035. துறவு - 05. மற்றும் தொடர்ப்பாடு





திருக்குறள்
அறத்துபால்

துறவற இயல்

அதிகாரம் 35 -- துறவு

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "பிறவியை நீக்கும் தவமுயற்சியை மேற்கொண்டார்க்கு, அதற்கு உதவியாக உள்ள உடலும் மிகை ஆகும் என்று ஆன பின்னர், அதற்கும் மேலே சம்பந்தம் இல்லாத பொருள்கள் தொடர்புப் படுதல் என்ன ஆகும்" என்கின்றார் நாயனார்.

     பிறப்பினை ஒழித்தலே தகுதி என மேற்கொண்ட துறவி ஒருவனுக்கு, அவ்விதம் ஒழித்தற்குக் கருவியாகிய உடம்பும் எதற்கு என்று வெறுக்கின்ற காலத்தில், அதற்கு உரியன ஆகிய பொருள்கள் மீது எதற்குப் பற்று வைத்தல் வேண்டும் என்பதால், துறவு கொண்டவன் இருவிதப் பற்றும் அறுத்தல் வேண்டும் என்று அறியப்படும். அதாவது, அரு உடம்பு ஆகிய மனமும், உரு உடம்பு ஆகிய தேகமும் ஆகிய இரண்டின் இடத்தும், நிலையாமையை உணர்ந்தும், அவற்றின் இடத்தே பற்றைச் செலுத்தி, அவைகளால் வரும் துன்பத்தையும், இடையூறுகளையும் அடையாது, வீடு பேற்றினை விரைந்து அடைய ஆசை கொள்வார்க்கு, இந்த உடம்புகள் பயனற்றவை ஆகும்.

     பரிமேலழகரால் குறிப்படப்படும் பத்து வகை இந்திரிய உணர்வு --- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஞானேந்திரியங்கள். வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்னும் ஐவகைக் கன்மேந்திரியங்கள்.

     ஐவகை வாயுக்களாவன :-- பிராணன, அபானன், வியானன், உதானன், சமானன் என்பவை. வாயுக்கள் பத்து என்று சைவசித்தாந்தம் கூறும்.

     காமவினை விளைவு எனப்படுவது --- பொருள்களை விரும்புவதாகிய காமமும், நல்வினை தீவினை வாயிலாக வரும் சுகதுக்கங்களும்.

     கட்டு எனப்படுவது, முத்திநெறியில் செல்லவொட்டாது தடுத்து, மனைவி மக்கள் முதலியவரிடத்துப் பற்று உண்டாகச் செய்து, ஆன்மாவை முத்தி அடையாமல் கட்டுவது.

திருக்குறளைக் காண்போம்...

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல், பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை --- பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம்,

     மற்றும் தொடர்ப்பாடு எவன் --- ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்?

         ('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத் துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை எய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.)


     பின்வரும் பாடல், இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

சிறந்த தம் மக்களும் செய்பொருளும் நீக்கித்
துறந்தார் தொடர்ப்பாடு எவன்கொல்? --- கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலைநாட! அஃது அன்றோ
யானைபோய் வால்போகா வாறு.  ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     கறங்கு அருவி ஏனல்வாய் வீழும் மலைநாட - ஒலித்து வரும் அருவிகள் தினைப்புனத்தின்கண் வீழும் மலைநாடனே!, சிறந்த தம் மக்களும் செய்பொருளும் --- சிறப்புடைத்தாய தம்முடைய மக்களையும் தாம் ஈட்டிய பொருளையும், நீக்கி துறந்தார் --- பற்றுவிட்டுத் துறந்தவர்கள், தொடர்ப்பாடு எவன்கொல் --- தமது உடம்பின்மீது பற்றுக்கொண்டு ஒழுகுதல் எது கருதி, யானை போய் வால் போகா ஆறு அஃது அன்றோ --- ஒரு வாயிலின்கண் யானை போய் அதன் வால் போகாவாற்றை அஃதொக்குமன்றோ.

         துறவறநெறி நின்றார் அகப்பற்றினை முற்ற நீக்குக என்றது இது.

         உடம்பின்மீது சிறிது பற்றுக்கொள்ளின், அது காரணமாக ஒழிந்த பற்றுக்களெல்லாம் வந்து சேருமாதலின், அதனை முற்ற அறுத்தல் வேண்டும். அது யானை போயும் வால் போகாதவாற்றை ஒக்கும்.

         'யானை போய் வால் போகா வாறு' என்பது பழமொழி.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...