036. மெய் உணர்தல் - 03. ஐயத்தின் நீங்கி






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 36 -- மெய் உணர்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "ஐயம் நீங்கி, மெய் அறிவினை உடையார்க்கு, அவர் வாழும் நிலவுலகத்தினை விட, அடையக் கூடிய முத்தி உலகம் அருகில் உள்ளதாகும்" என்கின்றார் நாயனார்.

     ஐயமாவது பலவகையான அறிவு. அதனைக் கொண்ட ஒருவன், மறுபிறப்பு என்ற ஒன்று உள்ளதா? உயிர்களுக்கு இருவினைப் பயன் உள்ளதா? உயிர்களுக்கு எல்லாம் முதலாகி நிற்கும் கடவுள் ஒருவர் உண்டோ? என்று ஆராய்ந்து, ஒன்றிலும் நிச்சயம் உண்டாகாது இருப்பின் அது ஐய உணர்வு ஆகும். அது அவனுக்குப் பிறப்பையே தரும். அப்படிப்பட்டவனுக்கு அவன் வாழும் நிலவுலகமே அருகில் இருக்கும். அவனுக்கு வீட்டுலகம் அடையக் கூடாத நெடுந்தொலைவில் உள்ளதாகவே அமையும்.

     ஒருவிதத்தில், பிறர் மதத்தை நிராகரித்து, தமது சமயத்தை உண்மை என்று நாட்டுதல் எல்லாச் சமய நூல்களுக்கும் இயல்பு.

     "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்று, திருவாசகம், போற்றித் திருவகவலில் வருவது காண்க.

     எல்லாச் சமய நூல்களும் கூறுகின்ற பொருள்களுள் எது உண்மை என்று உண்டாகும் ஐயத்தினை, தமது யோக முதிர்ச்சியினாலும், அதனால் உண்டான அனுபவ ஞானத்தாலும் நீக்கி, உண்மையை அறிதல் வேண்டும். மெய்யுணர்வின் அனுபவமே மிகுந்து வருவதால், அனுபவ ஞானம் உண்டாவதற்கு முன், உலகில் உள்ள பற்றுக்கள் எல்லாம் ஒழிந்து முத்தியில் ஆசை மிகுந்து வரும். வரவே, இப்போது இருக்கும் நிலவுலகத்தைக் காட்டிலும், வீட்டுலகம் அண்மையில் உள்ளதாக உணரப்படும்.

     ஐய அறிவு பிறவிக்குக் காரணம் ஆகும்.

     மெய்யறிவு முத்திக்குக் காரணம் ஆகும்.

     மெய்யுணர்வால் உலகியல் உணர்வு குறையக் குறைய, வீட்டுலகம் நெருங்கி வரும் என்பது கருத்து.

திருக்குறளைக் காண்போம்... 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின்
வானம் நணியது உடைத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு --- ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு;

     வையத்தின் வானம் நணிய துடைத்து --- எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.

         (ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ? அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோக முதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல் உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)

     பின் வரும் பாடல் கருத்தை ஒப்பாகக் கொள்ளலாம்...

முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,
நுண்ணூல் பெருங்கேள்வி நூல்கரை கண்டானும்,
மைந்நீர்மை இன்றி மயல்அறுப்பான், இம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.    ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும் --- கடலில், அலைபோல, தன்மனம் எழுந்து, அலையாத, அறிவு உடையவனும்; நுண் நூல் பெருங்கேள்வி நூல்கரை கண்டானும் ---  நுட்பமாகிய நூல்களில் சிந்தனையினாலும்,  மிகுதியாகிய கேள்வியினாலும், நூல்களின் முடிவை ஐயந்திரிபறக் கண்டவனும்; மைந்நீர்மை இன்றி மயல் அறுப்பான் --- குற்றத் தன்மை, (தன்னிடத்தில்) உண்டாகாதபடி, மனக்கலக்கம் ஒழித்தவனும்; இம்மூவர் மெய் நீர்மை மேல் நிற்பவர் - ஆகிய இம் மூவரும் அழிவு இன்மையாகிய தன்மையுடைய முத்தி உலகத்தில் ற்பவராவர்.

         மெய்ப்பொருள் காணும் அறிவுடையவனுக்கும், நூல் தேர்ச்சி மிகுந்தவனுக்கும், உலகப் பற்றைவிட வல்லவனுக்கும் முத்திபெற ஏது உண்டு.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...