032. இன்னா செய்யாமை - 03. செய்யாமல் செற்றார்க்கும்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 32 -- இன்னா செய்யாமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "தான் முன்னர் துன்பம் தருவனவற்றைச் செய்யாது இருந்து, தன் மீது சினம் கொண்டவர்க்கும் துன்பம் தருவனவற்றை ஒருவன் செய்வானாயின், அது அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தையே தரும்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்,
உய்யா விழுமம் தரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் --- தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்;

     உய்யா விழுமம் தரும் --- அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.

         (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.)

     பின் வரும் பாடலைக் காண்க....

வினைப்பயன் ஒன்று இன்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா இன்னா பிறர்க்கு.    --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     புனம் பொன் அவிர் சுணங்கின் பூம்கொம்பர் அன்னாய் --- புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை ஒப்பாய்!, தனக்கு இன்னா பிறர்க்கு இன்னா --- தனக்குத் துன்பந்தருவன பிறருக்குந் துன்பந் தருவனவாம் (ஆதலால்), வினைபயன் ஒன்று இன்றி --- செய்கின்ற செயலில் பயனொரு சிறிதுமில்லாமல், வேற்றுமை கொண்டு --- பகைமை ஒன்றே கொண்டு, நினைத்து --- ஆராய்ந்து, பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் --- பிறர்வருந்தத் தக்கனவற்றைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.

         பிறரையும் தம்மைப்போல நினைத்துத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்.

         'தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ, மன்னுயிர்க் கின்னா செயல்' என்ற திருக்குறள் கருத்தும் இங்கே நினைத்தற்குரியது.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...