027. தவம் - 05. வேண்டிய வேண்டியாங்கு





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "மறுமையில் வேண்டும் நலங்களை வேண்டியபடியே பெறுதலால், செய்யத் தகுந்த தவமானது இம்மையிலேயே அறிவு உடையோரால் முயன்று செய்யப்படும்" என்கின்றார் நாயனார்.

     மறுமையில் ஒருவனால் வேண்டப்படும் நலங்களாவன, இந்திரன் முதலிய இமையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழியா வீடும். உயிரானது காமம், வெகுளி, மயக்கங்களில் நீங்கினால் வீடுபேறு வாய்க்கும்.

     மேலான கதியும், அழியாத வீடுபேறும் தவத்தினால் அன்றி வாய்க்கப் பெறாது. "ஔடதம், நோய் இன்மை, பிரம்மவித்தை, கருமானுஷ்டானம், கவர்க்கம் முதலிய பற்பல புண்ணியலோக வாசம் என்னும் இவையெல்லாம் தவத்தினாலேயே சித்திக்கின்றன; ஏனெனில், அவற்றிற்குத் தவமே காரணம்" என்று மனுதரும சாத்திரம் கூறும்.

     தவம் என்பது பலனைக் கருதிச் செய்யும் காமியத் தவம். பலன் கருதாது செய்யும் நிஷ்காமியத் தவம் என்று இருவகைப்படும்.

     காமியத் தவம், சாப அனுக்கிரகத்திற்கு ஏதுவாகும். 

     நிஷ்காமியத் தவம், தத்துவஞானத்திற்கு ஏதுவாகி, அதன் வாயிலாக வீடுபேற்றிற்கு ஏதுவாகும்.

திருக்குறளைக் காண்போம்...

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் --- முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்;

     செய்தவம் ஈண்டு முயலப்படும் --- செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும்.

      ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாரதி என்பார் பாடி அருளிய, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் ஒரு பாடல்...


தள்ளாது சேரரொடு தாம்கயிலைக்கு ஆரூரர்
வெள்ளானை மேல்சென்றார் விண்ஆறாய் - உள்ளமிசை
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

         தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தம் தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரையும் உடன் நினைந்து அழைத்துக்கொண்டு திருக்கயிலைமலைக்குச் சென்றார். ஆகாய வீதியில் அயிராவணம் என்னும் இரண்டாயிரம் தந்தங்களை உடைய வெள்ளை யானையின்மேல் சுந்தரரும், குதிரையின் மேல் சேரமானும் சென்றனர். சேரமானின் குதிரை முன்னே சென்றது. இவற்றிற்கெல்லாம் தவமே காரணம்.

         முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம். ஆதலால், செய்யப்படுவதாகிய தவம் இம்மைக்கண் அறிவுடையோரால் முயலப்படும் என்றார் திருவள்ளுவ நாயனார்.

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரைக் காணக் கொடுங்களூர் வந்து அவரோடு மகிழ்ந்து இருந்தார். ஒருநாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனச்சாலையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலை அடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டுத் ‘தலைக்குத் தலைமாலை’ என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின்றார். அந்நிலையில் அவரது பாசத் தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான், சுந்தரரை அழைத்து வருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி அருளினார். வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலை அடைந்த தேவர்கள் நம்பியாரூரரைப் பணிந்து நின்று "தாங்கள் இவ் வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடன் புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவரது அருளிப்பாடு" என விண்ணப்பம் செய்தார்கள். இந்நிலையில் நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த்தோழராகிய சேரமான்பெருமாளைத் தம் மனதில் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினார்.

          இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர், தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவருளாற்றலால் விரைந்து உணர்ந்த கழற்றறிவாராகிய சேர வேந்தர், பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏறித் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென்றார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணில் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே மந்திர ஒந்தெழுத்தினை உபதேசித்தார். அவ்வளவில் குதிரை வானமீது எழுந்து வன்தொண்டர் ஏறிச்செல்லும் வெள்ளை யானையை வலம்வந்து, அதற்கு முன்னே சென்றது. அப்பொழுது சேரமான் பெருமாளைப் பின்தொடர்ந்து சென்ற படைவீரர்கள், குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரையில் கண்டு பின் காணப்பெறாது வருத்தமுற்றார்கள். தம் வேந்தர் பெருமானைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்ற மனத்திட்பம் உடையராய் உடைவாளினால் தம் உடம்பை வெட்டி வீழ்த்தி வீர யாக்கையைப் பெற்று விசும்பின் மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்து சென்றனர்.

     சேரமான்பெருமாளும் சுந்தரரும் திருக்கயிலாயத்தின் தெற்கு வாயிலை அணுகிக் குதிரையிலிருந்தும் யானையிலிருந்தும் இறங்கி வாயில்கள் பலவற்றையும் கடந்து திருஅணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரமான் பெருமாள் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைப்பட்டு நின்றார். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே போய்ச் சிவபெருமான் திருவடிமுன்னர் பணிந்தெழுந்தார். "கங்கை முடிக்கணிந்த கடவுளே! தங்கள் திருவடிகளை இறைஞ்சுதற் பொருட்டுச் சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்த நிற்கின்றார்" என விண்ணப்பம் செய்தார். சிவபெருமான், பெரிய தேவராகிய நந்தியை அழைத்துச் ‘சேரமானைக் கொணர்க’ எனத் திருவாய்மலர்ந்தருளினார். அவரும் அவ்வாறே சென்று அழைத்து வந்தார்.

    சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு பணிந்து போற்றி நின்றார். இறைவன் புன்முறுவல் செய்து சேரமானை நோக்கி, ‘இங்கு நாம் அழையாதிருக்க, நீ வந்தது எது கருதி’ என வினவியருளினார். அதுகேட்ட சேரவேந்தர் இறைவனைப் பணிந்து “செஞ்சடைக் கடவுளே! அடியேன் இங்கு தெரிவித்து அருளும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. எனது பாசத்தளையை அகற்றுதற் பொருட்டு வன்றொண்டரது தோழமையை அருளிய பெருமானே! மறைகளாலும் முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெரியோனாகிய உன்னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ் நூல் ஒன்றைப் பாடி வந்துள்ளேன். இத்தமிழ் நூலைத் தேவரீர் திருச்செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்’ என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான், "சேரனே! அவ்வுலாவைச் சொல்லுக" எனப் பணித்தருளினார். சேரமான்பெருமாள் நாயனாரும் தாம் பாடிய "திருக்கைலாய ஞான உலா"வைக் கயிலைப் பெருமான் திருமுன்னர் எடுத்துரைத்து அரங்கேற்றினார். சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக்கொண்ட இறைவன், அவரை நோக்கி, "சேரனே! நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடன் கூடி, நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக: எனத் திருவருள் செய்ய, சேரமான்பெருமாள் சிவகணத் தலைவராகவும் கயிலையில் திருத்தொண்டு புரிந்திருப்பாராயினர்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...


வேந்துஅந் தணர்குலத்து மேலா கியதகைமை
ஏந்துதவத்து ஏய்ந்தான், இரங்கேசா! - மாந்தர்க்கு
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! வேந்து --- சத்திரியனாகிய விசுவாமித்திரன், அந்தணர் குலத்துமேல் ஆகிய தகைமை --- பிராமணர் குலத்தினும் சிறந்த தன்மையை, ஏந்து தவத்து --- செய் தவத்தால், ஏய்ந்தான் --- அடைந்தான்,  (ஆகையால், இது) மாந்தர்க்கு --- மனிதர்களுக்கு, வேண்டிய --- வேண்டிய பொருள்களை, வேண்டி ஆங்கு --- வேண்டியபடி, எய்தலால் --- (தவமுயற்சியால்) பொருந்தும் தன்மை உண்டாவதால், செய் தவம் --- செய்யத் தகுவதாகிய தவமானது, ஈண்டு --- இந் நிலவுலகில் (இம்மையில்), முயலப்படும் ---  (தவறாமல்) செய்யப்படவேண்டியது ஆகும் (என்பதை விளக்குகின்றது).

         விளக்கவுரை --- வேந்தனாகிய காதி மைந்தராம் விசிவாமித்திரர் விடாமுயற்சியாகிய தவம் செய்து, வசிஷ்டரைப் போல் வேதிய முனிவராய் விளங்கித் திரிசங்கு மன்னற்கு நட்சத்திர பதவி தந்து, பிரமனைப் போலத் தாமும் பிரதி சிருட்டி செய்து விளங்கி, எழுமுனிவரில் (சப்தரிஷிகள்) ஒருவராய்ப் புகழ் பெற்று ஓங்கினார். இன்னும் இவர் வசிட்டரை எதிர்த்தமையும், அவரால் தோல்வி அடைந்தும் ஓரே பிடிவாதமாய் அகோர தவம் செய்தமையும், இராமபிரானுக்குப் படைக்கலங்கள் உதவி, திருமண முதலிய முடித்தமையும், வசிட்டரைப் போலச் சாதாரண பிரமரிஷியாய் இல்லாமல், பிரமனைப் போலவே படைத்தல் தொழில் செய்தமையும் தவச்சிறப்புக்குச் சான்று பகரும். ஆகையால், மாந்தர்க்கு வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும் என்றார் நாயனார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

பற்றுஇல் அனந்தன் புற்பதத்தனொடு ஆனந்தநடம்
முன்தவத்தால் கண்டான், முருகேசா! - அற்றம்அற
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, பற்று இல் அனந்தன் --- பற்றற்றவனாகிய ஆதிசேடன், புல்பதத்தனொடு --- வியாக்கிரபாத முனிவரோடு, ஆனந்த நடம் --- அம்பலவாணனுடைய இன்பத் திருக்கூத்தை, முன் தவத்தால் கண்டான் --- முன்னே செய்த தவத்தினாலே பார்த்தான். அற்றம் அற --- குறைவில்லாமல், வேண்டிய --- வேண்டியவைகளை யெல்லாம், வேண்டியாங்கு எய்தலால் --- விரும்பியபடியே அடையச் செய்வதால், செய்தவம் --- செய்யவேண்டிய தவத்தை, ஈண்டு முயலப்படும் --- இப்பொழுதே செய்யத் தொடங்குதல் வேண்டும்.

         ஆதிசேடன் வியாக்கிரபாத முனிவனோடு அம்பலவாணன் அனவரதம் புரிந்தருளும் ஆனந்தத் திருக்கூத்தை முன் தவத்தால் கண்டு மகிழ்ந்தான். வேண்டிவைகளை எல்லாம் வேண்டியவாறே அடையச் செய்வித்தலால் செய்ய வேண்டிய தவத்தை இப்பொழுதே செய்யத் தொடங்கவேண்டும் என்பதாம். புல் --- புலி. புல்பதத்தன் --- புலிப்பாதர் என்னும் வியாக்கிரபாதர். (வியாக்கிரம் --- புலி)

                           வியாக்கரபாதர் பதஞ்சலி முனிவர் கதை

         தவமே தனமாகக் கொண்ட மத்தயந்தன முனிவர் என்பார் ஒருவர் இருந்தனர். அவருக்கு அருமையான புத்திரர் ஒருவர் தோன்றினார். அப்புதல்வர் கலைகள் முழுவதும் கற்று உணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிறந்ததோர் இடஞ் சென்று சிவபெருமானை வழிபட வேண்டுமென்று விரும்பினார். புதல்வரது கருமத்தை உணர்ந்த தந்தை, ஈசனை வழிபடுவதற்குச் சிறந்த இடம் தில்லைவனமே என்று அறிவுறுத்த, அப்புதல்வர் தந்தைபால் விடைபெற்று தில்லைவனம் எய்தி, ஒர் அழகிய பொய்கையும், அதன் தென்புறத்தில் ஓர் ஆலமரத்தின் நிழலில் ஒரு சிவலிங்கமும் இருக்கக் கண்டு, அகமிக மகிழ்ந்து,  ஆங்கே ஒரு பர்ணசாலை அமைத்து, அரனாரை வழிபட்டு வந்தனர். நாள் தோறும் ஈசனை அருச்சிப்பதற்குப் பறிக்கும் நறுமலர்களை ஒரு நாள் ஆராய்ந்து பார்க்கையில், அவற்றுள் பழையனவும் பழுதுபட்டனவுமான பல மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தி, “கதிரவன் உதித்த பின் மலர் எடுக்கில், வண்டுகள் வந்து அம் மலர்களை எச்சில் புரிந்து விடுகின்றன; பொழுது புலராமுன் சென்று மலர் பறிப்போமாயின் மரம் அடர்ந்த இக் கானகத்தில் வழியறிதல் முடியாது. மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்கும்; ஆதலால் இதற்கு என் செய்வது?” என மனங்கவன்று இறைவனைத் துதிக்க, உடனே சிவபெருமான் அந்த இளைய முனிவர் எதிரே தோன்ற, முனிமகனார் அரனாரை வணங்கி, “அரவாபரணரே! தேவரீரை வழிபடுதற் பொருட்டு அடியேன் வைகறை எழுந்து சென்று மலர் பறிக்க மரங்களில் வழுக்காமல் ஏறுவதற்கு என் கை கால்களில் வலிய புலி நகங்கள் உண்டாக வேண்டும். வழி தெரிந்து செல்வதற்கும் பழுதற்ற பனிமலரைப் பறிப்பதற்கும் நகங்கள் தோன்றும் கண்களும் உண்டாகவேண்டும்” என்று வரங்கேட்டனர்.

     வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருளும் விடையூர்தி விமலன், அவ்வரத்தை நல்கி மறைந்தருளினர். அன்று முதல் அம்முனிச் சிறுவர்க்கு "வியாக்ரபாதர்" என்று வடமொழியிலும், "புலிக்கால் முனிவர்" என்று தமிழிலும் பெயர்கள் உண்டாயின. பின்னர் அவர் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து புரம் எரித்த புராதனனை ஆராதனை புரிந்து மகிழ்ந்திருந்தனர். புலிக்கால் முனிவர் வழிபட்டதனால் தில்லைமாநகர் புலியூர் என்னும் பெயரும் உடைத்தாயிற்று.

         வியாக்ரபாதர் இங்ஙனம் இருக்க இவர் தந்தையார் மந்தியந்தன முனிவர் இவர் பால் வந்து இவருக்குத் திருமண முடிக்க வேண்டுமென்னும் தமது கருத்தைத் தெரிவிக்க, புதல்வரும் இசைய, வசிட்ட முனிவரது தங்கையாரை மணம்பேசி புலிப்பாதருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினர். அன்னார் செய்த அருந்தவப் பலனாய் உபமன்யு என்னும் அருமந்த புத்திரன் தோன்றினன். அக் குழவியை அருந்ததி தமது இருக்கைக்குக் கொண்டுபோய் காமதேனுவின் பால் தந்து வளர்த்தனள். பின்னர் மகவின் விருப்பத்தால் தாய் தந்தையர் மகனைத் தமது இருப்பிடங் கொண்டு வந்தனர். அம்மகவு பாலுக்கு அழ, மாவு கரைத்த நீரைக் கொடுத்தனள். அம்மகவு அதனை உண்ணாது கதறியழ, தாய் தந்தையர் வருந்தி சிவ சந்நிதியிற் பிள்ளையைக் கிடத்தினர். அக்குழந்தை சிவலிங்கப் பெருமான்பால் பால் வேண்டியழ, அடியவர்க்கருளும் அண்ணல் அருள் சுரந்து இனிய பாற்கடலையே உணவாக, பால் நினைந்தழும் போதெல்லாம் நல்கினர்.

         துன்பம் நீங்கி சிவயோக இன்பத்தில் வியாக்கிரபாதர் நிலைத்திருக்குங்கால், இறைவன் தேவதாரு வனத்தில் இருடிகள் பொருட்டு நிகழ்த்திய ஆனந்த நடனத்தின் வரலாறு தமது அகக் கண்களுக்கு வந்து தோன்ற, ஐயன் அருள் நடனம் புரியுங்கால் அத்தேவதாரு வனத்தில் அடியேன் இருக்கப் பெறாமல் இவ்விடத்தில் இருக்கப் பெற்றனனே! ஆண்டவனது திருவருள் நடனத்தை யான் காணுமாறு எவ்விதம்? என்று மிகவும் உள்ளங் கசிந்து உருகி நிற்ப, "இத் தில்லையே இந்நிலவுலகதித்திற்கு நடுநாடியாய் இருத்ததால் இதன் கண்ணே தான் ஆண்டவன் என்றும் ஐந்தொழிற் கூத்து நிகழ்த்துவன், ஆதலால் இத்தில்லைத் தலத்தின்கண் யான் புறத்தேயும், அத்திரு நடனத்தைக் காணப் பெறுவேன்” என்று தவக் காட்சியால் உணர்ந்து அவ்விடத்திலேயே வழிபாடு புரிந்து கொண்டிருந்தார்.

         தேவதாரு வனத்தின் கண்ணிருந்த நாற்பத்தெண்ணாயிரம் முனிவரரும் மீமாஞ்சை நூல் கோட்பாட்டின்படி கன்மமே பலனை நல்கும்; பலனை நல்குவதற்கு இறைவன் வேறு ஒருவன் வேண்டுவதில்லை என்பவை முதலிய கொள்கைகளை உடையாராய் நிற்ப, அன்னார் செருக்கை அகற்றி நல்வழி தருமாறு திருவுளங் கொண்டு சிவபெருமான் திருமாலோடு அவ்வனத்தில் சென்று அம்முனிவரது தவத்தையும் அவர் மனைவியரது கற்பையும் அழித்தனர். முனிவர் தெளிந்து புலி, யானை, பாம்பு, மழு முதலியவைகளை சிவன்மேல் ஏவ, அவைகளை ஆபரணமாகவும் ஆடையாகவும் கொண்டார். முயலகனையும் பல மந்திரங்களையும் ஏவ மந்திரங்களைச் சிலம்புகளாக அணிந்து முயலகன் மீது பயங்கர நடனத்தைப் புரிந்தனர். அரனாரது கொடுங்கூத்தைக் கண்ட முனிவரரும் தேவரும் அஞ்சி அபயம் புக, இறைவன் அக்கொடிய நடனத்தை மாற்றி ஆனந்தத் தாண்டவம் செய்தனர். முனிவரரது ஆணவ வலிகளெல்லாம் தம் திருவடிக் கீழ் கிடக்கும் முயலகன்பால் வந்தொடுங்க அருள் செய்து மறைந்தனர்.

         பின்னர் நாராயணர் தம் இருக்கை சேர்ந்து இறைவன் செய்தருளிய ஆனந்தக் கூத்தை நினைந்து பெருங்களிப்பால் கண் துயிலாதிருந்து, தமது அணையான ஆதிசேடர்க்கு அத் திருநடனத்தின் திறத்தை விளம்ப, ஆதிசேடர் அதனைக் கேட்டு இறைவன் திருநடனத்தைக் காணும் விழைவு மேற்பட்டு கண்ணீர் ததும்பி நிற்க, அதுகண்ட மதுசூதனர் “நீர் இறைவனுக்கு அன்பராய் இன்மையின் இனி நீர் தவம் புரிதலே இயல்பு” என்று விடை தந்தனுப்ப, ஆதிசேடர் கயிலைமலைச் சார்ந்து அம்மலைக்கு அருகில் சிவபெருமானை நினைத்துப் பெருந்தவம் ஆற்றினர். அவர் முன் முக்கண் மூர்த்தி தோன்றி, “அன்பனே! யாம் தேவதாரு வனத்தின் கண் திருநடனம் புரிகையில் அவ்விடம் நிலத்திற்கு நடு அன்மையின் அஃது அசைந்தது. ஆதலால் அருட் கூத்தை ஆங்கு இயற்றாது விடுத்தோம். இப்போது இங்கு அதனை இயற்றுதற்கும் இது தக்க இடமன்று. அதனைச் செய்தற்குரிய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் ஆனந்த நடனம் என்றும் நடைபெறா நிற்கும். அஃது ஏனெனில் உடம்பும் உலகமும் அமைப்பில் ஒப்பனவாம். உடம்பினுள்ளோடும் இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி உடம்பின் நடுவிலோடும். அங்ஙனமே இந்நிலத்திற்குச் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே ஓடும். உடம்பின்கண் அந் நடு நாடியின் நடுவே விளங்கும் இதயத் தாமரையினுள் ஞான ஆகாசத்திலே யாம் ஓவாது அருள் நடனம் புரிவது போலவே, புறத்தே தில்லைத்தலத்தில் சிவலிங்கத்திற்குத் தெற்கேயுள்ள அருள் அம்பலத்தின் கண் என்றும் இடையறாது திருநடனம் இயற்றுவோம். அதனை அங்கே காணும் ஞானக்கண்ணுடையார் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவர். ஆதலால், நீ இவ்வுருவை ஒழித்து, அத்திரி முனிவர் மனைவியிடத்தே முன்னொருகால் ஐந்தலைச் சிறு பாம்பாய் வந்தனை அல்லவா? அவ்வுருவத்தினையே எடுத்து தில்லைத் தலத்தின்கண் சென்று இருப்பாயாக. அங்கு நின்னைப்போல் திருநடன தரிசனம் காண விழைந்து தவமியற்றும் வியாக்ரபாத முனிவனுக்கும், நினக்கும் தைப்பூசத்தன்று சிற்சபையில் திருநடனத்தைக் காட்டி யருள்வோம்” என்று உரைத்து மறைந்தருளினர். பதஞ்சலியார் இறைவன் திருமொழிப்படியே தில்லவனம் சேர்ந்து புலிப்பாதருடன் அளவளாவி அருந்தவம் இயற்றி நின்றனர். குன்றவில்லியாகிய சிவபரம்பொருள், தில்லை அம்பலத்தில், அவ்விரு முனிவரருக்கும் குறித்த நாளில் திருநடனம் புரிந்தருளினர்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

ஆடும் பரிசேவல் ஆனான் அடல்சூரன்
தேடும் தவத்தால், சிவசிவா! - நாடுங்கால்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

     சூரபதுமன் தான் செய்த தவப்பேற்றால் முருகப் பெருமானுக்கு,  மயில் ஊர்தியாகவும், சேவல் கொடியாகவும் விளங்கினான்.

கடல் நடுவில் சூரபதுமனை மாய்த்து
மயிலும் சேவலும் ஆக்கி,
முருகப் பெருமான் ஆட்கொண்ட வரலாறு.

    முருகப் பெருமானுடைய விசுவரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன்.  ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு, வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான்.  அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

நண்ணினர்க்கு இனியாய் ஓலம்,
         ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம்,
         பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம்,
         யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதல் பெருமான் நல்கும்
         கடவுளே ஓலம் ஓலம்.          ---  கந்தபுராணம்.


தேவர்கள் தேவே ஓலம்,
         சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம்,
         வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம்,        
         பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற
         மூர்த்தியே ஓலம், ஓலம்.        ---  கந்தபுராணம்.


    "எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம், ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.

ஏய் என முருகன் தொட்ட
         இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும்
         அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீஅழல் சிகழி கான்று
         சென்றிட அவுணன் கொண்ட
மாஇருள் உருவம் முற்றும்
         வல்விரைந்து அகன்றது அன்றே.   --- கந்தபுராணம்.

    அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவண் ஒளித்தனன். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்....  ---  வேல் வகுப்பு.

    சூரபன்மன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெருமரமாகி நின்று, மண்ணும் விண்ணும் நிழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது அன்றே. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வானகங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

புங்கவர் வழுத்திச் சிந்தும்
         பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி,
         அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு,
         கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை
         எய்திவீற்று இருந்ததுஅன்றே.    ---  கந்தபுராணம்.

    சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவிலன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.

தாவடி நெடுவேல் மீளத்
         தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு
         மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி
         சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி
         அமர்த்தொழில் கருதி வந்தான். ---  கந்தபுராணம்.

    அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும், எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான்.  என்னே அவனது தவத்தின் பெருமை! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையை அளக்க வல்லார் யாவர்?  ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.

மருள்கெழு புள்ளே போல
         வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த
         ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி
         நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன்
         ஆகிய இயற்கை யேபோல்.          ---  கந்தபுராணம்.

தீயவை புரிந்தா ரேனும்
         முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத்
         தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ,
         அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ
         வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.   ---  கந்தபுராணம்.

.........         ........          ........ சகம்உடுத்த
வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்
அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்
சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே!
                                    ---  கந்தர் கலிவெண்பா.

    பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க....

தக்கணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.              --- ஆசாரக்கோவை.

இதன் பதவுரை ---

     தக்கணை --- ஆசியர்க்குத் தட்சணை கொடுத்தலும், வேள்வி --- யாகம் பண்ணுதலும், தவம் --- தவஞ்செய்தலும். கல்வி - கல்வியும், இந்நான்கும் --- என இந்நான்கினையும். முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க --- மனம், மொழி, மெய் என்னும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு காத்துச் செய்து வருக, உய்க்காக்கால் --- ஒருநெறியிற் செலுத்தாவிடின், எப்பாலும் --- எவ்வுலகத்தின் கண்ணும், ஆகா கெடும் --- பயனாகாவாய்க் கெடும்.

         குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந்நான்கினையும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு பாதுகாத்துச் செய்துவருக. மாறுபடுமாயின் எவ்வுலகத்தின்கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும்.


ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்
வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா,
தேற்றார் சிறியர் எனல்வேண்டா, நோற்றார்க்குச்
சோற்று உள்ளும் வீழும் கறி.        --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும் --- எல்லாச் செல்வங்களையும் தரவல்ல தகுதியை உடைய அரசுகளை அடைந்தவர்களுக்கே யானாலும், வீற்று வழியல்லால் --- நல்வினைப் பயன் உள்ளவழி அல்லது, வேண்டினும் கைகூடா --- விரும்பி முயன்றாலும் கருதிய செல்வம் கைகூடுதல் இல்லை. (ஆதலால்), தேற்றார் சிறியர் எனல் வேண்டா --- அறிவு இல்லாதவர்கள் அதனைப் படைத்தல் முதலிய ஆற்றல் இலராகலின் செல்வத்தால் சிறியர் என்று கருதவேண்டா; நோற்றார்க்கு --- தவம் செய்தார்க்கு, சோற்றுள்ளும் கறி வீழும் --- சோற்றினுள்ளேயும் கறி தானே வந்து விழும்அவர் தவவலிமையால்.

         'நோற்றார்க்கு - வீழுங் கறி' என்றது தவம் செய்வார் சோறு உண்பார், கறி உண்பார் என்பன கருத்தன்றி ஊழினுடைய வலிமையை உணர்த்தும் பொருட்டுத் தவம் செய்வார் ஆற்றலைக் கூறியவாறாம். நோன்றல் - பொறுத்தல். தம்முயிர்க்கு வரும் பசி முதலியனவற்றைப் பொறுத்தலின் தவம் செய்வார் நோற்றார் எனப்பட்டார். நோற்றார்க்குத் தவ வலிமையால் கறி உளவாதல்போல, அறிவிலார்க்கும் ஊழ் வலியான் செல்வமுண்டாம்.


முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போ
டிகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?
முதலிலார்க் கூதிய மில்.       ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     முன் --- முற்பிறப்பின்கண், பெரிய நல்வினை --- மிகுந்த நன்மை பயக்கும் அறங்களை, முட்டு இன்றி --- தடையில்லாது, செய்யாதார் --- செய்யாதவர்கள், பின் --- பிற்பிறப்பின் கண், பெரிய செல்வம் பெறலாமோ --- மிகுந்த செல்வத்தைப் பெறக்கூடுமோ?, வைப்போடு --- பிறர் வைத்திருக்கின்ற செல்வத்தோடு, இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் --- மாறுபட்டுப் பொருளினைச் செய்வோம் என்று நினைத்தால், என் ஆம் --- எங்ஙனம் முடியும், முதல் இல்லார்க்கு --- வைத்ததொரு முதற்பொருள் இல்லாதவர்களுக்கு, ஊதியம் இல் --- (அதனால் வரும்) பயன் இல்லையாதலால்.

         முன் செய்த நல்வினையில்லார் முயன்றாலும் பொன்னைப் பெற முடியாதாம். பொருள் மேலுள்ள விருப்பத்தால் அவரைப் போன்று நாமும் செய்வோமென்று முயன்றாலும், கைகூடுதலில்லை. முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லையானாற் போல முற்பிறப்பின்கண் செய்த நல்வினையிலார்க்குச் செல்வம் இல்லையாகும்.


தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
                  --- கம்பராமாயணம், அரசியல் படலம்.

இதன் பதவுரை ---

     அன்னான் --- மன்னர் மன்னனான அத் தயரதன்;  எவர்க்கும்
--- தனது ஆட்சிக்கு அடங்கிய குடிமக்கள் எவர்க்கும்;   அன்பின் தாய் ஒக்கும் --- அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்;   நலம் பயப்பின் தவம் ஒக்கும் --- நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவனாவான்;  முன் நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான் --- தாய் தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று. இறுதிச் சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால்;  சேய் ஒக்கும் --- அவர்கள் பெற்ற மகனை ஒத்திருப்பான்;   நோய் ஒக்கும் என்னின் --- குடிமக்களுக்கு  நோய் வருமாயின்;  மருந்து ஒக்கும் --- அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவனுமாவான்; நுணங்கு கேள்வி ஆயப் புகுந்தால் --- நுணுக்கமான கல்வித் துறைகளை ஆராயப்புகும் போது;  அறிவு ஒக்கும் --- நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.

     தாயன்பு சிறந்தது. தாயினும் சாலப்பரிந்து  என.  இறையன்புக்கே தாயன்பை உவமையாக கூறினர் மணிவாசகனார். தனது  குடிமக்களிடம் தாய் போல் அன்புடையவன். நன்மை புரிவதில் தவம் போன்றவன்; நற்கதியடையச் செய்வதில் சேய் போன்றவன்;   நோயுறும் காலை, அதைப் போக்கும் மருந்து போன்றவன்;  ஆராய்ச்சிக்கு உதவும் அறிவு போன்றவன் என்றெல்லாம் தயரதனுடைய பண்பைச் சிறப்பித்துக் கூறுகிறார். குருகுமாரனான சிரவணனுடைய பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து, அவர்களைச் செல்கதி  உய்த்த செயல் இவனது. சேயொக்கும் என்பது சிறப்பாகப் பொருந்துவதொன்று தானே!


வேண்டின வேண்டினர்க்கு
     அளிக்கும் மெய்த்தவம்
பூண்டுளர் ஆயினும்,
     பொறையின் ஆற்றலால்,
மூண்டு எழு வெகுளியை
     முதலின் நீக்கினார்;
ஆண்டு உறை அரக்கரால்
     அலைப்புண்டார் அரோ.        
              ---  கம்பராமாயணம், அகத்தியப் படலம்.

இதன் பதவுரை ---

     வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம் பூண்டுளர் ஆயினும் --- விரும்பிச் செய்தவர்க்கு அவர்கள் விரும்பியவற்றை விரும்பிய வண்ணமே தரும் நற்றவம் மேற்கொண்டுள்ளவர் ஆனாலும்; பொறையின் ஆற்றலால் --- பொறுமை என்னும் வலிமையால்; மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் --- மேன்மேல்மிக்கு வரும் சினத்தை வேரொடு களைந்தார்கள். (ஆதலால்); ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார் --- அக்காட்டில் தங்கியிருந்து இராக்கதர்களால் வருத்தமுற்றார்.

     இதனால் நிறை மொழி மாந்தராம் அம்முனிவர்கள் தம் தவ வலிமையால் அவ்வரக்கரைச் சினந்து சபித்து அழிக்காது இருத்தற்குக் காரணம் கூறப்பெற்றது. கூடா ஒழுக்கமாகிய பொய்த் தவத்திலிருந்து நீக்குதற்கு 'மெய்த்தவம்' என்றார். தவத்தின் பயன் எய்த முதலில் சினத்தை நீக்கிப் பின் பொறுமையைப் பெற வேண்டும் என்பதாம். பொறை - காரணம் பற்றியோ, மடமை பற்றியோ ஒருவன் தமக்கு மிகை செய்த போது தாம் அதனை அவன் இடத்துச் செய்யாதுபொறுத்தல் ஆகும். தவத்தின் ஆற்றல் வேண்டிய வேண்டியாங்கு எய்தலாம்.


சொன்னான் நிருதர்க்கு இறை;
     அம் மொழி சொல்லலோடும்;
அந் நாளில் நிரம்பிய அம் மதி,
     ஆண்டு ஓர் வேலை
முந் நாளின் இளம் பிறை
     ஆகி முளைத்ததுஎன்றால்,
எந் நாளும் அருந் தவம் அன்றி,
     இயற்றல் ஆமோ?
              ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப்படலம்.

இதன் பதவுரை ---

     நிருதர்க்கு இறை-- - அரக்கரின் தலைவனாகிய இராவணன்; சொன்னான் --- மேற் கூறியவாறு கட்டளையிட்டான்; அம்மொழி சொல்லலோடும் --- அக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும்; அந்நாளில் நிரம்பிய அம்மதி --- அன்று முழுநிலவாய்த் திகழ்ந்த அச் சந்திரன்; ஆண்டு --- அவ்விடத்தில்; ஓர் வேலை --- ஒரு புறத்தில்; முந்நாளின் --- மூன்றாம் நாளின்; இளம்பிறை ஆகி --- கீற்று நிலவாக; முளைத்தது என்றால் --- உதித்தது எனில்; எந்நாளும் --- எக்காலத்திலும்; அருந்தவம் அன்றி --- அரிய நற்றவம் செய்திருந்தால் அல்லாமல்; இயற்றல் ஆமோ? --- இத்தகு அருஞ்செயல் நிகழ்த்துவது சாத்தியம் ஆகுமா? (ஆகாது).

     முந்நாள் இளம்பிறை - மூன்றாம் பிறைச்சந்திரன். 'வேண்டிய வேண்டியாங்கு எய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும்' (திருக்குறள் 265) என்னும் கருத்து ஒப்பிடத்தக்கது.

கூட்டம்உற்று இருந்த வீரர்,
     குறித்தது ஓர் பொருட்கு முன்நாள்
ஈட்டியதவமும், பின்னர்
     முயற்சியும் இயைந்தது ஒத்தார்;
மீட்டும், வாள் அரக்கர் என்னும்
     தீவினை வேரின் வாங்க,
கேட்டு உணர் கல்வியோடு
     ஞானமும் கிடைத்தது ஒத்தார்.
                  ---  கம்பராமாயணம், நட்புகோள் படலம்.

இதன் பதவுரை ---

     கூட்டம் உற்று இருந்த வீரர் --- நட்பாய் ஒன்றிக் கூடியிருந்த இராம சுக்கிரீவர்; குறித்தது ஓர் பொருட்கு --- குறிப்பிட்டு நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு; முன்நாள் ஈட்டிய தவமும் --- முற் பிறப்பில் செய்து தேடிக் கொண்ட தவமும்; பின்னர் முயற்சியும் --- பின்பு (இப்பிறப்பில் தவப்பயனை அடைய) எடுத்துக் கொள்ளும் முயற்சியும்; இயைந்தது ஒத்தார் --- ஒன்று சேர்ந்ததை ஒப்பவர் ஆனார்; மீட்டும் --- மேலும்; வாள் அரக்கர் என்னும் தீவினை --- கொடிய அரக்கர்கள் என்னும் தீவினையை; வேரின் வாங்க --- வேரோடு அழிக்க; கேட்டு உணர் கல்வியோடு --- ஆசிரியர்பால் கேட்டு அறிந்த கல்வியோடு; ஞானமும் --- தத்துவ ஞானமும்; கிடைத்தது ஒத்தார் --- வந்து கூடியதை ஒத்தவரானார்.

     இராமனும் சுக்கிரீவனும் சேர்ந்திருந்த தோற்றத்திற்கு அழகிய இரண்டு கருத்துவமைகள் இப்பாடலில் உள்ளன.  குறித்த பொருளை அடைவதற்கு முன்னர்ச் செய்த தவமும், இப்பொழுது மேற்கொள்ளும் முயற்சியும் ஒன்று கூடிப் பயன் தருவது போலவும், கல்வியும் ஞானமும் கூடிய வழித் தீவினை ஒழிதல் போலவும் இராம சுக்கிரீவர் நட்பால் அரக்கர் அழிவு நடைபெறும் என்பது கருத்தாகும். 'ஆகூழால் தோன்றும் அசைவின்மை'.  (குறள் - 371) என்பதால் 'ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும்' என அமைத்தார். பல்காலும் கேட்டு அறிய வேண்டுதலின் 'கேட்டு உணர் கல்வி' என்றார்.

     'தவமும் முயற்சியும்' முறையே அனகனுக்கும் அரியின் வேந்தனுக்கும் நேர் நிரல்நிறையாகவும், ''கல்வியும் ஞானமும்'' என்பதனை எதிர்நிரல் நிறையாகவும் கொள்க.                                                                       

    
மரம்அடங்கலும் கற்பகம்; மனைஎலாம் கனகம்;
அர மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு; அமரர்
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர்; ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது; தவம் செய்த தவமால்.
                          --- கம்பராமாயணம், ஊர்தேடு படலம்.

இதன் பதவுரை ---

     மரம் அடங்கலும் --- (இலங்கையில்) எல்லா மரங்களும்; கற்பகம் --- கற்பக மரங்கள்; மனை எலாம் --- எல்லா வீடுகளும்; கனகம் --- பொன்னால் கட்டப்பட்டவை; அரக்கியர்க்கு --- அரக்கப் பெண்களுக்கு; சிலதியர் அர மடந்தையர் --- தொண்டு புரிபவர் தேவமகளிர்; (அரக்கர்களுக்கு) அமரர்- தேவர்கள்; உரம் மடங்கி வந்து --- வலிமை ஒடுங்கி (அரக்கர் வீட்டுக்கு )வந்து; உழையராய் உழல்குவர் --- பணியாளராய் வருந்துபவர்கள்; இது --- இந்தச் சிறப்புகள்; ஒருவர் தரம் அடங்குவது அன்று --- ஒருவனுடைய தகுதியால் வந்து சேர்வது அன்று; தவம் செய்த --- தவங்கள் எல்லாம் கூடிச் செய்த; தவமால் --- தவத்தின் பயனாகும்.

     தரம் --- தகுதி. ஒருவர் தகுதியால் பெற்ற சிறப்புகள் அளவுபட்டிருக்கும். இது அளவு கடந்திருத்தலின் தவத்தின் பயன் என்று கூறப்பெற்றது.

     தவம் செய்ததவம் --- நல்வினைகளால் உண்டான தவம். "தவமும் தவம் உடையார்க்கு ஆகும்". என்னும் குறளுக்கு மணக்குடவர் தவம் செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும் என்று கூறினார்.

பண்ணிய தவத்தால் அன்றி யாதானும்
     படுபொருள் பிறிதிலை, தவமும்
புண்ணிய தலத்தின் அல்லது பலியா,
     புண்ணிய தலத்தினும் விழுப்பம்
நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின்
     நல்கும், அச் சிவதலங் களினும்
எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின்
     அருந்தவம் எளிதுடன் பயக்கும்.
                                    ---  தி.வி. புராணம்.

இதன் பதவுரை ---

     பண்ணிய தவத்தால் அன்றி --- செய்த தவத்தினாலல்லாமல், பிறிது யாதானும் படுபொருள் இலை --- வேறு யாதொன்றினாலும் கைகூடும் பொருள் இல்லை; தவமும் புண்ணிய தலத்தின் அல்லது பலியா --- அத்தவங்களும் புண்ணியப் பதிகளினன்றிச் சித்திக்க மாட்டா; புண்ணிய தலத்தினும் விழுப்பம் நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் --- அந்தப் புண்ணியப் பதிகளினும் சிறப்புப் பொருந்திய சிவத் தலங்களிற் செய்தால் (எளிதிற்) பயனளிக்கும்; அச் சிவத் தலங்களினும் --- அந்தச் சைவ தலங்களினும், எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் --- மதிக்கப்பெற்ற சிறந்த சிவத்தலத்தில் செய்தால், இருந்தவம் எளிது. உடன் பயக்கும் --- அப்பெரிய தவங்கள் எளிதாக விரைந்து பயனளிக்கும்.

"வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம்
ஈண்டு முயலப் படும்"                   (திருக்குறள் - 265)

என்னும் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது. தலத்தினுள்ளும்
தலங்களினுள்ளும் என உள்ளுருபு விரிக்க. எண்ணிய - ஆன்றோரால் எண்ணப்பட்ட. அதிக தலம் --- விசேடத்தலம்.

ஆற்றலை உளது மாதவம் அது அன்றியே
வீற்றும் ஒன்று உளது என விளம்பல் ஆகுமோ?
சாற்ற அரும் சிவகதி தனையும் நல்குமால்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால்.     

அத்தவம் பிறவியை அகற்றி, மேதகு
முத்தியை நல்கியே முதன்மை ஆக்குறும்,
இத்துணை அன்றியே இம்மை இன்பமும்
உய்த்திடும் உளந்தனில் உன்னும் தன்மையே.    

ஆதலில் பற்பகல் அருமையால் புரி
மாதவம் இம்மையும் மறுமையும் தரும்
ஏது அது ஆகும் அல் இருமையும் பெறல்
ஆதி அம் பகவனது அருளின் வண்ணமே.   

ஒருமை கொள் மாதவம் உழந்து பின் முறை
அருமை கொள் வீடு பேறு அடைந்து உளோர் சிலர்
திருமை கொள் இன்பினில் சேர்கின்றோர் சிலர்
இருமையும் ஒருவரே எய்தினோர் சிலர்.     
    
என வரும் பாடல்களைக் கந்தபுராணம், காசிபன் உபதேசப் படலத்தில் காண்க.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...