028. கூடா ஒழுக்கம் - 01. வஞ்ச மனத்தான்






திருக்குறள்
அறுத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 28 -- கூடா ஒழுக்கம்

     மனத்தை ஐம்பொறிகளின் வழியே போக ஒட்டாமல், நிலைநிறுத்திக் கொள்ளும் வண்ணம், பல விரதங்களை மேற்கொண்டு, உணவைச் சுருக்கிக் கொள்ளுதலும், கோடைக் காலத்தில் காய்கின்ற வெயிலில் நிற்றலும், மழைக் காலத்தில், மழையிலும், பனிக்காலத்தில் பனியிலும் இருத்தலும், நீர் நிலைகளில் நிற்றலும் ஆகிய நல்ல செயல்களைக் கடைப்பிடித்து, அசெ செயல்களால் தம்முடைய உயிருக்கு வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்கள்பால் அருள் உடையர் ஆதல் தவம் என்று கண்டோம்.

     தாம் ஓர் உயிருக்கும் ஒரு துன்பத்தையும் செய்தல் கூடாது என்றும், தமது உயிருக்கு எந்த துன்பம் வந்தாலும், பொறுத்துக் கொண்டு தவத்தினை முடித்து, வீடுபேற்றினை அடையவேண்டும் என்னும் விருப்பம் கொண்டு, துறவறத்தை மேற்கொண்டு தவம் புரிய வந்தவர்கள், பொருள்கள் எல்லாவற்றையும் விட்டு நின்றாலும், தாம் விட்ட காம இன்பத்தையும் அறவே மறந்து ஒழியவேண்டும். அவ்வாறு இருப்பதற்கு மனவலிமை அவசியம். அதற்குப் பொறி வாயில்களான ஐந்தையும் அவித்து ஒழுகல் வேண்டும். உள்ள உரம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். உள்ள உறுதியில்லாமல், காமநோயால் துன்புறுகின்ற காலத்தில், சிலர் அவ்வின்பத்தைப் பிறர் அறியாமல், தவ உருவில் மறைந்து இருந்து அனுபவித்தலும் நிகழும். தீய ஒழுக்கமாகிய அது, தவ வாழ்விற்குக் கூடாத ஒழுக்கம் என்பதால், கூடா ஒழுக்கம் எனப்பட்டது.

     ஒரு காலத்தில் ஒரு பொருளால் ஐம்புலன்களும் அனுபவித்தற்கு உரிய சிறப்பினை உடையது மகளிரது புணர்ச்சியால் வரும் சிற்றின்பம் ஆகிய காம இன்பம் ஆகும்.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "வஞ்ச மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை, உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பஞ்சபூதங்களும் கண்டு எள்ளி நகையாடும்" என்கின்றார் நாயனார்.

     வஞ்சகத்தோடு கூடிய மனத்தை உடையவனாய் ஒருவன் செய்கின்ற தீய செயல்களை, உடம்போடு உடம்பாய் அவனோடு நிற்கின்ற பஞ்சபூதங்களும் கண்டு உள்ளுக்குள் மெதுவாகச் சிரிக்கும் என்று கூறுவதால், தவ வேடத்தை மேற்கொண்ட ஒருவன், மனவலிமை இன்மையால், தன்னிடத்தை காம இச்சையானது தோன்றி வருத்தவும், அதனைத் தான் அடக்கிவிட்டதாகப் பலரும் நம்பும்படியாகக் காட்டிக்கொண்டு, களவொழுக்கத்தைப் பிறர் அறியாமல் மேற்கொள்கின்றான். இப்படிச் செய்யும் பாவமானது, எவ்விதமேனும் ஒழியாது. எனவே, இந்தக் கூடாவொழுக்கம் ஆகாது.

     வஞ்சக எண்ணம் உடையார், பிறர் அறியாமல் செய்யும் செயல்களுக்கு, அவனுடம்பிலே பொருந்தி உள்ள ஐம்பூதங்களும் சான்றாக நிற்பவை. இதனைப் பின்வரும் பாடலால் தெளியலாம்...

வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தேம் என்று மகிழன்மின், - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொல் என்றுஅஞ்சி
அங்கம் குலைவது அறிவு.             --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

     பொய்க்கோலம் பூண்டு பிறரை வஞ்சித்து நடக்கும் அறிவிலிகளே! எல்லாரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். நீங்கள் வஞ்சித்துப் புரிந்த செயல்களை எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றான் என்று நடுங்கி,  உங்கள் உடல் பதறுவதே, உங்களுக்கு அறிவாகும்.

     மேலும், மன அடக்கம் இல்லாதது, துறவு ஆகாது என்பதும் பின்னர் நாயானாரால் காட்டப்பெறும்.

திருக்குறளைக் காண்போம்...

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம், பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் --- வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை;

     பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் --- உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.
        
         (காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்ச மனம் என்றும், அந் நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவன் அறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...


வேதங்கள் காணவும் எட்டான் எழுத்து விளங்கும் எட்டான்
சீதங்கள் ஆர்மலர்ச் செல்விக்கு வாய்த்த திருப்புல்லையான்
பாதங்கள் சேர்ந்து உய்க வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம்
பூதங்கள் அஞ்சும் அகத்தே நகும் எனும் புன்மையற்றே.

இதன் பொருள் ---

     குளிர்ந்த தேன் பொருந்திய தாமரை மலரில் வாழும் திருமகள் கேள்வனா, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் திருமால், வேதங்களாலும் அறியப் படாதவன், எட்டெழுத்து மந்திரத்தைத் தனக்கு உரியவன். அப்படிப்பட்டவனுடைய திருவடிகளைச் சரணாக அடைந்தும், வஞ்ச மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை, உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பஞ்சபூதங்களும் கண்டு எள்ளி நகையாடும் என்று காட்டிய புன்மையை விட்டு, உய்தி பெறவேண்டும்.

     எட்டான் --- எட்டப்படாதவன். எழுத்து விளங்கும் எட்டான் --- விளங்குகின்ற எட்டெழுத்து மறையை உடையவன். சீதம் கள் ஆர் --- குளிர்ந்த தேன் பொருந்திய. மலர்ச் செல்வி --- திருமகள்.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...


கண்டவர் இல் எ, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கலி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ!
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்;    ---  கலித்தொகை.

இதன் பொருள் ---

அறியாதவர்கள் தம் மனம் இது செய்யக் கூடாது என்று கைவிடாது, வேறு விலக்குபவரும் இல்லாமல் உலகத்தில் பார்ப்பவர் இல்லை என எண்ணிச் தீவினைகள் செய்வர். அவற்றை அவர் பிறர் அறியாமல் மறைப்பர், அவ்வாறு செய்யினும் தாம் செய்ததை அறிந்துள்ளவர் அவர்தம் மனமே அல்லாது வேறு நெருங்கிய சான்றில்லை. ஆகையால், வள முடைய ஒட்டத்தில் பயிற்சியுடைய வலிய குதிரையை உடையவனே! உன்னை நான் இடித்துக் கூற வேண்டியது இல்லை. என்றாலும் உன்னுடன் யான் கொண்ட நன்மையற்ற ஆராய்ச்சியால், நீ அன்புடையவனாய் என்னிடம் இல்லை என்று வந்து சொல்வேன்; ஐயனே கேட்பாய்.

வஞ்ச வினைசெய்து, நெடுமன்றில் வளன்
    உண்டு, கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர்
    அரக்கர்; அறம் ஒக்கும் நெடியோன்;
நஞ்ச நெடுநீரினையும் ஒத்தனன்;
    அடுத்து அதனை நக்குநரையும்,
பஞ்சம் உறுநாளில் வறியோர்களையும்
    ஒத்தனர், அரக்கர், படுவார்.        ---  கம்பராமாயணம், மூலபலப் படலம்.
 
இதன் பதவுரை ---
     அரக்கர் வஞ்ச வினை செய்து --- வஞ்சகச் செயல்களைச் செய்து; நெடு மன்றில் வளம் உண்டு --- பெருமை வாய்ந்த நீதிமன்றத்துக்கு உரிய பொருளைக்  கவர்ந்து உண்டு; கரி பொய்க்கும் --- பொய்ச்சான்று பகரும் (பொய்ச்சாட்சி சொல்லும்); மறம் ஆர் நெஞ்சம் உடையோர் --- பாவம் பொருந்திய மனம் கொண்டோரின்; குலம் ஒத்தனர் --- கூட்டத்தைப் போன்றவர் ஆனார்கள்; நெடியோன் அறம் ஒக்கும் --- இராமபிரான் அறத்தினை நிகர்த்தான்; (நெடியோன்) நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் --- இராமபிரான் நஞ்சு மயமாகிய பெருங்கடலைப் போன்றவனானான்; படுவார் அரக்கர் --- சாகின்றவர்களாகிய அரக்கர்கள்; அதனை அடுத்து  நக்குநரையும் --- அந்த நச்சுக்கடலை அடைந்து  நக்குகின்றவர்களையும்; பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் --- பஞ்சம் பெருகுகின்ற காலத்தில் விழும் ஏழைகளையும் ஒத்தனர்-.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...