034. நிலையாமை - 04. நாள்என ஒன்றுபோல்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 34 -- நிலையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "நிலையாமையை உடையது வாழ்வு என்று உணர்வாராயின், நாள் என ஒன்று வந்து விளங்குவதை, தமது உயிரை அறுக்கும் வாள் என அறிதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

     மேலிரண்டு பாடல்களில், செல்வத்தினது நிலையைமையைக் கூறி அருளிய நாயனார், இதில், உடம்பினது நிலையைமைக் கூறினார்.

     உயிரானது அறிவுப் பொருளாய் இருத்தலால், அது வாளால் அறுக்கப்படுவது ஆகாது. "ஆயுதங்கள் இவனை (ஆன்மாவை) வெட்டுவதில்லை. நெருப்பானது இவனைச் (ஆன்மாவை) சுடுவதில்லை. நீரானது இவனை (ஆன்மாவை) நனைப்பது இல்லை. காற்றானது இவை (ஆன்மாவை) உலர்த்துவது இல்லை" என்னும் பகவத் கீதைப் பாடலால் அறிக.

     உயிருக்கு இடமாக உள்ள உடம்பினை அறுக்கும் என்று கொள்க.


திருக்குறளைக் காண்போம்...

நாள்என ஒன்று போல் காட்டி, உயிர் ஈரும்
வாள்அது, உணர்வார்ப் பெறின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொரு காலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர்,
    
     உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின்.

         (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர்:  'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....


தோற்றம்சால் ஞாயிறு நாழியா, வைகலும்
கூற்றம் அளந்து, நும் நாள்உண்ணும் ; ஆற்ற
அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் ; யாரும்
பிறந்தும் பிறவாதாரில்.         ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     கூற்றம் --- யமன், தோற்றம் சால்ஞாயிறு --காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக --- நாழி என்னும் அளவு கருவியாகக் கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் --- உம் வாழ்நாளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான் ; ஆதலால் ; ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் --- மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து உயிர்களிடத்தில் அருளுடையீராகுக, யாரும் --- அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும் பிறவாதாரில் --- பிறவியெடுத்தும் பிறவாதவரிற் சேர்ந்தவரே யாவர்.

         அருளுடையராதலே பிறவியின் பயனாதலால், அறஞ்செய்து அருளுடையராகுக.


நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கு எதிர் வந்த
தேரையை வவ்வி ஆங்கு, யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி
மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு,
அருள்நனி இன்றி ஒருவயிறு ஓம்பற்குப்
பல் உயிர் செகுத்து, வல்லிதின் அருந்தி
அயர்த்தனன், இருந்த போதும் பெயர்த்துநின்று
எண்தோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல் எயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.     --- கோயில் நான்மணி மாலை.

இதன் பொருள் ---

     விடத்தை உமிழ்கின்ற பிளந்த வாயினையும், கொடும் கோபத்தினையும் உடைய பெரும்பாம்பானது, தனக்கு முதலாக உள்ள உயிரைக் கெடுக்கக் காலம் பார்த்து இருக்க, நெல் பயிரின் வேரில் சுற்றி இருந்து சிறிய நீர்ப் பாம்பானது, தனது வாய்க்கு எதிர்ப்பட்ட சிறிய தவளைகளை விழுங்கியது போல, அடியேன், முன்னர் கருவில் உருவாகி, இந்த உலகத்திடைத் தோன்றிய அந்த நாள் முதலாக, குறித்த நாளின் எல்லையை மறக்காத, இயமனுடைய, பிளந்த வாயில் உள்ள, வேலின் உச்சியை ஒத்த பற்களின் இடையில், காலம் வரும்வரை அழியாது இருப்பதை உணர்ந்து இருந்தும், உயிர்களிடத்தல் கருணை சிறிதும் இல்லாது, எனது உடம்பினைக் காத்தல் பொருட்டு, பல உடல்களைக் கொன்று, இனிதாக சுவைகூட்டி அருந்தி, சோர்ந்து இருந்தும், பழமையாகிய தில்லையம்பதியில் ஒரு திருப்பதத்தை ஊன்றியும், ஒரு திருப்பதத்தைத் தூக்கியும் திருநடம் புரியும் அம்பலக் கூத்தனை, வாயாரப் பாடியும், கையார வணங்கியும் ஒழிந்தேன் இல்லை.


வாள்கள் ஆகி நாள்கள் செல்ல
     நோய்மை குன்றி மூப்பு எய்தி,
மாளும் நாள் அது ஆதலால்,
     வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,
ஆளதாகும் நன்மை என்று
     நன்கு உணர்ந்தது அன்றியும்,
மீள்வு இலாத போகம் நல்க
     வேண்டும் மால பாதமே.  --- திருமழிசை ஆழ்வார்.

இதன் பொருள் ---

     எனது நெஞ்சமே! வாழ்நாளை அறுக்கும் வாள் போலவே நாள்கள் கழி, உடலானது நோய்களால் பலம் இழந்து, கிழத் தன்மை அடைந்து, இறந்து போகும் காலமும் வந்து அடைந்தது. ஆதலால், எம்பெருமான் திருவடிகளில் வணங்கித் துதி பண்ணுவாயாக. மேலும் அந்த அடிமைச் செய்கையே புருஷார்த்தம் என்று நன்றாகப் புத்தி பண்ணி வணங்கித் துதிப்பாயாக. திரும்பி வராத கைங்கரிய போகத்தை, அப் பெருமானுடைய திருவடிகளே தரவேண்டும்.


தினங்கள்செலச் செல, ஏதோ பெற்றதுபோல்
    மகிழும் நெஞ்சே! தினங்க ளோடும்
கனம் கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உண-
    ராய் உயிர் தீர் காயஞ் சேரும்
வனம் கடுகி வா என்ன விளித்து உன்பால்
    தினம் நெருங்கும் வன்மை உன்னி
முனங்கொள் அறியாமையை, நீ இனங்கொள்ளாது
    அறஞ்செய்ய முயலுவாயே.      ---  நீதிநூல்

இதன் பொருள் ---

     நாட்கள் கழியக் கழிய ஏதோ புதிது பெற்றதுபோல் உளம் உவக்கும் மனமே! நாள்கள் செல்வதுடன், அரிய நின் வாழ்நாளும் சென்றுகொண்டிருப்பதை உணராதிருக்கின்றாய். உயிர் நீங்கிய உடம்பினைச் சுடப்படுங் காடு, உன்னை நாள்தோறும் நெருங்கி விரைந்து வா என்று அழைக்கின்றது. அதை நினைந்து இதுவரையுங் கொண்டுள்ள அறியாமையை இன்னமுங் கொள்ளாது விரைந்து புண்ணியஞ் செய்ய முற்படுவாயாக.
    

இன்று அருணோதயம் கண்டோம், யர்ககன
   முகட்டின்மிசை இந்தப் பானு
சென்று அடைய நாம் காண்பது ஐயம், அதைக்
   காண்கினும் மேல் திசை இருக்கும்
குன்று அடையும் அளவு நாம் உயிர்வாழ்வது
   அரிது, தன்முன் குறுகும் கூற்றம்
என்று, அச்சத்துடன், மனமே! மறவாமல்
   அறவழியின் ஏகுவாயே.      ---   நீதிநூல்

இதன் பொருள் ---

     நெஞ்சே! இன்று ஞாயிற்றின் தோற்றங் கண்டோம். காலை கழிந்து கதிரவன் உச்சிக்கு வருவதை நாம் காண்பது உறுதியில்லை.உச்சிப்பொழுது கண்டாலும், அவன் சென்றடையும் மாலைப்பொழுதைக் காண்பதும் உறுதியில்லை. மாலைப்பொழுதைக் கண்டாலும் அவன் குன்றடையும் அந்நிலை காணல் முடியாது. அதற்குள்ளே கூற்றுவனும் நெருங்குவான். ஆதலால், மிக்க அச்சத்துடன் மறவாமல் புண்ணிய வழியிலே நடப்பாயாக.


சிற்று உதர போசணைக்கா மலை ஏறிக்
   கடல்கடந்து, தேயம் எல்லாஞ்
சுற்றி, அனுதினம் அலைவாய், நித்தியபேர்
   இன்பசுகந் தோய வேண்டிச்
சற்றும் மஉடல் வருந்தல் இன்றி, அலைதல்இன்றி
   ஓரிடத்தே தங்கி, மூளும்
பற்றினையே துறந்து, சும்மா இருந்து அறஞ்செய்
   வதில் என்ன பாரம் நெஞ்சே.     --- நீதிநூல்

இதன் பொருள் ---

     மனமே! அழிந்துபோம் சிறிய சாண்வயிற்றைப் பேணுவதற்காக மலை கடந்தும் கடல் கடந்தும் நாடு சுற்றியும் நாளும் வருந்தித் திரிவாய். என்றும் அழியாத கடவுளின்பத்தைக் கைக்கொள்ளுவதற்காக உடல் ஓடியாடி எய்தும் வருத்தம் ஒரு சிறிதுமின்றி ஓரிடத்தே ஒருமனப்பட்டு மேலும் பெருகும் பற்றினை விட்டுக் கடவுள் நினைவின்றி மற்றொன்றும் எண்ணாது புண்ணியம் செய்து வாளா இருப்பதற்கு உண்டாம் வருத்தம் யாது?

         உதரம் --- வயிறு. போசணை --- பேணுதல். நித்தியம் ---என்றும். மூளும் --- பெருகும். அறம் --- புண்ணியம்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...