை
(திருமயிலை)
முருகா!
உமது அடியவருடன் கூடி
அருளைப் பெற்று உய்ய
அருள் புரியும் நாள் எந்த
நாள்?
தனன
தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இகல
வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு பிறவியி
னினிமை பெறவரு மிடருறு மிருவினை ......
யதுதீர
இசையு
முனதிரு பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி
...... உமைபாகர்
மகிழு
மகவென அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ......
மடமாதர்
மயம
தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ .....தொருநாளே
சிகர
தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு
திறைய அறைபயி லறுமுக நிறைதரு ......
மருணீத
சிரண
புரணவி தரணவி சிரவண
சரணு சரவண பவகுக சயனொளி
திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத
அகர
உகரதி மகரதி சிகரதி
யகர அருளதி தெருளதி வலவல
அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் .....விடுவோனே
அழகு
மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லநுதின
மமரு மரகர சிவசுத அடியவர் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
இகல
வரு திரை பெருகிய சலநிதி
நிலவும் உலகினில் இகம் உறு பிறவியின்
இனிமை பெற, வரும் இடர் உறும் இருவினை
...... அது தீர,
இசையும்
உனது இரு பதமலர் தனை, மனம்
இசைய நினைகிலி, இதம்உற உனது அருள்
இவர உருகிலி, அயர்கிலி, தொழுகிலி,
...... உமைபாகர்
மகிழும்
மகவு என அறைகிலி, நிறைகிலி,
மடமை குறைகிலி, மதி உணர்வு அறிகிலி,
வசனம் அற, உறு மவுனமொடு உறைகிலி,
......மடமாதர்
மயம்
அது அடரிட இடர் உறும் அடியனும்
இனிமை தரும் உனது அடியவர் உடன் உற,
மருவ, அருள் தரு கிருபையின் மலிகுவது .....ஒருநாளே?
சிகர
தனகிரி குறமகள் இனிது உற,
சிலத நலம்உறு சிலபல வசனமும்
திறைய அறை பயில் அறுமுக! நிறைதரும்
.....அருள்
நீத!
சிரண
புரண விதரண! வி சிரவண!
சரணு சரவணபவ! குக! சயன்ஓளி
திரவ பர! அதி சிர மறை முடிவுறு ...... பொருள்நீத!
அகர
உகரதி மகரதி சிகரதி!
அகர அருளதி! தெருளதி! வலவல
அரணம் முரண் உறும் அசுரர்கள் கெடஅயில்
.....விடுவோனே!
அழகும்,
இலகிய புலமையும், மகிமையும்,
வளமும் உறை, திரு மயிலையில் அநுதினம்
அமரும் அரகர சிவசுத! அடியவர் ......
பெருமாளே.
பதவுரை
சிகர தனகிரி குறமகள்
இனிது உற
--- உயர்ந்த மலை போன்ற தனங்களை உடைய குறவர் மகளான வள்ளியம்மையார் மனம் இனிமை
அடையுமாறு
சிலத நலம் உறு சிலபல
வசனமும்
--- காவலன் போன்று அவளிடம் நன்மை பயக்கும் சில பல சொற்களை
திறைய அறை பயில்
அறுமுக ---
அள்ளி வீசிப்
பேசிப் பயின்ற ஆறுமுகக் கடவுளே!
நிறை தரும் அருள் நீத --- நிறைவைத்
தருகின்ற அருள் கொண்ட நீதி வடிவானவனே!
சிரண புரண --- பெருமை நிறைந்த
பூரணமானவரே!
விதரண ---- உயிர்கள் மீது கொண்ட
இரக்க குணம் உடையவரே!
விசிரவண --- நிரம்பிய
கேள்விக்கு உரியவரே!
சரணு --- இறைவரே!
சரவண பவ --- சரவணப் பொய்கையில்
அவதரித்தவரே!
குக --- அடியார்களின் இதயமாகிய
குகையில் எழுந்தருளி இருப்பவரே!
சயன் ஒளி திரவ --- அருள் ஒளியின்
சாரமே,
பர --- பரம்பொருளே!
அதி சிர --- மேன்மை
பொருந்தியவரே!
மறை முடிவுறு பொருள் நீத ---
வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியரே!
அகர --- அகரம் போன்று
முதன்மைப் பொருளாக விளங்குபவரே!
உகரதி --- உகர சிவசக்தியாக விளங்கும்
நல்லறிவே,
மகரதி --- ஆணவத்தின் ஒரு கூறு ஆகிய மமகாரத்தை
ஒழிப்பவரே!
சிகரதி --- அன்பு வடிவாகிய
சிவபரம்பொருளே!
யகர அருளதி தெருளதி --- யகரமாகிய உயிர்களுக்கு
அருள் புரிந்து தெருளைப் புரிபவரே!
வலவல அரண முரண் உறும்
அசுரர்கள் கெட அயில் விடுவோனே --- மிக்க வலிமை பொருந்திய அரண்களை
உடையவரும், மாறுபாடு
கொண்டவரும் ஆகிய அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
அழகும் --- பேரழகும்,
இலகிய புலமையும் --- விளங்கும் கல்வி
ஞானமும்,
மகிமையும் --- பெருமையும்,
வளமும் உறை --- அருள் வளப்பமும் கொண்ட
திரு மயிலையில் அநுதினம்
அமரும்
--- திரு மயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் எந்நாளும் எழுந்தருளி இருக்கும்,
அரகர சிவசுத --- பாவங்களைப்
போக்குபவரான சிவபெருமானின் திருப்புதல்வரே!
அடியவர் பெருமாளே --- அடியவர்கள்
போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
இகல வருதிரை பெருகிய
சலநிதி நிலவும் உலகினில் --- மாறுபட்டு எழுகின்ற அலைகள் பெருகிய
கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த நில உலகினில்,
இகம் உறு பிறவியின் --- இப்போது
எடுத்துள்ள பிறப்பினால்
இனிமை பெற --- இன்பத்தை
அனுபவிக்கவும்,
வரும்
இடர் உறும் இருவினை அது தீர --- துன்பத்தை அனுபவிக்கவும் வருகின்ற நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் நீங்க,
இசையும் உனது இரு பதமலர் தனை ---
பொருந்தி உள்ள உமது திருப்பாத கமலங்களை,
மனம் இசைய நினைகிலி --- மனமானது பொருந்த
நினையாதவன் அடியேன்,
இதம் உற உனது அருள்
இவர உருகிலி
--- இன்பத்தை அடையுமாறு, உனது திருவருள்
பொருந்துமாறு
உள்ளம்
உருகித்
துதியாதவன் அடியேன்,
அயர்கிலி --- பத்தி
உணர்வால் உடல் சோர்வு படாதவன்,
தொழுகிலி --- வணங்காதவன்,
உமைபாகர் மகிழும் மகவு
என அறைகிலி
--- உமாதேவியைப் பாகத்தில் கொண்ட சிவபிரான் மகிழ்கின்ற திருப்புதல்வன் என்று வாயாரக்
கூறாதவன்,
நிறைகிலி --- உள்ள நிறைவு
பெறாதவன்,
மடமை குறைகிலி --- அறியாமை சிறிதும்
குறையாதவன்,
மதி உணர்வு அறிகிலி --- அறிவும், உணர்வும் இல்லாதவன்,
வசனம் அற உறு
மவுனமொடு உறைகிலி --- பேச்சற்று,
மன
உடர்வு அற்று இருக்காதவன்,
மடமாதர் மயம் அது
அடரிட இடர் உறும் அடியனும் --- அழகிய பெண்களின் மயக்கும் எழிலானது
மனத்தில் நிறைந்திருக்க, அதனால் துன்பம் அடைகின்ற
அடியவனாகிய நானும்,
இனிமை தரும் உனது
அடியவர் உடன் உற மருவ --- உயிர்க்கு இன்பத்தை நல்கும் உனது
அடியார்களுடன் பொருந்தி இருக்க
அருள் தரு கிருபையின்
மலிகுவது ஒரு நாளே --- திருவருட் கருணையில் மகிழ்ந்து இருக்கும் ஒரு நாளும்
உண்டாகுமோ?
பொழிப்புரை
உயர்ந்த மலை போன்ற தனங்களை உடைய குறவர்
மகளான வள்ளியம்மையார் மனம் இனிமை அடையுமாறு காவலன் போன்று அவளிடம் நன்மை பயக்கும் சில பல சொற்களை அள்ளி வீசிப் பேசிப் பயின்ற ஆறுமுகக் கடவுளே!
நிறைவைத் தருகின்ற அருள் கொண்ட நீதி
வடிவானவனே!
பெருமை நிறைந்த பூரணமானவரே!
உயிர்கள் மீது கொண்ட இரக்க குணம் உடையவரே!
நிரம்பிய கேள்விக்கு உரியவரே!
இறைவரே!
சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!
அடியார்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி
இருப்பவரே!
அருள் ஒளியின் சாரமே,
பரம்பொருளே!
மேன்மை பொருந்தியவரே!
வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியரே!
அகரம் போன்று முதன்மைப் பொருளாக விளங்குபவரே!
உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே,
ஆணவத்தின் ஒரு கூறு ஆகிய மமகாரத்தை
ஒழிப்பவரே!
அன்பு வடிவாகிய சிவபரம்பொருளே!
யகரமாகிய உயிர்களுக்கு அருள் புரிந்து
தெருளைப் புரிபவரே!
மிக்க வலிமை பொருந்திய அரண்களை
உடையவரும், மாறுபாடு
கொண்டவரும் ஆகிய அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
பேரழகும், விளங்கும் கல்வி ஞானமும், பெருமையும், அருள் வளப்பமும் கொண்ட திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில்
எந்நாளும் எழுந்தருளி இருந்து, உயிர்களின் பாவங்களைப்
போக்குபவரான சிவபெருமானின் திருப்புதல்வரே!
அடியவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
மாறுபட்டு எழுகின்ற அலைகள் பெருகிய கடல்களால்
சூழப்பட்டுள்ள இந்த நில உலகினில்,
இப்போது
எடுத்துள்ள பிறப்பினால் இன்பத்தை அனுபவிக்கவும், துன்பத்தை அனுபவிக்கவும் வருகின்ற நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் நீங்க, பொருந்தி உள்ள உமது திருப்பாத கமலங்களை மனமானது பொருந்த நினையாதவன் அடியேன்.
இன்பத்தை
அடையுமாறு, உனது திருவருள்
பொருந்துமாறு
உள்ளம்
உருகித்
துதியாதவன் அடியேன். பத்தி உணர்வால் உடல் சோர்வு படாதவன். உம்மை வணங்காதவன். உமாதேவியைப் பாகத்தில் கொண்ட சிவபிரான்
மகிழ்கின்ற திருப்புதல்வன் என்று வாயாரக் கூறாதவன். உள்ள நிறைவு பெறாதவன். அறியாமை சிறிதும் குறையாதவன். அறிவும், உணர்வும் இல்லாதவன். உரை அற்று, உணர்வு அற்று இருக்க அறியாதவன். அழகிய பெண்களின் மயக்கும் எழிலானது
மனத்தில் நிறைந்திருக்க, அதனால் துன்பம் அடைகின்ற
அடியவனாகிய நானும், உயிர்க்கு இன்பத்தை
நல்கும் உனது அடியார்களுடன் பொருந்தி இருக்க, உமது திருவருட் கருணையில் மகிழ்ந்து
இருக்கும் ஒரு நாளும் உண்டாகுமோ?
விரிவுரை
இகல
வருதிரை பெருகிய சலநிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியின் ---
இகலுதல்
- மாறுபடுதல், போட்டி போடுதல், ஒத்தல்.
சலநிதி
- கடல்.
இகம்
- இம்மை, இம்மைப் பிறவி.
காரண
காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக
வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம்.
இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை அடிகளார் இங்குக் குறித்தார் எனக்
கொள்ளலாம்.
செய்த
வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியேப்
பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.
"தனியனேன்
பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால்
எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியை
நேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு, காமவான் சுறவின்
வாய்ப்பட்டு,
இனி
என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி,
அஞ்செழுத்தின்
புணைபிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே!
முதல் அந்தம் இல்லா மல்லல்
கரை
காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே"
என்றார்
மணிவாசகப் பெருமான்.
கடலில்
வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது. பிறவியில்
வீழ்ந்தோறும் முத்திக் கரையில் ஏறுதல் அரிது. அதனால் பிறவியைக் கடல் என்றார். 'பிறவிப் பெருங்கடல்' என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடலில்
அலை ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன்பின் ஒன்றாக
வந்துகொண்டிருக்கும், ஓயாது. அதனால்
துன்பத்தை அலை என்றார். புயல் காற்று, கலக்கத்தைச்
செய்யும், மகளிரின் தோற்றமும்
கண்டாரைக் கலங்கச் செய்யும், அதனால் மகளிரைப் புயல்
காற்று என்றார். சுறாமீன், தன் வாயில்பட்டாரை
உள்ளே விழுங்கும். ஆசை வயப்பட்டோரும்
அல்லலில் அழுந்துவர். அதனால் காமத்தைச் சுறாமீன் என்றார்.
தெப்பத்தைக்
கொண்டு கடலைக் கடக்கலாம். திருவைந் தெழுத்தாகிய
மந்திரத்தைக் கொண்டு பிறவியைக் கடக்கலாம். அதனால், ஐந்தெழுத்தைப் 'புணை' என்றார். 'வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத்து' என்றார் சேக்கிழார்
சுவாமிகள். மீகாமன் தெப்பத்தால் மக்களைக் கரையில் சேர்க்கிறான். இங்கு முதல்வன் அஞ்செழுத்தால் மணிவாசகப்
பெருமானை முத்தியில் சேர்த்தான் என்பதால், 'முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி
ஆட்கொண்டாய்' என்றார்.
இப்பிறவி என்னும் ஓர் இருட்கடலில்
மூழ்கி, நான்
என்னும் ஒரு மகரவாய்ப்பட்டு,
இருவினை எனும் திரையின் எற்றுண்டு, புற்புதம்
எனக்கொங்கை வரிசைகாட்டும்
துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்ட மாருதச்
சுழல்வந்து வந்து அடிப்ப,
சோராத ஆசையாம் கான் ஆறு வான்நதி
சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
கைவிட்டு, மதிமயங்கி,
கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
கண் அருவி காட்டும் எளியேன்,
செப்பரிய முத்தியாம் கரை சேரவும் கருணை
செய்வையோ? சத்து ஆகி, என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தேசோ மயானந்தமே!
என்றார்
தாயுமான அடிகளார்.
துன்பக்
கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக்
கரைமுகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு
ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், அப்பொய்பொருந்தா
அன்பர்க்கு
அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.
என்றருளினார்
அப்பர் பெருமான்.
அறிவு
இல் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்,
கடும்பிணித்
தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன
பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்மீ
காமன் உய்ப்ப, அந்நிலைக்
கருவெனும்
நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலன்
எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு
எனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும்
துயர்த்
திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம்
என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை
எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு
எனும் நெடும்பாய் கீறி,புணரும்
மாயப்
பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு
கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன்
அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை
அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல்
எயில் உடுத்த தில்லை காவல!
வமபு
அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள்
எனும் நலத்தார் பூட்டி,
திருவடி
நெடுங்கரை சேர்த்துமா செய்யே.
என்று
கோயில் நான்மணிமாலையில்
அருளினார் பட்டினத்து அடிகள்.
இனிமை
பெற, வரும் இடர் உறும்
இருவினை அது தீர ---
ஆன்மாக்கள்
இன்பத்தில் திளைக்கவேண்டும் என்பதற்காகவே இறைவன் இந்த மானுடப் பிறவியைத் தந்தான்.
பிறவியில் அனுபவிக்க வந்த உயிரானது அதனை ஆதியிலையே பொருந்தியுள்ள ஆணவத்தின்
காரணமாக அறிவிழந்து, அறிவு மயக்கம்
கொண்டு இருவினைகளை அனுபவிக்கும்போது, இன்பத்தைத்
துன்பமாகவும்,
துன்பம்
தருவதை இன்பகாமவும் எண்ணி அனுபவித்து மேலும் வினைகளைப் பெருக்கி இடர் உறுகின்றன.
வினையினால்
வந்த இந்த உடம்பு வினைக்கு விளைவு ஆக நின்றது.
நல்வினை
தீவினை என்று இருவினைகளினால் இந்த உடம்பு வந்தது. அவ் வினைப்போகம் துய்க்கும்
அளவும் இது நிலைபெறும். துய்ப்பு முடிந்தவுடன் தினை அளவு நேரம் கூட இவ்வுடம்பு
நில்லாது. வீழ்ந்து படும்.
அறம்பாவம்
என்னும் அரும்கயிற்றால் கட்டிப்
புறந்தோல்
போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி
மலம்
சோரும் ஒன்பது வாயில் குடிலை... --- மணிவாசகம்.
வினைப்போகமே
ஒருதேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால்
தினைப்போதுஅளவு
நில்லாது கண்டாய், சிவன்பாதம் நினை,
நினைப்போரை
மேவு, நினையாரை நீங்கி
நெறியில்நின்றால்
உனைப்போல்
ஒருவர் உண்டோ, மனமே, எனக்கு உற்றவரே. --- பட்டினத்தார்.
இந்த
உடம்பு ஒரு அகல். புண்ணியபாவம் அதில் விட்ட நெய்.
வாழ்நாள் அதில் இட்ட திரி. உயிர் எரிகின்ற விளக்கு. நெய் உள்ளவரை விளக்கு எரியும்.
புண்ணிய
பாவம் இரண்டும் நெய்என்று, மனம் கரி,
பூட்டும்
வாழ்நாள் அதில் போட்டு வைத்த திரி,
எண்ணிப்
பார்க்கில் இதில் உயிர் விளக்கே சரி,
இரண்டும்
போனால் விளக்குஇருக்குமோ அரிகரி. --- அருணாசலக் கவி.
உலகில்
உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன.
சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின்
எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்? உயர்குடியில்தானே
பிறக்கும்?
இறைவன்
ஆணையின் வழி இவை நிகழ்கின்றன. அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன்
ஆகின்றான். இது இறைவனுடைய
அருட்குணத்திற்கு முரணாக அமையும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் ஐந்தொழில்களையும் புரிகின்றான்.
அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இன்று என்று அறிக.
நிமித்தகாரணன்
ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும்
துணைக் காரணம் என்க.
வினையின்
வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால்,
இறைவன்
எதற்கு? எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.
ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு
இறைவன் வேண்டும் என்று உணர்க.
இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து
நுகருமே? ஆதலின் வினைகளை
ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா. அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன்
இன்றியமையாதவன் ஆகின்றான்.
அப்படி
ஆயின், வினையின் வழியே
உயிர்கட்கு, இறைவன்
சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய
சுதந்திரத்துக்கு இழுக்கு உண்டாகுமா என்றால், உண்டாகாது. குடிகளுடைய குணம்
குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு
இல்லை என்பது போன்று.
வினை
ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம்
பிழைபடும். ஆகவே, வினை அநாதியே உண்டு. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.
நெல்லிற்கு
உமியும், நிகழ்செம்பினில்
களிம்பும்,
சொல்லில்
புதிதுஅன்று, தொன்மையே, ---
வல்லி
மலகன்மம்
அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம்
செய்கமலத்து ஆம்.
இருவினையின் காரியமான
இன்பதுன்ப முதலாயின
வினை மூவுருவம்
கொள்ளும்
வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய
அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள்
என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.
பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்தி தத்துவத்தினிடமாக
மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர்
பெறும்.
வினை
பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள்
எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.
அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால்
பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப்
பெயர் பெறும்.
எனவே
ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.
ஆகாமியம்
- செய்யப்படுவது.
சஞ்சிதம்
- பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம்
- அநுபவிப்பது.
இனி, பிராரத்தம் ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும்
என்றோமே, அதன் விவரம்
வருமாறு....
(1) ஆதி தைவிகம் --- தெய்வத்தால்
வரும் இன்பதுன்பங்கள்.
அவை
--- கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப
துன்பங்களாம்.
கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில்
திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு
தைவிகம்என்று ஓர்.
(2) ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.
அவை
--- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம், மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப
இன்பங்களாம்.
தன்னால்
பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா
விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்
அட்டை
அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும்
இங்கு ஆன்மிகமே காண்.
(3) ஆதிபௌதிகம் --- மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.
அவை
--- குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி, தென்றல் முதலியன.
பனியால்
இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம்
சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில்
பவுதிகம் ஆகும்.
இன்னும்
உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.
1. உலக வினை --- கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால்
உண்டாவதாய், நிவிர்த்தி கலையில்
அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
2. வைதிக வினை --- வேதத்துள்
விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய
புவனபோகங்களைத் தருவது.
3. அத்தியான்மிக வினை --- வேதநெறியால் செய்யும் பூசனை துறவு
முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில்
அடங்கிய புவன போகங்களைத் தருவது.
4. அதிமார்க்க
வினை --- இயமம் நியம் முதலிய யோகப்
பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில்
அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
5. மாந்திர வினை --- சுத்த
மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய
புவனபோகங்களைத் தருவது.
இதுகாறும்
ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை
காரணம். அவ்வினை அற்றால் அன்றி பிறவி
அறாது எனத் தெளிக.
இருவினை
முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய்
நீயும் நானுமாய்
இறுகும்வகை
பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா
லோகநாயகா. --- (அறுகுநுனி) திருப்புகழ்.
அவையே
தானே ஆய், இருவினையில்
போக்குவரவு
புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி
நிற்கும்அன்றே.
என்ற
சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு
மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல்
புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.
இருவினைகள்
என்னும் புண்ணியம் பாவம் இரண்டும் ஒழியவேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். பாவம்
நரகத்தில் கொண்டு சேர்க்கும். புண்ணியம் சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். எனவே, இருவினைகளும் பிறவி என்னும் துன்பத்தில்
கொண்டு சேர்க்கும் என்பதால், திருவள்ளுவ நாயனார் "இருள்சேர்
இருவினை" என்றார். இதற்கு உரை வகுத்திட்ட பரிமேலழகர் பெருமான், "நல்வினையும்
பிறவிக்கு ஏதுவாகலான்" என்றார். இது குறித்தே அடிகளார் "இடர் உறும்
இருவினை அது தீர" என்று அருளினார். "இருவினை மும்மலமும் அற" என்று
அருளினார் திருவிடைமருதூர்த் திருப்புகழில்.
"கடிமலர்க்
கொன்றைச் சடைமுடிக் கடவுளை,
ஒழவு
அரும் சிவபெரும் போக இன்பத்தை,
நிழல்
எனக் கடவா நீர்மையொடு பொருந்தி,
எனது
அற, நினைவு அற, இருவினை மலம் அற,
வரவொடு
செலவு அற, மருள் அற, இருள் அற,
இரவொடு
பகல் அற, இகபரம் அற, ஒரு
முதல்வனை, தில்லையுள் முளைத்து எழும் சோதியை,
அம்பலத்து
அரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினில்
அரக்கு என நெக்கு நெக்கு உருகித்
திருச்சிற்றம்பலத்து
ஒளிரும் சிவனை,
நினைமின்
மனனே! நினைமின் மனனே!
சிவபெருமானை, செம்பொன் அம்பலவனை
நினைமின்
மனனே! நினைமின் மனனே!"
என்னும்
பட்டினத்து அடிகளின் பாடல் பகுதியும் உணர்தற்கு உரியது.
இசையும்
உனது இரு பதமலர் தனை மனம் இசைய நினைகிலி ---
இசைதல்
- பொருந்துதல், ஒத்துச் சேர்தல், உடன்படுதல், கிடைத்தல், இயலுதல்.
இந்தப்
பிறவியில் வழிபட்டு உய்யக் கிடைத்துள்ளது இறைவன் திருவடி. அது எல்லா உயிர்களிலும்
பொருந்தி உள்ளது. அத் திருவடிகளை மனம், மொழி, மெய் என்னும்
முக்கரணங்களாலும் வழிபட வேண்டும். மனமானது நிறைந்தால், வாயானது வாழ்த்தும், உடம்பானது அவன்
திருவடிகளை வணங்கி, அருட்செயல்களில் ஈடுபடும்.
இதம்
உற உனது அருள் இவர உருகிலி ---
இதம்
- இன்பம், நன்மை, இதயம், இது, ஞானம்.
இங்கே
இன்பமாகிய நன்மையை அடைய என்னும் பொருளில் வந்தது.
இவர்தல்
- பொருந்துதல்.
"மாது
இவர் பாகன், மறை பயின்ற
வாசகன்" என வரும் மணிவாசகத்தை உணர்க.
உயிரானது
இன்பத்தையும் நன்மையையும் அடையவேண்டுமானால். திருவருள் வாய்க்கவேண்டும். திருவருள் வாய்க்க
வேண்டு்மானால்,
இறைவனை
உள்ளம் உருக வழிபடவேண்டும்.
வெள்ளந்தாழ்
விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்
பெருமானே!
எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம்
தாழ் உறுபுனலில் கீழ்மேல் ஆகப்
பதைத்து
உருகும் அவர் நிற்க, என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள்
நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால், உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளம்
தான் பாயாதால்,
நெஞ்சம்
கல்லாம்,
கண்இணையும்
மரமாம் தீவினையினேற்கே.
என
வரும் திருவாசகப் பாடல் உள்ளமானது எப்படி உருகவேண்டும் என்பதைக் காட்டும்.
"என்பெலாம்
நெக்குஉடைய, ரோமம் சிலிர்ப்ப, உடல்
இளக, மனது அழலின் மெழுகாய்
இடையறாது உருக, வரு மழைபோல் இரங்கியே
இருவிழிகள் நீர் இறைப்ப,
அன்பினால்
மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே
அமிர்த சஞ்சீவி போல் வந்து
ஆனந்த மழை பொழிவை, உள்ளன்பு இலாத எனை
யார்க்காக அடிமைகொண்டாய்,
புன்புலால்
மயிர்தோல் நரம்பு என்பு மொய்த்திடு
புலைக் குடிலில், அருவருப்புப்
பொய் அல்லவே, இதனை மெய்யென்று நம்பி,என்
புந்தி செலுமோ? பாழிலே
துன்பமாய்
அலையவோ? உலகநடை, ஐய, ஒரு
சொற்பனத்திலும் வேண்டிலேன்,
சுத்தநிர்க் குணமான பரதெய்வமே பரஞ்
சோதியே சுகவாரியே". ---
தாயுமானார்.
அயர்கிலி தொழுகிலி
---
பத்தி
உணர்வால் தொழுது, அழுது, உள்ளம்
உருகும்போது,
உடல்
சோர்வு பட்டுப் போகும்.
உமைபாகர்
மகிழும் மகவு என அறைகிலி ---
உமாதேவியைப்
பாகத்தில் கொண்ட சிவபிரான் மகிழ்கின்ற திருப்புதல்வரே என்று வாயாரக் கூறி வழிபட
வேண்டும்.
நிறைகிலி ---
நிறைவு
- உள்ளம் நிறைவு.
"செல்வம்
என்பது சிந்தையின் நிறைவே" என்றார் குமரகுருபர அடிகள்.
"கொள்கையினால்
உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே" என்றார்
திருஞானசம்பந்தப் பெருமான்.
மடமை
குறைகிலி
---
பதி, பசு, பாசம் என்னும்
முப்பொருள் உண்மையைத் தெளியத் தெளிய, உயிரிலே உள்ள அறியாமை என்னும் அஞ்ஞானமானது
சிறிது சிறிதாகக் குறையும்.
மதி
உணர்வு அறிகிலி ---
அஞ்ஞானமானது
குறைவதற்கு ஏற்ப அருள் நூல்களை ஓதி வரவேண்டும். ஓதித் தெளிந்தவர்களைப் போற்ற
வேண்டும். அறிவானது உணர்விலே நிறைய வேண்டும். உணர்வு பெறாமல் ஓதுதவது பயன் தராது.
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுதல்" வேண்டும் என்றார்
மணிவாசகப் பெருமான்.
"தெய்வம்
தெளிமின்,
தெளிந்தார்ப்
பேணுமின்" என்றார் இளங்கோ அடிகள்.
கற்ற
மேலவரொடும் கூடி நில்லேன், கல்வி
கற்கும்நெறி தேர்ந்து கல்லேன்,
கனிவு கொண்டு உனது திருவடியை ஒருகனவிலும்
கருதிலேன், நல்லன் அல்லேன்,
குற்றமே
செய்வது என் குணமாகும், அப்பெருங்
குற்றம் எல்லாம் குணம் எனக்
கொள்ளுவது நின் அருட்குணம் ஆகும், என்னில், என்
குறை தவிர்த்து அருள் புரிகுவாய்!
பெற்றமேல்
வருமொரு பெருந்தகையின் அருள் உருப்
பெற்று எழுந்து ஓங்கு சுடரே!
பிரணவ ஆகார சின்மய! விமல சொரூபமே!
பேதம்இல் பரப் பிரமமே!
தன்தகைய
சென்னையில் கந்த கோட்டத்துள்வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வ மணியே.
என்று
வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய திருப்பாடல் கருத்தை உள்ளத்தில்
எப்போதும் கொள்ளுதல் வேண்டும்.
வசனம்
அற உறு மவுனமொடு உறைகிலி ---
இப்படி
எல்லாம் இறைவனை வழிபட்டதன் பயனாக உரை அற்று, உணர்வு அற்றுப் போய், மனமானது சலனம் இல்லாமல்
தெளிந்த நீர் போல், காற்று அறியாத் தீபம் போல் இருக்கும் பக்குவத்தைப்
பெறவேண்டும்.
"இறைவன்
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மணிவாசகப் பெருமான். "உரை
உணர்வு இறந்து நின்று உணர்வது ஓர் உணர்வே! யான் உன்னை உணருமாறு உணர்த்தே"
என்றும் வேண்டி அருளினார்.
"உனும்
உணர்வு உணர்வாய், உணர்வு எலாம்
கடந்த அனுபவ அதீத அருட்பெருஞ்சோதி", "உரை மனம் கடந்தாங்கு ஓங்கு பொன்
மலையே" என்றார் வள்ளல் பெருமான்.
அறிவு
வடிவாக நிளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில்
எல்லையாகத் திகழ்வது மோனம் என உணர்க. "மோனம் என்பது ஞானவரம்பு" என்று
உபதேசிக்கின்றார் ஔவையார்.
இறைவன்
திருவருளால் ஆசை என்னும் விலங்கு அறுபட்ட நிலையில், பேசா அனுபூதி பிறக்கும் என்பதை, "நினது அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின், பேசா அனுபூதி பிறந்ததுவே" என்றார் அடிகளார்.
மன
சம்பந்தம் அற்ற இடத்திற்கு மௌனம் என்று பேர்.
வாய்
பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும்.
அது வாய்மௌனம்
எனப்படும்.
கைகால்
அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு காஷ்டமௌனம் என்று பேர்.
மனமே
அற்ற நிலைக்குத் தான் பூரண மௌனம் என்று பேர்.
அங்கே
தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும்.
அந்த
இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திர போக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.
இந்த
மௌனத்தை அருளுமாறு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகக் கடவுளை வேண்டுகின்றார்.
அருவம்
இடைஎன வருபவர், துவர்இதழ்
அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ...... அதிபார
அசல
முலைபுள கிதம்எழ, அமளியில்
அமளி படஅந வரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்
தருவை
நிகரிடு புலமையும் அலம்அலம்,
உருவும் இளமையும் அலம்அலம், விபரித
சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்
சலில
லிபியன சனனமும் அலம்அலம்,
இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் ......
அருள்வாயே.. --- திருப்புகழ்.
அகலம்
நீளம் யாதாலும், ஒருவராலும் ஆராய
அரிய மோனமே கோயில் ...... எனமேவி,
அசையவே
க்ரியா பீட மிசை புகா, மகா ஞான
அறிவின் ஆதர ஆமோத ...... மலர்தூவி,
சகல
வேதன அதீத, சகல வாசக அதீத,
சகல மா க்ரியா அதீத, ...... சிவரூப,
சகல
சாதக அதீத, சகல வாசனை அதீத
தனுவை நாடி, மா பூசை ...... புரிவேனோ?
அந்த
மோனமாகிய கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை
ஞானகுரு உணர்த்த உணர்வினாலேயே உணரமுடியும்.
அதனைப் பெற்ற தாயுமானப் பெருந்தகையார் கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு
உன்னுக...
ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்
மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து
சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,
எல்லாம்நல் மோனவடி வே.
எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத
நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு
ஏன்அலைந்தேன் மோனகுரு வே.
மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி
நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது
என்றுஅறிந்தேன் ஆனந்த மே.
அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை,
மறிந்த மனம் அற்ற மவுனம் -
செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.
குருஆகித் தண்அருளைக் கூறுமுன்னே, மோனா!
உரு,.நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன
வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
ஈங்குஒருவர் உண்டோ இனி.
இனிய கருப்புவட்டை என் நாவில் இட்டால்
நனிஇரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்
பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்
கற்றிலேன் ஏதும் கதி.
ஏதுக்கும் சும்மா இரு நீ என உரைத்த
சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து
நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்
கொன்றதற்கோ பேசாக் குறி.
குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து
அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்
சும்மா இருத்திச் சுகம் கொடுத்த மோன!
நின்பால்
கைம்மாறு நான்ஒழிதல் காண்.
நான்தான் எனும் மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை
வான்தான் எனநிறைய மாட்டாய் நீ, - ஊன்றாமல்
வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து
துய்த்துவிடும் ஞான சுகம்.
ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமம் தழைத்த குரு, - மானமொடு
தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு, என்சிந்தை
கோயில்என வாழும் குரு.
சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லை என்ற
நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை
பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் குரு.
மடமாதர்
மயம் அது அடரிட இடர் உறும் அடியனும் இனிமை தரும் உனது அடியவர் உடன் உற மருவ ---
மயம்
என்னும் சொல்லுக்கு, அழகு, தன்மை, நிறைவு, சொத்து, பொருள், மகிழ்ச்சி, செருக்கு எனப்
பொருள்கள் உண்டு. இங்கே, அழகு என்னும் பொருளில் வந்தது.
அடர்த்தல்
என்னும் சொல்லுக்கு, நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல், கொல்லுதல், கெடுத்தல்
என்னும் பொருள்கள் உண்டு.
பெண்களின்
எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி
வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.
இந்த
மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, இறையருள் பெற்ற
அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும்
விட்டு வைத்தது இல்லை.
"துறந்தோர்
உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத்
தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று ருமுகப் பெருமானிடம்
அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.
உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு
எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான்
போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர்
உள்ளத்தையும் மயக்கும்.
துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப்
பிடிப்பர்.
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப்
பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?
---
கந்தர் அலங்காரம்.
அரிசன வாடைச் சேர்வை குளித்து,
பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
அலர்குழல் ஓதிக் கோதி
முடித்துச் ...... சுருளோடே
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
அகில் புழுகு ஆரச் சேறு
தனத்துஇட்டு,
...... அலர்வேளின்
சுரத விநோதப் பார்வை மை இட்டு,
தருண கலாரத் தோடை தரித்து,
தொழில்இடு தோளுக்கு ஏற
வரித்திட்டு,.....இளைஞோர்மார்,
துறவினர் சோரச் சோர நகைத்து,
பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே. --- திருப்புகழ்.
மாயா சொரூப முழுச் சமத்திகள்,
ஓயா உபாய மனப் பசப்பிகள்,
வாழ்நாளை ஈரும் விழிக்
கடைச்சிகள்,
......முநிவோரும்
மால்ஆகி
வாட நகைத்து உருக்கிகள்,
ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
'வாரீர் இரீர்' என்
முழுப் புரட்டிகள்,
...... வெகுமோகம்
ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
ஆவேச நீர் உண் மதப்
பொறிச்சிகள்,
...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ? --- திருப்புகழ்.
பெண்ஆகி வந்து, ஒரு
மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!
சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும்
சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே! --- பட்டினத்தார்.
மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல்
பெருநகரம், -
ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற
விரகுஇல்லை,
போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை
தவறு. --- திருப்போரூர்ச் சந்நிதி முறை.
விசுவாமித்திரர்
மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.
காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும்
முனிவருக்கு உரியவை.
காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர்
மயக்க இயலாது.
திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர்
முன்னே,
ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்.
இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம்
அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார்.
ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.
அகர, உகரதி, மகரதி, சிகரதி, ---
எழுத்து உயிரும் ஒற்றும் என இருவகையாய் மருவி உள்ளது. உலகம் உயிருடைப்
பொருள்களும், உயிர்களும்
என இரு பிரிவு உடையது. அகரம் எல்லா எழுத்துக்களையும் கலந்து இயக்கி, தானும் தனித்து இயங்கும். இறைவனும் எல்லாப்
பொருள்களையும் இனமாகக் கலந்து இயக்கி, தானும் தனித்து இயங்குவான். அகரம் இயங்காவழி அனைத்து எழுத்தும் எனைத்தும்
இயங்கா. அவன் அசையாவழி அணுவும் அசையாது.
அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன. இறைவனால் அகிலமும் சலித்து
வருகின்றன. ஒலி உலகமும், உயிர் உலகமும் ஒளிபெற்று உலாவி வருநிலை ஒருங்கே தெளிவுற வந்தது.
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் ----
தொல்காப்பியம்.
அகரத்தோடு பொருந்தியே மெய்கள் நடக்கும் என ஆசிரியர் தொல்காப்பியனார்
இவ்வாறு கூறியிருக்கிறார். மெய் எழுத்துகளே என்றி, ஆ இ முதலிய உயிர் எழுத்துக்களும் அகரத்தாலேயே உயிர்த்து வருகின்றன. சரம்
அசரம் என்னும் இருவகை நிலைகளும் இறைவனால் இயங்கி வருதல் போல், உயிர்களும் மெய்களும்(உயிர்களும் உலகப்
பொருள்களும்) அகரத்தால் முறையோடு இயங்கி வருகின்றன.
இறைவன் அடங்கினால் எல்லாம் அடங்கும். அவன் அசைந்தால் அகிலமும் அசையும்
என்னும் இத் தலைமைத் தன்மை அகரத்திற்கும் தகைமையாய் அமைந்து இருத்தலால், அஃது இங்கு ஆதிபகவனோடு நேர் உரிமையா நேர்ந்து
நிலையா உணர வந்தது.
வாயைத் திறந்த உடனே அ என்பது இயல்பாக எழுகின்றது. ஆகவே, ஓசை உருவங்களாய் மருவி உள்ள எழுத்துக்களுக்கு எல்லாம் அது உறுதி புரிந்து
நின்றது. தலைமைத் தன்மை பலவகையிலும் நிலைபெற்று உள்ளமையால், முதல் எழுத்து முதல்வன் என வந்தது. அகரம் என
அகிலமும் நின்ற பரன் அறிய நின்றான்.
அகரஉயிர் எழுத்துஅனைத்தும் ஆகி வேறாய்
அமர்ந்ததுஎன அகிலாண்டம்
அனைத்தும்ஆகி,
பகர்வனஎல் லாம்ஆகி, அல்லது ஆகி,
பரம்ஆகி, சொல்லஅரிய
பான்மை ஆகி,
துகள்அறுசங் கற்பவிகற் பங்கள்எல்லாம்
தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர்இல்பசு பதியான பொருளை நாடி
நெட்டுஉயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம். ---- தாயுமானவர்.
அகர உயிர்போல் பரமன் அகிலாண்ட கோடி எங்கும் பரவி நிலவி உள்ளான் எனத்
தாயுமானவர் இங்ஙனம் நேயமாப் பாடியுள்ளார். ஆதிபகவன் நிலையைக் குறித்து விரித்து, திருக்குறளுக்கு விருத்தியுரை போல் இது வந்து
உள்ளது.
எழுத்துகளுள் நான் அகரமாய் இருக்கின்றேன் என்று கண்ணபிரான் இவ்வாறு
ஆதிமூலத்தின் தலைமை நிலையை அருச்சுனனிடம் உரிமையோடு கூறி இருக்கிறார்.
அகரமும் ஆகி அதிபனும் ஆகி --- திருப்புகழ்.
அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறும் ஆகி
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்த்து எய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து அல்லார்க்கு
நிகரில்மறக் கருணைபுரிந்து ஆண்டுகொண்ட
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம். --- விநாயக புராணம்.
உலகுஎலாம் ஆகி, வேறுஆய்,
உடனும்ஆய், ஒளிஆய், ஓங்கி,
அலகுஇலா உயிர்கள் கன்மத்து
ஆணையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய், இவற்றின்
தன்மை
தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலன் ஆகி,
நின்றனன், நீங்காது
எங்கும்,
ஒன்று என மறைகள் எல்லாம்
உரைத்திட, உயிர்கள்
ஒன்றி
நின்றனன் என்று பன்மை
நிகழ்த்துவது என்னை? என்னின்,
அன்று; அவை
பதிதான் ஒன்றுஎன்று
அறையும்; அக்கரங்கள்
தோறும்
சென்றிடும் அகரம் போல
நின்றனன், சிவனும்
சேர்ந்தே. --- சிவஞான சித்தியார்.
அகரஉயிர் போல் அறிவாகி எங்கும்
நிகர்இல் இறை நிற்கும் நிறைந்து. --- திருவருட்பயன்.
அஞ்செழுத்தால்
ஈந்து பூதம் படைத்தனன்,
அஞ்செழுத்தால்
பல யோனி படைத்தனன்,
அஞ்செழுத்தால்
இவ் அகலிடம் தாங்கினன்,
அஞ்செழுத்தாலே
அமர்ந்து நின்றானே. ---
திருமந்திரம்.
திருவைந்தெழுத்தினுள்
மகர அடையாளத்தால் உலகம் படைக்கப்பட்டது விளங்கும். அதுபோல் யகர அடையாளத்தால் உடலுடன்
உயிரினை இணைத்தது விளங்கும். யோனி - உயிர். நகர அடையாளத்தால் விரிந்த வுலகத்தை இயைந்தியக்கிக்
காக்கும் நடுநிலைமை விளங்கும். சிகரவகர அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும்.
ஐந்தின்
பெருமையே அகல் இடம் ஆவது,
ஐந்தின்
பெருமையே ஆலயம் ஆவது,
ஐந்தின்
பெருமையே அறவோன் வழக்கமும்,
ஐந்தின்
வகைசெயப் பாலனும் ஆமே. ---
திருமந்திரம்.
திருவைந்தெழுத்தின்
அளவிலாப் பெருமையினாலேயே எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. திருவைந்தெழுத்தின்
சிறந்த திருக்குறிப்பே சிவபெருமான் திருக்கோவிலாகும். அது, சிவக்கொழுந்தாகிய சிவலிங்கம் காணப்படும்
கருவரை நிலை சிகரம். அதன் அடுத்த மண்டபத்தில் காணப்படும் மனோன்மணி நிலை வகரம்; ஆனேற்று நிலை யகரம். அம்பலவாணர் நிலை நகரம்.
பலிபீட நிலை மகரம்.அறவோன் ஆகிய சிவபெருமான் அருளும் வழக்கமும் திருவைந்தெழுத்தேயாம்.
திருவைந்தெழுத்தை முறையாகக் கணிப்பாரைக் காக்கும் காவலன் சிவபெருமானாவன். (பாலன் -
காவலன்)
அகார
உகாரம் அகங்காரம் புத்தி;
மகாரம்
மனம்; சித்தம் விந்து;- பகாது இவற்றை
நாதம்
உளவடிவாம்; நாடில் பிரணவமாம்;
போதம்
கடல்திரையே போன்று. --- சிவஞானபோதம்.
இதன்
பொருள்:
அகரம்
அகங்காரத்தைச் செலுத்தும்; உகரம் புத்தியைச்
செலுத்தும்; மகரம் மனத்தைச்
செலுத்தும்; விந்து சித்தத்தைச்
செலுத்தும்; நாதம் புருட
தத்துவத்தைச் செலுத்தும்.
இந்த
ஐந்தையும் இவ்வாறு தனித்தனியாகக் காணாமல் ஒன்றாகத் தொகுத்து நோக்கினால் அத்
தொகுதியே ஓம் என்னும் பிரணவம் ஆகும்.
இந்த
ஐந்து அக்கரங்களால் ஆன்மாவினிடத்து உணர்வுகள் கடலில் அலைகள் புதிது புதிதாய்த்
தோன்றுதல் போலத் தோன்றுவனவாகும்.
இதன்
பதவுரை ---
அகார
உகாரம் - அகரமும் உகரமும்
அகங்காரம்
புத்தி - முறையே அகங்காரத்தையும் புத்தியையும் செலுத்தும்.
மகாரம்
மன்ம - மகரம் மனத்தைச் செலுத்தும்
விந்து
சித்தம் - விந்து சித்தத்தைச் செலுத்தும்
நாதம்
உள வடிவாம் - நாதம் புருடதத்துவத்தைச் செலுத்தும்
இவற்றைப்
பகாது நாடின் - இந்த ஐந்தையும் இவ்வாறு பகுத்துக் காணாது தொகுத்து நோக்கினால்
பிரணவமாம்
- அத்தொகுதி பிரணவம் (ஓம்) ஆகும்.
போதம்
கடல் திரையே போன்று - அகரம் முதலிய இந்த ஐந்து அக்கரங்களால்
அந்தக் கரணங்களிடத்து உணர்வுகள் புதிது புதிதாகத்
தோன்றுதல் கடலிடத்து அலைகள் புதிது புதிதாய் எழுந்து
வருதல் போன்றதாகும்.
அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும் சூக்கும பஞ்சாக்கரம்
எனப்படும். அவற்றின் தொகுதியே ஓம் என்பதாகிய பிரணவம்.
தொகுதியாக
நிற்கும் ஓம் என்பதனை சமட்டிப் பிரணவம் என்பர். ஓங்காரம் என்பதுவும் இதுவே. அகரம்
முதலிய ஐந்தாக விரித்துக் கூறின் வியட்டிப் பிரணவம் எனப்படும்.
அகரம்
முதலிய ஒவ்வொன்றும் பிரணவத்தின் கலை எனப்படும். கலை - கூறு; எனவே பிரணவம் ஐந்து கலைகளையுடையது
என்பது விளங்கும். சொற்கூட்டம் அனைத்திற்கும் மூலம் ஓங்காரமேயாகும்.
பிரணவ
கலைகளையும் அவற்றால் செலுத்தப்படும் அந்தக் கரணங்களையும் பின்வருமாறு அமைத்துக்
காட்டலாம்.
பிரணவ
கலைகள் அந்தக்கரணங்கள்
நாதம் - புருடதத்துவம்
விந்து - சித்தம்
மகரம் - மனம்
உகரம் - புத்தி
அகரம் - அகங்காரம்
யகர
அருளதி தெருளதி ---
யகரம்
என்பது திருவைந்தெழுத்தில் உயிர்களை க் குறித்து நின்றது.
தெருள்
- அறிவின் தெளிவு.
தெருளுதல்
- உணர்வு உறுதல், தெளிதல், விளங்குதல்.
உயிர்களின்
அறிவில் தெளிவைத் தர அருள் புரிபவன் இறைவன்.
அரகர
சிவசுத
---
பாவங்களைப்
போக்குபவரான சிவபெருமானின் திருப்புதல்வரே என்கின்றார் அடிகள்.
அர
- பாவங்களை நீக்குபவர்.
சிவபெருமானுடைய
திருநாமங்களில் சிறந்தது அர நாமம். ஹர ஹர என்று கூறுவோர் இடர் நீங்கப் பெறுவர்.
சபைகளில் அடியார்கள் "ஹர ஹர" என்று முழக்கம் புரிவர்.
அரகர
என்ன அரியது ஒன்று இல்லை,
அரகர
என்ன அறிகிலர் மாந்தர்,
அரகர
என்ன அமரரும் ஆவர்,
அரகர
என்ன அறும் பிறப்பு அன்றே.
என்கின்றார்
திருமூல நாயனார்.
“எல்லாம் அரன் நாமமே சூழ்க
வையகமும் துயர் தீர்கவே”
என்கின்றார்
திருஞானசம்பந்தர்.
“வருசிவன் அடியார்
ஹரஹர எனமுறை
வழங்கு
கடல்போல் முழங்க ஒருபால்” --- கொலுவகுப்பு
இறைவன்
நமக்கு நாவைத் தந்தான். மென்மை உடையதாகவும், ஈரம் உள்ளதாகவும் தந்தான். இன்னும் ஒரு
பெரிய உபகாரம். நாவை நரம்பு வைக்காமல் படைத்தான். ஏன்? நரம்பு உள்ள பகுதிகளாகிய கை, கால், கழுத்து இவைகளில் சுளுக்கு
ஏற்படும்.
நாவில் நரம்பு வைத்தால் பேசும்போது சுளுக்கிக் கொள்ளும். நாக்கு சுளுக்கிக்
கொண்டால் பேச்சு அப்படியே தடைபட்டுவிடும். நமது கை, கால்கள் ஓயாமல் வேலை செய்வதில்லை.
நாக்கு மட்டும் சதா மனைவியுடன்,
மக்களுடன், நண்பர்களுடன், வேலைக்காரர்களுடன்
பேசிக்கொண்டேயிருக்கும். நரம்பிருந்தால் தினம் 2, 3 முறையாவது சுளுக்கிக் கொள்ளும்.
சுளுக்கிக் கொண்ட நாவை விளக்கெண்ணெய் தடவி விட வேண்டி வரும். ஆதலால் பேசுவதற்கு
என்று அமைத்துக் கொடுத்த நாவை நரம்பின்றி படைத்துக் கொடுத்தான் பரமன்.
அவன்
கொடுத்த நாவினால் அவனையே இல்லையென்று கூறி, நன்றி கொன்ற பாவத்துக்கு
ஆளாகின்றார்கள் சிலர்.
இனி
அவன் தந்த நாவினால் அவனுடைய நாமத்தை நவிலாமல், நன்றி மறந்த பாவத்துக்கு
ஆளாகின்றார்கள் பலர்.
நன்றி
மறப்பது வேறு; நன்றி கொல்வது வேறு.
“நன்றி மறப்பது
நன்றன்று”
“எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வு இல்லை
செய்நன்றி
கொன்ற மகற்கு” --- திருக்குறள்
பூக்கைக்
கொண்டு அரன் பொன்அடி போற்றிலார்,
நாக்கைக்
கொண்டு அரன் நாமம் நவில்கிலார்,
ஆக்கைக்கே
இரை தேடி அலமந்து
காக்கைக்கே
இரை ஆகிக் கழிவரே. --- அப்பர்
கல்லினோடு
எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை
நீர் புக நூக்க, என் வாக்கினால்
நெல்லு
நீள் வயல் நீலக் குடிஅரன்
நல்ல
நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே. --- அப்பர்
ஆதலால், "அரகர" என்று அன்பர்கள்
கூறி துன்பத்தினின்று விலகி இன்பத்தை எய்துவார்களாக.
கருத்துரை
முருகா! உமது அடியவருடன்
கூடி அருளைப் பெற்று உய்ய அருள் புரியும் நாள் எந்த நாள்?
No comments:
Post a Comment