திருப் பெருந்துறை - 0851. இரத்தமும் சியும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இரத்த முஞ்சி (திருப்பெருந்துறை)

முருகா!
இந்த உடம்பு உள்ளபோதே உன்ன வழிபட்டு உய்ய அருள்.


தனத்த தந்தன தானன தந்தத்
     தனத்த தந்தன தானன தந்தத்
     தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான


இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
     டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
     டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி

இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
     டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
     டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
     துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
     பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்

பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
     குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
     பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ

தரித்த னந்தன தானன தந்தத்
     திமித்தி மிந்திமி தீதக் திந்தத்
     தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம்

தனத்த குந்தகு தானன தந்தக்
     கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
     சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா

சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
     டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்
     சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே

செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
     களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
     திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இரத்தமும் சியும் மூளை எலும்பு உள்
     தசைப் பசுங்குடல் நாடி புனைந்திட்டு,
     இருக்கும் மண் சல வீடு புகுந்திட்டு, ...... அதில்மேவி,

இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு,
     அகைத்திடும் பொருளாசை எனும் புள்
     தெருட்டவும் தெளியாது பறந்திட் ...... டிட, மாயா

பிரத்தம் வந்து, அடு வாத சுரம் பித்த
     உளைப்புடன், பல வாயுவும் மிஞ்சி,
     பெலத்தையும் சில நாள் உள் ஒடுங்கி, ......தடிமேலாய்ப்

பிடித்திடும் பல நாள் கொடு, மந்திக்
     குலத்து எனும்படி கூனி அடங்கி,
     பிசக்கு வந்திடு போது, பின் அஞ்சிச் ...... சடம்ஆமோ?

தரித்த னந்தன தானன தந்தத்
     திமித்தி மிந்திமி தீதக் திந்தத்
     தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு ...... இயல்தாளம்

தனத்த குந்தகு தானன தந்தக்
     கொதித்து வந்திடு சூர்உடல் சிந்த,
     சலத்துடன் கிரி தூள்பட எறிந்திட் ...... டிடும் வேலா!

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு,
     இரைத்து வந்து அமரோர்கள் படிந்து,
     சிரத்தினும் கமழ் மாலை மணம்பொன் .....சரணோனே!

செகத்தின் இன் குரு ஆகிய தந்தைக்கு
     அளித்திடும் குரு! ஞான ப்ரசங்கத்
     திருப்பெருந்துறை மேவிய கந்த! ...... பெருமாளே.


பதவுரை

      தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல்தாளம் --- தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு என்று ஒலிக்கின்ற தாள ஒத்துடன்,

      தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூர் உடல் சிந்தச் சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா --- தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து (போருக்கு) வந்த சூரபதுமனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப் போகவும், கிரவுஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

      சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு --- தலையாரக் கும்பிட்டு, கையால் மலர் தூவி,

     இரைத்து வந்து --- போற்றி என்னும் ஒலியைச் செய்து கூட்டமாக வந்து,

     அமரோர்கள் படிந்து சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே --- தேவர்கள் தமது தலை தாழ்த்தி ( மலர்களைச் சாத்தியுள்ள தேவரீரது திருவடியை) வணங்குவதால், அவர்களது தலைகள் நறுமணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை உடையவரே!

      செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு --- உலகில் குருவாய் விளங்கும் தேவரீரது தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் அளித்த பரமகுருவே,

      ஞான ப்ரசங்கத் திருப்பெருந்துறை மேவிய கந்த --- சிவபெருமான் ஞானச் சொற்பொழிவு செய்த திருத்தலமாகிய திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருக்கும் கந்தக் கடவுளே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

      இரத்தமும் சீயும் மூளை எலும்பு உள் தசைப் பசும் குடல் நாடி புனைந்திட்டு --- இரத்தமும் சீழும், மூளையும், எலும்பும், பொருந்தியுள்ள மாமிசம், பசிய குடல், நரம்புகள், இவைகளால் ஆக்கப்பட்டு

      இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி --- அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன வீடாகிய உடலில் பொருந்தி இருந்து,

     இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு --- இனிமையாகப் பேசும் வஞ்சக மொழிகள் மிகுந்து,

      அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட --- கிளைத்து எழுகின்ற பொருளாசை என்கின்ற பறவையானது, தெளிவுரை கூறினாலும், தெளிந்த அறிவினைப் பெறாமல், மேலும் மேலும் பறப்பதாயிருக்க,

      மாயா பிரத்தம் வந்து --- உலக மாயை மிகுந்து,

     அடு வாத சுரம் பித்தம் உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி --- துன்பத்தைத் தருகின்ற வாதம், சுரம், பித்தம் வருத்த, பல வகையான வாயுக்களும் அதிகரித்து,

      பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி --- உடல் வலிமையானது சில நாள்களில் ஒடுங்கிப் போய்,

     தடி மேலாய்ப் பிடித்திடும் பல நாள் கொடு ---  தடியை ஊன்றிப் பிடிக்கின்ற  பல நாட்கள் செல்ல,

      மந்திக் குலத்து எனும்படி கூனி அடங்கி --- குரங்குக் கூட்டத்தவன் என்னும்படி கூனி, உடல் அடங்கி,

     பிசக்கு வந்திடு போது பின் அஞ்சிச் சடம் ஆமோ --- மரணம் வருகின்ற நேரத்தில், அஞ்சுகின்ற இந்த உடல் ஆகலாமா?



பொழிப்புரை

     தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு என்று ஒலிக்கின்ற தாள ஒத்துடன், தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து (போருக்கு) வந்த சூரபதுமனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப் போகவும், கிரவுஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

         தலையாரக் கும்பிட்டு, கையால் மலர் தூவி, போற்றி என்னும் ஒலியைச் செய்து கூட்டமாக வந்து, தேவர்கள் தமது தலை தாழ்த்தி, மலர்களைச் சாத்தியுள்ள தேவரீரது திருவடியை) வணங்குவதால், அவர்களது தலைகள் நறுமணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை உடையவரே!

     உலகில் குருவாய் விளங்கும் தேவரீரது தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் அளித்த பரமகுருவே!

     சிவபெருமான் ஞானச் சொற்பொழிவு செய்த திருத்தலமாகிய திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருக்கும் கந்தக் கடவுளே!

     பெருமையில் மிக்கவரே!

         இரத்தமும் சீழும், மூளையும், எலும்பும், பொருந்தியுள்ள மாமிசம், பசிய குடல், நரம்புகள், இவைகளால் ஆக்கப்பட்டு அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன வீடாகிய உடலில் பொருந்தி இருந்து,  இனிமையாகப் பேசும் வஞ்சக மொழிகள் மிகுந்து, கிளைத்து எழுகின்ற பொருளாசை என்கின்ற பறவையானது, தெளிவுரை கூறினாலும், தெளிந்த அறிவினைப் பெறாமல், மேலும் மேலும் பறப்பதாயிருக்க, உலக மாயை மிகுந்து, துன்பத்தைத் தருகின்ற வாதம், சுரம், பித்தம் வருத்த, பல வகையான வாயுக்களும் அதிகரித்து, உடல் வலிமையானது சில நாள்களில் ஒடுங்கிப் போய்,  தடியை ஊன்றிப் பிடிக்கின்ற  பல நாட்கள் செல்ல, குரங்குக் கூட்டத்தவன் என்னும்படி கூனி, உடல் அடங்கி, மரணம் வருகின்ற நேரத்தில், அஞ்சுகின்ற இந்த உடல் ஆகலாமா?


விரிவுரை

இரத்தமும் சீயும் மூளை எலும்பு உள் தசைப் பசும் குடல் நாடி புனைந்திட்டு இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி ---

இந்த உடம்பு ஒரு விசித்திரமான படைப்பு. இறைவனால் கட்டப்பட்ட வீடு போன்றது. இந்த உடம்பானது நெடுநாளைக்கு நிற்பது என்றும், மிகவும் சிறந்தது என்றும், புனிதமானது என்றும், இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும் என்றும் கருதி அலைகின்ற அறிவிலிகட்கு அடிகள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த உடம்பு வச்சிரத்தினால் ஆனது அல்ல. இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல.  இரத்தம், மூளை, எலும்பு, தோல், தசை, நிணம் முதலியவைகளால் ஆனது.

இத்துடன் வாழவே கருதி அவாவி அலைகின்றீர்களே, இது பீளை கோழை முதலிய அருவருப்பான பொருள்களுடன் கூடியது என்பார், தோல் எலும்பு நரம்பு உதிரத்தால் ஆன உடம்பு விரைவில் அழிந்துபடும் என்பதனையும் குறிப்பில் உணர்த்துகின்றனர்.  அவ்வண்ணம் அழியும் முன் உய்வண்ணம் அடைதல் வேண்டும்.

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல  கசுமாலம்

என்பார் பழநித் திருப்புகழில்.

இவ்வாறு அழியும் உடம்பை நாம் பெற்றது உடம்புள் உறையும் உத்தமனைக் கண்டு, அழிவற்ற தன்மையை அடையும் பொருட்டே. அதனை மறந்து, உண்டும் உடுத்தும் உறங்கியும் உலாவியும் வீணாக இந்த உடம்பைச் சுமந்து அலைந்து திரிந்து மெலிகின்றேன் என்கின்றார்.

நன்றாக உண்டு உண்டு உடம்பு வலுக்கின்றது, தடிக்கின்றது. 
ஆனால் உயிர் மெலிகின்றது, நலிகின்றது.

இந்த உடம்பு ஆக்கப்பட்ட விதத்தைப் பின்வரும் அருட்பாடல்களால் அறிக.

தோலால் சுவர்வைத்து, நால்ஆறு காலில் சுமத்தி, இரு
காலால் எழுப்பி, வளைமுதுகு ஓட்டி, கை நாற்றி, நரம்
பால் ஆர்க்கை இட்டு, தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலால் கிரிதொளைத்தோன் இருதாள், அன்றி வேறுஇல்லையே.
                                                                                 ---  கந்தர் அலங்காரம்.

நிணம் குடர் தோல் நரம்பு என்புசேர் ஆக்கைதான்
     நிலாயது அன்றால்,
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக்
     குலுங்கி னாயே,
வணங்குவார் வானவர் தானவர் வைகலும்
     மனங்கொடு ஏத்தும்
அணங்கன் ஆரூர்தொழுது உய்யலாம், மையல்கொண்டு
     அஞ்சல் நெஞ்சே.               --- திருஞானசம்பந்தர்.

என்பினாறல் கழிநிரைத்து, றைச்சி மண் சுவர் எறிந்த
     இது நம் இல்லம்,
புன்புலால் நாறுதோல் போர்த்து, பொல்லாமையால்
     முகடு கொண்டு,
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையின்
     மூழ்கிடாதே
அன்பன் ஆரூர் தொழது உய்யலாம் மையல்கொண்டு
     அஞ்சல் நெஞ்சே.            --- திருஞானசம்பந்தர்.

பொய்ம்மறித்து இயற்றி வைத்துப்
         புலால்கமழ் பண்டம் பெய்து
பைம்மறித்து இயற்றி அன்ன
         பாங்குஇலாக் குரம்பை நின்று
கைம்மறித்து அனைய ஆவி
         கழியும்போது அறிய மாட்டேன்
செந்நெறிச் செலவு காணேன்
         திருக்கொண்டீச் சரத்து உளானே.   --- அப்பர்.

புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பதுவாய், ற்றுமை ஒன்றுமில்லை
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூலட்ட னீரே. --- அப்பர்.

ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து,
    ஒள் எலும்பு தூணா, உரோமம் மேய்ந்து
தாம் எடுத்த கூரை தவிரப் போவார்,
    தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்,
கான் எடுத்து மாமயில்கள் ஆலுஞ் சோலைக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே. --- அப்பர்.

எம்பெருமான்! நின்விளையாட்டு என் சொல்கேன் நான்,
     ஏதும் அறியாச் சிறியேன் எனைத்தான், இங்கே
செம்புனலால் குழைத்த புலால் சுவர்சூழ் பொத்தைச்
    சிறுவீட்டில், இருட்டறையில் சிறைசெய்து, ந்தோ!
கம்பம் உறப் பசித்தழலும் கொளுந்த, அந்தக்
     கரணம் முதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பு இயற்ற, காமாதி அரட்டர் எல்லாம்
     மடிபிடித்து வருத்த என்றோ வளர்த்தாய், எந்தாய்.   ---  திருவருட்பா.


இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு ---

இந்த இடலில் இருந்து கொண்டு, இதுவே மெய் எனக் கருதி, இந்த உடலை ஓம்புதற்கும், இன்பம் துய்ப்பதற்கும் பொருளைத் தேடி அலைவதில் வஞ்சகம் மிகுந்து அலைகின்றோம். ஆனால், அவ்வாறு வஞ்சத்தால் எண்ணியதை எல்லாம் அடைய முடியாமல், வெகுளி, இன்னாச்சொல் முதலிய குற்றங்களையும் மேலும் மேலும் புரிந்து வாழுகின்றோம்.

ஓம்பினேன் கூட்டை வாளா,
     உள்ளத்து ஓர் கொடுமை வைத்துக்
காம்பு இலா மூழை போலக்
     கருதிற்றே முகக்க மாட்டேன்,
பாம்பின்வாய்த் தேரை போலப்
     பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்
     ஒற்றியூர் உடைய கோவே.

என்று அப்பர் பெருமான் பாடியுள்ளது நமக்கே மிகப் பொருந்தும் போலும்.

அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட ---


பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை முதலிய மூன்று ஆசைகள் என்னும் நெருப்பு மூண்டு, அதனால் நெருப்பிலே பட்ட இரும்பைப் போல தகித்து, ஆசை பாசங்களில் அகப்பட்டு ஆன்மா துன்பத்தை அடையும்.

பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும்.

1. உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.

எந்தப் பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று
நிலையாமை காணப் படும்.                --- திருக்குறள்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு’        --- திருவாய்மொழி


2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.

உள்ளது போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும். பிறப்பைக் கொடுக்கும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.            --- திருக்குறள்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது மேல்மேல் வரும்.              --- திருக்குறள்.

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.               --- திருக்குறள்.


3. பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும்.

பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை
விரும்புவது பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.

உலகமெல்லாம் கட்டி ஆள வேண்டும். தொட்டன எல்லாம் பொன்னாக வேண்டும். கடல் மீதும் நமது ஆணை செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கு அடங்காது, கங்கு கரை இன்றி தலை விரித்து எழுந்து ஆடுகின்ற அசுரதாண்டவமே பேராசை.

கொடும் கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான். அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரை மீது சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால் புண்ணியம்” என்றான்.

கேட்டவன் வாய் மூடுவதற்கு முன், குதிரை மீது சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.

ஐயா! குதிரையில் செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன். அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.

குதிரை மேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.

நடப்பவன் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்து, “ஐயா! தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையையும் கொடுங்கள்” என்றான்.

குதிரை மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.

நான் அடிக்கிறேன்.  நீ சிரிக்கிறாய். என்ன காரணம்?” என்று கேட்டான்.

இவ்வாறு கேட்டு அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும். செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன். நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதல்ல, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.

கடல் என்ற புவிமீதில் அலை என்ற உருக்கொண்டு,
கனவு என்ற வாழ்வை நம்பி,
காற்று என்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு, நித்த நித்தம்

உடல் என்ற கும்பிக்கு உணவவு என்ற இரைதேடி,
ஓயாமல் இரவு பகலும்
உண்டு உண்டு உறங்குவதைக் கண்டதே அல்லாது
ஒருபயனும் அடைந்திலேனை

தடம் என்ற மிடிகரையில் பந்தபாசங்கள் எனும்
தாவரம் பின்னல் இட்டு
தாய்என்று சேய்என்று நீ என்று நான் என்று
தமியேனை இவ்வண்ணமாய்

இடை என்று கடைநின்று ஏன் என்று கேளாது
இருப்பது உனக்கு அழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே! --- நடராசர் பத்து.

ஆசைக்குஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
         ஆளினும், கடல் மீதிலே
     ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
         அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
         நெடுநாள் இருந்த பேரும்
     நிலையாகவே இனும் காயகற்பம் தேடி
         நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில், பசிதீர உண்பதும்
          உறங்குவதும் ஆகமுடியும்;
     உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே
          ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
          பரிசுத்த நிலையை அருள்வாய்,
     பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
          பரிபூரண ஆனந்தமே.          --- தாயுமானார்.

ஆசைச் சுழல் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.  --- தாயுமானார்.

ஆசைஎனும் பெருங் காற்று ஊடுஇலவம்
         பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம் வரும், இதனாலே கற்றதும்
         கேட்டதும் தூர்ந்து முத்திக்கு ஆன
நேசமும் நல் வாசமும் போய், புலனாய்இல்
         கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே!
         நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?    --- தாயுமானார்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
 ஓரா வினையேன் உழலத் தகுமோ”  --- கந்தரநுபூதி
                                    
கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டு உள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல், பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.            --- திருக்குறள்.

  ஆசா நிகளம் துகள் ஆயின பின்
 பேசா அநுபூதி பிறந்ததுவே”             --- கந்தரநுபூதி

ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும் நீங்கினல்தான் பிறவி நீங்கும்.

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
   நாமம் கெடக்கெடும் நோய்”         --- திருக்குறள்.


4.    எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று பெயர்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளுள், இத் திருப்புகழ்ப் பாடலில் அடிகளார், பொருளாசையைக் குறித்துப் பாடினார். இதற்குக் காரணம், மண்ணாசைக்கும் பெண்ணாசைக்கும் பொருள் இன்றியமையாதது.

எனவே, பொருளாசையைப் பறவையாக உருவகித்தார் அடிகளார். பறவையானது தனக்கு வேண்டிய இரைக்காக திசைகள் தோறும் அலைந்து திரிவது போல், மனிதனும் பொருளாசை கொண்டு, திசைகள் தோறும் எக்காலமும் அலைந்து திரிகின்றான். திரைகடல் ஓடித் திரவியம் தேடி, அது பிறவியைத் தொலைப்பதற்குப் பயன்படாது என்பதை அறிந்த பட்டினத்தடிகள், தம்மிடத்து இருந்து பொருளை எல்லாம் கொள்ளை கொள்ள விடுத்தார்.


மாயா பிரத்தம் வந்து ---

மாயை --- அறிவை மயக்கித் தொளிவிப்பது.

பிரட்டன் --- வஞ்சகன், நன்னெறியில் இருந்து தவறியவன்.

பிரத்தம் --- பிரமாதம். தவறு, அளவில் மிக்கது, அபாயம், விழிப்பு இன்மை.

இங்கே உலகமாயையைக் குறித்தார் அடிகளார். உலக மாயை என்பது சுத்தாசுத்தம் ஆகிய பிரகிருதி மாயை எனப்படும்.

அசுத்த மாயை மயக்கத்தை உண்டுபண்ணும். உலகமாயை பெருமயக்கத்தை உண்டுபண்ணும்.

மாயையின் மூலத்தையும், அதன் விரிவையும் காண்போம்...

ஒருவனால் செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள் எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை உருவாக்குகிறான். எனவே காரியப் பொருளெல்லாம் பகுதிகளை உடையதாக இருக்கும் என்பது தெளிவு. நாம் கையில் அணியும் கடிகாரம், உடம்பில் அணியும் ஆடை, தோளில் அணியும் மாலை, கழுத்தில் அணியும் நகை முதலியவையெல்லாம் பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களே ஆகும். உற்று நோக்கினால் உலகப் பொருள்கள் அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தான் என்பது புலனாகும். நாம் வாழுகின்ற இப்பெரிய நிலவுலகைமை, மண், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின் சேர்க்கையால் உருவானது தான். எனவே இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே.

உலகில் எண்ணற்ற பொருள்கள் காணப்படுகின்றன. அவையெல்லாம் உலகின் பகுதிகளாக உள்ளன. அப்பகுதிகளெல்லாம் சேர்ந்த காரியப்பொருள் தான் உலகம். உலகின் பகுதிகளாய் அமைந்த சடப்பொருள்கள் அனைத்தையும் இரண்டு வகையுள் அடக்கி விடலாம். பல்வேறு பிறவிகளாகக் காணப்படும் உடம்புகளாகிய சடப் பொருள்கள் என்பன ஒருவகை. உடம்பு அல்லாத பிற சடப் பொருள்கள் எல்லாம் இரண்டாம் வகை. நிலம், நீர் முதலிய பெரும் பொருள்களும் அவற்றினால் ஆக்கப்படும் சிறு பொருள்களும் ஆகிய எல்லாம் இரண்டாம் வகையில் அடங்கிவிடும். முதல் வகையினவாகிய உடம்புகளையும் கூட ஆண் உடம்பு. பெண் உடம்பு என இருவகைப்படுத்திக் கூறலாம் தானே. எனவே முன்னர் கூறிய இருவகையை இப்படி மூவகைப்படுத்திக் கூறலாம். அதாவது ஆண் உடம்பு பெண்ணுடம்பு, அவையல்லாத பிற சடப்பொருள் என வகைப்படுத்தலாம். உலகப் பொருள் அனைத்தும் இம்மூவகையுள் அடங்கி விடும்.

ஆணுடம்பை அவன் என்ற சொல்லாலும், பெண்ணுடம்பை அவள் என்ற சொல்லாலும், பிறவற்றை அது என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இம்மூன்றன் கூட்டம்தான் உலகம் என்பாராய், அவன் அவள் அது எனும் அவை என்று கூறி, உலகம் இவ்வாறு பகுதிகளை உடையதாகக் காணப்படுவதால் அது காரியப் பொருளே. சிவஞானபோதம் முதல் சூத்திரம் காண்க.

காரியப் பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப் பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன் மூலப் பொருள். மூலப் பொருளை முதற் காரணம் என்று குறிப்பிடுவர். மற்றவை யெல்லாம் நிரம்ப இருப்பினும் எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற் காரணம் எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம், தண்டு முதலியவை பயன்படுகின்றன. அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும் களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம் தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப் பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள் எனப் பார்த்தோம் எனவே காரியமாகிய உலகுக்கும் ஒரு முதற் காரணம் இருத்தல் வேண்டும். அதுவே மாயை என்பது.
  
மாயை என்பது கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் ஆகும்.  மாயையிலிருந்து தான் எல்லாக் காரியப் பொருள்களும் தோன்றுகின்றன. காரியம் காரணத்தை விடப் பருமையாக இருக்கும். பருமை தூலம் எனப்படும். எனவே மாயையிலிருந்து படிமுறையில் தோன்றும் காரியப் பொருள்கள் ஒன்றைவிட ஒன்று தூலமாக இருக்கும். இறுதியில் தோன்றும் காரியங்கள் முந்திய எல்லாவற்றையும் விடத் தூலமாக இருக்கும். மாயையிலிருந்து இறுதியாகத் தோன்றுகின்ற தூலமான காரியங்களில் ஒன்றாக இருப்பது ஆகாயம். முன்னே தோன்றிய காரியங்களைப் பார்க்கத் தூலமான அந்த ஆகாயமே நமக்குப் புலப்படாத அருவமாக இருக்கிறதே. அவ்வாறாயின் அதற்கு முன்னே தோன்றிய காரியங்கள் அதைவிட எவ்வளவு நுண்ணியவாக இருக்கும்! அக்காரியங்கள் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் மாயை என்பது எத்துணை எத்துணை நுண்ணியதாக இருக்கும் என்பதைச் சொல்லவேண்டுவதில்லை.

இத்தகைய மாயை சுத்தமாய் உள்ள பகுதி என்றும், அசுத்தமாய் உள்ள பகுதி என்றும் இரு பகுதியாய் நிற்கும். சுத்தப் பகுதி என்பது ஆணவமலத்தோடு கலவாதது. அசுத்தப் பகுதி ஆணவமலத்தோடு கலந்தது எனவே மாயை ஒன்றே இங்ஙனம் சுத்தமும் அசுத்தமும் பற்றிச் சுத்தப் பகுதி சுத்த மாயை எனவும், அசுத்தப் பகுதி அசுத்த மாயை எனவும் இரண்டாக வைத்துக் கூறப்படும். குன்றிமணி ஒன்றே சிவந்ததும் கரியதும் ஆகிய இரு பகுதிப்பட்டதாய் விளங்குதலை இதற்கு உவமை கூறுவர்.

பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளது. காற்று மண்டலத்தின் மேற்பகுதி மாசு கலவாமல் தூயதாய் விளங்குவது. கீழே உள்ள பகுதி தூசு, புகை முதலிய மாசுகள் கலந்து விளங்குவது. இக்காற்று மண்டலம் போன்றது மாயை எனலாம். காற்று மண்டலத்தின் தூய பகுதி மேலாய் விரிந்து விளங்க, மாசு படிந்த பகுதி அதற்குள்ளே நிற்கிறது. அதுபோலச் சுத்த மாயை மேலாய் விரிந்து நிற்க, அசுத்த மாயை அதனுள்ளே அடங்கி நிற்கும். சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை அதில் வியாப்பியமும் ஆகும். வியாபகம் என்பதற்கு விரிவு என்பது பொருள். வியாப்பியம் என்பதற்கு உள்ளடங்கி நிற்றல் என்பது பொருள்.

மாமாயை குடிலை விந்து என்பன சுத்தமாயையைக் குறிக்கும் வேறு பெயர்கள்.

மோகினி என்பது அசுத்த மாயையின் மறுபெயர்.

ஆணவத்தோடு கலவாமையால் சுத்த மாயை மயக்கத்தைச் செய்யாது.

அசுத்த மாயை ஆணவத்தின் சார்பினால் மயக்கத்தைச் செய்யும். அது பற்றியே அது மோகினி எனப்பட்டது. மோகினி மயக்குவது. மேலும் மாயை என்றாலே அது அசுத்த மாயையைத்தான் குறிக்கும்.

இவ்விரண்டு மாயைகளோடு, "பிரகிருதி மாயை" என்பதையும் சேர்த்து மும் மாயைகள் என வழங்குவர். பிரகிருதி மாயை என்பது தனித்த ஒரு மாயை அல்ல. அது அசுத்த மாயையின் காரியமே ஆகும். அசுத்த மாயை மயக்கத்தைச் செய்யும். அம் மயக்கம் சிறிதேயாகும். ஆயின் அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும். அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்பது. அவ்வாறே பிரகிருதி மாயை அசுத்த மாயையின் உள்ளாக அடங்கி நிற்பதாகும். எனவே, சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே மேலாய் நிற்பது, அதன் உள்ளே நிற்பது. அதற்கும் உள்ளே நிற்பது என உணர்ந்து கொள்ளவேண்டும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான்.

அடு வாத சுரம் பித்தம் உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி ---

அடுதல் - துன்புறத்துதல்.

உளைப்பு - வருத்தம், வயிறு உளைதல், உடம்புக் குடைச்சல். நோய் அடைதல்.

மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது என்றும், இவை சமநிலையில் இயங்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். சம நிலையை இழந்து இயங்கும் போது நோய்கள் ஏற்படுகின்றன.

இதனையே,

"மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று"

என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

மூச்சும் பேச்சும் உட்பொருளி் இடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள். உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்தநீர்;
தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவுநெய்போல் பயன்படுவது கோழை என்னும் கபம் அல்லது சிலேத்துமம். இது உடம்பிற்குக் குளிர்ச்சியைத் தருவது.

இம் மூன்றும் சரியான அளவில் இருந்தால் உடம்பு நன்றாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்தால் உயிரும் தெளிவு பெறும். உடம்பு வாடினால் உயிரும் வாடும். எனவேதான், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார் நமது கருமூலம் தீர்க்க வந்த திருமூல நாயனார்.

வளி முதலா எண்ணிய மூன்றும், உணவு உடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலும் குறைதலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி, தடி மேலாய்ப் பிடித்திடும் பல நாள் கொடு, மந்திக் குலத்து எனும்படி கூனி அடங்கி, பிசக்கு வந்திடு போது பின் அஞ்சிச் சடம் ஆமோ ---

"பலம்" என்னும் சொல், "பெலம்" என்ற வந்தது.

பிசக்கு --- தவறு, ஒவ்வாமை, மரணம்.

தெய்வத்தையும், பெரியோர்களையும் மதியாமலும், துதியாமலும், நிமிர்ந்து நடந்த காலம் நீங்கி, தடி ஊன்றி, குரங்குபோல் கூனி நடக்கும் அவலநிலை எய்தும். முதுமையில் தடியானது மூன்றாவது காலாக அமையும்.

செங்கையினில் ஓர் தடியும் ஆகியே
வருவது போவது ஒரு முதுகூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து.....                 ---  பட்டினத்தார்.

கறுத்த தலை வெளிறு மிகுந்து,
     மதர்த்த இணை விழிகள் குழிந்து,
     கதுப்பில் உறு தசைகள் வறண்டு, ......செவிதோலாய்,
கழுத்து அடியும் அடைய வளைந்து,
     கனத்த நெடு முதுகு குனிந்து,
     கதுப்பு உறு பல் அடைய விழுந்து, ...... உதடுநீர்சோர்,

உறக்கம் வரும் அளவில், எலும்பு
     குலுக்கி விடும் இருமல் தொடங்கி,
     உரத்த கன குரலும் நெரிந்து, ......     தடி கால் ஆய்,
உரத்த நடை தளரும் உடம்பு
     பழுத்திடும் முன், மிகவும் விரும்பி
     உனக்கு அடிமை படும்அவர் தொண்டு ...... புரிவேனோ? ---  திருப்புகழ்.

காசு ஆசைச் செயலாலே சொக்கு இடு
     விஞ்சையர், கொஞ்சிடுவார், இளங்குயில்
போலே நல் தெரு ஊடு ஆடி, துயல்
     தொங்கல் நெகிழ்ந்து, டையே துவண்டிட,
கால் தாவி, சதியோடே சித்திரம்
     என்ப நடம் புரிவார், டல் செயல் ...... மிஞ்சல் ஆகி,

சீர் ஆடி, சில நாள்போய், மெய்த் திரை
     வந்து கலந்து, யிரோட வங்கமொடு
ஊடாடி, பல நோயோடு, தடி
     கொண்டு குரங்கு எனவே நடந்து, சொல்
சீ ஓடி, கிடை பாயோடு உக்கி,
     அடங்கி, அழிந்து, யிரோடு உளைஞ்சு, ளி ...யும்கண்மாறிச்

சேராமல் பொறி, கேளாமல் செவி,
     துன்பமொடு இன்பமுமே மறந்து, பின்
ஊரார் சுற்றமும் மாதோர் மக்களும்
     மண்டியும் அண்டையுடே குவிந்து, து
சீசீ சிச்சிசி போகா, நல்சனி-
     யன் கட என்றிடவே கிடந்து உடல் ...... மங்குவேனோ? --- திருப்புகழ்.

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு, இரைத்து வந்து, அமரோர்கள் படிந்து சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே ---

ஏடு ---  மலர்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகப் பெருமானே முழுமுதற் கடவுள் என்று, மலர் தூவித் துதித்து, வீழ்ந்து வணங்குவதனால், முருகன் திருவடியாகிய மலர் தோய, அவர்கள் மகுடங்கள் நறுமணம் வீசுகின்றன.

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
"வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே".      --- கந்தர் அனுபூதி.

"இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும் எனது
இதயமும் மணக்கும் இருபாதச் சரோருகனும்" --- வேடிச்சி காலவன் வகுப்பு.

தேவர் மகுடம் மணக்கும் ......    கழல்வீரா!   --- (பாண மலரது) திருப்புகழ்.


செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ---


உலகிற்கு முதல் குருவாகிய ஐம்முகச் சிவபெருமான், ஆறுமுகச் சிவமான முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் "தணிகைப் புராணம்" கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவவழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த பிரமதேவனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை "மலையிடை வைத்த மணி விளக்கு" என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி, “அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி, பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

"அறிவினில் பெரிய நீரார்
     அறிந்துஅரும் பிழைகள் செய்யார்
அறிவினில் சிறிய நீரார்
     அறிந்து அறியாமை யானும்
செறிபிழை இழைப்ப அவ்வத்
     திறத்தினது உண்மை நாடிச்
சிறுமையின் நீங்கினோர்கள்
     செயிர்த்து, ள வயிரம் கொள்ளார்."  --- தணிகைப் புராணம்.

"பேதைமைப் பாலின் ஆதல்,
     பெருங்கிழ மையினான் ஆதல்,
மேதக நட்டோர் மாட்டும்
     விரவிடும் பிழைகள் எல்லாம்
காதுதற் பால அல்ல,
     காதிடிற் கண்ணின் ஓடி
நோதக ஓச்சி, மெல்ல
     நோன்றவே எறிகு வாரால்".     --- தணிகைப் புராணம்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.

"மைந்த! நீ அதன்பொருள் வல்லையேல் உரை என,
முந்து மெப் பொருள்களும் முறைஅன்றி யருள்செயா
எந்தை, அப் பொருள் பொழுது இடம் அறிந்து, யல்பு உளித்
தந்திடத் தக்கது அன்றே எனச் சாற்றினான்".   --- தணிகைப் புராணம்.

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது.  நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருநம் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து திருத்தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகைமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.

தனக்கெதிரே பொருந்திய குமரப்பெருமானைப் பெரிய ஆதனத்தின்கண் எழுந்தருளச்செய்து, அப்பொழுது ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்த பாதங்களை வணக்கம் செய்தலோடு தாழ்ந்த இடத்தில் மேன்மைப்பாட்டுடன் தங்கி, கெடுதல் அற்ற பிரணவ மந்திரத்தின் பழமையான பொருளின் செறிவு எல்லாவற்றையும் (ஐயந்திரிபு அற) செவியறிவுறுக்கக் கேட்டனன்

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”    --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனார்
 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
                                                                   --- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.    ---  தணிகைப் புராணம்.

தனக்கு மகனாகிய தத்துவ வடிவமாகிய முருகப்பெருமான், தனக்கு ஒப்பற்ற கெடுதலில்லாத பரமாசாரியனாகித் தனக்குச் செவியறிவுறுத்த உண்மை நிலையைக் கேட்டவளவில் தனக்குத்தானே சமானமானவனாகிய சிவபெருமான் முழக்கஞ்செய்து நின்று நடனம் செய்தனன்.

உருவம்வேறு இன்றி, ஐந்துமுகன் அறுமுகன் என்று ஓதும்
திருவுரு இரண்டன் மாட்டும் சிவம் எனும் யாமே மன்ற
பொருஇல் ஆருயிராய் நிற்பேம், பொலிந்த அவ் உருவினின்றும்
தருவரம் அவணது, ங்குத் தருவரம் இவணது ஆமே. ---  தணிகைப் புராணம்.

வடிவம் வேறல்லாமல் ஐந்து முகத்தை உடையான், ஆறுமுகத்தை உடையான் என்று (அடியார்கள் சிறப்பித்துப் புகழ்கின்ற) திருவுருவங்கள் இரண்டனிடத்தும் சிவம் என்கின்ற யாமே நிச்சயமாக ஒப்பில்லாத அரிய உயிராகி நிற்பேம். பொலிவோடு கூடிய இவ் வைந்து முகத்தோடு கூடிய திருவுருவினின்று தந்தருளிய வரங்கள், அவ் அறுமுகத்தோடு கூடிய திருவுருவினின்று தந்தருளிய வரத்துக்கு ஒத்ததாகும். அவ் அறுமுகத்தோடு கூடித்தந்த வரங்கள் இவ் ஐந்து முகத்தோடு கூடித்தந்த வரத்திற்கு ஒத்ததாகும்.


மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
                                         --- அபிராமி அந்தாதி.

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
                                         --- அபிராமி அந்தாதி.

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.
                                    --- சிவஞான சித்தியார்.


ஞான ப்ரசங்கத் திருப்பெருந்துறை மேவிய கந்த ---

கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வர்களுக்கும் உபதேசித்து அருளிய, சிவபெருமான் மண்ணுலகத்தில் திருப்பெருந் துறையில் குருந்தமரத்தின் கீழ் குரு மூர்த்தியாக எழுந்தருளி மாணிக்கவாசகருக்கு உபதேசித்தருளின அருட்பெருந் திறத்தைக் அடிகளார் இங்கே காட்டுகின்றார்.

வாதவூரருக்கு உபதேசம்

 பாண்டிவள நாட்டின்கண் வாயுதேவன் வழிபட்ட தன்மையால் வாதவூர் என்னும் பெயர் பெற்ற திருத்தலத்தில் மானமங்கலத்தார் மரபிலே ஆமாத்தியர் குலத்து சிவகணத் தலைவர் ஒருவர் வந்து உதித்தனர். அவர் பெயர் “வாதவூரர்” என்பர். அவர் பதினாறாண்டு நிரம்பு முன்னரே கலைகள் முழுதும் ஒருங்கே ஓதி உணர்ந்தார். அவர் திறத்தைப் பாண்டியன் கேட்டு, அவரை வரவழைத்து, அவருக்குத் “தென்னவன் பிரமராயன்” எனப் பட்டப் பெயர் சூட்டி, மந்திரித் தொழிலில் இருத்தினன். அவர் கலை வன்மையாலும் சிலை வன்மையாலும் சிறந்து அமைச்சர் தலைவனாயிருந்து பாவக்கடலினின்றுந் தப்பி முத்திக்கரை சேரும் உபாயத்தை நாடியிருந்தனர். பாண்டியன் குதிரைகளை வாங்கும் பொருட்டு அளப்பரும் நிதிகளை அளித்தனுப்பினன். பாண்டியன் பால் விடைபெற்ற வாதவூரார் திருவாலவாய் சென்று மீனாட்சியம்மையையும் சொக்கலிங்கப் பெருமாளையும் வழிபட்டு, பாண்டியன் செல்வம் நல்வழியில் செலவழிய வேண்டுமென்று வணங்கி, வேதியர் ஒருவர் எதிர்ப்பட்டளித்த திருநீற்றை அணிந்துகொண்டு நற்குறி என்று வந்து சேனைகள் சூழப்புறப்பட்டு திருப்பெருந்துறையை அடைந்தார்.

அத் திருத்தலத்தைச் சாரும் முன்னரே காயமும் நாவும் நெஞ்சும் ஒருவழி பட்டு பேரன்பு மிகுதலால், கண்ணீர் மல்கிக் கசிந்து உருகி, சிரமிசைக் கரங்குவித்து, மயிர் சிலிர்த்து, அனலில் பட்ட மெழுகென உருகினார். பண்டைத் தவப்பயன் கைகூடப்பெற்ற வாதவூரர் அதிசயமுற்று, “இத்தலத்தை அணுகும் முன்னரே பேரன்பு முதிர்ந்தது. சிவத் திருத்தலங்களில் இதனை ஒத்தது வேறில்லை; இங்கு வந்து சேர்தற்கு என்ன மாதவஞ் செய்தோமோ? என்று தம்முள் நினைத்து உடன் வந்தாரை நோக்கி “ஆடி மாதத்தில் குதிரை வருதல் இல்லை. ஆவணி மாதத்தில்தான் குதிரைகள் வந்திறங்கும்; நானே அவைகளைக் கொண்டு வருவேன். பாண்டியற்கு இதனை உணர்த்துமின்” என்று அன்னாரைப் போக விடுத்தார்.

பின்னர் வாதவூரர் பொய்கையில் நீராடித் திருநீறு தரித்து சிவபெருமானை வணங்குதற்குத் தனியே ஆலயத்துள் புகுந்தார். அத்திருக்கோயிலினுள் ஒரு குருந்தமரத்தின் நிழலில் தாராகணங்களால் சூழப்பெற்ற தண்மதி என்ன, மாணவர் குழாம் சூழ, குருவடிவம் தாங்கி சிவபெருமான் வீற்றிருந்தனர்.
அத் தேசிகேசனைக் கண்ட திருவாதவூரர் செயலிழந்து உடல் நடுங்கி எட்டு அங்கங்களும் நிலமிசை தோயப் பன்முறை வணங்கி விண்மாரி யென்ன கண்மாரி பொழிந்த வண்ணமாக நின்றனர்.

மன்றுள் ஆடிய ஆனந்த வடிவமும், வடவால்
ஒன்றி நால்வருக்கு அசைவுஅற உணர்த்திய உருவும்,
இன்று நாயினேற்கு எளிவந்த இவ்வுரு என்னா
அன்று நாயகன் குறிப்பு உளத்து உணர்த்திட அறிந்தார்.

முன் பணிந்தனர், ணிந்தனர் அஞ்சலி முடிமேல்,
என்பு நெக்கிட உருகினர், னியராய் எளிவந்து,
அன்பு எனும் வலைப்பட்டு, வர் அருள்வலைப் பட்டார்,
துன்ப வெம்பவ வலை அறுத்திட வந்த தொண்டர்.

தன்வசமிழந்து நின்ற மெய்யடியாரைக் கண்ணுதற் கடவுள் கண்டு திருநோக்கஞ் செய்து, அருகில் அழைத்து முறைப்படி தீட்சை முதலியன செய்து, திருவைந்தெழுத்தை உபதேசித்து நல்லருள் பாலித்தனர்.

அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு, யாக்கை
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண்ணினால் மலம் கழீஇ, பதகமலமுஞ் சூட்டி,
வண்ண மாமலர்ச் செங்கரம் சென்னிமேல் வையா.

"அன்றே என்றன் ஆவியும் உடலும்
         உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய் என்னை ஆட்
         கொண்டபோதே கொண்டிலையோ?
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ?
         எண்தோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய், பிழைசெய்வாய்,
         நானோ இதற்கு நாயகமே"

என திருவாசகத்துள், மணிவாசகப் பெருமான் அருளிச் செய்துள்ளது காண்க.

சூக்கம் ஆகும் ஐந்தெழுத்தினில், சுற்றிய பாச
வீக்கம் நீக்கி, மெய் ஆனந்தம் விளைநிலத்து உய்த்துப்
போக்கு மீட்சியுள் புறம்பு இலாப் பூரண வடிவம்
ஆக்கினான் ஒரு தீபகம் போல்வரும் அண்ணல்.


பார்த்த பார்வையால் இரும்பு உண்ட நீர்எனப் பருகும்
தீர்த்தன் தன்னையும், குருமொழி செய்ததும், தம்மைப்
போர்த்த பாசமும் தம்மையும் மறந்து, மெய்ப் போத
மூர்த்தியாய் ஒன்றும் அறிந்திலர் வாதவூர் முனிவர்.


தேனும் பாலும் தீங் கன்னுலும் அமுதுமாய்த் தித்தித்து,
ஊனும் உள்ளமும் உருக்க, ள் ஒளி உணர்ந்து, ன்பம்
ஆன ஆறு தேக்கிப் புறம் கசிவது ஒத்து அழியா
ஞான வாணி வந்து இறுத்தனள் அன்பர்தம் நாவில்.

     தேனும் பாலுந் தீங்கன்னலும் அமுதுமாய்த் தித்தித்தமை குறித்து,

"ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுள் கலந்து,
தேனாய் அமுதமுமாய், தீங்கரும்பின் கட்டியுமாய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்
தேன் ஆர் மலர்க்கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவாய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!

எனவும், உள்ளொளி உணர்ந்து என்பது,

கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தி னுள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணணனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

எனவும் அடிகள் திருவம்மானையில் அருளிச் செய்தது அறிக.

தொழுத கையினர், துளங்கிய முடியினர், துளும்ப
அழுத கண்ணினர், பொடிப்புறும் யாக்கையர், நாக்குத்
தழுதழுத்த அன்பு உரையினர், தமை இழந்து, ழல்வாய்
இழுதை அன்ன மெய்யினர் பணிந்து ஏத்துவார் ஆனார்.


பழுது இலாதசொல் மணியினைப் பத்திசெய்து, ன்பு
முழுதும் ஆகிய வடத்தினால் முறைதொடுத்து, லங்கல்
அழுது சாத்தும் மெய்யன்பருக்கு அகம் மகிழ்ந்து, யர்
வழு இலாதபேர் மாணிக்க வாசகன் என்றார்.


திருப்பெருந்துறை என்னும் அற்புதத் திருத்தலம், இக் காலத்தில் ஆவுடையார் கோயில் என வழங்கப்படுகின்றது.

இறைவர்  --- ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி,                                                உயிர்த்தலைவர்.
இறைவியார் --- யோகாம்பாள்.
தல மரம் --- குருந்த மரம்.

உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் "பெருந்துறை" எனப் பெயர் பெற்றது.

சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும், சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன்; சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார்.

திருப்பரங்குன்றத் திருப்புகழில் "அருக்கு மங்கையர்" என்று தொடங்கும் பாடலில் "வழியடியர் திருக்குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர்" என்று ஆத்மநாதசுவாமி போற்றப்படுகிறார்.

பண்டைநாளில் தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால், ஆவுடையார்கோயில் கொடுங்கைகளைப்போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார்கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்று எழுதும் வழக்கம் இருந்ததாம்.

முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப் பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று உணர்த்துவதாக உள்ளது.

அடுத்துள்ளது இராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நெடிது உயர்ந்த இராஜகோபுரம்; தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணை சான்று.

ராஜகோபுர வாயிலின் இடப்பக்கதில் - சுவரில் - வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு:-

ஆவுடையார்கோயிலில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்த  விளம்பரமாவது:-

இறந்துபோன புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களால் வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார்கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும் கவர்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது.

1.                                உள்கோபுரத்தை கடந்து சென்றால் அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம் - இதை கனகசபை என்பர். முந்நூறு ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம். கொடுங்கைகளை அழகாகப் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேற்புறச் சுவரில் எண்ணற்ற புவனங்களைக் குறிக்கும் அட்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் இருதலைகளும் ஓருடலும் கொண்டு பின்னிய நிலையிலுள்ள பாம்பும்; சாமுத்திகா லட்சணத்தைக் காட்டும் பெண் முதலான சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் நவக்கிரகங்கள் கல்லில் அடித்து வைக்கப்பட்டுள்ளன. தனியாக இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. சந்நிதி மேற்புறத்தில் 27 நட்சத்திர வடிவங்களும் கல்லிற் செதுக்கப்பட்டுள்ளன. சந்நிதியில் வௌ¤ச்சுவரில் வண்ண ஓவியத்தில் ஸ்பரிச - உபதேச - திருவடி தீட்சை ஓவியங்கள் உள்ளன.

அடுத்தது நிருத்த மண்டபம் - நடனசபை / நர்த்தன சபை. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு. தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள் கூடத் தௌ¤வாகத் தெரியும் வண்ணம் செதுக்கியுள்ள கைவண்ணம் - வேடனின் நளினத் தோற்றம் - இவ்வாறே வலதுபுறம் காட்சித்தரும் வேடன் வேடுவச்சி சிற்பங்கள் - அற்புதமான கலையழகு கருவூலங்கள்.
   
வாயிலைக் கடந்து உட்புகுந்தால் அடுத்து வருவது தேவசபை - சுந்தர பாண்டிய மண்டபம் (சுந்தர பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது) இடப்பால் பிராகாரத்தில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி. இப்பெருமானைத் தரிசித்து விட்டுத்தான் மூலவரைத் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இக்கோயில் மரபு. சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சந்நிதி; சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம்தான். ஸ்ரீ யோகாம்பாள் சந்நிதியில் திருமேனி இல்லை. சததள பத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அடுத்த தரிசனமாக தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி; கல்லில் வடித்துள்ள குருந்தமரம் - கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும்மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேச ஐதீகம் நடக்கிறது. இங்குள்ள திருவாசகக் கோயிலில் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விசேடம்.
         
அடுத்த சபை, சத்சபை - இங்குள்ள விசாலமான கல்மேடையில்தான் சுவாமிக்கு கைபடாத (புழுங்கல் அரிசி) அன்னம் நிவேதிக்கப்படுகிறது. (இதனால் இதற்கு அமுத மண்டபம் என்றும் பெயர்) இங்கு புழுங்கல் அரிசி சாதம் நிவேத்தியம் சிறப்பு.
        
அடுத்தது, சித்சபை - பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாக காட்சி நல்குமிடம்.

பரமசுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே - குருவருள் கொலு வீற்றிருக்குமிடமே ஆநந்த சபை.
   
ஆவுடையார் - சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார். அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது.
   
ஆவுடையாரின் பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாசி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத்துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கினியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திரனையும் குறிக்கிறதென்பர்.
சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர்விடுகின்றன.

முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்திலும் காணலாம்.
   
எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்காளக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டு காட்டியுள்ளார்கள்.
   
இத்திருக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ளது. தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி அங்குதான். இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர் என்றும் சொல்கின்றனர்.

ஆதிகயிலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.


கருத்துரை

முருகா! இந்த உடம்பு உள்ளபோதே உன்ன வழிபட்டு உய்ய அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...