037. அவா அறுத்தல் - 03. வேண்டாமை அன்ன






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 37 -- அவா அறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "ஒரு பொருளையும் விரும்பாமை ஆகிய மேலான செல்வமானது, நம்மால் காணப்படுகின்ற இந்த உலகத்திலும் இல்லை, கேட்கப்படுகின்ற சுவர்க்க உலகத்திலும் அதனை ஒப்பது இல்லை" என்கின்றார் நாயனார்.

     இவ்வுலகத்தில் மக்கள் அடையும் செல்வமும், தேவலோகத்தில் தேவர்கள் அடைந்துள்ள அமுதம், கற்பகத் தரு, சிந்தாமணி முதலாகிய செல்வங்களும், ஒன்றை வைத்து மற்றொன்றை ஆராய்ந்த பார்த்தால், ஒன்றினுக்கு ஒன்று கீழ்ப்படுதலும், மேம்படுதலும் ஆகிய இரண்டு தகுதிகளை உடையனவே.

     மக்களுள்ளேயும் ஒருவர் செல்வம் மற்றவர்க்குக் கீழாதலும், மேலாதலும் உண்டு. தேவர்களுள்ளேயும் பிரமனது செல்வத்தை நோக்க, இந்திரனது செல்வம் கீழானது எனப்படும். அல்லாமல், இவை யாவும் நிலையான இன்பத்தைத் தராது. துன்பத்திற்கு இடமாகிய பிறப்பினையே தருவன ஆகும். பிறப்பினையும், அதனால் சாருவதாகிய துன்பத்தையும் தருவது ஆசையே. ஆசையை அறுத்துவிட்டால், பிறப்பு இல்லை. அதனால் வரும் துன்பமும் இல்லை. எனவே, ஆசையை அறுத்தல் பெரும் செல்வமாகும். அச் செல்வத்திற்கு, இவ்வுலகச் செல்வங்களும், விண்ணுலகச் செல்வங்களும் ஈடாகா. எனவே, வேண்டாமை அன்ன விழுச் செல்வம்" என்றார் நாயனார்.

திருக்குளைக் காண்போம்...

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை,
யாண்டும் அஃது ஒப்பது இல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை --- ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை,

     ஆண்டும் அஃது ஒப்பது இல் --- இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை.

         (மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள் செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச் செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு கூறப்பட்டது.)


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

கொடியும் முரசும் கொற்றவெண் குடையும்
பிறர்கொளப் பொறாஅன், தானே கொண்டு
பொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கி,
செவியிற் கண்டு, கண்ணில் கூறி,
இருநிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன்

மிக்கோன் ஒருவன் வெறுக்கை நோக்குழித்
தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற,
இழப்புறு விழுமம் எய்தி, அழுக்கறுத்து
மற்றது பெறுதற்கு உற்றன தெரீஇ
அயிற்சுவை பெறாயன், துயிற்சுவை யுறாஅன்,

மாணிழை மகளிர் தோள் நலங் கொளாஅன்,
சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து,
கவலை உற்று அழிவதூஉங் காண்டும், விறகெடுத்து
ஊர்தொறும் சுமந்து விற்று, கூலிகொண்டு,
புற்கையும் அடகும் மாந்தி, மக்களொடு

மனையும் பிறவு நோக்கி, அயன்மனை
முயற்சியின் மகனை இழித்தனன் எள்ளி,
எனக்கு இணை இலையென இனையன் மற்றொருவன்
மனக்களிப்பு உறீஇ மகிழ்வதூஉம் காண்டும், அதனால்
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே,
அல்கா நல்குரவு அவா எனப்படுமே...  ---  சிதம்பர மும்மணிக் கோவை.

இதன் பொருள் ---

     அரசன் ஒருவன்,  தன்னுடையதை விட, பிற அரசனுடைய செல்வம் மிகுந்து இருப்பதாக எண்ணினான். தன்னிடத்தில் உள்ள பொருளை இழந்தால் உண்டாகக் கூடிய துன்பத்தை, அதை இழக்காது உள்ளபோதே வருவித்துக் கொண்டான். பொறுமையை அவன் இழந்து, பொறாமை வடிவம் ஆயினான். மேலான செல்வத்தைப் பெறுவதற்கு உரிய வழிகளை ஆராய்ந்தான். அது அவனுக்குக் கவலையையே உண்டாக்கியது. உண்டு மகிழ்ந்து இருந்ததையும், உறங்கி மகிழ்ந்து இருந்ததையும் மறந்தான். தனது மனைவியிடத்து அடையும் மகிழ்ச்சியையும் மறந்தான். அவன் விடுவதோ பெருமூச்சு. அதானல் வழங்குவதோ சிறுகாற்று. எவ்வளவு முயன்று பெருமூச்சு எறிந்தாலும், அது பெருங்காற்று ஆகாது.  இப்படிக் கவலையினாலேயே ஒரு பெருஞ்செல்வத்தன் அழிவதும் உண்டு.

     நாள்தோறும் விறகு வெட்டிக் கட்டிச் சுமந்து கொண்டு போய், ஊர்தோறும் விற்றுக் கூலி வாங்கிக் கொண்டு, அதனைக் கொண்டு, புல்லரிசிக் கூழும் இலையுணவும் உண்டு மகிழ்வான். தனித்து உண்ணமாட்டான். மனைவி மக்களுடன் உண்டு களிப்பான். தன் வீட்டு நிலையை, அயல் வீட்டு நிலையோடு எண்ணிப் பார்ப்பான். தன் முயற்சியையும், அதன் விளைவால் தனக்கு உண்டாகும் பயனையும் எண்ணுவான். இந்த நிலைமை அயல் வீட்டானிடத்தில் இல்லை என்பதையும் அறிவான். எனக்கு இணையாக யாரும் இல்லை என்று எண்ணி மனமகிழ்ச்சி அடைந்து ஒரு ஏழையானவன் இருப்பதும் கண்டோம்.

     அதனால், செல்வம் என்பது ஒருவனுடை சிந்தை நிறைவு ஆகும். குறையாத வறுமை என்பது அவா உடைமை ஆகும்.


பரிந்து எனக்கோர் நன்மை பயப்பாய்போல், நெஞ்சே!
அரிந்து என்னை ஆற்றவும் தின்னல்,--புரிந்துநீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன், விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ.     ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     நெஞ்சே --- மனமே!, பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் --- எனக்கு ஓர் உறுதியை விரும்பிச் செய்வதுபோற் காட்டி, என்னை ஆற்றவும் அரிந்து தின்னல் --- என்னை மிகவும் அரிந்து தின்னாதே, நீ புரிந்து வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் --- நீ விரும்பி அடையக் கருதுகின்றவற்றை நான் விரும்பிச் செய்வேனல்லேன், விழுக்குணம் பூண்டேன் --- பற்று விடுதலை மேற்கொண்டுள்ளேன்; பொறியிலி --- பேதையே!, போ ---அப்பாற்செல்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...