028. கூடா ஒழுக்கம் - 09. கணை கொடிது




திருக்குறள்
அறுத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 28 -- கூடா ஒழுக்கம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அம்பானது வடிவில் நேராய் அமைந்து இருந்தாலும், செயலில் கொடியதாய் இருக்கின்றது. வீணையானது வடிவினால் வளைந்து இருந்தாலும் செயலால் இனியதாக உள்ளது. அதுபோலவே, தவம் செய்பவரையும் செம்மையானவர் என்று அவரது வடிவினைக் கண்ட அளவில் கொள்ளாது, அவரது செய்கையால் அறியவேண்டும்" என்கின்றார் நாயனார்.

     அம்பின் செயல் கொல்லுதல். வீணையின் செயல் இசையால் இன்பத்தைத் தருதல். அது போலவே, தவத்தினரின் செயல் பாவம் ஆயின் கொடியவர் என்றும், அறம் ஆயின் நல்லவர் என்றும் அறிதல் வேண்டும். வேடமாத்திரத்தால் தெளிதல் கூடாது.

திருக்குறளைக் காண்போம்...

கணை கொடிது, யாழ்கோடு செவ்விது ஆங்கு, அன்ன
வினைபடு பாலால் கொளல்.

இநற்குப் பரிமேலழகர் உரை ---

     கணை கொடிது யாழ் கோடு செவ்விது --- அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது, யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது.

     ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் --- அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர்செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க.

         (கணைக்குச் செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரிய புராணத்தில் வரும் சாக்கிய நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..

அங்கசன்பூ எல்லாம் அடுகணையே, சாக்கியர்கைச்
செங்கல்எலாம் சங்கரற்குத் தேமலரே, - செங்கேழ்க்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

     காஞ்சிபுரத்திலே புத்த சமயத்தைச் சார்ந்திருந்தும், அறிவிக்க அறியும் சித்தாகிய ஆன்மாக்களும், அவ் ஆன்மாக்களினாலே செய்யப்படும் சடமாகிய புண்ணியம் பாவம் என்னும் கன்மங்களும், அந்தக் கன்மங்களாலே பெறப்படும் சுகம் துக்கம் என்னும் பயன்களும், அப் பயன்களைக் கொடுக்கின்ற தானோ அறியும் சித்தாகிய பதியும் எனப் பொருள்கள் நான்கு என்றும், அவற்றை உண்மையாக உணர்த்தும் நூல்கள் சைவசமய நூல்களே என்றும், அந்நூல் உணர்த்தும் கடவுள் சிவபெருமானே என்றும் திருவருளாலே நன்றாய் அறிந்து உறுதி பூண்டார் சாக்கியர். எந்த நிலையிலே நின்றாலும் எந்த வேடத்தைக் கொண்டாலும் பரமசிவனுடைய திருவடிகளை மறவாமையே பொருள் எனக் கருதினார். தாம் முன்பு சார்ந்த புத்தமத வேடத்தைத் துறவாமல் பரமசிவனை மிக்க பேரன்புடன் இடைவிடாது தியானித்து வருவாராயினார். நாள்தோறும் சிவலிங்க தரிசனம் செய்தே உணவு கொள்வது எனவும் விரும்பினார். அதனால் அருகில் ஓர் வெள்ளிடையில் இருந்த சிவலிங்கத்தைத் தரிசித்துப் பேரானந்தம் கொண்டார்.  இன்னதென்று செய்வதறியாமல் கீழே கிடந்த செங்கல்லை எடுத்துப் பதைப்புடன் சிவலிங்கத்தின் மேல் எறிந்தார். எல்லாம் சிவன் செயல் எனத் தெளிந்தமையால் தனக்கு இவ் எண்ணம் வந்தது பரமசிவன் திருவருளே எனத் துணிந்தார். அந் நியமத்தை நாள்தோறும் வழுவாமல் செய்து வந்தார். அச்செயல் இறைவருக்கு அன்றலர்ந்த மலரிட்டுச் செய்யும் அர்ச்சனை ஆயிற்று. மன்மதன் சிவபெருமான்மேல் இட்டதெல்லாம் மலராயினும் அவை அவன் மரணத்துக்குக் காரணமாயிற்று.

         அம்பானது வடிவால் செவ்விது ஆயினும் செயலால் கொடிது. யாழ் கோட்டால் வளைந்தது ஆயினும் செயலால் செவ்விது. அவ் வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது, அவரது வடிவால் கொள்ளாது அவர் செயல்பட்ட கூற்றானே அறிந்துகொள்க என்றார் திருவள்ளுவ நாயனார்.

         அங்கசன் --- மன்மதன். அடு கணை --- கொல்லுகின்ற அம்பு.  கோடு --- வளைவு.

     பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

மாசற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது, ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிது என்க, --- ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.              --- நன்னெறி.

இதன் பொருள் ---

     அழகிய நெற்றியினை உடையவளே! குற்றம் அற்ற மனத்தை உடையவர் கடுஞ்சொல் கூறினாலும், அது இனிமை தருவதாகும். குற்றம் பொருந்திய மனத்தை உடைய பிறர் கூறும் இன்சொல்லோ தீமை தருவதாகும். சிவபெருமானுக்கு நல்ல குணம் உடையவராகிய சாக்கிய நாயனார் அன்போடு தினமும் மலராக எண்ணி எறிந்த கல்லோ, சிறந்த கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அன்பில்லாமல் எறிந்த பூவோ, எது விருப்பாயிற்று.  சாக்கியர் எறிந்த கல்லோ விருப்பாயிற்று.

         ஏனையோர் - தீயவர்கள். பிறிது - ஈண்டுக் கொடிதென்னும் பொருட்டு. நல்லோன் - சாக்கிய நாயனார். சிலை - கல். கருப்பு - கரும்பு; மகரம் பகரமானது வலித்தல் விகாரம். பூ எறிந்த மன்மதனை எறித்த சிவன், கல் எறிந்த சாக்கியர்க்கு அருள் புரிந்தார்.

புத்தனார் எறிந்த கல்லும் போது என மிலைந்த வேத
வித்தனார் அடிக்கீழ் வீழ விண்ணவர் முனிவர் ஏனோர்
சுத்தநா ஆசிகூறக் குங்குமத் தோயந் தோய்ந்த
முத்தவால் அரிசி வீசி மூழ்கினார் போக வெள்ளம்.
                                            ---  தி.வி.புராணம், திருமணப் படலம்.

இதன் பதவுரை ---

     புத்தனார் எறிந்த கல்லும் --- சாக்கிய நாயனார் எறிந்த
கல்லையும், போது என மிலைந்த வேத வித்தனார் --- மலரைப் போலச் சூடியருளிய வேத காரணராகிய இறைவனது, அடிக்கீழ் வீழ --- திருவடியின் கீழ் வீழுமாறு, விண்ணவர் முனிவர் ஏனோர் --- தேவர்களும் முனிவர்களும் மற்றையரும், சுத்தநா ஆசி கூறி --- புனித நாவினால் ஆக்க மொழி கூறி. குங்குமத் தோயம் தோய்ந்த --- குங்கும நீரில் நனைந்த, முத்தவால் அரிசி வீசி - முத்துப் போன்ற வெள்ளிய அரிசியை வீசி, போக வெள்ளம் மூழ்கினார் --- இன்ப வெள்ளத்தில் அழுந்தினார்கள்.


துறந்தார் துறந்திலர் என்று அறியலாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம்--துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை.            ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம் --- துறவிகள் மேற்கொண்டொழுகும் வேடத்தால், துறந்தார் துறந்திலர் என்று அறியலாகும் --- பற்றற்றவர் பற்றறாதவர் என்று அறியலாம், அவர் உள்ளம் கிடந்த வகை --- அவர் உள்ளம் பற்றற்ற நிலையினை, துறந்தவர் கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் --- அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் பொருளினின்றும், மற்றவர்கட்குக் கொடுக்கும் பொருளினின்றும் அறியலாம்.

         கொள்ளுதல் --- பொருளில் அவாவின்றி வேண்டியவற்றைக் கொண்டு மற்றவை விடல்.

     கொடுத்தல் --- உண்மைப் பொருளைப் பலர்க்கும் உணர்த்தல்.


போர்த்தும், உரிந்திட்டும், பூசியும், நீட்டியும்,
ஓர்த்து ஒருபால் மறைத்து உண்பான்,மேய் - ஓர்த்த
அறம்ஆமேல் சொற்பொறுக்க, அன்றேல், கலிக்கண்
துறவறம்பொய், இல்லறமே வாய்.   ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     போர்த்தும் --- முழு உடம்பும் தோன்றாமல் போர்த்தும், உரிந்திட்டும் --- உடுத்த உடையைக் களைந்தும், பூசியும் --- உடம்பு முழுதும் திருநீறு பூசியும், நீட்டியும் --- சடையை நீட்டியும், ஓர்த்து ஒருபால் மறைத்து --- ஆராய்ந்து உடம்பில் ஒரு பக்கத்தை மறைத்தும், உண்பான் --- உண்டற்கு, மேய் ஓர்த்த --- மேவி ஆராய்ந்து கொண்டனவாகிய இவ்வேடங்களைந்தும், மேல் சொல் அறம் ஆம் --- மேலோர் சொல்லிய துறவறமே, பொறுக்க --- (துறவறமாயின் பிறர் சொல்லிய கடுஞ்சொற்களைப்) பொறுத்துக் கொள்க, அன்றேல் --- பொறாராயின், கலிக்கண் --- இக் கலிகாலத்தில், புறவறம் பொய் --- புறவறம் பொய்யாம், இல்லறமே வாய் --- இல்லறமே மெய்யாம்.

         உலகவர் பழியைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வது ஆயின், துறவறம் கொள்க, அன்றேல் இல்லறமே கொள்க என்பது.

     தவ வடிவம் கொண்டவர்களில் உண்மை உடையவர்களையும் போலித் தவசிகளையும் பகுத்தறியும் ஆற்றல் பொதுமக்கட்கு இன்மையான், அவர்கள் எல்லாத் துறவிகளையும் பழிப்பார்கள். துறவுக்கு முதல் இலக்கணம் பொறுத்தல். இப்பொறை கொள்ளாதவன் துறவறம் மேற்கொள்ளல் தகாது என்றபடி. கலிகாலத்தில் போலித் துறவிகளே பெரும்பான்மையர் என்பது குறிப்பு.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...