உயிருக்கு நிரந்தரமான வீடு

 


உயிருக்கு நிரந்தரமான வீடு

-----

 

     உலகத்தில் சொத்துப் படைத்தவர்கள் எல்லாம் நிலமும் வீடும் படைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிலம் இல்லாவிட்டாலும் வீடு இருக்கிறது. பலருக்கு வீடு இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால்ஆன்மாக்களாகிய நம் எல்லோருக்கும் வீடு என்று ஒன்று இருக்கின்றது. உயிர்கள் தங்கி வாழ்கின்ற அந்த வீட்டிற்கு "உடம்பு" என்று பெயர். தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் 'தேகிஎன்பார்கள். தேகமாகிய வீட்டுக்கு முகவரி உண்டுபெயர் உண்டு. முகவரி உள்ள அந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. மனிதன் என்று உயிர் உள்ளவனைத்தான் சொல்கிறோம். முதலியார்,செட்டியார் என்றெல்லாம் முகவரி போட்டுச் சொல்வது உயிருக்கு அடையாளம் அல்லஅது வாழும் உடம்பை அடையாளம் காண்பதற்காகத்தான். உயிரோடு வாழ்கிற உடம்புக்குத்தான் அத்தகைய முகவரி இட்டுச் சொல்கிறோம். உடம்பில் வாழ்கிற உயிர் புறப்பட்டுப் போய் விட்டால் அந்த உடம்புக்கு முகவரி இல்லை. எல்லா உடம்புக்கும் அப்பொழுது ஒரே பெயர்தான் அமைகிறது. மக்கள் வசிக்காத இடிந்த வீடுகளை முகவரி இல்லாமல் 'குட்டிச்சுவர் என்று அழைப்பதைப் போலஉடம்பாகிய வீட்டிலிருந்து உயிர் போய்விட்டால்பேர் இல்லை.அதைப் "பிணம்" என்று அழைக்கிறோம்.

 

 "ஊர் எல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

 பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்

 சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

 நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"

 

என்கிறார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலர்.

 

     உடம்பாகிய இந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. இந்த வீடு உயிருக்குச்  சொந்தமானதும் அல்ல. இந்த உடம்பு உயிருக்குச் சொந்தம் என்றால்உயிர் நினைத்தபடி உடம்பு அமைய வேண்டும். நமக்குச் சொந்தமான வீட்டினை நாம் விரும்பினால் மேலும் விரிவு படுத்திக் கொள்ளலாம். மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். நமக்குப் பிள்ளைகள் அதிகமானாலும்மருமகப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்தாலும் மேலும் தேவையான அறைகளைத் தடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்குச் சொந்தக்காரர் தம் விருப்பப்படி அதில் பலவிதமான மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால் வீட்டில் வாடக்கைக்குக் குடியிருப்பவர் எந்த மாறுதலையும் செய்துகொள்ள முடியாது.

 

     உயிர் ஒதுக்குக் குடி இருப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த உடம்பில் வேண்டிய மாறுதல்களைச் செய்து கொள்ள முடியாது.  நமக்கு இரண்டு கைகள் போதவில்லை.  நான்குகைகள் வேண்டும் என்று விரும்பினால் மற்றக் கைகளை ஒட்டிக் கொள்ள முடியாது. நடப்பதற்கு இரண்டு கால்கள் போதாது என்று மேலும் இரண்டு கால்களை ஒட்டி வைத்துக் கொள்ள முடியாது. ஆகையால்இந்த உடம்பு நமக்குச் சொந்தம் அல்ல. இதில் நாம் குடியிருக்கிறோம். வீட்டைப் படைத்தவன் எந்த எந்த மாதிரியாகப் படைத்தானோ அதில் சிறிதளவு கூட மாற்றம் செய்ய முடியாது. இப்படி இருந்தும் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

 

     நமக்கு என்று ஒன்று இருந்தால்,அதில் இருப்பவை என்ன என்று தெரிந்திருக்கவேண்டும்.  நாம் ஒரு பெட்டியை வாங்கிப் பல பொருள்களை வைத்துக் கொள்கிறோம். அந்தப் பெட்டி நம்முடையது. அதில் பல பொருள்களையும் வைத்தது நாம்தான்.  எப்போது கேட்டாலும் அந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றன என்று நம்மால் சொல்ல முடியும். இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்றால் இதற்குள் என்ன இருக்கின்றன என்று சொல்ல நமக்குத் தெரிய வேண்டும்.  வயிற்று வலி வந்தால் அது எப்படி வந்தது என்று நமக்குத் தெரிவதில்லை. மருத்துவரிடம் போய்க் காட்டுகிறோம். அவருக்கும் தெரிவதில்லை. எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்கிறார். எக்ஸ்ரேக்கும் தெரியாமல் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. 

 

     நாம் பல ஆண்டுகள் ஒரு வீட்டில் மாதம் மாதம் வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த வீட்டை நம்முடையது என்று சொல்கிறோம்"என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்" என்று அழைக்கிறோம். அது வழக்கமாகப் போய்விட்டது. அதைப் போல இந்த உடம்பில் நாம் குடியிருப்பதனால் இதை நம்முடையது என்று சொல்லலாம். அது மட்டும் உண்மை. ஆனால் குடியிருக்கும் போது அது நமக்கே உரியதாக இருக்கிறதா?என்றால் இல்லை.  நம்முடைய விருப்பப்படி அதில் வாழமுடியுமா?  என்றாலும், இல்லைதான்.

 

     ஒருவர் இறக்கும்போது அவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருந்தது. வீட்டில் ஒருவர் குடியிருந்தார். இறந்தவருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களும் அந்த வீட்டிலேயே வசிக்க வந்துவிட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள்செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்தவர்கள். அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது. அந்த வீட்டில் குடியிருந்தவர் திருவாசகம் பாடலாம் என்று உட்காருகிறார். அந்த சமயம் பார்த்து,வீட்டு உரிமையாளரின் பிள்ளைகளில் ஒருவன் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு மிருதங்கம் வாசிக்கிறான். அவனுக்கு மிருதங்கம் கிடைக்கவில்லை. ஆகவே,தகர டப்பாவை வைத்துக் கொண்டு கர்ணகடோரமான ஒலியை எழுப்புகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று பேசுகிறான். நல்ல மணமுள்ள ஊதுவத்தியை அவர் வாங்கி வந்திருந்தார். இறைவன் படத்திற்கு முன்னாலே உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யும்போதுஅந்த மணமுள்ள வத்தியை ஏற்றி வைத்திருந்தார். அதே சமயத்தில் மற்றொரு பிள்ளை அவர் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சுருட்டு ஒன்றைப் புகைக்கிறான். இருக்கிற நாற்றம் போதாது என்று புகையிலைச் சுருட்டு நாற்றத்தை வேறு விடுகிறான். அது அவர் மூக்கில் ஏறித் தலைவலி எடுக்கிறது. கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி சுருட்டுக் குடிக்க எனக்கு உரிமை உண்டு" என்று அவன் பேசுகிறான். அந்த வீட்டின் வாயிலிலே அழகழகான வண்ணக் கோலங்களைக் குடியிருக்கிறவர் போடுகிறார். அடுத்த கணம் மற்றொரு பிள்ளை வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து அதில் கொட்டிக் கோலம் அழிந்து போகும்படி செய்கிறான். கேட்டால் "இது என் வீடு. என் விருப்பப்படி வீதியில் தண்ணிர் கொட்டுவேன். அதைக் கேட்க நீர் யார்?" என்று பேசுகிறான். நல்ல தென்றல் காற்று வருகிறதே என்று அவர் தம் வீட்டு ஜன்னலின் பக்கம் உட்கார்ந்து கொண்டு திருமுறையைக் கொஞ்சம் படிக்கலாம் என்று ஆரம்பிக்கிறார். மற்றொரு பிள்ளை வந்து ஜன்னலை அடைக்கச் சொல்லுகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி நடக்கத்தான் வேண்டும்" என்று பேசுகிறான்.

 

     இப்படி அந்த வீட்டின் சொந்தக்காரர்களாகிய ஐந்து பிள்ளைகளாலும்அந்த வீட்டில் குடியிருக்கின்ற ஒருவர் ஐந்து விதமான புலன்களினாலும் அனுபவிக்கின்ற அனுபவங்களுக்குத் தடை உண்டாகிறது. அவர்களுடைய வீட்டில் வசிக்கிற அவர் என்ன செய்வார் குடிக் கூலி கொடுத்துக் கொண்டுதான் அந்த வீட்டில் வசிக்கிறார். ஆனால் தம் விருப்பப்படி எதையும் அங்கே அனுபவிக்கச் சுதந்தரம் இல்லை. இதைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வும். நம்முடைய உடம்பாகிய வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. எனவேயாக்கை நிலை அல்ல என்று அறிவுறுத்தினர் நமது முன்னோர்.

 

     திருக்குறளில் நிலையாமை என்னும் அதிகாரத்துள்,"வாதம் முதலாகிய நோய்களின் இருப்பிடமாகிய உடம்புகளுள் பிறவிகள்தோறும் ஒதுக்குக் குடி இருந்தே வந்த உயிருக்குஎப்போதும் இருப்பதாகிய ஒரு நிலையான வீடு இதுவரையில் அமைந்தது இல்லை போலும்" என்பதை அறுவுறுத்த,

 

"புக்கில் அமைந்தின்று கொல்லோஉடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு"

 

என்று அருளினார் நாயனார்.

 

     உயிரானது வாதம் முதலான நோய்கள் அடங்கி இருக்க அமைந்த காலத்தில் உடம்பில் இருந்தும்அவை முற்றிய காலத்தில் உடம்பை விட்டுப் போயும்ஓர் உடம்பிலும் நிலைபெறாமல் வருவதும் போவதும் ஆக இருப்பதால், "ஒதுக்குக் குடி" என்றார். தனக்கென ஒரு வீடு இருந்தால்ஒதுக்குக் குடி இருக்கவேண்டிய அவசியம் இல்லை.. எனவே,உயிரோடு கூடி நிலைத்து நிற்பது ஆகிய ஓர் உடம்பும் இல்லை என்பது பெறப்படும். நிலையான வீடு எது என்பதையும்,அதனை அடையும் நெறியையிமு அறிந்து கொண்ட மேலோர்உயிர் குடியிருக்கும் இந்த வாடகை வீடாகிய உடம்பைப் பொருட்படுத்தமாட்டார்கள். இதில் இருக்கும்போதேநிரந்தரமான வீட்டினை அடைவதற்கு உரிய உபாயத்தைத் தேடிக் கொள்வார்கள்.

 

     நிலையாமை என்னும் அதிகாரத்துள்"நாள் என ஒன்று போல் காட்டி" என்னும் திருக்குறளால்உடம்புக்கு உண்டாக்கிய நாள் ஒவ்வொன்றாகக் கழிகின்ற வகையையும், "நாச்செற்று விக்குள் மேல் வாரா முன்" என்னும் திருக்குறளால்அந்த நாள் கழிந்தால் உண்டாகின்ற நிலைமையையும், "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை" என்னும் திருக்குறளால்பெறப்பட்ட உடம்புகள் ஒவ்வோரிடத்துப் பிறந்த போதே, நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று சொல்லும்படியாகச் சாதலையும், "ஒருபொழுதும் வாழ்வது அறியார்" என்னும் திருக்குறளால்எடுக்கப்பட்ட உடல்கள் ஒரு கணப் பொழுதாவது நிலைத்து இருக்கும் என்பது தெளிந்து அறியப்படாமையையும், "குடம்பை தனித்து ஒழிய" என்னும் திருக்குறளால்உயிர் நீங்கிய போது உடல்கள் கிடக்கும் வகையையும், "உறங்குவது போலும் சாக்காடு" என்னும் திருக்குறளால்உடல்களுக்கு இறத்தலும் பிறத்தலும் மாறி மாறி வரும் வகையையும், "புக்கில் அமைந்தின்று கொல்லோ" எனும் இத் திருக்குறளால்மாறிமாறிப் பிறந்து இறக்கும் உடல்கள் உயிருக்கு உரியன அல்ல என்பதும்இவ்வகையால் உடம்பு நிலைத்து இராமையைப பற்றிக் கூறினார் நாயனார்.

 

     சுந்தரமூர்த்தி நாயனார்இந்த உடலை "நல்லதோர் கூரை" என்றார். கூரை என்பது நெடுநாள் நிலைத்து இராமல்என்றாவது ஒருநாள் அழிந்து போதற்கு இடமாக உள்ளது. இந்த உடம்பும் நிலையாக இராமல்பருவம்தோறும் மாறுபாடு அடையக் கூடியதாய் உள்ளதோடுஎன்றாவது ஒரு நாள் அழிந்து போவதற்கும் உரியது. எனவே, "நல்லதோர் கூரை" என்றார். நல்லதோர் கூரை ஆகிய நிறையற்ற வீட்டில் ஒண்டுக் குடித்தனம் இருந்த கொண்டே நிலையான வீடு ஆகிய இறைவன் திருவடியை அடைதல் வேண்டும் என்பதை அறிவுறுத்தப் பின்வரும் திருப்பாட்டை அருளிச் செய்தார் நாயனார்,

     

"சொல்லிடில் எல்லை இல்லை,

     சுவையிலாப் பேதை வாழ்வு,

நல்லதோர் கூரை புக்கு

     நலமிக அறிந்தேன் அல்லேன்,

மல்லிகை மாட நீடு

     மருங்கொடு நெருங்கி யெங்கும்

அல்லிவண்டு இயங்கும் ஆரூர்

     அப்பனே அஞ்சி னேனே."    ---  சுந்தரர்.

 

இதன் பொருள் ---

 

     மேல் மாடங்கள் உயர்ந்து உள்ள இடங்களில் எல்லாம் வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்து கிண்டுகின்ற திருவாரூரில் எழுந்தருளி உள்ள தந்தையே!  நான்ஓட்டைக் குடிசைகளில் துச்சில் (ஒதுக்குக் குடி) இருந்து வாழ்ந்த பேதைக்கு உரித்தாய துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப் புகுந்தால்அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை. அப்படி இருந்தும்நல்லதொரு புக்கிலுள் குடிபுகுந்து இன்பம் மிகுமாறு வாழுகின்ற நெறியினை அடியேன் அறிந்திலேன். அதனால்அஞ்சுதலை உடையவன் ஆயினேன்.

 

     ஒதுக்குக் குடி இருந்து வந்தால் துன்பமே மிகும் என்பதைப் பின்வரும் பாடல் உணர்த்துமாறு அறியலாம்.

 

"பிச்சைபுக்கு உண்பான் பிளிறாமை முன்இனிதே;

துச்சில் இருந்து துயர்கூரா மாண்பு இனிதே;

உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம்

ஒற்கம் இலாமை இனிது."         ---  இனியவை நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     பிச்சை புக்கு உண்பான் - பிச்சைக்குச் சென்று இரந்து உண்பவன்பிளிறாமை -கோபியாமைமுன் இனிது - மிக இனியுதுதுச்சில் இருந்து - ஒதுக்குக் குடி இருந்துதுயர் கூரா - துன்ப மிக அடையாதமாண்பு இனிது - மாட்சிமைஇனியது-உற்ற பேர் ஆசை கருதி - மிக்க பேராசையைக் கருத்துட்கொண்டு அறன் ஒரூஉம் - அற வழியினின்று நீங்குதற்கு ஏதுவாகியஒற்கம்  இ(ல்)லாமை இனிது - மனத்தளர்ச்சி  இல்லாதிருத்தல் இனியது.

 

"இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை

தானேயும் சாலுங் கரி"                    (திருக்குறள்)

 

என்றபடி ஈவானுக்கு வேண்டிய பொழுது பொருள் உதவாது ஒழிதலும் உண்டு என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருப்பது அறிந்து,இரப்பவன் வெகுளாமை வேண்டும் என்பார் ‘பிச்சை புக்கு உண்பான் பிளிறாமை முன் இனிதேஎன்றார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற்கு ஏதுவாய் இருத்தலை,

 

"புக்கில் அமைந்தின்று கொல்லோ,உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு "                  

 

என்னும் திருக்குறளாலும்,

 

"நீங்க அரும் துயர்செய் வளிமுதல் மூன்றன்

நிலை உளேன்வை துரந்திடு முன்

வாங்கிநின் தனிவீட்டு உறைகுவான் விரும்பி

வந்தனன்நின்குறிப்பு அறியேன்"

 

என்னும் சோணசைலமாலைப் பாடலாலும் கண்டு கொள்க. தனிவீடு என்பது ஒப்பற்ற வீடு என்னும் பொருளில் வந்தது. ஒப்பும் உயர்வும் அற்ற வீடு இறைவன் திருவடியே ஆகும்.

 

     மிக்க பேராசை நிரம்பும் வரையில் பெரும் துன்பமும்நிரம்பாத போதும் பெரும் துன்பமும் நிரம்பி விட்டாலும் முடிவில் பெரும் துன்பமும் விளைத்தலின் அதனைக் கருத்துள் கொண்டு.

 

"சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு"

 

என்று நாயனார் அருளிச் செய்தார். அதன்படி,இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெரிதும் தந்து,அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீட்டையும் தரும் அறத்தைக் கைவிடுதல் அடாது என்பதால், "உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது" என்று அறிவுறுத்தப்பட்டது. எனவேமனத்துள் எழும் பேராசை காரணமாகஅறநெறியில் இருந்து வழுவுதற்குக் காரணமான மனத் தளர்ச்சி இல்லாது இருப்பது இனிது என்று சொன்னார்.

 

     உயிருக்கு நிரந்தரமானதொரு வீட்டை உண்டாக்கிக் கொள்ளும் சுதந்திரம் இல்லை. நிரந்தரமான வீட்டீ அடையும் பக்குவத்தை உண்டாக்கிக் கொள்ளவேஒதுக்குக் குடி இருப்பதற்கான அந்த நிலையற்ற உடம்பு இறையருளால் வழங்கப்பட்டு உள்ளது. இந்து உடம்பைக் கொண்டு அறிவுப் பொருளாக உள்ள இறைவனை வாழ்த்தி வழிபட்டுபற்றுக்களை அறுத்து வாழ்தல் மேலானது.

 

"எக்காலும் சாதல் ஒருதலையே,யான் உனக்குப்

புக்கில் நிறையத் தருகிலேன்,--மிக்க

அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்

துறத்தல் மேல் சார்தல் தலை."   --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     (நெஞ்சே) எக்காலும் சாதல் ஒருதலையே - எப்பொழுதாவது இறப்பது உறுதியான் உனக்கு புக்கில் நிறைய தருகிலேன் - நான் உனக்கு அழியும் தன்மைத்தாகிய உடலை மேலும் மேலும் கொடுத்துக் கொண்டு இருக்கமாட்டேன்,மிக்க அறிவனை வாழ்த்தி - உயர்ந்தோன் ஆகிய அருகக் கடவுளைத் துதித்துஅடவி துணையா - வனத்தைத் துணையாகக் கருத அடைந்துதுறத்தல்மேல் சார்தல் தலை - துறவறத்தினை அடைந்து வாழ்தல் சிறந்ததாகும்.

 

     உடம்பின் தன்மை குறித்து மணிமேகலை என்னும் காப்பியம் கூறுமாறு காண்க.

 

"வினையின் வந்தது;வினைக்கு விளைவு ஆயது;

புனைவன நீங்கில் புலால்புறத்து இடுவது;

மூத்துவிளிவு உடையது;தீப்பிணி இருக்கை;

பற்றின் பற்றிடம்;குற்றக் கொள்கலம்;

புற்று அடங்கு அரவில் செற்றச் சேக்கை;

அவலக் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது;

மக்கள் யாக்கை இது என உணர்ந்து,

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்!"   --- மணிமேகலைபளிக்கறை புக்க காதை.

 

இதன் பதவுரை ---

 

     மிக்கோய் --- மேலோனே! வினையின் வந்தது --- கன்மத்தால் உண்டானது;  வினைக்கு விளைவாயது --- கன்மத்திற்கு விளைநிலமாக உள்ளதுபுனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது --- புனையப்படுவனவாகிய சந்தனம்மலர் முதலிய மணப்பொருள்கள் நீங்கப் படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவதுமூத்து விளிவு உடையது --- முதுமை அடைந்து சாதலை உடையதுதீப் பிணி இருக்கை --- கொடிய நோய்கட்கு இருப்பிடமாக உள்ளதுபற்றின் பற்றிடம் --- பற்றுக்களுக்குப் பற்றும் இடமாய் உள்ளது;  குற்றக் கொள்கலம் --- குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளதுபுற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை --- பாம்பு அடங்கி உள்ள புற்றைப்போல சினம்பகைமைவெறுப்பு ஆகிய குற்றங்களுக்குத்தங்கும் இடம் ஆக உள்ளதுஅவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது --- அவலம்கவலைசெயல் ஒழிதல்வாய்விட்டு அழுதல்,முதலியன நீங்காததாகிய உள்ளத்தைத் தன்னிடத்து உடையதுமக்கள் யாக்கை இது என உணர்ந்து --- மக்கள் உடம்பு இத்தகையது என்பதனை அறிந்து,இதனைப் புறமறிப் பாராய் --- இந்த உடம்பைபையை உள்புறமாகத் திருப்பிப் பார்ப்பது போலப் பார்க்கவேண்டும். (பார்த்தால் இந்து உடம்பு தூய்மை அற்றது என்பது விளங்கும்)

 

     உடம்பானது வினையின் காரியமாயும்வினைக்குக் காரணமாயும்உள்ளது.  "பிறவிப் பெருங்கடல்" "என்பதன் உரையில், "காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரை இன்றி வருதலின் பிறவிப் பெருங்கடல் என்றார்" எனப் பரிமேலழகர் கூறியது சிந்தனைக்கு உரியது. 

 

     இதனைப் "பை மறியாப் பார்க்கப்படும்" என்று நாலடியார் கூறுமாறு காண்க.

 

தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்

மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை

பொய்ம்மறையாக் காமம் புகலாது,மற்றதனைப்

பைம்மறியாப் பார்க்கப் படும்.     --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     தோல் போர்வை மேலும் தொளை பல வாய் - தோலால் ஆன போர்வையின் மேலும் தொளைகள் பலவாகி இருந்துபொய் மறைக்கும் மீ போர்வை மாட்சித்து உடம்பானால் - அவற்றின் உள்ளே உள்ள அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையை உடையது இந்த உடம்பு என்றால்காமம் புகலாது - அவ்வுடம்பைக் காமத்தால் மகிழாமல்மீப்போர்வை பொய் மறையா - அந்த போர்வையாகிய ஆடையை அழுக்கினை மறைக்கும் திரையாகவும்மற்று அதனை - மேலும் அந்தப் போர்வையாகிய தோல் போர்வையை,  பை மறியாப் பார்க்கப்படும் - ஒரு பையினை அதன் உட்புறத்தை மேற்புறமாகதி திருப்பிப் பார்ப்பது போலப் பார்த்துஅதன் மேல் வைத்த இருப்பத்தை நீக்கிக் கொள்ளவேண்டும்.

 

            அன்றாடம் நாம் பயன்படுத்துகிற பையானது உள்ளே அழுக்கு நிறைந்து உள்ளது என்பதுஅந்தப் பையை உட்புறமாகத் திருப்பிப் பார்த்தால் புலனாகும். தோலைப் போர்வையாகக் கொண்டு மூடப்பட்டு உள்ள இந்தஉடம்புஉள்ளே அழுக்கு நிறைந்தது என்பதை அறிந்துஅதன் மேல் பற்று வைத்தலை நீக்கிக் கொள்ளவேண்டும்.

 

     "சீ வார்ந்துஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் இது" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

"பொய்ம் மறித்து இயற்றி வைத்து,

     புலால்கமழ் பண்டம் பெய்து,

பைம் மறித்து இயற்றி அன்ன 

     பாங்கு இலாக் குரம்பை நின்று

கைம் மறித்து அனைய ஆவி 

     கழியும்போது அறிய மாட்டேன்;

செந்நெறிச் செலவு காணேன்;

     திருக்கொண்டீச் சரத்து உளானே."    --- அப்பர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! பொய்களை வெளியே செல்லாதபடி தடுத்துத் திருப்பி அவற்றிற்கு வடிவு தந்து,புலால் நாற்றம் வீசும் பொருள்களை அவற்றில் பொருத்தி,பையை அழுக்குப் புலப்படாதபடி திருப்பி வைத்தாற்போன்றுஎனக்குத் துணையாக உதவாத இந்த உடம்பிலிருந்து இது தகாது என்று கைகளால் குறிப்பிட்டுச் செல்வது போன்ற உயிர் நீங்கும் காலம் இது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேன். உயிருக்கு உறுதி தேடி நேரிய வழியில் செல்லும் ஞான சாரத்தையும் உணரமாட்டேன்.

 

     நமக்கு வாய்த்துள்ள இந்த உடம்பு நமக்குச் சொந்தமானது அல்ல. இது வாடகை வீடு. என்றாவது ஒரு நாள் காலி செய்துவிட்டுப் போகத்தான் வேண்டும். நிரந்தரமான வீடு இறைவன் திருவடியே. அதனை அடைய முயலுதல் வேண்டும்.

 

 

No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...