036. மெய் உணர்தல் - 01. பொருள் அல்லவற்றை







திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 36 -- மெய் உணர்தல்

     மெய்யுணர்தலாவது, பிறப்பினால் உண்டாகும் துன்பக் கூறுபாடுகளையும், வீடு பேற்றினால் உண்டாகும் இன்பக் கூறுபாடுகளையும், பிறப்பிற்குக் காரணம் ஆன அஞ்ஞானம், வீட்டிற்குக் காரணம் ஆன மெய்ஞ்ஞானம், ஆகியவற்றில் உண்டாகும் ஐயம் திரிபு ஆகியவற்றைக் களைந்து உண்மையாக உணர்ந்து அறிதல்.

     இது, பற்று அற்றான் ஆகிய இறைவன் அருளிய முத்திநெறியைப் பற்றி ஒழுகிய இடத்து உண்டாவதால், துறவு என்னும் அகிதாரத்தின் பின்னர் வைக்கப்பட்டது.

     ஐய உணர்வாவது, கயிறோ பாம்போ என்று தெளியாத நிலை.

     திரிபு ஆவது, கயிறைக் கண்டபோது பாம்பாகவும், பாம்பைக் கண்டபோது கயிறாகவும் திரித்து உணர்தல்.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "நிலையில்லாத பொருள்களை நிலையானவை என்று அறிகின்ற திரிபு (விபரீத) அறிவால், மாட்சிமை இல்லாத பிறப்பு உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

     உண்மைப் பொருள் அல்லாதவற்றை உண்மைப் பொருள் என்று உணர்கின்ற மயக்க அறிவினால், எக்காலத்தும் இன்பம் இல்லாது, துன்பத்தையே உண்டுபண்ணும் பிறப்பானது உண்டாகின்றது. ஏனெனில், பொய்ப் பொருளை, மெய்ப்பொருள் என்று உணரும் விபரீதத்தால், அவ்விபரீத உணர்வு பிறப்பினைத் தருகின்றது. அது எப்படி என்றால், சில மயக்க நூல்கள் (உலக நூல்கள்) இருவினைப் பயன் இல்லை என்றும், மறுபிறப்பு இல்லை என்றும், கடவுள் இல்லை என்றும் கூறுகின்றன. ஆதலால், அவ்வித மயக்க நூல்களை, மெய்ம்மையைக் கூறும் நூல்கள் எனத் துணிந்து, அவற்றில் கூறிய வழியில் ஒழுகுவது விபரீதம் ஆகின்றது. அல்லாதும், மரக்கட்டையை இருளில் கண்ட ஒருவன், அதை மகன் என்று மயங்குவது போலவும், கிளிஞ்சலை வெள்ளி என்று மயங்குவது போலவும், ஒரு பொருளை மற்றோரு பொருளாகத் துணிந்து அறிவுது மயக்க அறிவாகும். இந்த விபரீத ஞானம் என்பது, மருள், மயக்கம், அஞ்ஞானம் என்னும் சொற்களாலும் வழங்கப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம், மாணாப் பிறப்பு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் --- மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்,

     மாணாப் பிறப்பு --- இன்பம் இல்லாத பிறப்பு.

         (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)

     பின் வரும் பாடல்கள், இத் திருக்குறளின் கருத்தைத் தெறிவாக்கும்.


பொள்ளல் இவ் உடலைப்பொருள் என்று,
         பொருளும் சுற்றமும் போகமும் ஆகி,
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
         வாராமே தவிர்க்கும் விதியானை,
வள்ளல் எம் தமக்கே துணை என்று
         நாள் நாளும் அமரர் தொழுது ஏத்தும்
அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி
         ஆரூரானை மறக்கலும் ஆமே.       --- சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

     எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு , செல்வமும் , படைகளும் , இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற , நன்னெறியாய் உள்ளவனாகிய , தேவர்கள் நாள்தோறும் , ` வள்ளல் ` என்றும் , ` எங்களுக்குத் துணை ` என்றும் சொல்லித் துதிக்கின்ற , சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணை யிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

         குறிப்புரை : ` பொள்ளல் உடல்` என்றது, அதன் நிலையாமையை உணர்த்தியவாறு. பொருளாய் நிற்பவர், மக்கள்; அது,` தம் பொருள் என்பதம் மக்கள்` ( குறள் - 63.) என்றதனானும் அறிக. `சுற்றம்` என்றது, ` சுற்றி நிற்கும் படை` எனப் பொருள் தந்தது; படை போல்பவர் கிளைஞரும், நண்பரும். அவர் படைபோன்று உதவுதல் வெளிப்படை. போகமாய் நிற்பவர் மாதர், இவர் எல்லோரும் தாமே தாங்குவார் போன்று நின்று தம்மிடத்தே பிணித்துக்கொள்ள முயலுதலின், அவர் செய்வன மயக்கமாயின. அவர் பற்றுவது உடலையே யாதலின்,' உடலைப் பொருளென்று செய்வன` என்றார்.


அரு மணிச் சாளரம் அதனின் ஊடு புக்கு
எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும்,
மருளொடு தெருளுறும் நிலையர், மங்கையர்-
தெருளுற மெய்ப் பொருள் தெரிந்திலாரினே.
                                         ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.

இதன் பதவுரை ---

     அரு மணிச் சாளரம் --- அரிய மாணிக்கங்கள் பதித்த சன்னலில்; அதனின் ஊடு புக்கு --- அங்கே உட்புகுந்து வந்து; எரிகதிர் --- வெப்பம் மிக்க சூரியன்; இன்துயில் எழுப்ப எய்தவும் --- தங்கள் இனிய உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வந்து சேர்ந்த பின்னும்; மங்கையர் --- அரக்கர் குலப் பெண்கள்; தெருள் உற மெய்ப் பொருள் தெரிந்திலாரின் --- தெளிவு தரும்படி உயர்ந்த உண்மைப் பொருளை அறியாத பேதையர் போன்று; மருளொடு --- மயக்கமும்; தெருளுறும் நிலையர் --- தெளிவும் கலந்த குழப்ப நிலையினராக விளங்கினர்.

    இரவு சென்றதை நம்பமுடியாத நிலையால் ஏற்பட்ட குழப்பம், ஞானமில்லாதார் உலக வாழ்வின் உண்மையறியாத குழப்பத்தோடு ஒப்பிடப்படுகின்றது.


பொய் எனப் போகு மாதர்
     போகமும் பொருளும் மற்றும்
மெய் எனக் கருதி வேத
     விதி தபப் பலவுஞ் செய்தீர்
மைஅவிர் மிடற்று எம் அண்ணல்
     மறைவழி ஏதும் இல்லீர்
நைய ஈண்டு அணைந்தீர் பல்நாள்
     நரகினுக்கு இரையும் ஆனீர்.  --- கந்தபுராணம், அகத்தியன் அருள்பெறு படலம்.

இதன் பொருள் ---

     பொய்யே என்று கூறும்படி இல்லையாய்ப் போகின்ற மகளிரின்பமும், அதற்கேதுவான பொன் முதலிய பொருளும் இன்னோரன்ன பிறவுமே உண்மையான உறுதிப் பொருள் என்று கருதிக் கொண்டு, வேதாகம விதியினின்றும் விலகி, பலப்பல தீவினைகளையும் அஞ்சாது செய்தொழிந்தீர். கருமை விளங்கும் மிடற்றினையுடைய எமது இறைவனாகிய சிவபெருமான் ஓதிய வேத நெறிப்படி ஒருசிறிதும் ஒழுகி அறியீர், அந்தோ! வருந்துதற்கே இந்நரகத்தை எய்தியுள்ளீர்! பற்பல காலமெல்லாம் இத் தீநரகினுக்கு நீவிர் இரையாகிவிட்டீர்!


 கோட்டு இபம், இவுளி, பொன்தேர்,
     கொழுநிதி, மனைவி, மைந்தர்,
 ஈட்டிய பொருள்கள் எங்கே?
     எங்ஙனம் இகந்து போந்தீர்?
 ஓட்டை நெஞ்சு உடையீர் ஒன்றும்
     உடன்வரக் காணீர், வாளா
 நாட்டு உளார்க்கு அவற்றை ஈட்டி,
     நரகபு எலாம் ஈட்டிக் கொண்டீர். 
                                  --- கந்தபுராணம், அகத்தியன் அருள்பெறு படலம்.

இதன் பொருள் ---

     நுமது கொம்புடைய யானை எங்கே! குதிரை எங்கே! பொன்னால் செய்த தேர் எங்கே! கொழுவிய நுமது பொன் முதலிய பொருட்குவை எங்கே! நும் மனைவி மக்கள் எங்கே! நீயிர் தேடிய பிறர் பொருள்கள் எங்கே! அவற்றையெல்லாம் எங்கே போகட்டு வந்துள்ளீர்! ஓட்டை நெஞ்சுடையீரே! அவற்றுள் ஒன்றேனும் நும் பின்னர் வரக் கண்டிலீரே! வீணே அவற்றை எல்லாம் தீவினை பலசெய்து நாட்டிலுள்ள ஏதிலர்க்கே ஈட்டி அதன் பயனாக இந்த நரகம் அனைத்தையும் தேடிக் கொண்டுவிட்டீர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...