030. வாய்மை - 06. பொய்யாமை அன்ன





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 30 -- வாய்மை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில்,"ஒருவன் இம்மையில் புகழைப் பெறுதற்குப் பொய்யாமையே காரணம் ஆகும். அதுவே, அவனுக்கு உடம்பு வருந்தா வகையில், மறுமைக்குரிய எல்லா அறங்களையும் தானே கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.

     இல்லறத்திற்குப் பொருளை ஈட்டுவதாலும், துறவறத்திற்கு உண்டி சுருக்குதல் முதலியவற்றாலும் உடம்பு வருந்தும். அவ் வருத்தத்தினை அடையாமல், இல்லறம் துறவறம் ஆகிய இருவகை அறங்களால் ஆன பயனையும், பொய்யாமை ஒன்றே கொடுக்கும் என்பதால், "எய்யாமை எல்லா அறமும் தரும்" என்றார்.  

திருக்குறளைக் காண்போம்...

பொய்யாமை அன்ன புகழ் இல்லை, எய்யாமை
எல்லா அறமும் தரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பொய்யாமை அன்ன புகழ் இல்லை --- ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை.

     எய்யாமை எல்லா அறமும் தரும் --- மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும்.
        
          ('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....

பொய்கடிந்து அறத்தின் வாழ்வார்
         புனல்சடை முடியார்க்கு அன்பர்
மெய்அடி யார்கட்கு ஆன
         பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றும் செய்கை
         மனைஅறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
         பொருள் எனச் சாரும் நீரார். --- பெரியபுராணம்.

இதன் பொருள் ---

     நிலையில்லாத உலகியற் பொருள்களில் பற்று வையாது, நிலையுடைய மெய்ப்பொருளிலேயே பற்று வைத்து வாழ் பவர். கங்கை அமைந்த திருச்சடையை உடைய சிவபெருமானிடத்து அன்புடையவர். உண்மையான அடியவர்களுக்கு உரிய தொண்டு களைச் செய்து வரும் விருப்புடையவர். உலகினரால் போற்றப்பெறும் செயற் பாடுகளையுடைய இல்லறத்தை ஏற்று ஒழுகுபவர். சைவத்தின் உண்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபரம்பொருளைச் சார்ந்து வாழ்வதே வாழ்வெனக் கருதும் தன்மையர்.


வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்...    --- சிலப்பதிகாரம்.

இதன் பதவுரை ---

     வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் --- உண்மைநெறியிற் பிறழாது பிற உயிர்களைப் பேணுவோர்க்கு அடையக் கூடாத அரிய பொருள் சிறிதேனும் உண்டா, (இல்லை என்றபடி)

புகழ் செய்யும் பொய்யா விளக்கம், இகந்து ஒருவர்ப்
பேணாது செய்வது பேதைமை, - காணாக்
குருடனாச் செய்வது மம்மர், - இருள்தீர்ந்த
கண்ணராச் செய்வது கற்பு. --- நான்மணிக் கடிகை.

இதன் பதவுரை ---

     பொய்யா விளக்கம் புகழ் செய்யும் --- பொய்யாமையாகிய ஒளி எங்கும் புகழை உண்டாக்கும்; பேதைமை  இகந்து ஒருவர்ப் பேணாது செய்வது --- அறியாமை என்பது முறை கடந்து, ஒருவரையும் மதியாமல் தீயவை செய்வதாம்; மம்மர் காணா குருடனாச் செய்வது --- கற்றறிவில்லா மயக்கம், வழிகாணாத குருடனாகச் செய்வதாம்; கற்பு இருள் தீர்ந்த கண்ணராச் செய்வது --- கல்வியறிவு குருடு நீங்கிய கண்ணொளி உடையராகச் செய்வதாம்.

         பொய்யாமை புகழையும், அறியாமை தீயவை செய்தலையும், கல்லாமை அறியாமையையும், கல்வியானது அறிவையும் உண்டாக்கும்.

பொய்யான்பொய் மேவான் புலாலுண்ணான் யாவரையும்
வையான் வழிசீத்து வாலடிசில் - நையாதே
ஈத்துண்பா னாகு மிருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்
பாத்துண்பா னேத்துண்பான் பாடு.   --- ஏலாதி.

இதன் பதவுரை ---

     பொய்யான் --- பொய் சொல்லாமலும், பொய் மேவான் --- பிறர் பேசும் பொய்க்கு உடன்படாமலும், புலால் உண்ணான் --- ஊனுண்ணாமலும், யாவரையும் வையான் --- எவரையும் இகழாமல், நையாது --- விருந்தினர் முதலியோர் வருந்தாமல், வழி சீத்து --- வழி திருத்தி, வால் அடிசில் --- தூய்மையான உணவை, ஈத்து உண்பான் --- பகுத்துக்கொடுத்து உண்பவன், இரு கடல் சூழ் --- பெரிய கடலால் சூழப்பட்டுள்ள, மண் அரசு ஆய் --- உலகத்துக்கு அரசனாகி, பாத்து உண்பான் -- ஐவகைப் புலன்களை நுகர்வானும், பாடு ஏத்து உண்பான் --- பெருமையும் புகழும் அடைவானும், ஆகும் --- ஆவான்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...