034. நிலையாமை - 07. ஒருபொழுதும் வாழ்வது



திருக்குறள்

அறத்துப்பால்

 

துறவற இயல்

 

அதிகாரம் 34 -- நிலையாமை

 

         நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "அறிவில்லாதவர் ஒரு பொழுதாவது தமது உடம்போடு கூடி இருக்கும் உயிரை அறியமாட்டார்; ஆயினும் கோடிக்கு மேலான எண்ணங்களை எண்ணுகின்றனர்" என்கின்றார் நாயனார்.

 

     ஒரு பொழுதும் என்பது, கணப் பொழுதை உணர்த்தி நின்றது. காரணம் ஆகிய வினையின் அளவுதான் உடம்போடு கூடி உயிர் வாழும் காலம் என்பதை அறிந்து கொண்டால், அது எப்போழுதேனும் உடம்பை விட்டுப் போகும் என்னும் அநித்தியத்தை உணர்ந்து, அறநெறியில் ஒழுகுவார்கள். வினைக்குத் தக்க அளவே ஒருவன் உயிர்வாழக் கூடும். அறிவு மயக்கத்தால், மாந்தர்கள் பலர், பல கோடிகளாகிய நினைவுகளை நினைந்து நினைந்து, நெடுநாள் வாழ்ந்திருப்போம் என்று எண்ணுகின்றனர்; வாழும் வகையை மறக்கின்றனர்.

 

     கோடியும் அல்ல பல --- பலப்பல நினைவுகள்.

 

     பலப்பல நினைவுகளாவன --- இந்திரியங்களால் அனுபவிக்கப்படும் இன்பங்கள் தமக்கு உரியவை என்றும் அதற்குப் பொருள் துணைக் காரணம் என்றும் கருதுவது; பொருள் தமது முயற்சியால் வரும் என்று எண்ணி, அதனைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவது; அவ்வாறு முயலும்போது வரும் இடையைறுகளை அறிந்து நீக்க முயற்சிப்பது. பொருளைச் சேர்ப்பது எவ்விதம் என்று அறிவது; சேர்த்த பொருளைப் பிறர் கொண்டு போகாவண்ணம் காக்கும் விதம் அறிவது; அப் பொருளைக் கொண்டு தமக்கு நட்பை ஆக்குவதும், பகைவரை அழிப்பதும் செய்வது; இன்பங்களை எப்படியெல்லாம் அனுபவிப்பது என்று சிந்திப்பது போன்றவை. எண்ணங்கள் பலவாறாக இருந்தாலும், அவ்வெண்ணங்களின்படி ஒரு நாளும் வாழ்வது இல்லை. வாழமுயற்சிக்கும் போது, எதிர்பாராத வண்ணம் வாழ்நாள் முடிந்து போகின்றது. "நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும்" என்னும் பழமொழி இங்குக் கருதத் தக்கது.

 

     வினையின் அளவுதான் உயிர்வாழ்க்கை என்பது,

 

"வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய்,

     வினைதான் ஒழிந்தால்,

தினைப் போது அளவும் நில்லாது கண்டாய்,

     சிவன் பாதம் நினை

நினைப்போரை மேவு; நினையாரை நீங்கி

     நெறியில் நின்றால்

உனைப் போல் ஒருவர் உண்டோ? மனமே!

     எனக்கு உற்றவரே"

 

என்று நெஞ்றிவுறுத்தலாக வைத்து பட்டினத்தடிகள் பாடியருளிய திருப்பாடலால் காண்க.

 

இதன் பொருள் ---

 

     எனது நெஞ்சமே! நல்வினை தீவினை என்னும் இருவினைகளை அனுபவித்தற்கு உற்ற இடமே இந்த உடல். இருவினைகளின் அனுபவம் கழிந்தால், இந்த உடம்பானது தினையளவு நேரம் கூட நில்லாது. எனவே, சிவபெருமானத திருவடிகளைத் தியானம் செய். அப்படித் தியானம் செய்கின்ற அடியார் திருக்கூட்டத்தோடு கலந்து இரு. கடவுளை நினையாதவரை விட்டு விலகி, நல்வழியில் நின்றால், எனக்கு வேண்டியவர்கள் உன்னைப் போல் யார் உள்ளனர்? (மனமே ஒருவனுக்கு உற்ற துணை ஆகும்)

 

     இன்பங்களை அனுபவிப்பதற்குப் பொருள் துணைக் காரணம் ஆகும் என்பதை,

 

"வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

நடுவணது எய், இருதலையும் எய்தும்,

நடுவணது எய்தாதான் எய்தும், உலைப் பெய்து

அடுவது போலும் துயர்"

 

என்னும் நாலடியார் பாடலால் அறியலாம்.

 

மன்னிய மூன்று ---  அறம் பொருள் இன்பம்.

நடுவணது --- பொருள்.

இருதலை --- அறம், இன்பம்.

 

இதன் பொருள் ---

 

     குற்றம் அற்ற நிறைமொழி மாந்தர்கள் வாழுகின்ற இந்த உலகில், சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற, அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றில், நடுவில் உள்ள பொருள் என்னும் செல்வம் வாய்க்கப் பெற்றவர்கள், மற்ற இரண்டான அறத்தையும் புரிந்து, இன்பத்தையும் பெற்று இருப்பர். அறத்திற்கும், இன்பத்திற்கும் நடுவான பொருள் இல்லாதவன், உலைத் தீயில் பட்டு அடிபடும் இரும்பு போல, இவ்வுலகில் துன்பத்தை அடைவான்.

 

     "செல்வம் என்னும் அல்லில் பிழைத்தும்" என்று மணிவாசகப் பெருமான் அருளியபடி, பொருளை ஈட்ட முயலும்போதும், அதன் பின்னரும் இடையூறுகளே வரும் என்பதை,

 

"இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே,

பின் அதனைப் பேணுதலும் துன்பமே, - அன்னது

அழித்தலும் துன்பமே, அந்தோ! பிறர்பால்

இழத்தலும் துன்பமே ஆம்"

 

என்னும் நீதிவெண்பாவால் அறியலாம்.

 

இதன் பொருள் ---

 

     துன்பத்தைத் தரக்கூடிய பொருளைச் சம்பாதிப்பதும் துன்பம். சம்பாதித்த செல்வத்தைக் காத்தலும் துன்பம். காத்த பொருளைச் செலவழித்தலும் துன்பம். ஐயோ! பொருளைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போவதும் துன்பமே ஆகும். (பொருள் மீது பற்று வைப்பது துன்பத்தையே தரும்)

 

     எல்லாவற்றையும் தொகுத்து, வள்ளல்பெருமான், "நெஞ்சறிவுறுத்தல்" என்னும் பகுதியில் பின்வருமாறு பாடி வைத்து அருள் புரிந்துள்ளதையும் உணர்தல் வேண்டும்.

 

நின்ஆசை என் என்பேன், நெய்வீழ் நெருப்பு எனவே

பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே? - பொன்னாசை

 

வைத்து, ழந்து வீணே வயிறு எரிந்து, மண்ணுலகில்

எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார்? - தத்துகின்ற

 

பொன்உடையார் துன்பப் புணரி ஒன்றே அல்லது, மற்று

என்உடையார் கண்டு இங்கு இருந்தனையே? - பொன்இருந்தால்

 

ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட, ஓர்

ஏற்றஇடம் வேண்டும், தற்கு என்செய்வாய்? - ஏற்றஇடம்

 

வாய்த்தாலும், அங்கு அதனை வைத்தஇடம் காட்டாமல்

ஏய்த்தால், சிவசிவ, மற்று என்செய்வாய்? - ஏய்க்காது

 

நின்றாலும், பின் அதுதான் நீடும் கரியானது

என்றால், அரகர, மற்று என்செய்வாய்? - நன்றாக

 

ஒன்றொருசார் நில் என்றால் ஓடுகின்ற நீ, அதனை

என்றும் புரப்பதனுக்கு என்செய்வாய்? - வென்றியொடு

 

பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்

ஈர்த்துப் பறிக்கில் அதற்கு என்செய்வாய்? - பேர்த்தெடுக்கக்

 

கைபுகுத்தும் கால், ள் கருங்குளவி செங்குளவி

எய்புகுத்தக் கொட்டிடின் மற்று என்செய்வாய்? - பொய்புகுத்தும்

 

பொன்காவல் பூதம் அது, போயெடுக்கும் போது, மறித்து

என்காவல் என்றால், மற்று என்செய்வாய்? - பொன்காவல்

 

வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்

ஏறுங்கால் மற்று அதனுக்கு என்செய்வாய்? - மாறும்சீர்

 

உன்நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன்

இன்னே வருவன், தற்கு என்செய்வாய்? - முன்ஏதும்

 

இல்லா நமக்கு உண்டோ இல்லையோ என்னும் நலம்

எல்லாம் அழியும், அதற்கு என்செய்வாய்? - நில்லாமல்

 

ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கல் அது

பாய்ந்து ஓடிப் போவது நீ பார்த்திலையே!

 

கூத்தாட்டு அவைசேர் குழாம்விளிந்தாற் போலும் என்ற

சீர்த்தாள் குறள்மொழியும் தேர்ந்திலையே.

 

     கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தியது போ, இக் கருத்துக்களை எல்லாம் உள்ளடக்கி, திருவள்ளுவ நாயனார்,

 

ஒருபொழுதும் வாழ்வது அறியார், கருதுப

கோடியும் அல்ல பல.

 

என்று அருளிச் செய்தார்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     ஒரு பொழுதும் வாழ்வது அறியார் --- ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார்,

 

     கோடியும் அல்ல பல கருதுப --- மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.

 

         (இழிவு சிறப்பு உம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று.

        

         பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

        

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்.  ---   நல்வழி.

 

இதன் பதவுரை ---

 

     உண்பது, நாழி --- உண்பது ஒரு நாழி அரிசி அன்னமே ஆகும்; உடுப்பது நான்கு முழம் --- உடுப்பது நான்கு முழ உடையே ஆகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி --- நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த --- அகக்கண் குருடாயிருக்கிற, மாந்தர் குடி வாழ்க்கை --- மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் கலம்போல --- மட்கலம்போல. சாம் துணையும் --- இறக்குமளவும். சஞ்சலமே --- (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

 

         உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள்.

 

அண்ட அண்டங்களின் தூர நிலைஅளவு

     கூறுவோம், அருக்கன் திங்கட்கு

உண்டாகும் கிராணம் அதை முன்சொலுவோம்,

     கடிகாரத்து உதவி கொண்டு

தண்டாத காலம் அதை அளவிடுவோம்,

     இன்னும் மிகு சமர்த்துஞ் செய்வோம்,

கொண்டாடும் தேகமிது வீழ்காலம்

     அறிவதற்கோர் குறிப்பு இன்று அம்மா.   ---  நீதிநூல்.

 

இதன் பொருள் ---

 

     பல்வேறு உலக உருண்டைகளின் தொலைவு, நிலை, சுற்றளவு முதலிய பிறவும் வகைப்படுத்துச் சொல்லுவோம். ஞாயிறு திங்கட்கு உண்டாகும் நில நிழலாம் கிரகணத்தை முன் ஆய்ந்து உரைப்போம். நாழிகை வட்டிலைக் கொண்டு காலக் கணக்கை வரையறுத்துக் கூறுவோம். மேலும் பல வியத்தகு செயல்களும் செய்வோம். விரும்பிப் பேணும் இவ்வுடம்பு எப்பொழுது மாளும் என்பதை உணர்வதற்கோர் அடையாளமும் இல்லை.

 

         அண்டம் - உலக உருண்டை. அருக்கன் - ஞாயிறு. கிராணம் - கிரகணம் பற்றுதல். கடிகாரம் - நாழிகை வட்டில். சமர்த்து -திறமை. தேகம் - உடம்பு. வீழ்காலம் - மாளும் பொழுது. குறிப்பு - அடையாளம்.

 

காடுசேர் மரம் செடி பார்த்து, த்தனை நாள்

    நிற்கும் எனக் கணிக்கலாம், சீர்

நாடுநீர்த் தடம் நோக்கி இத்தனைநாள்

    புனல் என்ன நவிலலாம், ர்

வீடுதான் இத்தனைநாள் நிற்கும் என

    விளம்பலாம், மெய் என்னும் பொய்க்

கூடுதான் இத்தனை நாள் நிற்கும் எனப்

    புவியில் எவர் கூறற் பாலார்.        ---  நீதிநூல்.

 

 இதன் பொருள் ---

 

     காட்டிலுள்ள மரம் செடிகளை ஆராய்ந்து அவை இத்தனை நாளைக்கு நிற்கும் என்று அளவிடலாம். சிறந்த நீர் நிலைகளை இவ்வளவு காலத்துக்குப் பாயும் நீர் கொள்ளும் எனக் கூறலாம். வீடு இவ்வளவு காலம் நிலைக்குமெனக் கூறலாம். மெய்யென்று பெயர் பெற்ற பொய்யுடலை உலகத்தில் இவ்வளவு காலம் நிலைத்திருக்குமென்று சொல்லவல்லவர் யார்? (ஒருவருமிலர்)

 

நெல் அறுக்க ஓர்காலம், மலர்கொய்ய

   ஓர்காலம், நெடிய பாரக்

கல் அறுக்க ஓர்காலம், மரம் அறுக்க

   ஓர்காலக் கணிதம் உண்டு;

வல்லரக்கன் அனைய நமன் நினைத்தபோது

   எல்லாம் நம் வாழ்நாள் என்னும்

புல் அறுக்க வருவன் எனில், நெஞ்சமே!

   மற்று இனி யாம் புகல்வது என்னே.     ---  நீதிநூல்.

 

 இதன் பொருள் ---

 

     மனமே! உலகில் நெல் அறுப்பதற்கும், பூப் பறித்தற்கும், கல் வெட்டுதற்கும், மரம் ஈர்வதற்கும் ஒவ்வோர் காலக் கணக்கு உண்டு. மிகக் கொடியரை ஒத்த கூற்றுவன் நம்முடைய அகவை என்னும் புல்லை அறுக்க அவன் நினைத்தபொழுதெல்லாம் வருவான். அதனால், நாம் நம்முடைய அகவையின் நிலைமையைச் சொல்லுவதற்கு என்ன இருக்கின்றது?

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...