035. துறவு - 09. பற்றற்ற கண்ணே





திருக்குறள்
அறத்துபால்

துறவற இயல்

அதிகாரம் 35 -- துறவு

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "ஒருவன் இருவகைப் பற்றுக்களையும் அற்றபொழுதே, அவனது பிறவி அற்று நிலையான இன்பத்தை அடையப் பெறுவான். அவ்வாறு அறாதபொழுது, அவ் இருவகைப் பற்றுக்களால், பிறந்து இறந்து வருகின்ற நிலையாமையே காணப்படும்" என்கின்றார் நாயனார்.

     பிறவிக்குக் காரணமான பற்று அற்ற பொழுதே, அதன் காரியமாகிய பிறவி அறும்.

திருக்குறளைக் காண்போம்...


பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும், மற்றும்
நிலையாமை காணப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் --- ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்;

     மற்று நிலையாமை காணப்படும் --- அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

         (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது.)


     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திருநாவுக்கரசு நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மாமணிபொன் மாதர்எதிர் வந்து உறினும் பற்றுஅற்றார்
தாம்அரன்பால் வந்துஅரசர் தாழ்த்தாரோ? - ஆமெனவே
பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

         திருநாவுக்கரசு சுவாமிகள் வழக்கம்போலத் திருப்புகலூர்ச் சிவாலயத்திலும் உழவாரத் திருப்பணி செய்துகொண்டிருந்தார்.  திருவருளாணையால் அங்கே உழவாரப் படையில் பொன்னும் மணியும் மிகுதியாகத் தட்டுப்பட்டன. அவர் அவைகளை எல்லாம் வாரி வாரி வெளியிலே எறிந்தார். தெய்வமகளிர் தம்முன் நின்று விகாரப்பாடுகளைச் செய்தும் ஏறெடுத்தும் பார்த்திலர்.

பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற
         புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு
         இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ணல் ஆரூர்த்
         தடங்கடலைத் தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான்தன் அடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
         இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

என்னும் தொடக்கத்தினை உடைய திருத்தாண்டகத் திருப்பதிகத்தை அவர் அருளிச் செய்தார். பின்பு சிவபெருமான் திருவடியிலே சேர்ந்தார். 

         ஒருவன் இருவகைப் பற்றும் அற்றபொழுதே அப்பற்றறுதி அவன் பிறப்பை அறுக்கும். அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும் என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

         "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என மேற்கோள் காட்டி விளக்கினார் பரிமேலழகர்.

         தாழ்த்தாரோ --- தாமதித்தாரோ, ஓகாரம் எதிர்மறை, இல்லை என்றபடி.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...


பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்.
சொற்றவாம் அளவதோ. மற்று இதன் தூய்மையே?’
                                     ---  கம்பராமாயணம், தாடகை வதைப் படலம்.

இதன் பதவுரை ---

     பற்று அவா வேரொடும் பசை அற --- உலகப் பொருள்களில் பற்றியுள்ள ஆசை வேரொடு பற்றற்றுப் போகவும்; பிறவி போய் முற்ற --- அவ்வாசையின் பயனாய் வரும் பிறவி நோய் சென்று முடியவும்; வால் உணர்வு மேல் --- மெய்யுணர்வு பெற்ற; முடுகினார் அறிவு --- விரைந்து சென்று அடைகின்ற ஞானிகளின் ஆன்மஞானம்; சென்று உற்றவானவன் --- சென்று அடைகின்ற இறைவனாகிய சிவபெருமானே; இருந்து யோகு செய்தனன்  எனில் --- இங்கிருந்து யோகத்தைச் செய்தான் என்றால்; இதன் தூய்மை சொற்றலாம் அளவதோ --- இதன் தூய்மை சொல்லத் தக்க அளவுடையதாகுமோ? ஆகாது.

     அவா வேரொடும் பசையறுதல்: ஆசை வேருடன் பற்றறுதல்.போய் முற்றல்: முற்றிப்  போதல். வால் உணவு: மெய்யறிவு. யோகு: யோகம் (கடைக்குறை). அளவது;   அளவுடையது. சிவபெருமான் ஆன்ம ஞானிகளுக்குத் தலைவன் என்றபடி.

     உலகப்  பொருள்களின் மீதுள்ள பற்று ஒழிந்தால் - அந்தப் பற்றுக் காரணமாக வரும் பிறவி தீரும் - பிறவி நீங்க ஆன்ம    ஞானம் உண்டாகும். அந்த ஞானத்தால் இறைக்காட்சி பெறலாம் என்பதால் "வாலுணர்வு மேல்வர முடுகினார் அறிவு சென்றுற்ற வானவன்"  எனச் சிவபெருமானைச் சிறப்பித்துக் கூறினார்.  அவன் இருந்து தவம்செய்த இடமாதலின் இதன் தூய்மை சொல்ல இயலாததென்றார்.


பற்று என்னும் பாசத் தளையும், பலவழியும்
பற்று அறாது ஓடும் அவாத்தேரும், - தெற்றெனப்
பொய்த்து உரை என்னும் பகைஇருளும், இம்மூன்றும்
வித்துஅற வீடும் பிறப்பு.              ----  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     பற்று என்னும் பாசத் தளையும் --- பற்று என்று சொல்லப்படுகின்ற கயிற்று விலங்கும்; பலவழியும் பற்று அறாது ஓடும் அவாத் தேரும் --- பல பொருள்களிலும், பிடிப்பு நீங்காமல் ஓடுகின்ற விருப்பமாகிய தேரும்; தெற்றென பொய்த்து உரை என்னும் பகை இருளும் --- தெளிவாகப் பிறருக்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும், அறிவுக்குப் பகையாகிய இருளும்; இ மூன்றும் வித்து அற பிறப்பு வீடும் --- ஆகிய இம் மூன்றும், தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட, பிறப்பு அழியும்.

         பற்றையும், அவாவையும், பொய்யையும் நீக்கினால் வீடு அடையலாம்.

         ஒன்றின்மேல் பற்று இருந்தால் அவை ஒழித்து அங்கங்குச் செல்வது கூடாமையால் பாசத்தளை என்றும், ஒன்றின்மேல் ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாத் தேர் என்றும் கூறினார். "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்ற குறளுக்கு இணங்கப் பொய்யாமை விளக்கம் எனப்படுதலால், பொய்யுரை இருள் எனப்பட்டது. பற்று - அகப்பற்று புறப்பற்று என்று இருவகைத்து; நான் என்னும் உணர்ச்சியுடன் இருப்பது அகப்பற்று. எனது என்னும் உணர்ச்சியுடன் இருப்பது புறப்பற்று. பற்று - பற்றுதல்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...