030. வாய்மை - 03. தன்செஞ்சு அறிவது






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 30 -- வாய்மை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "ஒருவன் தன் மனமானது அறிந்த ஒன்றை, பிறர் அறியவில்லை என்று பொய்யாகச் சொல்லாது ஒழியவேண்டும். அப்படிப் பொய் கூறிய பின்னர், தனது மனமே அந்தப் பாவத்துக்குச் சாட்சியாய் நின்று, அப் பாவத்தின் பயனாகிய துன்பத்தை அடைவிக்கும்" என்கின்றார் நாயனார்.

     "உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு" என்னும் திருக்குறளுக்கு இணங்க, உயிர்க்கு உறுகண் செய்யாது இருப்பதோடு, பொய்ம்மை கூறியேனும் உயிர்களைக் காக்கவேண்டும் என்பதை அறிவிக்க, மேல் இரண்டு திருக்குறள்களைக் கூறிய நாயனார். தனக்கு வரும் தீங்குகள் எவ்வளவு ஆனாலும், பொறுத்துக் கொள்ளவேண்டுமே அன்றி, அவைகளைத் தவிர்த்தல் பொருட்டு, பொய்ம்மை கூறாது இருக்கவேண்டும் என்று இனி  கூறுகின்றார்.

     விரதியாகிய ஒருவன், பிறர் பார்க்கவில்லை என்பதால் தான் எது கூறினாலும் பொருந்தும் என்று எண்ணி, தான் அறிந்த பொய் ஒன்றினைச் சொல்லுதல் ஆகாது என்றும், அவ்வாறு சொல்லுவானாயின், அவன் மனமே அவன் சொல்லிய பொய்யாகிய பாவத்திற்குச் சாட்சியாய் இருந்து, பின்னர் துன்பத்தைத் தருவிக்கும் என்று கூறுவதால், ஒருவன் பொய் கூறித் தப்பித்துக் கொள்ள முயலுவானாயின், அம் முயற்சி பயன்படாது என்றும், பொய்ம்மை வெளிப்பட்டுத் தீங்கினைப் பயக்கும் என்றும் சொன்னார்.

     நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்" என்பது உலகநீதி என்பதை அறிக.

திருக்குறளைக் காண்போம்...


தன்நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தன் நெஞ்சு அறிவது பொய்யற்க --- ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,

     பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் --- பொய்த்ததாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.

         (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஆதிமுடி தேடி அறியான், அறிந்தேன் என்று
ஓதி, மனம் நொந்தே உழல்கின்றான் – வேதன் என்றால்,
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.            

         ஆதி --- சிவபெருமான். வேதன் உழல்கின்றான் --- கற்பம் தோறும் திருமாலுக்கு மகனாகப் பிறந்தும், கோயில் இன்றியும் பிரமன் துன்புறுகின்றான்.

     சிவபெருமானின் திருவடியைக் கண்டு அறி, பன்றி வடிவம் கொண்டு திருமாலும், அன்னப் பறவை வடிவம் கொண்டு பிரமனும், நெடுங்காலம் முயன்றனர். திருவடியைக் காணாது இளைத்த திருமால், தான் கண்டிலேன் என்று உண்மை சொன்னார். திருமுடியைக் காணாது இளைத்த பிரமன், அங்கிருந்து விழுந்த தாழம்பூ ஒன்றின் துணைக்கொண்டு, திருமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னார்.     
                 
         அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
         படிகண் டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
         அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
         முடிகண்டேன் என்று அயன்பொய் மொழிந்தானே.

எனவரும் திருமூலர் திருமந்திரப் பாடலை நோக்குக.

     பின்வரும் படால்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,... ---  கலித்தொகை, நெய்தல் கலி.

இதன் பொருள் ---

     நெஞ்சைக் காட்டிலும் அணுகிய சாட்சி வேறு இல்லை. ஆகையால், அறியாதவர்கள் தம் மனம் இது செயல் ஆகாது என்று மீளாது, வேளு விலக்குவார் இல்லாமல், உலகத்தில் கண்டவர்களும் இல்லை என்று கருதி, தாம் செய்யும் தீவினைகளுள் தமது நெஞ்சு அறியவே செய்த கொடிய தீவினைகளை, பின்பு பிறர் அறியாமல் மறைத்தார்களாயினும், அவை மறையா..

தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை--தன்னைக்
குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.        --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின் --- தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னைத்தான் எய்தா நலன் இல்லை ---பின்னர் அவனால் அடையமுடியாத இன்பம் எவ்வுலகத்தும் இல்லை; தன்னைக் குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல் --- தன்னைத் தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பிடி படுக்கப்பட்ட களிறு --- பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல் எஞ்ஞான்றும் வருந்துதற்குக் காரணமாகும்.


ஏதேனும் பயன்வேண்டிப் பொய்சொல்லின்,
             அப்பொய்தான் எவ்விதத்தும்
மா தரையில் வெளியாகும், அப்பொழுது, ப்
             பயன் அழியும், வளரும் துன்பம்,
சாதல் இன்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும்,
             பயன்கருதி சலம் உரைத்தல்,
ஆதலினால் உண்மைதனைத் துணைக்கொள்ளின்
             எப்பயனும் அடைவோம் நெஞ்சே.    ---  நீதிநூல்

இதன் பொருள் ---

     ஒன்றை விரும்பிப் பொய் சொன்னால், அப்பொய் எப்படியும் வெளியாகும். அப்பொழுது கிடைத்த பொருளும் அழிந்து விடும். அதனால், துன்பம் மிகும். இச்செயல் சாவாமையை விரும்பி நஞ்சு உண்பதை ஒக்கும். உண்மையைக் கைக்கொண்டால் நிலையான எல்லாப் பயனும் அடைவோம்.

         பயன்-இன்பம். விடம்-நஞ்சு. சலம்-பொய்.
        

மெய்யர் எனப் பெயர் பூண்டார் வறிஞரே
             எனினும், நிதி மிகவும் அன்னார்
கையதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார்,
             பொய்யர் எனக் கவ்வை பூண்டார்
செய்யபொருள் மிகவுளார் எனினும், வர்
             கையில் ஒரு செல்லாக் காசும்
அய்யமின்றி ஒருவர் கொடார் எனில், படிறின்
             தன்மைதனை அறைவது என்னே.    --- நீதிநூல்

இதன் பொருள் ---

     மெய் சொல்லுவோர் செல்வத்தால் ஏழைகளாய் இருந்தாலும், பெரும்பொருளையும் அவர் கையில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சமாட்டார். பொய் சொல்வார் பெருஞ்செல்வம் படைத்தவராயினும், அவர்கள் கையில் ஒரு செல்லாக் காசும் ஒருவரும் கொடுக்கமாட்டார்கள். ஆயின், பொய்யுடையான் தன்மையைப் பற்றி என்ன சொல்லுவது?


விலங்கு பறவையினுத், நரர் வாக்கு ஒன்றால்
             சிறப்புடையர், விளங்குந் திண்மை,
இலங்குவாயால் உரையாது, வத்தம் உரைப்
             போர், உலகம் இகழ் விலங்கின்
குலங்களினும் கடையராம், சாணம் அதை
             அமுதுவைக்கும் கோலச் செம்பொற்
கலங்களின் வைத்தலை ஒக்கும், மெய்க்குரிய
             வாயாற்பொய் கழறல் அன்றே.       ---  நீதிநூல்

இதன் பொருள் ---

     விலங்கு பறவை இவற்றைவிட மக்கள் மனக் கருத்தை (பேச்சு மொழியாலும் எழுத்து மொழியாலும்) விளக்குவதனாலேயே சிறந்தவராகின்றனர். வாயால் உறுதி பயக்கும் உண்மையே உரைக்க வேண்டும். மெய் சொல்லாது பொய் சொல்லின் தாழ்வான விலங்கினத்தாலும் தாழ்வாவர். அது, அமிழ்து வைக்கும் பொற்கலத்தில் சாணம் வைப்பதை யொக்கும்.

பழியிலார் ஒருவர்க்கும் அஞ்சாது
             நேர்வழியே படர்வார், வவ்வுந்
தொழில் உளார் பகற்கு அஞ்சுந் துரிஞ்சில்போல்
             இட்டிகையில் தொடர்ந்து செல்வார்,
இழிவு உளார் என்பதற்குப் பொய்த்தலே
             சான்றாகும், ஏசு இல் தூய
வழி உளார் என்பதற்குச் சரதமே
             சாட்சியாம் மகியின் கண்ணே.   ---  நீதிநூல்


இதன் பொருள் ---

     பொய் முதலிய பழியில்லாதவர் ஒருவர்க்கும் அஞ்சாது அறவழியிலே நடப்பர். பொய் களவு முதலிய தீமையுடையவர் பகலைக் கண்டு அஞ்சும் வௌவாலைப்போல் இடுக்கு வழியிற் செல்வர். இவர்கள் இழிந்தவர்கள் என்பதற்கு இவர்கள் கூறும் பொய்யே சான்றாகும். நேர் வழியில் நடப்போர் குற்றமற்ற தூயவர் என்பதற்கு அவர்கள் சொல்லும் மெய்ம்மையே உலகத்தின்கண் சான்றாம்.

அயலார்செய் குற்றங்கள் கூறாமல்
             மறைத்தலே அறமாம், ன்னார்
துயர் உறா வண்ணம்நாம் பொய்த்தாலும்
             பிழைஅன்று, சொந்தமா ஓர்
பயன்வேண்டிச் சிறியதோர் பொய்சொலினும்
             பெரும்பழியாம், பார்மேல் கீழாய்
அயர்வாகப் புரண்டாலும் பிறர்க்கு இன்னா
             தரும்பொய்யை அறையல் நெஞ்சே.   --- நீதிநூல்

 இதன் பொருள் ---

     மற்றவர்களுடைய நன்மைக்காம் குற்றத்தைக் கூறாமல் நீக்குதலே நன்மையாம். அவர்கள் துன்புறாதபடி நாம் பொய் சொன்னாலும் குற்றமாகாது. நமக்கு ஒரு பயன் கருதிச் சிறு பொய் சொன்னாலும், அது பெரியதொரு பழியாகும். உலகம் கீழ்மேலாகத் தடுமாறினும் பிறர்க்குத் துன்பந் தரும் பொய்யை, மனமே! சொல்லாதே.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...