035. துறவு - 06. யான்எனது என்னும்





திருக்குறள்
அறத்துபால்

துறவற இயல்

அதிகாரம் 35 -- துறவு

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "தான் அல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு சம்பந்தம் அல்லாத பொருள்களை எனது என்றும் நினைத்து, அவற்றினிடத்துப் பற்றுச் செய்வதற்குக் காரணமாகின்ற அறிவு மயக்கத்தைக் கெடுப்பவன், தேவர்களாலும் அடைதற்கு அரிதாய முத்தி உலகத்தை அடைவான்" என்கின்றார் நாயனார்.

     மயக்கம் --- அறிவு மயக்கம். அஞ்ஞானம்.

     உடம்பின் மீது உண்டாகும் நான் என்னும் அகப்பற்றும்,, அதனால் அனுபவிக்கப்படுகின்ற பொருள்கள் மீது உண்டாகும் எனது என்னும் புறப்பற்றும், துன்பம் தருதலையும், அவற்றினது நிலையாமையையும் உணர்ந்து, பற்றுச் செய்தலை விட்டவர் வீட்டினை அடைவர்.

திருக்குறளைக் காண்போம்...


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் --- தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்,

     வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் --- வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.

         (மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை 'யான்' 'எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுஉளது என்பது கூறப்பட்டது.)


     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் அருளிச் செய்த, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..

குலன்ஒழுக்கம் நல்லகுணம் உண்டோஎன்னும்
அரன்அருளும் உய்யவந்தார்க்கு அன்றே துறவு முதிர்ந்து
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.                         

         யான் எனது என்னும் மயக்கம் அற்றவன் முத்தி உலகத்தை அடைவான் என்பது கருத்து.

     அரன் அருளால் உய்யவந்தார்க்கு --- சிவபெருமானின் திருவருளை நாடி, முத்தியினைப் பெற முயன்றவர்க்கு, அன்றே துறவு முதிர்ந்து, நான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் அற்றன. அதனால் அவர்களை தேவர்களாலும் அடைய முடியாத வீட்டின்பத்தை அடைந்தார்கள் என்பது பொருள்.

     இனி உய்யவந்த தேவ நாயானர் என்னும் இருவரைக் குறித்தும் இப் பாடல் அமைந்திருக்குமோ எனத் தோன்றலாம்.

     உய்ய வந்தான் --- உய்யவந்த தேவநாயனார், சைவ சித்தாந்த சாத்திரங்களுள் இரண்டன் ஆசிரியர்கள். முதல் இரண்டு அடிகள் இவர் வரலாற்றைக் குறிக்கும் போலும்.

     திருவியலூர் உய்யவந்த தேவனார் --- இவர், மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றான, "திருவுந்தியார்" என்ற நூலை அருளிச்செய்தார். இதற்கு மேல் இந்த ஆசிரியரைப் பற்றி வேறு குறிப்பு ஒன்றும் அறியக் கிடைக்கவில்லை.

     திருக்கடவூர் உய்யவந்ததே வநாயனார் --- இவர் திருவியலூர் உய்ய வந்த தேவனாரின் மாணாக்கர். இவரே "திருக்களிற்றுப்படியார்" என்ற நூலை அருளிச் செய்தார். இது திருவுந்தியாரின் பொருளை இனிது விளக்கும் வழிநூலாக அமைந்துள்ளது. இந்த நூலைப் பற்றிய ஒரு வரலாறு உண்டு. நூலாசிரியர் ஆட்டு வாணிகக் குலத்தில் தோன்றியவர். இக்காரணம் பற்றி இவர்தம் மெய்யுணர்வு நூலை ஏற்றுக் கொள்ளச் சிலர் ஐயுற்றனர். சிவதீக்கை பெற்ற பின்னர், ஒருவரை உலகியல் குலம் பற்றி உளங்கொண்டு வேறுபாடு கருதுதல் உண்மைச் சிவநெறிக்கு ஒரு சிறிதும் ஒவ்வாது என்ற உண்மையை அறியாதவர்கள் இவர்கள். இதன் பெருமையை அறியும் பொருட்டு, இந்நூல் திருச்சிற்றம்பலத்தின்கண் அம்மை -அம்பலவாணர் திருமுன்னர் காணப்பெறும் "திருக்களிற்றுப்படி" என்னும் திருப்படியில் வைக்கப் பெற்றது. அம்பலவாணரின் திருவருளால் அப் படியோடு பொருந்திய கல்லால் அமைந்த களிற்றுக்கை எனப்படும் தும்பிக்கை தூக்கி, அம்பலவாணர் திருவடியில் வைத்தது. இக்காட்சியைக் கண்டோர் வியப்பெய்தினர். நூலினைத் தலை மேற்கொண்டு போற்றினர். இம்முறையால் இந்நூலுக்குத் "திருக்களிற்றுப்படியார்" என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.


     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

பீடுபெறு பட்டினத்துப் பிள்ளையைப் போலே துறவார்க்கு
ஈடு தருமோ? இரங்கேசா! --- நீடு உலகில்
யான்எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! பீடு பெறு --- (இறை வழிபாட்டினால் வீடு பெற்றுப்) பெருமை பெற்ற, பட்டினத்துப் பிள்ளையைப் போல் --- பட்டினத்தடிகளைப் போல, துறவார்க்கு --- (வீடு வாசலை விட்டு வெளிப்பட்டுப்)  போகாதவர்களுக்கு,  ஈடு தருமோ --- இந்த மானிடப் பிறவி பலன் தருமோ, (ஆகையால், இது) நீடு உலகில் --- நீண்ட உலகத்தில், யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் --- நான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப்பற்றையும் ஒழிப்பவன், வானோர்க்கு உயர்ந்த --- தேவர்களுக்கும் கிடைத்தற்கரிதாகிய, உலகம் புகும் --- பரமபதத்தை அடைவான் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- யான் எனது என்னும் அகங்கார, மமகாரங்களை ஒழிக்க வேண்டும்.

     பார் அனைத்தும் பொய் எனவே, பட்டினத்துப் பிள்ளையைப் போல், ஆரும் துறத்தல் அரிது அரிது" என்றும் "ஒட்டுடன் பற்று இன்றி, உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார், பரத்திரகிரி புண்பு உணர்வது எந்நாளோ?" என்றும் தாயாமானவர் சுவாமிகள் போற்றிப் பாடி இருத்தலால், இரண்டு செய்திகள் புலனாகின்றன. பட்டினத்தாருக்குப் "பிள்ளையார்" என்ற திருநாமம் உண்டு. அவர் மிகப் பெருஞ்செல்வம் உடையவராய் இருந்தார். ஆனாலும், அத்தனையையும் ஒரு கணத்தில், விட்டுத் துறவியானார்.

பட்டினத்தடிகள் வரலாறு

     திருக்கயிலையிலே எம்பெருமாட்டியுடன் வீற்றிருக்கும் எம்பெருமானைத் தரிசிக்க வேண்டி,  எம்பெருமான் தோழனும், அளகாபுரிக்கு வேந்தனும் ஆகிய குபேரன், வெள்ளிமலையின் திருவாயிலை அணுகி, நந்தியெம்பெருமானைப் பணிந்து, அவர் தம் ஆணை பெற்றுத் திருச்சந்நிதி அடைந்து, சிவபிரான் உமாதேவியாரோடு எழுந்தருளி உள்ள திருக்கோலம் கண்டு, ஆனந்த பரவசனாய், "ஆண்டவனே! இத்திருக்கோலக் காட்சியை, மண்ணுலகில் உள்ள பல திருப்பதிகளிலும் அடியேன் காண விரும்புகின்றேன். அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டி நின்றான்.

     அடியவர்கள் வேண்டியதை வேண்டியவாறே அளிக்கும் கருணைக் கடலாகிய பரம்பொருள், குபேரன் வேண்டுகோளுக்கு இணங்கி, பார்வதி தேவியாருடன் இடப ஊர்தியின் மேல் எழுந்தருளி, தேவர்களும், முனிவர்களும், கணநாதர்களும் தம்மைப் புடைசூழ்ந்து வர, காசி, காளத்தி, காஞ்சி முதலிய திருத்தலங்களில் எழுந்தருளி,  ஆங்காங்கே குபேரனுக்குத் திருக்கயிலாயத் திருக்காட்சி வழங்கியருளி, சிதம்பரத்தை அடைந்தார். அங்கே சிலநாள் குபேரன் அம்மையப்பரைத் தொழுது வருகையில், ஒருநாள், இறைவனை வணங்கி, "என்னுள் கோயில் கொண்ட பெருமானே! இச் சோழநாட்டில் உள்ள திருவெண்காட்டிலே தேவரீரைத் தரிசிக்க விரும்புகிறேன்" என்று விண்ணப்பித்தான். பெருமானும் அவ்வாறே அருள் செய்தார்.  குபேரனும் அம்பிகை பாகனைத் திருவெண்காட்டிலே தரிசித்து இன்புற்று இருந்தான். திருவெண்காட்டிலே இருந்து வரும் நாளில், அருகில் உள்ள காவிப்பூம்பட்டினத்தை அவன் கண்ணுற்றான். அதன் அழகைக் கண்டு மயங்கி, அதனை நீங்க மனம் எழாது, அங்கே வசிக்க விரும்பினான்.

     குபேரனது நிலையை உணர்ந்த சிவபெருமான், "தோழனே! உன் உள்ளம் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி நிற்கிறது. நீ தாங்கியுள்ள தேகம் போக பூமியில் வாழ்வதற்கு உரியது. மானுடர் வாழும் இந்தக் கர்ம பூமிக்கு உரியது அல்ல. நீ இக் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறக்கக் கடவாய்" என்று அருளினார். அதுகேட்ட, அளகேசன், மெய் நடுங்கி, உள்ளம் கலங்கி, "ஐயனே! தேவரீர் ஆணையை மறுக்க எவராலும் இயலாது. அதன் வழி நிற்கவேண்டுவதே அடியேன் கடமை. சிறியேன் மானுடப் பிறவி எடுத்து, இவ்வுலக இன்ப நுகர்ச்சியில் திளைத்து, அழுந்தும் காலத்து, ஏழையேனைத் தடுத்து ஆட்கொண்டு அருள வேண்டும்" என்று வேண்டினான். அவ்வாறே பெருமான் அருளிச் செய்து, உமையம்மையாரோடு திருக்கயிலைக்கு எழுந்தருளினார்.

         காவிரிப்பூம்பட்டினத்திலே வேளாள மரபிலே, சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஞானகலாம்பை என்னும் கற்புக்கரசியாரை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்து பிறந்தது. பின்னர், நீண்டகாலம் தமக்கு ஆண் குழந்தை இல்லாதது குறித்துத் தமது மனைவியாருடன் தவம் செய்வாராயினார். அத்தவப் பேறாக, குபேரன், சிவாக்ஞைப்படி, ஞானகலாம்பையார் கருவில் உற்றான். பத்துத் திங்களில் ஆண் குழந்தையை ஈன்று எடுத்தார். சிவநேசர் அக் குழந்தைக்குத் திருவெண்காடர் என்னும் பெயர் சூட்டி, பொன்னே போல் வளர்த்து வந்தார். திருவெண்காடர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, ஐந்தாம் வயது எய்தப் பெற்றார்.

         சிவநேசர் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.  திருவெண்காடர் தந்தையாருக்கு ஈமக் கடன்களைக் குறைவறச் செய்து, அற்புதத் திருவிளையாடல்களால் அன்னையார் துயரம் போக்கிக் கொண்டு இருந்தார். அறிவில் சிறந்த அன்னையார், தக்க ஆசிரியரைக் கொண்டு, திருவெண்காடருக்குக் கல்வி கற்பித்தார். சகல கலைஞானமும் இளமையிலேயே அடைந்ததன் பலனாக, "கல்வியினால் ஆய பயன், கங்காதரன் திருவடியைப் பூசித்தலே" என்று தெளிந்து, அப் பூசனையைக் குருமுகத்தால் பெறவேண்டும் என உறுதிகொண்டு, உணவும் கொள்ளாது, குருத் தியானமே செய்து கொண்டிருந்தார். ஒருநாள், சிவபெருமான், ஓர் அந்தணராகத் திருவெண்காடர் கனவில் தோன்றி,  "திருவோண நட்சத்திரம் கூடிய சோமவாரப் பிரதோஷ தினம் நாளை நேர்கின்றமையால், நீ திருவெண்காடு செல்வாயாக. அங்கு ஒரு வேதியர் உனக்குச் சிவதீட்சை செய்து, சிவபூசை முறையைக் கற்பிப்பர்" என்று அருளிச் செய்து மறைந்தார். உடனே, திருவெண்காடர், விழித்து எழுந்து, தாம் கண்ட கனவினைத் தாயாருக்கு உணர்த்தி, அவ்வம்மையாரோடு திருவெண்காடு சேர்ந்து, சிவதரிசனம் செய்து, குருநாதனை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தார். அப்பொழுது கனவில் தோன்றிய அந்தணரே அங்குக் குருமூர்த்தியாக எழுந்தருளினர். திருவெண்காடர் வியப்புற்று, குருநாதன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.  குருநாதன் திருநோக்கம் செய்து,  "குழந்தாய்! நம் ஊர் வியாக்கிரபுரம். நேற்றிரவு இங்கு வந்தோம். எமது கனவில் மறையவர் தோன்றி, திருவெண்காடு சென்று, அங்குத் திருவெண்காடன் என்னும் சிறுவனுக்குத் தீட்சை செய்து வைக்கக் கட்டளையிட்டு, இச் சம்புடத்தைக் கொண்டு உன்னிடம் சேர்க்கச் சொன்னார். இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அது உன்னால் முற்பிறப்பில் பூசிக்கப் பெற்றது.  உன் கைப்பட்டதும் தானாகத் திறந்துகொள்ளும் என்று சொல்லி, ஒரு மண்டலம் உன்னோடு இருக்க மொழிந்தார்" என்று சொல்லித் தமது திருவுருக் கரந்தார். இங்கு வந்து உன்னைக் கண்டேன்" என்று சொல்லினார். அதனைச் செவிமடுத்த திருவெண்காடர்,  குருமூர்த்தியின் திருவடிகளில் பலமுறை விழுந்து வணங்கிப் போற்றினார். குருமூர்த்தியாக எழுந்தருளிய பெருமான் திருவெண்காடருக்குச் சிவதீட்சை செய்து, கனவில் தான் பெற்ற சம்புடத்தைக் கொடுத்தருளினார்.  திருவெண்காடரின் கைப்பட்டதும் தானாகத் திறந்து கொண்ட அச் சம்புடத்தில் சிவலிங்கமும் விநாயக மூர்த்தமும் இருந்தன.  அவைகளை முறைப்படி பூசித்து வந்தார். குருநாதரும் திருவெண்காடரோடு நாற்பது நாள் இருந்து, பின்னர் தமது இச்சை வழிச் சென்றார். 

         திருவெண்காடர் திருவெண்காட்டிலிருந்து கொண்டே, சிவபூசையும் மகேசுர பூசையும் செய்து வந்தார். செல்வம் சுருங்கி, வறுமை வந்தது. ஒரு நாள் இரவு, திருவெண்காடரின் கனவில் சிவபெருமான் தோன்றி,  "அன்பனே! வருந்தாதே. உன் இல்லம் முழுதும் பொன்னும் மணியும் திரள் திரளாக மலியச் செய்தோம்" என்று திருவருள் செய்தனர். திருவெண்காடர் தாம் கண்ட கனவைத் தாயாருக்குச் சொன்னார். பொழுது விடிந்ததும், காவலர் மூலமாகத் தம் வீடு முற்றிலும் பொன்னும் மணியும் நிரம்பி இருத்தலைத் கேள்வியுற்று, அவைகளைக் கொண்டு, சிவபூசை, குருபூசை, அடியவர் பூசை முதலிய பதி புண்ணியங்களைச் செய்து, காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்து, தமது அறச் செயல்களைத் தொடர்ந்து வந்தார்.

         திருவெண்காடருக்குத் திருமணப் பருவம் வந்தது. அப் பட்டினத்திலே, வேளாண் மரபிலே தோன்றிச் சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து விளங்கிய சிதம்பரச் செட்டியார் மனைவியாகிய சிவகாமியம்மையார் ஈன்ற அருந்தவப் புதல்வியாகிய சிவகலை என்னும் அம்மையாரைத் திருமணம் செய்துக் கொண்டார். இல்லறத்தைச் சிறப்புற நடத்துங்கால், தமக்கு முப்பத்தைந்து வயதாகியும் மகப்பேறு இல்லாமை குறித்துச் சிறிது வருந்தி, மருதவாணர் திருவடிகளை இடையறாது பூசித்து வந்தார். 

         திருவிடைமருதூரிலே சிவசருமர் என்னும் வேதியர். அவர் மனைவி சுசீலை. இருவரும் சிவபூசை, அடியவர் பூசை செய்து வறுமையில் அழுந்தி இருந்தனர். மருதவாணர் அவர்கள் கனவில் தோன்றி, "நமது தீர்த்தக் கரையில் இருக்கும் வில்வ மரத்தின் அடியில் நாம் ஒரு குழந்தையாக இருப்போம். அக் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய், காவிரிப்பூம்பட்டினத்திலே குழந்தைப் பேறு இன்றி, அருந்தவம் செய்யும் திருவெண்காடரிடம் கொடுத்து, அக் குழந்தை அளவு எடையுள்ள பொன் பெற்று உங்கள் வறுமையைப் போக்குவீர்களாக" என்று அருள்செய்து மறைந்தார். சிவசருமர், வில்வ மரத்தடியில் குழந்தை இருக்கக் கண்டு, மகிழ்ந்தார். "தோன்றி நின்று அழியும் பொருட்செல்வத்தின் பொருட்டுக் குழந்தையை விற்பதா" என்று வருந்தினார். திருவெண்காடரின் கனவிலும் அவர் மனைவியார் சிவகலையம்மையின் கனவிலும், சிவசருமர் கொண்டு வரும் குழந்தையப் பெற்றுக் கொள்ளுமாறு சிவபெருமான் அருளினார்.  சிவாஞ்ஞைப்படி, குழந்தையைப் பெற்றுக் கொண்டு, சிவசருமருக்கு வேண்டுவனவற்றைச் செய்தார். சிவசருமர் திருவிடைமருதூர் சென்றார்.

         திருவருளால் பெற்ற அருமைக் குழந்தைக்குத் திருவெண்காடர், மருதப்பிரான் என்னும் திருப்பெயர் இட்டு வளர்த்து வந்தார். மருதப்பிரான் வளர்ந்து பதினாறு வயது ஆனது. தீவாந்தரங்களுக்குச் சென்று வாணிபம் செய்து வர விரும்பினார். குலமுறைப்படி திருவெண்காடர், மருதப்பிரானுக்கு விடைகொடுத்து அனுப்பினார். கொண்டு சென்ற பொருள்களை எல்லாம் விற்றுத் திருப்பணிகள் செய்தார். எஞ்சிய பொருளைக் கொண்டு வரட்டியும், அவல், கடலையையும், மூட்டை மூட்டையாக வாங்கிக் கப்பலில் நிரப்பிக் கொண்டு, காவிரிப்பூம்பட்டினத்துக்குத் திரும்பினார். இடையில் மருதவாணர் திருவருளால், காற்றும் மழையும் உண்டாகக் கப்பல் திசைமாறிப் போயிற்று. உணவுப் பொருள் ஒழியும் மட்டும் நேர்வழி புலனாகவில்லை. "ஐயா! பசியாற்ற அவல் கொடுங்கள். குளிர்காய எருமுட்டைகள் கொடுங்கள்" என்று உடன் வந்தவர்கள் கேட்டார்கள். அதற்கு மருதப்பிரான், "நண்பர்களே, நான் பட்டினம் சேர்ந்ததும் இப்பொழுது என்னால் அளிக்கப் படப் போகிற எருமுட்டைகள் எவ்வளவோ அவ்வளவு எருமுட்டைகளைத் தரவேண்டும்" என்று கூறி, உறுதிப்பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு, தம்பால் உள்ள எருமுட்டைகளை வழங்கினார். கப்பல் கரைகண்டு சேர்ந்தது. கப்பலில் இருந்தவர்கள் திருவெண்காடரிடம் சென்று, நடந்ததைச் சொல்லிச் சென்றனர். திருவெண்காடர் தமது மகன் கொணர்ந்த, வரட்டி மூட்டைகளையும், அவல் மூட்டைகளையும், அவிழ்த்துப் பார்த்தார். எருமுட்டைகள் மாணிக்கக் கற்களாக ஒளி விடுகின்றன. அவலோடு சிறுசிறு பொன்கட்டிகள் பொலிகின்றன.  அவைகளோடு, கடலில் மருதப்பிரானோடு சென்றவர்கள் எழுதிக் கொடுத்த உறுதிப்பத்திரம் திருவெண்காடர் கையில் அகப்பட்டது.  அது கண்ட மருதப்பிரான் நண்பர்களும் மற்றவர்களும், "அந்தோ, இது என்ன மாயம். நாம் எருமுட்டைகளுக்காகப் பத்திரம் எழுதி இருந்தோம். இப்போது அவை, அரதனங்களாக ஒளிர்கின்றனவே. என்ன செய்வோம்" என்று துயருற்றார்கள். திருவெண்காடர் தமது மகனாரின் வாணிபத் திறமையை வியந்து அவரைக் காணச் சென்றார். மருதப்பிரானைக் காணவில்லை. அவர் திருவிடைமருதூரில் தம்மை மறவாது போற்றிப் பூசித்து வந்த சிவசருமருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அத்துவித முத்தி அருளி, தாம் மகாலிங்கத்தில் சாந்நித்தியமாயிருந்தார்.

         திருவெண்காடர் நெஞ்சம் கலங்கி வேதனைப்படுகின்ற நேரத்தில், அவரது மனைவியார் ஒரு சிறிய பெட்டியைக் கொண்டு வந்து, "நாதா!  நமது புதல்வன் இப் பெட்டியைத் தேவரீரிடம் சேர்க்கும்படிச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்" என்றார். திருவெண்காடர் ஆவலோடு பெட்டியைத் திறந்தார்.  அதில் காதற்ற ஊசி ஒன்றும், ஓலைச் சீட்டு ஒன்றும் இருந்தன.  ஓலைச் சீட்டில், "காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே" என்று எழுதப்பட்டு இருந்தது. உடனே துறவறம் மேற்கொண்டார். தமது கணக்கராகிய சேந்தனாரை அழைத்துத் தமது பொருட்கள் எல்லாவற்றையும் கொள்ளையிடச் செய்யுமாறு பணித்து, தாயாரின் பொருட்டு வெளியூர் செல்லாது, அங்குள்ள ஒரு பொதுமண்டபத்தில் தங்கி, வீடுதோறும் பிச்சை ஏற்று உண்டு, ஞானநிட்டை செய்து கொண்டு இருந்தார்.   அவரது செயல் சுற்றத்தார்க்கு வெறுப்பைத் தந்தது.  தமக்கையார் அவரைக் கொல்ல வேண்டி, நஞ்சு கலந்த அப்பத்தைக் கொடுத்தார். அந்த வஞ்சனையைத் திருவருளால் உணர்ந்து, அதனைப் பிட்டு ஒரு பகுதியைத் தமக்கையாரின் வீட்டு இறப்பில் செருகினார். வீடு தீக்கிரையானது. 

         சிலநாள் கழித்து அன்னையார் சிவபதம் அடைந்தார்.  திருவெண்காடர் சுடலைச் சென்றார். அடுக்கப்பட்டு இருந்த சிறு விறகுகளை அகற்றி, பச்சை வாழை மட்டைகளை அடுக்கி, அதன் மீது தாயாரைக் கிடத்தி, சில பாடல்களைப் பாடவும் அனல் மூண்டது. தாயாருக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்து, திருவிடைமருதூர் சென்று, தலங்கள் தோறும் வழிபட்டுத் திருவாரூர் சேர்ந்தார். அங்கே சன்னி நோயால் மரணமுற்ற ஒரு தொண்டனைத் திருவருள் துணையால் எழுப்பினார்.

         திருவெண்காடர் கொங்கு நாட்டை அடைந்து, மவுனவிரதம் மேற்கொண்டு,  நிட்டையில் இருந்தபோது, ஒருநாள் பசி மேலீட்டால், ஒரு மூர்க்கன் வீட்டு வாயிலில் நின்று கை தட்டினார். சுவாமிகளின் அருமையை உணராத, அக் கயவன் தடிகொண்டு புடைத்தான். அன்று தொட்டு, அடிகள், தாம் இருக்கும் இடம் தேடி அன்னம் கொண்டு வந்தால் அன்றி உணவு கொள்வது இல்லை என உறுதிகொண்டு, கொங்கு நாட்டினின்றும் நீங்கித் துளுவ நாட்டினை அடைந்து, பல திருத்தலங்களை வணங்கி,  உஞ்சேனைமாகாளம் சென்று ஒரு விநாயகர் திருக்கோயிலில் நிட்டையில் இருந்தார். 

         ஒருநாள் இரவு, திருடர்கள் அந்த விநாயகர் ஆலயத்திற்கு வந்து அவரை வணங்கி, அவ்வூரை ஆளும் பத்திரகிரி மன்னருடைய மாளிகையில் பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து, மீண்டும் அக் கோயிலை அடைந்து, விலை உயர்ந்த மணிப்பதக்கம் ஒன்றை விநாயகருக்குக் காணிக்கையாக்க வேண்டி, இருட்டில் மயங்கி, அங்கே நிட்டையில் இருந்த பட்டினத்துப் பிள்ளையாரை விநாயகர் எனக் கொண்டு, பதக்கத்தை அவர் கழுத்தில் வீசிச் சென்றார்கள். பட்டினத்துப் பிள்ளாயர் கழுத்தில் மணிமாலையைக் கண்டு, அதைக் களவு செய்தவர் அவரே என்று கொள்ளப்பட்டு,  மன்னனால் பிள்ளையார் ஒறுக்கப்பட்டு, கழுமரத்தில் ஏற்றுமாறு ஆணை பிறந்தது. "என் செயல் ஆவது யாதொன்றுமில்லை" என்னும் திருப்பாட்டினை பட்டினத்துப் பிள்ளையார் ஓத, உடனே கழுமரம் தீப்பிடித்தது. மன்னன் தன் தவறினை உணர்ந்து, பிள்ளையாரைக் குருவாக ஏற்று, அவரடி பணிந்தான்.  ஞானோபதேசம் செய்து, திருவிடைமருதூருக்குச் செல்லுமாறு பணித்து, தாமும் பல தலங்களை வழிபட்டுத் திருவிடைமருதூரை அடைந்தார்.

         அங்கே பத்திரகிரியார் பிச்சையேற்றுக் கொண்டு வந்து அளிக்கும் அன்னத்தை உண்டு வந்தனர். பத்திரகிரியார் வளர்த்த நாயனாது இறந்து, காசி மன்னன் தவப் புதல்வியாகப் பிறந்து மீண்டும் திருவிடைமருதூரில் உள்ள பத்திரகிரியாரையே குருவாகக் கொண்டு, அவரை அடைந்து,  அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கிற்று. அப்போது பெருஞ்சோதி ஒன்று தோன்றியது. அதிலே அவர்கள் கலந்து அருளினார்கள்.  அந்த அற்புதத்தைக் கண்ட பட்டினத்தடிகள், "பெருமானே! அடியேனை இவ்வுலகத்தில் இருத்தி இருப்பதன் குறிப்பு என்னவோ, அறிகிலேன்" என்று முறையிட்டார். "திருவெண்காடா!  திரு ஒற்றியூர் வருக" என்று ஒரு வானொலி எழுந்தது. 

         பட்டினத்தடிகள் இறைவன் திருவுள்ளக் குறிப்புணர்ந்து திருவெண்காடு சேர்ந்தார். செய்தியை அறிந்த சேந்தனாருடைய மனைவியும் அவரது மகனும் வந்து வணங்கினர்.  திருவெண்காடர் அவர்களை நோக்கி, "நீங்கள் யார்" என்றார்.  சேந்தனார் மனைவியார், "சுவாமி அடியேன் தேவரீர்பால் கணக்குப் பிள்ளையாய் இருந்த சேந்தனாரின் மனைவி.  இவன் என் மகன். சுவாமிகள் ஆணைப்படி சேந்தனார், சுவாமிகளின் பொருள்கள் அனைத்தையும் கொள்ளையிட வைத்தார். அரசன் அறியாமையால் ஐயங்கொண்டு, அவரை விலங்கிட்டுச் சிறையில் அடைப்பித்தான். அவரது சிறையை நீக்கி அருளவேண்டும் சுவாமி" என்று வேண்டி நின்றார். திருவெண்காடர் சிவபிரானைத் தியானிக்க, விநாயகர் திருவருளால் சேந்தனார் விலங்கு இரியப் பெற்று, சிறை நீங்கி வெளியே போந்து, பட்டினத்தடிகளைக் கண்டு பணிந்து, "அடியேன் ஆத்ம சிறையையும் நீக்கி அருளவேண்டும்" என்று பணிந்து நின்றார். திருவெண்காடர் சேந்தனாரது அதி தீவிர நிலையை ஓர்ந்து, "நீ சிதம்பரத்தை அடைந்து விறகு விற்று, அதனால் பெறும் ஊதியம் கொண்டு சிவபூசை, மாகேசுவர பூசை முதலிய பதிபுண்ணியங்களை ஆற்றிக் கொண்டு குடும்பத்தோடு வாழ்வாயாக" என்று அருள் புரிந்தார்.

         பின்னர், பட்டினத்தடிகள் சீர்காழி, சிதம்பரம், திருவேகம்பம், திருக்காளத்தி, திருவாலங்காடு முதலிய திருத்தலங்களைத் தரிசித்துப் பாடல்களைப் பாடி, திருவொற்றியூரை அடைந்தார்.  அத் திருத்தலத்திலும் அவர் சிலநாள் தங்கி பல பாடல்களைப் பாடியருளினார். சிலவேளைகளில் கடலோரம் சென்று, அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களோடு கூடி அதியற்புத ஆடல்கள் பல ஆடுவாராயினார். ஒருநாள் ஒரு குழியில் இறங்கி மறைந்தார். அவரோடு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், "அந்தோ, இது என்ன. நம்முடன் கலந்து பல அற்புதச் செயல்கள் புரிந்து கொண்டிருந்த பெரியவர் இக்குழியில் மறைந்தார்.  அவரைக் காணோம். எங்கு சென்றார்" என்று தேடுகையில்  சுவாமிகள் ஒரு மணல் குன்றின்மேல் தோன்றினார். சிறுவர்கள் அவரை அணுகியபோது சுவாமிகள் குழியில் குதித்து மறைந்தார்.  இங்ஙனம் அடிகள் பலமுறை இளையவர்கட்கு ஆடல்காட்டி, ஒருமுறை குழியில் இறங்கி, உட்கார்ந்து,  சிறுவர்களை நோக்கி, "நண்பர்களே, என்மீது ஒரு சாலைக் கவிழுங்கள்" என்று அருளிச் செய்தார். ஒன்றும் அறியாச் சிறுபிள்ளைகள் அவ்வாறே செய்து, சிறிது நேரம் கழித்துச் சாலைப் புரட்டிப் பார்த்தார்கள். அவர்கள் சுவாமிகளைக் காணாது, அவ்விடத்தில்  ஒரு சிவலிங்கப் பெருமான் விளக்கம் கண்டு, வியந்து, ஊரில் உள்ள பலர்க்குத் தாங்கள் கண்ட அற்புதச் செயலைத் தெரிவித்தார்கள். ஊரவர், கடலோரம் போந்து, சுவாமிகளது சிவலிங்க வடிவத்தைத் தரிசித்துப் பேரானந்தம் எய்தினர். பல அன்பர்கள் திருவொற்றியூர் சென்று சுவாமிகள் திருமேனியை வழிபடலாயினர்.  பட்டினத்தடிகளின் மனைவியாராகிய சிவகலையம்மையார், சுவாமிகட்கு முன்னரே அவர்களது திருவடித் தாமரைகளை இடையறாது தியானம் செய்துகொண்டு இருந்து, சிவலோக பதவி அடைந்தார்.  சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

"ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த, செல்வப்
பட்டினத்தார் பத்திரகிரி புண்பு உணர்வது எந்நாளோ?"

பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்                                                   பிள்ளையைப்போல்
ஆருந் துறக்கை அரிது அரிது --- நேரே
மனத் துறவும் அப்படியே, மாணா இவற்றில்
உனக்கு இசைந்தவாறு ஒன்றே ஓர். 

என்னும் தாயுமான அடிகளார் அருள் வாக்கை இங்கு வைத்து எண்ணுக.


     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

நான்நோக்கி நின்செயல் நின்பொருள்
     என்ன, மெய் நல்கு, புல்லைச்
சேல்நோக்கி மாநண்ப, "யான் எனது
     என்னும் செருக்குஅறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்"
     என்று வையகத்துள்
ஆனோர்க்கு வள்ளுவர் மேனாள்
     உரைத்தனர் அன்புவைத்தே.

இதன் பொருள் ---

     சேல்மீனைப் போலும் திருக்கண்களை உடைய திருமகள் கேள்வனே! திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ளவனே! தான் அல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு சம்பந்தம் அல்லாத பொருள்களை எனது என்றும் நினைத்து, அவற்றினிடத்துப் பற்றுச் செய்வதற்குக் காரணமாகின்ற அறிவு மயக்கத்தைக் கெடுப்பவன், தேவர்களாலும் அடைதற்கு அரிதாய முத்தி உலகத்தை அடைவான் என்று வையத்துள் நல்லவர் ஆனோருக்கு திருவள்ளுவர் மேனாளில் சொல்லி வைத்தனர். உன்பால் அன்பு வைத்து, நான் உன்னை வந்தடைந்து, எல்லாம் உன் செயலே, எல்லாம் உன் பொருளே என்று நிற்கின்றேன். எனக்கு மெய்ப்பொருளை அருள்வாய்

     நல்கு --- கொடு. சேல் நோக்கிமா --- சேல்மீனைப் போலும் கண்ணை உடைய திருமகள்.  மேனாள் --- முன்னாளில்.
                               

மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடு மாநகர் என்றுதொண்டர்
அறையும்ஊர் சாத்தமங்கை அய வந்திமேல் ஆய்ந்தபத்தும்
முறைமையால் ஏத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.
                                                               --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     நான்மறை வல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி, திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர் .


யான்தான் எனும்சொல் இரண்டும்கெட் டால்அன்றி யாவருக்கும் 
தோன்றாது; சத்தியம்; தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க் 
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினால் 
சான்றுஆரும் அற்ற தனிவெளிக்கே வந்து சந்திப்பதே.  ---  கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ---

     பழைய பெரிய பூமியை வராக உருவம் எடுத்து இறைவனுடைய அடியைத் தேடிக்கொண்டு பிளந்து சென்ற திருமாலுக்கு மருகனும் முருகனுமாகிய அருளாளன் வேறு சாட்சியாக யாரும் இல்லாத தனிவெளிக்கு வந்து நம்மைச் சந்திப்பது, யான் தான் என்னும் வேறுபாட்டைக் காட்டும் இனச்சொற்கள் இரண்டும் கெட்டாலன்றி வெறும் கேள்வியினால் தோன்றாது. கெட்டால் அன்றிச் சந்திப்பது கேள்வியினால் தோன்றாது.


யான்தான் எனல்அறவே இன்பநிட்டை என்று அருணைக்
கோன் தான் உரைத்தமொழி கொள்ளாயோ? --- தோன்றி
இழுக்கடித்தாய் நெஞ்சே! நீ என்கலைகள் சோர
அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய்.   ---  தாயுமானவர்.

இதன் பொருள் ---

     யான் எனது என்னும் செருக்கு முற்றாக அற்றொழியவே மாறுதல் இல்லாத, இன்பநிட்டை எளிதாகவும் இனிதாகவும் கைகூடும் என்று அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள உறுதி மொழியை அறுதிபெறக் கொள்ள மாட்டாயோ? முன்தோன்றி என்னுடைய ஆடைகள் சோரும்படி அழுக்கொழிய அடிக்கின்ற வண்ணாரை ஒத்து, மனமே! என்னைத் தீ நெறியில் புகுத்தினையே.

     யான் - அகப்பற்று. தான் - புறப்பற்று. இழுக்கடித்தல் - தீ நெறியிற் புகுத்தல்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...