திருமயிலை - 0702. கடிய வேக






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கடிய வேக (திருமயிலை)

முருகா!
சிற்றினம் சேர்ந்து கேடுற்று அடியேன் அழியாவண்ணம் 
தேவரீர் தரிசனம் தந்து ஆட்கொள்வீர்.


தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான


கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
     கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்

கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
     கனவி கார மேபேசி ...... நெறி பேணாக்

கொடிய னேது மோராது விரக சால மேமூடு
     குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே

குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
     குவளை வாகும் நேர்காண ...... வருவாயே

படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
     பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்

பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
     பதிய தாக வேலேவு ...... மயில்வீரா

வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
     வனச வாவி பூவோடை ...... வயலோடே

மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
     மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கடிய வேகம் ஆறாத விரத சூதர், ஆபாதர்,
     கலகமே செய் பாழ்மூடர், ...... வினைவேடர்,

கபட ஈனர், ஆகாத இயல்பு நாடியே, நீடு
     கன விகாரமே பேசி, ...... நெறி பேணாக்

கொடியன், ஏதும் ஓராது, விரக சாலமே மூடு
     குடிலின் மேவியே நாளும் ...... மடியாதே,

குலவு தோகை மீது, ஆறுமுகமும் வேலும் ஈராறு
     குவளை வாகும், நேர் காண ...... வருவாயே.

படியினோடு மாமேரு அதிர வீசியே, சேட
     பணமும் ஆடவே, நீடு ...... வரைசாடி,

பரவை ஆழி நீர் மோத, நிருதர் மாள, வான்நாடு
     பதி அதாக வேல் ஏவு ...... மயில்வீரா!

வடி உலாவி, ஆகாச மிளிர் பலாவின் நீள்சோலை
     வனச வாவி பூ ஓடை ...... வயலோடே,

மணிசெய் மாட மாமேடை, சிகரமோடு, வாகு ஆன
     மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.


பதவுரை


      படியினோடு மாமேரு அதிர வீசியே --- பூமண்டலத்தின் பெரிய மேருமலையும் அதிரும்படியாகச் செலுத்தியும்,

      சேட பணமும் ஆடவே ---  ஆதிசேடனுடைய பணாமகுடங்களும் அசையவும்,

     நீடு வரை சாடி --- நீண்ட கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அசைவுறவும், பெருமலைகளை மோதி,

      பரவை ஆழி நீர் மோத --- பரந்த கடலில் நீர் அலைகள் மிகுந்து மோதவும்,

      நிருதர் மாள --- அசுரர்கள் மாண்டு ஒழியவும்,

     வான் நாடு பதியதாக --- வான நாடு பண்டுபோல் தழைத்து வளம் பெறவும்

     வேல் ஏவு மயில் வீரா --- வேலாயுதத்தை விடுத்து அருளிய, மயிலை வாகனமாக உடைய வீரரே!

     வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை --- வடிவம் பரந்து ஆகாயத்தில் உயர்ந்து இருக்கின்ற பலா மரங்களின் பெரிய சோலைகளும்,

      வனச வாவி பூ ஓடை வயலோடே --- தாமரைக் குளங்களும், மலர் நிறைந்த ஓடைகளும், செந்நெல் விளைகின்ற வயல்களும்,

      மணிசெய் மாட மாமேடை சிகரமோடு --- நவரத்தினங்கள்  இழைத்த மாடமாளிகைகளும், சிறந்த மேடைகளும், கோபுரங்களும் நிறைந்து

      வாகு ஆன மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே -- அழகு பொருந்திய திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து வாழும் தேவர்கட்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

      கடிய வேகம் ஆறாத விரத சூதர் --- மூர்க்கத்தோடு கூடிய கோபம் ஒரு போதும் குறையாத நயவஞ்சனை உடையவர்களும்,

     ஆபாதர் --- தீயவரும்,

     கலகமே செய் பாழ்மூடர் --- கலகத்தையே செய்கின்ற பாழான மூடர்களும்,

      வினை வேடர் --- தீத்தொழில் புரியும் வேடரது குணம் உடையவரும்,

      கபட ஈனர் --- வஞ்சனை கொண்ட இழிந்தவர்களும் ஆகிய புல்லர்களுடைய

      ஆகாத இயல்பு நாடியே --- கூடா ஒழுக்கத்தை நல்லொழுக்கமாகக் கொண்டு,

      நீடு கன விகாரமே பேசி --- மிகவும் பல வேறு வேறு ஆன வீண் வார்த்தைகளையே பேசி

      நெறி பேணாக் கொடியன் --- நன்னெறியை விரும்பிச் செல்லாத கொடியவனாகிய அடியேன்

      ஏதும் ஓராது --- எதையும் ஆராய்ந்து பார்க்காமல்,

      விரக சாலமே மூடு குடிலின் மேவியே --- வெறும் ஆசை வலையினால் மூடப்பட்ட இந்தக் குடிசையாகிய உடலில் இருந்து கொண்டு

      நாளும் மடியாதே --- எந்நாளும் அழிவுறாமல்,

      குலவு தோகை மீது ஆறுமுகமும் வேலும் --- விளங்குகின்ற மயிலின் மீது ஏறி ஆறு திருமுகங்களும், வேலாயுதமும்,

      ஈர் ஆறு குவளை வாகும் --- குவளை மலர்மாலை அணிந்த பன்னிரண்டு திருத்தோள்களும்,

      நேர் காண வருவாயே --- அடியேன் நேரில் கண்டு உய்யுமாறு வந்து அருள் புரிவீர்.


பொழிப்புரை


         பூமண்டலத்தின் பெரிய மேருமலையும் அதிரும்படியாகச் செலுத்தியும்,  ஆதிசேடனுடைய  பணாமகுடங்களும் அசையவும், நீண்ட கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அசைவுறவும், பெருமலைகளை மோதி, பரந்த கடலில் நீர் அலைகள் மிகுந்து மோதவும்,  அசுரர்கள் மாண்டு ஒழியவும், வான நாடு பண்டுபோல் தழைத்து வளம் பெறவும் வேலாயுதத்தை விடுத்து அருளிய மயிலை வாகனமாக உடைய வீரரே!

         வடிவம் பரந்து ஆகாயத்தில் உயர்ந்து இருக்கின்ற பலா மரங்களின் பெரிய சோலைகளும், தாமரைக் குளங்களும், மலர் நிறைந்த ஓடைகளும், செந்நெல் விளைகின்ற வயல்களும், நவரத்தினங்கள்  இழைத்த மாடமாலிகைகளும், சிறந்த மேடைகளும், கோபுரங்களும் நிறைந்து, அழகு பொருந்திய திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து வாழும் தேவர்கட்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

         மூர்க்கத்தோடு கூடிய கோபம் ஒரு போதும் குறையாத நயவஞ்சனை உடையவர்களும், தீயரும், கலகத்தையே செய்கின்ற பாழான மூடர்களும், தீத்தொழில் புரியும் வேடரது குணம் உடையவரும், வஞ்சனை கொண்ட இழிந்தவர்களும் ஆகிய புல்லர்களுடைய கூடா ஒழுக்கத்தை நல்லொழுக்கமாகக் கொண்டு, மிகவும் பல வேறு வேறு ஆன வீண் வார்த்தைகளையே பேசி நன்னெறியை விரும்பிச் செல்லாத கொடியவனாகிய அடியேன் எதையும் ஆராய்ந்து பார்க்காமல், வெறும் ஆசை வலையினால் மூடப்பட்ட இந்தக் குடிசையாகிய உடலில் இருந்து கொண்டே எந்நாளும் அழிவுறாமல், விளங்குகின்ற மயிலின் மீது ஏறி ஆறு திருமுகங்களும், வேலாயுதமும்,  குவளை மலர்மாலை அணிந்த பன்னிரண்டு திருத்தோள்களும், அடியேன் நேரில் கண்டு உய்யுமாறு வந்து அருள் புரிவீர்.


விரிவுரை

கடிய வேகம் ஆறாத ---

வேகம் என்பது தான் நமக்குப் பலப்பல அல்லல்களைத் தருகின்றது.  உள்ளத்தில் வேகம் வந்தபோது, தக்கவை இவை, தகாதவை இவை என்றும், சொல்வன, தவிர்வன இவை என்றும் தோன்றாமல் மயங்கிக் கெடுவர். ஆதலினால், கோபத் தீ தணிதல் வேண்டும்.

"விடுங்கோள் வெகுளியை" என்றும், "ஆறுவது சினம்" என்றும் "சினமே ஒழியாய்" என்றும் வரும் திருவாக்குகளைச் சிந்தித்து, சினமாகிய வேகத்தைக் கெடுக்கவேண்டும்.

உள்ளத்தில் சினம் எழுகின்றபோது அறிவு நீங்கி, பொறிபுலன்கள் எல்லாம் மயங்கி, உடல் காந்தி, அமைதி குலைந்து, நலம் எலாம் அழியும். எத்துணைப் பெரிய தீங்கு நேரினும் காற்றுக்கு அசையாத இமயமலை போல் சாந்த வீரர்களாகத் திகழ வேண்டும். உண்ணாது நோற்பாரினும் பிறர் கூறும் கடுஞ்சொல்லைப் பொறுக்கும் சாந்தசீலர் பெரியவர் என்பர் திருவள்ளுவர்.

"உண்ணாது நோற்பார் பெரியர், பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்".

சாந்தத்தினால் மனத்தில் பெரும் இன்ப ஊற்று சுரக்கும்.  "பொறுமை கடலினும் பெரிது" என்பது பழமொழி. இனி, "கடிய வேகம் மாறாத" என்றே கொண்டும் பொருள் செய்யலாம்.  அங்ஙனம் கொள்ளும்போது, கோபம் ஓரொருகால் வரினும் பின்னொரு சமயம் மாற வேண்டும். தீர்க்க கோபம் உடையவனாக இருப்பவன் சண்டாளன் ஆவான்.

நிற்க, வேகம் என்பதற்கு கோபம் என்று மேலே பொருள் செய்யப்பட்டது. அன்றி விரைவு என்றும் பொருள் கொள்ளலாம்.  வேகத்திற்கு எல்லாம் கடுமையான வேகம் உடையது மனம்.  வாயு வேகத்தினும் மனோ வேகமே மிக்கது. அம் மனோ வேகத்தாலேயே எல்லா அநர்த்தங்களும் விளைகின்றன.  குலாலன் சக்கரம் ஒருகால திரிகையில் ஆயிரக்கோடி சுற்று ஓடும் இந்த மனம். இந்த வேகம் மாறியபோது, பரம சாந்தி ஏற்படுகின்றது. எண்ண முடியாத அளவில் மிகப் பெருங் கடிய வேகமுடைய இந்த மனோ வேகத்தை மணிவாசகனார்க்கு திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலிலே எம்பெருமான் கெடுத்து ஆண்டு அருளினார்.

"வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க”.

இந்த வேகம் நின்றவுடன் பிறப்பு நின்று விடுகின்றது. அதனால், அதற்கு அடுத்தபடியாக,

"பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க".

என்று அருளிச் செய்தனர்.

இரத சூதர் ---

இரதம் - இனிமை. சூது - வஞ்சனை. இனிமையாகப் பேசி வஞ்சிப்பது நயவஞ்சகம். சிலருக்கு வாய் கற்கண்டு. உள்ளம் கத்திரிக்கோல். இவர்கள் விஷவாயுவை விடப் பொல்லதவர்கள்.

செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோலும் வதனம்,
தங்குமொழி சாந்த சீதம் போலும் --- அங்கிபெரி
கத்திரியைப் போலுமாம் காரிகையே வஞ்சர்மனம்
குத்திரர்பால் மூன்று குணம்.     ---  அருணாசலக் கவிராயர்.

வஞ்சகருக்கு முகம்    ---   தாமரை.
வஞ்சகருக்கு வாய் ---   சந்தனம்.
வஞ்சகருக்கு மனம்    ---   கத்திரிக்கோல்.

விரத சூதர் --- என்றே பொருள் கொள்ளலாம். அங்ஙனமாயின், தணியாத கொடும் கோபத்தையே விரதமாக உடைய வஞ்சகர் எனப் பொருள்படும். அல்லது, "விரதங்களை இடையில் விட்ட வஞ்சகர்" எனினும் அமையும்.

சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள்..   ---  தோழமை (திருப்புகழ்.)

ஆபாதர் ---

ஆபாசன் என்பதன் மரூஉ. ஆபாதன் - தீயவன்.

கலகமே செய் பாழ் மூடர் ---

நன்றாக ஒற்றுமையுடன் வாழ்கின்ற குடும்பங்களை இங்கும் அங்கும் புனைந்து, பொய் மொழிகளைப் பேசி, கலைத்து, வம்பு வளர்த்து, அதனால் வயிறு பிழைப்பவர். ஊருக்குள்ளும் சிலர் ஒரு வேலையும் இன்றி, "இவன் உன்னை இவ்வாறு கூறினான்", "அவன் உன்னை இவ்வாறு அவமதித்து இகழ்ந்தான்" என்று ஆங்காங்கு சொல்லி, கட்சி பிரதிகட்சிகளை உண்டாக்கித் திரிவர்.

அண்டின பேரைக் கெடுப்போரும்
         ஒன்று பத்தா முடிந்து
குண்டுணி சொல்லும் குடோரிகளும்
         கொலையே நிதம் செய்
வண்டரைச் சேர்ந்து இன்பச்
         சல்லாபம் பேசிடும் வஞ்சகரும்,
சண்டிப் பயல்களுமே
         கலிகாலத்தில் தாட்டிகரே.  


வினை வேடர் ---

வில்லையும் அம்பையும் கத்தியையும் வலையையும் தாங்கி சதா கொலையே புரிந்து உழலும் வேடரைப் போன்றவர்.  கருணை இல்லாதவர் என்பது கருத்து. "கொலையே புரி வேடர்" என்றார் அநுபூதியிலும்.


கபட ஈனர் ---

கபடம் - வஞ்சனை. உள்ளும் புறமும் வேறுபட்டு வெளிக்கு நல்லவர்கள்போல் நடித்து தீங்கு செய்வர். மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்ற முத்தநாதனைப் போல் என்று அறிக.

ஆகாத இயல்பு நாடி ---

"உலகிற்கு ஆகாத தீமை புரியும் கீழ்மக்களாகிய அவர்களுடைய உறவைக் கொண்டு, அவர்களது குணங்களை மேற்கொண்டு, அடியேனும் தீயன் ஆனேன்" என்று அடிகள் வருந்துகின்றனர்.

கன விகாரமே பேசி ---

நானா வகையான ஊர் வம்புகளைப் பேசி வாழ்நாளை வீழ் நாளாகச் செய்வது. நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிக்க முடியாத மாணிக்கமாகும். அதனை அவமே செலவழிக்கக் கூடாது. ஏனைய உயிர்களுக்குக் கண் உண்டு, காது உண்டு, கால் உண்டு, மூக்கு உண்டு, குரங்கு, யானை, யாளி இவைகளுக்குக் கை உண்டு. ஆனால் பேசுவதற்கு அநுகூலமான வாய் இல்லை. அந்த வாய் உண்பதற்கு மட்டும் உடையதே அன்றி, உரைப்பதற்கு உடைத்து அன்று. கண் இந்திரியம் பார்ப்பதற்கு மட்டும் ஏற்பட்டது. மூக்கு உயிர்ப்பதற்கு மட்டும் ஏற்பட்டது. செவி கேட்பதற்கு மட்டும் ஏற்பட்டது. ஆனால்,  மனிதர்களுக்கு வாய் உண்பதற்கு மட்டும் ஏற்பட்டது அல்ல. உண்பதற்கும் உரைப்பதற்கும் ஏற்பட்டது. இருதொழில் செய்கின்ற வாய், உண்பதனால் கன்மேந்திரியம் ஆகும்.  உரைப்பதனால் ஞானேந்திரியம் ஆகும். உண்பது வெறும் தொழில். உரைப்பது அறிவின் தொழில். உரைப்பது என்றால் சாமானியமானது அன்று. அவனவன் அறிவுக்குத் தக்கவாறு அந்த சொற்கள் அமையப் பெறாத உரைப்பதற்கு ஏற்றதாகிய வாக்கு இந்திரியத்தை இறைவன் நமக்குத் தந்தனன். அந்த வாக்கினால் இறைவன் புகழை ஓதவேண்டும்.

வணங்கத் தலைவைத்து, வார்கழல்வாய் வாழ்த்தவைத்து,
இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து, எம்பெருமான்
அணங்கொட் அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.   ---  திருவாசகம்.

வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை,
சூழ்த்த மா மலர் தூவி, துதியாதே,
வீழ்த்தவா, வினையேன் நெடும் காலமே      ---  அப்பர்.

என்ற திருவாக்குகளை உய்த்து உணர்மின். அன்றியும் வாக்கினால் பிறர்க்கு உபகாரமான சொற்களைச் சொல்லவேண்டும். நீதி நெறிகளை எடுத்துக் கூறவேண்டும்.   இனிய சொற்களைச் சொல்லவேண்டும். அச் சொற்கள் தேனும் பாலும் போலும் தித்திக்கவேண்டும்.

இனிய உளஆக, இன்னாத கூறல் கனிஇருப்பக்
காய்கவர்ந்து அற்று..            ---  திருக்குறள்.

இதனை மறந்து, "வெடுவெடு" என்று கடுமொழிகளையும், சதா பிறரைப் பற்றி பழிமொழிகளையும், பிறர் குறைகளையும், ஊர்ப் பொது இடங்களில் வேலையில்லாத வீணர்களுடன் இருந்து, ஊர் வம்புரைகளையும் சதா பேசிப் பொழுதுக் கழிப்பவர்களின் அறியாமை இருந்தவாறு என்னே! என்னே! அவர்கள் மனிதருக்குள் பதர்கள் ஆவார்கள். ஏன் எனில், உள்ளீடு இன்மையினால்.

பயன்இல் சொல் பாராட்டுவானை மகன்எனல்,
மக்கட் பதடி எனல்.                           ---  திருக்குறள்.

பயனில் சொல் பேசுவார்க்கு இம்மை மறுமை இரு நலன்களும் அழிந்து விடுகின்றன. உலகத்தாராலும் வெறுக்கப்படுவர்.  ஆதலினால், எப்போதும் பயனுடைய சொற்களைப் பேசி, வாழ்நாளை புனிதமாகச் செய்து, இம்மையில் புகழும் மறுமையில் புண்ணியமும் பெறுவார்களாக. அன்பர்கள் இதனை நன்கு கவனித்து நலம் பெறுக.

நெறி பேணாக் கொடியன் ---

நெறி - வழி. வழியின் தன்மையே குறித்த இடம் சேர்ப்பிப்பது.  நெறியாவது, "பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்கநெறி" ஆகும் என்பர் திருவள்ளுவனார். அந் நெறியை, சிவநெறி என்றும், நன்னெறி என்றும், அறநெறி, திருநெறி என்றும் ஆன்றோர் கூறுவர்.

"திருநெறிய தமிழ்" என்பார் திருஞானசம்பந்தர். "குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி" என்பார் அருணகிரிநாதர்.  அந்த நெறி அறியாதவரை மூர்க்கர் என்பர் மணிவாசகர். "முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை”.

பக்குவப்பட்ட ஆன்மாக்களை புன்நெறி புகவொட்டாது தடுத்து, நன்னெறியின்பால் உய்த்து, ஞானக் காட்சியை நல்கி, அடிமை கொண்டு, இறைவன் ஆட்கொள்வன்.

புன்னெறி அதனில் செல்லும்
         போக்கினை விலக்கி மேலா
நன்னெறி ஒழுகச் செய்து
         நவைஅறு காட்சி நல்கி
என்னையும் அடியன் ஆக்கி,
         இருவினை நீக்கி ஆண்ட
பன்னிரு தடந்தோள் எந்தை
         பாதபங் கயங்கள் போற்றி.                ---  கந்தபுராணம்.

ஏதும் ஓராது ---

ஓர்தல் - ஆராய்தல். ஒவ்வொரு மனிதனும் முதலாவதாகத் தன்னைப் பற்றி ஆராயவேண்டும். நான் யார்? உடம்பே உயிரா? உயிர் உடம்புக்குள் எங்ஙனம் உறைகின்றது? உயிர் இவ் உடம்பை எடுக்கு முன் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? உடம்பு தானே கிடைத்ததா? அல்லது உடம்பு வேறு ஒருவரால் தரப்பட்டதா? அப்படி வேறு ஒருவர் தந்திருப்பாரானால் அவர் யார்? அவர் தன் கருத்தின்படி தந்தாரா? என் வினையின் காரணமாகத் தந்தாரா? உடம்பை ஏன் தந்தார்? இந்த உடம்பினால் ஆய பயன் யாது? உடம்புக்குள் எத்தனைக் கருவிகள் உள? உடம்பு நீங்கிய பின் இவ் உயிர் என்ன ஆகின்றது? இவ் உயிர்க்கு எத்தனை சரீரம்?  என்னென்ன சரீரம்? அந்தச் சரீரங்களின் தன்மைகள் யாவை? பிறவிக்குக் காரணம் எது?  எதனால் பிறப்பு நீங்கும்? இவ்வாறு ஆராய்ந்து, ஆராய்ந்த அறிஞர்களிடம் அறிந்து ஆவி ஈடேறுதற்குரிய நலன்களை அடையவேண்டும்.

விரக சாலமே மூடு குடில் ---

விரகம் - காமநோய். சாலம் - வலை. 

காமநோயின் வலையால் மூடப்பெற்ற உடம்பாகிய வீடு.  பலப்பல பிறவியையும், ஒழியாத துன்பத்தையும் தருவது இந்நோய். உயிரோடு உறைவது. அதனை இறைவன் திருவருளாகிய மருந்தினால் விரைந்து விலக்குதல் வேண்டும்.

நாளும் மடியாதே ---

"இறைவனே துட்டர்களோடு கூடி, மையல் நோயினால் வருந்தி எந்நாளும் அடியேன் மாளக்கூடாது" என்று அடிகள் வேண்டுகின்றனர். உலகில் உள்ள மாந்தர்களது தன்மைகளைக் கண்டு வருந்துகின்ற ஆன்றோர்கள், அத் தன்மைகளை தமது தன்மை போல் இறைவனிடம் கூறி முறையிடுவது அருளாளர்களது மரபு. 

"குலம்பொல்லேன், குணம் பொல்லேன், குறியும் பொல்லேன்”,  "பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன்" என்பனவாதி திருவாக்குகள் எல்லாம் அந்த நிலையில் எழுந்தன எனக் கொள்க. அங்ஙனம் அன்றி, திருவருட் செல்வர்கள் கூறும் வசைகள் அத்தனையும் அவர்கள் மீது ஏற்றி அவர்கள் புரிந்ததாகக் கொள்வது தவறு.


குவளை வாகு ---

குவளை என்பது ஒருவகை நீர்ப்பூ. அது முருகப் பெருமானுக்கு உகந்த மலர். வாகு - புயம். குவளை மலரால் தொடுத்த மாலையை அணிந்த புயங்கள். இம் மலர்மாலையின் சிறப்பை அருட்பிரகாச வள்ளலார் கூறுமாறு காண்க.

அவல வயிற்றை வளர்ப்பதற்கே
         அல்லும் பகலும் அதின் நினைவாய்க்
கவலைப் படுவதன்றி சிவக்
         கனியைச் சேரக் கருதுகிலேன்
திவலை ஒழிக்கும் திருத்தணிகைத்
         திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை எடுக்காமல்
         கொழுத்த உடலை எடுத்தேனே.

இத் திருப்புகழின் ஐந்தாவது அடியும் ஆறாவது அடியும் முருகப் பெருமான் சூரபன்மன் மீதும் கிரவுஞ்ச மலை மீதும் வேல் ஏவிய திறத்தை விளக்குகின்றன.

ஏழாவது அடியும் எட்டவாது அடியும் சென்னையைச் சார்ந்த திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தின் வளப்பத்தையும் மகிமையையும் வியந்து கூறுகின்றன. உமாதேவியார் மயில் வடிவாக இருந்து சிவபெருமானைப் பூசித்தபடியால் இத் தலம் மயிலை எனப் பெயர் பெற்றது. மிக அழகிய கோயில்.  திருஞானசம்பந்தப் பெருமான் என்பைப் பெண்ணாக்கிய அற்புதத் திருத்தலம்.

கருத்துரை

வேலாயுதத்தை உடைய மயில் வீரரே, திருமயிலையில் எழுந்தருளிய பெருமானே, சிற்றினம் சேர்ந்து கேடுற்று அடியேன் அழியாவண்ணம் தேவரீர் தரிசனம் தந்து ஆட்கொள்வீர்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...