032. இன்னா செய்யாமை - 08. தன்னுயிர்க்கு இன்னாமை





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 32 -- இன்னா செய்யாமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "பிறர் செய்யும் துன்பம் தரும் செயல்கள் தனக்கு துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன், நிலைபேறு உடைய உயிர்களுக்கு, அத் துன்பம் தரும் செய்யல்களைச் செய்வது என்ன காரணத்தால்?" என்று வினவுகின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...


தன்உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் --- பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்:

     மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் --- நிலைபேறு உடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?

         (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின், 'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

அன்னவன் தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான்                                                     என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல் என்ற வள்ளுவர்                                                           வாய்மை கண்டும்
பின்னும் பிறருக்கு இன்னாமை செய் பேதை இருள் அகலப்
பொன்உறு சோதியைக் கண்டுகொண்டேன்                                                                திருப்புல்லையிலே.

இதன் பொருள் ---

     பிறர் செய்யும் துன்பம் தரும் செயல்கள் தனக்கு துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன், நிலைபேறு உடைய உயிர்களுக்கு, அத் துன்பம் தரும் செயல்களைச் செய்வது என்ன காரணத்தால்? என்று திருவள்ளுவ நாயனார் அருளிய உண்மையை அறிந்து வைத்தும், பிறர்க்கு துன்பம் தரும் செயல்களைப் புரிகின்ற அறிவிலியாகிய எனது அறிவு மயக்கம் ஒழியுமாறு, பொன்போல ஒளி விங்கும் சோதியாகிய பரம்பொருளைத் திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் நான் கண்டுகொண்டேன்.

     இருள் அகல --- அறிவற்ற என்னுடைய மயக்கம் ஒழிய.  பொன்னுறு சோதி --- பொன்போல விளங்கும் ஒளிக்கடவுள் - திருமால்.

பின்வரும் பாடலைக் காண்க...

வினைப்பயன் ஒன்று இன்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா இன்னா பிறர்க்கு.    --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     புனம் பொன் அவிர் சுணங்கின் பூம்கொம்பர் அன்னாய் --- புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை ஒப்பாய்!, தனக்கு இன்னா பிறர்க்கு இன்னா --- தனக்குத் துன்பந்தருவன பிறருக்குந் துன்பந் தருவனவாம் (ஆதலால்), வினைபயன் ஒன்று இன்றி --- செய்கின்ற செயலில் பயனொரு சிறிதுமில்லாமல், வேற்றுமை கொண்டு --- பகைமை ஒன்றே கொண்டு, நினைத்து --- ஆராய்ந்து, பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் --- பிறர்வருந்தத் தக்கனவற்றைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.

         பிறரையும் தம்மைப்போல நினைத்துத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்.

         'தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ, மன்னுயிர்க் கின்னா செயல்' என்ற திருக்குறள் கருத்தும் இங்கே நினைத்தற்குரியது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...