029. கள்ளாமை - 06. அளவின்கண் நின்று






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 29 -- கள்ளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "களவு செய்வதில் மிகுந்த பற்று உடையவர், நல்வாழ்க்கைக்குத் தேவையான உயிர் முதலானவற்றை அளவு செய்யும் வழியில், வரையறையோடு நிலைத்து நின்று ஒழுகும் ஆற்றல் இல்லாதவர்" என்கின்றார் நாயனார்.

     உயிர் முதலானவற்றை அளவு செய்தலாவது, பிரத்தியட்சம் முதலாகச் சொல்லப்பட்ட பிரமாணங்களால் உயிர்ப் பொருளையும், அவ்வுயிர்ப் பொருள்களுக்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப உண்டாகும் இன்பம் துன்பம் முதலிய விளைவுகளையும், நல்வினை தீவினைகளால் உயிரானது அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்னும் நால்வகை கதிகளில் பிறந்து இறந்து வருதலையும், அவ்வாறு பிறந்து இறந்து வருவதில் இருந்து தப்பிக்க, நல்வினை தீவினைகள் ஒழிவதற்கு உபாயமாக உள்ள யோக ஞானங்களையும், அந்த யோக ஞானங்களால் உயிரானது அடையும் முத்தியையும் அளவு செய்து, உள்ளவாறு அறிதல். அவ்வாறு அறிந்த பின், அதற்குப் பொருந்த நடத்தல். அது, தீயவைகளில் நீங்கி, நல்வழியில் நடத்தல் ஆகும்.

     அளவை இலக்கணம் குறித்து, சிவஞான சித்தியார் என்னும் மெய்கண்ட சாத்திர நூலில் கூறியுள்ளமை காண்க...

அளவை காண்டல், கருதல், உரை,
         அபாவம், பொருள், ஒப்பு ஆறு என்பர்;
அளவை மேலும் ஒழிபு, உண்மை,
         ஐதிகத்தோடு, இயல்பு என நான்கு
அளவை காண்பர்; அவையிற்றின்
         மேலும் அறைவர்; அவை எல்லாம்
அளவை காண்டல், கருதல், உரை
         என்ற இம்மூன்றில் அடங்கிடுமே.

         அளவை என்பது காண்டல் அளவை, கருதல் அளவை உரை அளவை, இன்மை அளவை, பொருள் அளவை, உவமை அளவை, என்று ஆறு வகைப்படும் என்பர். சிலர் இவற்றுக்கு மேலும் ஒழிபு அளவை, உண்மை அளவை, ஐதிக அளவை, இயல்பு அளவை, என்ற நான்கனையும் கூட்டி அளவைகள் பத்து வகைப்படும் என்று கூறுவர். வேறு சிலர் இப்பத்துக்கு மேலும் அளவைகள் உண்டு எனக் கொள்வர். இவ்வாறு அளவைகளைப் பலவகைப்படுத்திக் கூறினாலும் அவை யாவும் காண்டல் அளவை, கருதல் அளவை, உரை அளவை எனும் மூன்றனுள் அடங்கும்.

         அளவை என்பது வடமொழியில் பிரமாணம் என்ற சொல்லால் குறிப்பிடப்படும். பிரமா என்ற சொல் அறிவு என்ற பொருளைத் தரும். எதன் வழியாக அறிவு பெறப்படுகிறதோ அது பிரமாணம் ஆகும். அளவையை அறிவு அளவை என்றும் வழங்குவர். ஆங்கிலத்தில் இது எபிஸ்டமாலஜி எனப்படும்.

         உலகத்துப் பொருள்களை எண்ணல் அளவை, நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை போன்றவற்றால் அளந்து காண்பது போல மெய்ப்பொருள் இயலில் கூறப்படும் கருத்துக்களை அளந்து அறிவதற்கு அளவை இயல் பயன்படுகிறது. அளவையில் குறை இருந்தால் அளக்கப்படும் பொருளினைப் பற்றிய அறிவும் குறையுடையதாய் முடியும். அதனால் தான் அளவை இயல் இன்றியமையாததாகக் காணப்படுகிறது. இது முதல் பதினான்கு பாடல்கள் அளவை இலக்கணம் பற்றிக் கூறுகின்றன.

         1. காண்டல் அளவை என்பது காட்சி என்றும், பிரத்தியட்சப் பிரமாணம் என்றும் வழங்கும். ஒரு பொருளைக் கண் முதலிய ஐம் பொறிகளாலும் நேர் முகமாக அறிதல் காண்டல் அளவை ஆகும்.

         2. கருதல் அளவை என்பது அனுமானப் பிரமாணம் எனவும் கூறப்படும். ஒரு பொருளை நேர்முகமாகக் காண முடியாத போதும், அதனை ஒருபோதும் விட்டு நீங்காத தன்மை உடைய மற்றொரு பொருளைக் கண்டு முதலில் கூறப்பட்ட பொருள் உள்ளது என்று கருதி அறிதல் கருதல் அளவை ஆகும். எடுத்துக்காட்டாக தீயோடு விட்டு நீங்காத தன்மையை உடையது புகை. விட்டு நீங்காத் தன்மையை அவிநா பாவம் என்ற சொல்லால் குறிப்பர். தொலைவில் ஓரிடத்தில் புகை எழுவதைக் கண்டு நெருப்பு கண்ணுக்குப் புலனாகாத போதும் அங்கே நெருப்பு உள்ளது. என்று அறிந்து கொள்வது கருதல் அளவையின் பாற்படும்.

         3. உரைஅளவை ஆகமப் பிரமாணம் என்றும், சத்தப் பிரமாணம் என்றும், ஆப்தவாக்கியம் என்றும் வழங்கப்படும். கண்டும் கருதியும் அறிய முடியாத பொருள்களைப் பற்றி நூல்களின் வாயிலாக அறிதல் உரை அளவை ஆகும். இங்கு நூல்கள் எனப்பட்டன. இறைவனால் அருளப்பட்டனவும், இறைவனின் மெய்யடியார்களால் அருளப்பட்டனவுமாகிய மெய்ந்நூல்களையே குறிக்கும்.

         4. இன்மை அளவை என்பது, உண்டு என்னும் அறிவுக்கு எதிராக உணரப்படுவதாகும். இதனை அபாவம் என்றும் வழங்குவர். எடுத்துக் காட்டாக முயலுக்குக் கொம்பு இல்லை என்பது இன்மை அளவையால் அறியப்படுவதாகும்.

         5. பொருள் அளவை என்று ஆசிரியர் குறிப்பிட்ட அளவை வடமொழியில் அருத்தாபத்தி என்று வழங்கும். இங்ஙனம் அன்று எனில் இது கூடாது என்று உய்த்து அறிவது அளவையால் பெறப்படும். எடுத்துக் காட்டாக ஒருவர் உண்ணா நோன்பு இருப்பதாகச் சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பகற்பொழுது முழுவதும் அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்கிறது. அவர்கள் முன்னிலையில் அவர் எதையுமே உண்ணவில்லை. பத்துப் பதினைந்து நாள் கழிந்த பிறகு அவர் மேனி வாடாமல் இருப்பாரானால், யாருமே அறியாமல் இரவில் அவர் உண்ணுகிறார் என்பதனை உய்த்து அறியலாம். இதனைப் பகல் உண்ணான் பருத்திருப்பான் என்ற சொற்களால் கூறுவர். இதுவே அருத்தாபத்தி அளவையாகும்.

         6. உவமை அளவை --- செய்யுளில் ஒப்பு என்ற சொல்லால் குறிக்கப்படுவது உவமை அளவை என்றும் கூறப்படும். காட்டுப் பசுவை அறியாத ஒருவன் அது எவ்வாறு இருக்கும் என்று கேட்டால், வீட்டுப் பசுவை ஒத்து இருக்கும் என்று விளக்குவது இந்த அளவைக்கு எடுத்துக் காட்டு.

         சிறப்பித்துச் சொல்லப்படுகிற மேற்கூறிய ஆறு அளவைகளையும் தவிர மேலும் நான்கு அளவைகள் கொள்ளப்படும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவற்றுள் முதலாவது ஒழிபு அளவை. இதற்கு பாரிசேட அளவை என்றும் பெயர் வழங்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதக் கதையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுவர். அக்காலத்தில் ஆயிரம் யானை வலிமை உடையோர்கள் நால்வர் இருந்தனர். அவர்கள் சல்லியன், சராசந்தன், கீசகன், பீமசேனன் என்பவர்கள். விராட நாட்டில் கீசகன் இனந்தெரியாத ஒருவனால் மற்போரில் கொல்லப்பட்டான். அந்நாட்டில் சல்லியனும், சராசந்தனும் இல்லை. எனவே கீசகனைக் கொன்றவன் அஞ்ஞாதவாசத்தில் இருந்தவனாகிய பீமனாகத்தான் இருத்தல் வேண்டும் என்று உய்ந்து அறியப்படும்.

         உண்மை என்பது சம்பவ அளவை என்று வடமொழியில் கூறப்படும். என்னிடம் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன என்று நான் கூறும்போது, என்னிடம் நூறு பொற்காசுகள் உண்டு என்பது சொல்லாமலே பெறப்படும். ஏனெனில் நூறு, ஆயிரத்துள் அடங்கும் என்பது உலகறிந்த உண்மை.

         ஐதிகம் என்பது வழிவழியாக வழங்கி வரும் வழக்கமாகும். இம்மரத்தில் பேய் ஒன்று குடி இருக்கிறது எனும் போது தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்டு வந்த ஒரு செய்தியை அது உணர்த்துகிறது.

         இயல்பு என்பது சுபாவ அளவை என்று கூறப்படும். சொற்களுக்கு நேரடியாகப் பொருள் கொள்ளுவது இந்த அளவையினுள் அடங்கும். மரம் என்ற தமிழ்ச் சொல் இயல்பாக நின்று மரம் என்ற பொருளை உணர்த்தும் என்று அறிவது இந்த அளவையுள் அடங்கும்.

         இவ்வாறு பத்து அளவைகள் கூறப்படினும் அவை யாவும் காட்சி, கருதல், உரை எனும் மூன்றனுள் அடங்கும். இன்மையும், இயல்பும் காட்சி அளவையில் அடங்குவன. பொருள், ஒழிப்பு, உண்மை என்ற நான்கு அளவைகளும் கருதல் அளவையில் அடங்குவன. ஐதிகம் என்பது உரை அளவையில் அடங்கும்.

     பிரமாணம் என்பது மெய்யறிவை விளக்குதற்கு உதவும் கருவி. பிரமேயம் என்பது அளந்து அறியப்படும் பொருள்.

     இருவினைகளால் இன்ப அனுபவம், துன்ப அனுபவம் உண்டாம் என்று முன்னரே அறிந்தோம். நல்வினையும் பிறவிக்கு வித்து. எனவே, அதனோடு, தீவினையைம் சேர்த்தே "இருள்சேர் இருவினை" என்றார் நாயனார்.

     எனவே, களவில் ஆசை வைத்தவருக்கு, அளவைகளால் பயன் விளைவதில்லை. அவருக்கு நல்வினை, தீவினை என்னும் இருவினைகளும் அறுவதில்லை. பிறவியும் ஒழிவதில்லை.

திருக்குறளைக் காண்போம்...

அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார், களவின்கண்
கன்றிய காதலவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் --- உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார்,

     களவின்கண் கன்றிய காதலவர் --- களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார்.

         (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

காற்றார் பொழில் புல்லைமாலே, "அளவின்கண்
     நின்று ஒழுகல்
ஆற்றார் களவின்கண் கன்றிய காதலவர்" எனலான்,
ஏற்றான் அயனது அளவின்கண் நின்றனை, வெண்ணெயுண்டல்
சாற்றாய் களவின்கண் காதல்உன் விந்தையைச் சாற்றுவதே.

இதன் பொழிப்புரை ---

     தென்றல் காற்றுப் பொருந்தி உள்ள சோலைகளால் சூழப்பட்டுள்ள திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள திருமாலே! களவு செய்வதில் மிகுந்த பற்று உடையவர், நல்வாழ்க்கைக்குத் தேவையான உயிர் முதலானவற்றை அளவு செய்யும் வழியில், வரையறையோடு நிலைத்து நின்று ஒழுகும் ஆற்றல் இல்லாதவர் என்று சொல்லப்பட்டு உள்ளதால், அடிமுடி தேடுங்கால், முடியைக் கண்டேன் என்று பிரமன் பொய் சொல்லியது களவு என்று அறிந்து, நீ அவ்வாறு சொல்லவில்லை. ஆனால் ஆயர்பாடியில் வெண்ணெயைக் களவு செய்தாய். இது விந்தையை என்னவென்று சொல்லுவது?

     காற்றார் பொழில் --- தென்றல் பொருந்திய சோலை.

     மாலும் அயனும் தாமே பரம்பொருள் என்று மயங்கி மலைந்தபோது, அலகில் சோதியராம் அண்ணல், அருட்ஜோதித் தாணுவாக நின்றனர். அயனும் மாலும் அருகில் நின்று தேடியும் காணாது திகைத்து நின்றனர்.

     ஏற்றான் அயனது அளவின்கண் நின்றனை --- எதிர்த்துப் போரிட்டு, சிவபெருமானின் முடியினைத் தேடச் சென்ற, நான்முகனைப் போல் வஞ்சப் புன்மையில் புகாது, சரியான மெய்ம்மை அளவிலே நின்றாய். அதாவது நான்முகனைப் போலக் கண்டேன் என்று பொய்ம்மையுரை புகலாது காணவில்லை என்னும் மெய்ம்மை உரையைச் சொன்னாய் என்றபடி. இச்செய்யுலில் கண்ணன் வெண்ணெயைக் களவுசெய்து உண்ட செய்தியும் கூறப்பட்டது.

     பின்வரும் பாடல்களால் பிரமனும் திருமாலும் சிவபெருமானது முடியையும், அடியையும் முறையே தேடின வரலாறு விளங்கும்.

மாலோடு நான்முகனும் நேட வளர்எரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்க நாலூர் மயானத்துஎம்
பாலோடு நெய்ஆடி பாதம் பணிவோமே.---  திருஞானசம்பந்தர்.

பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால்
பரம மியாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ`` ---  திருவாசகம்.

     பின்வரும் பாடலால், சிவபெருமானது திருமுடியைக் காணாது அயர்ந்த பிரமன், திருமிட்யில் இருந்து கீழே விழுந்த, தாழம்பூ ஒன்றின் துணைக்கொண்டு, திருமுடியைக் கண்டதாகப் பொய் சொல்லினான் என்பது விளங்கும்.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன்பொய் மொழிந்தானே. --- திருமந்திரம்.

     திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு....

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     அடி --- தாமரை. முடி --- சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4)     "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6)     புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7)     பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8)   பிரமன் --- நினைப்பு. திருமால் --- மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...