031. வெகுளாமை - உள்ளியது எல்லாம்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 31 --- வெகுளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தன் மனத்தளவில் ஒருவன் கோபத்தைக் கொள்ளானாயின், அவன் தான் நினைத்த பேறுகளை எல்லாம் ஒருங்கே அடைவான்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் --- தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின்,

     உள்ளியது எல்லாம் உடன் எய்தும் --- தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும்.

         ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் காண்க....

சினத்தினால் வரும் செய்தொழிலாம் அவை
அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவாய்மிக
மனத்தினால் மருகல் பெருமான் திறம்
நினைப்பினார்க்கு இல்லை நீள்நில வாழ்க்கையே


இதன் பொழிப்புரை ---

         கோபத்தினால் வருகின்ற செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை .

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...