030. வாய்மை - 04. உள்ளத்தால் பொய்யாது





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 30 -- வாய்மை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "ஒருவன் தன் உள்ளத்தால் பொய்யை நினையாது ஒழுகுவானாயின், அவன் உலகத்து உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான்" என்கின்றார் நாயனார்.

     உள்ளத்தால் பொய்த்தால், வாக்கிலும் பொய்யே வரும். செயலும் பொய்யாகவே அமையும்.

     உள்ளத்தால் நல்லதை நினைப்பது உண்மை.

     வாக்கினால் நல்லதைப் பேசுவது வாய்மை. "வாய்மை எனப்படுவது யாதொன்றும் தீமை இலாத சொலல்" என்று நாயனார் அருளியுள்ளதை அறிக.

     உடம்பால் (மெய்யால்) நல்லதைச் செய்வது மெய்ம்மை.

திருக்குறளைக் காண்போம்...

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின்,

     உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம்.

         ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

நந்தி அருள் காசிமயானத்து இருந்து சீவித்தும்,
அந்தமொழி தவறாது ஆற்றும் அரிச் --  சந்திரன்போல்,
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.                  

         நந்தி ---  சிவபெருமான். 

     காசியில் இறப்பார்க்குச் சிவபெருமான் தாரக மந்திரம் உபதேசித்து முத்தி ஈவர் என்பதனை உட்கொண்டு நந்தியருள் காசி மயானம் என்றார். ஒவ்வொரு கவியிலும் சிவசம்பந்தமான சொல்லோ, பொருளோ, சொல்பொருளோ இருத்தல் வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஆதல் பற்றி,  இவ் ஆசிரியர் இங்கே, நந்தியருள் மயானம் என்றார். காசியி்ல் இறப்பவருக்கு அந்திய காலத்தில், சிவபெருமான் திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாட்சரத்தை உபதேசிப்பார் என்பர். 

     முற்காலத்தில் தேவேந்திரன் சபையில் வசிட்ட விசுவாமித்திர முனிவர்களுக்குள், பூலோகத்து இருந்த அரிச்சந்திரனுடைய உண்மை நெறியைப் பற்றி வாதம் உண்டாயிற்று. விசுவாமித்திரற்குப் பித்தம் மேலிட்டு, சித்த சுவாதீனமின்றி, அரிச்சந்திரனைப் பொய்யன் என்று சாதித்தார்.   வசிட்டர் சாந்தமாய், அரிச்சந்திரன் மெய்யன், துய்யன் என்று வாதித்தார். இருவரும் சூள் உரைத்துக் கொண்டார்கள். வசிட்டர் தமது கூற்றுப் பிசகி அரிச்சந்திரன் பொய்யன் ஆனால், தாம் புலைச்சேரியில் மண்டை ஓட்டில் பிச்சை புக்குண்டு திரிவதாக வஞ்சினம் உரைத்தார். விசுவாமித்திரரும் அப்படியே அரிச்சந்திரன் தாம் இயற்றும் சோதனைக்குச் சலிக்காமல் உறுதியாய் நின்று மெய்யன் ஆனால், தமது செய்தவத்தில் பாதியை இழந்துவிடுவதாக வாக்குறுதி கூறினார். பிறகு, அவர் அதற்காகவே பூலோகத்திலிருந்த அரிச்சந்திரனிடத்திற்கு வந்து அநேக மாயச் சூதுகள் செய்து, அவனைப் பொய்யனாக்க முயன்றார். முயன்றும் பயனின்றித் தமது அருந்தவத்தில் பாதியை அவ் அரிச்சந்திரற்கே வழங்கி, வசிட்டர் முன்னிலையில் தமது சீரும் சிறப்பும் குன்றி நின்றார். விசுவாமித்திரர் முன் பின் எண்ணாமல் வசிட்டரிடத்தில் அரிச்சந்திரனைப் பற்றி வீண் வார்த்தைகள் பேசி விவேக சூனியராய் விளங்கினமையும், செய்தவத்தின் சீரும் சிறப்பும் இழந்தமையும் உலகப் பிரசித்தம்.

     உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய அரிச்சந்திரனை இன்றளவும் உள்ளத்தில் வைத்துப் போற்றுகின்றது உலகம்.

     பின் வரும் பாடல், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம்...                                                          

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.  --- திருமந்திரம்.

         பொழிப்புரை : `செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் ஆகிய இறைவனே அறியும். இவ்வுலகத்துப் பொய்யைப் பேசும் மனிதர்கள், உண்மையையே பேசுவார்களானால், மைபொதிந்து இலங்கும் மணிகண்டனாகிய பெருமான், தேவர்கள் அவர்களைத் தொழுமாறு செய்வான்.

     பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார். ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகு வோரையும் அவ்வாறின்றி ஒழுகுவோரையும் அவன் நோக்கி இருந்து அவரவர்க்குத் தக்க பயனைத் தருவான்` என்னும் குறிப்பினது. பின்னர், ``மைதாழ்ந்து இலங்கு மிடறு உடையோன்`` என்றமையால், முன்னர், ``செய்தான்`` என்றதும் அவனையே யாயிற்று. `நல்லொழுக்கத்தினாலே நற்பயன் பெறுதல் கூடுவதாய் இருக்க, அதனை விடுத்துத் தீயொழுக்கத்தில் ஒழுகுதல் அறியாமை` என்பது கருத்து. மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறும் முகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...