பொது - 1037. பேரவா அறா

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

பேரவா அறா (பொது)

 

தான தான தானான தானத் ...... தனதான

 

 

பேர வாவ றாவாய்மை பேசற்கு ......அறியாமே

 

பேதை மாத ராரோடு கூடிப் ......    பிணிமேவா

 

ஆர வார மாறாத நூல்கற்று ......   அடிநாயேன்

 

ஆவி சாவி யாகாமல் நீசற்று ...... அருள்வாயே

 

சூர சூர சூராதி சூரர்க்கு ......        எளிவாயா

 

தோகை யாகு மாரா கிராதக் ......   கொடிகேள்வா

 

தீர தீர தீராதி தீரப் ......            பெரியோனே

 

தேவ தேவ தேவாதி தேவப் ......    பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

பேர் அவா அறா வாய்மை பேசற்கு ...... அறியாமே,

 

பேதை மாத ராரோடு கூடி,......         பிணிமேவா,

 

ஆரவாரம் மாறாத நூல் கற்று,...... அடிநாயேன்

 

ஆவி சாவி ஆகாமல்,நீ சற்று ...... அருள்வாயே.

 

சூர சூர! சூராதி சூரர்க்கு ......             எளிவாயா!

 

தோகையா! குமாரா! கிராதக் ......   கொடிகேள்வா!

 

தீர தீர! தீராதி தீரப் ......            பெரியோனே!

 

தேவ தேவ! தேவாதி தேவப் ......   பெருமாளே.

 

 

பதவுரை

 

 

     சூர சூர சூராதி சூரர்க்கு எளிவாயா--- சூரர்களுக்குச் சூரனான சூரபதுமன் முதலியோருக்கும் எளிதாகக் காட்சி தந்து அருளியவரே!

 

     தோகையா---தோகையினை உடைய மயிலை வாகனமாக உடையவரே!

 

     குமாரா--- குமாரக் கடவுளே!

 

     கிராதக் கொடி கேள்வா--- வேடர் குலக்கொடியாக வளர்ந்த வள்ளிநாயகியின் மணவாளரே!

 

     தீர தீர தீரா--- தீரத்தில் மிக்கவரே!

 

     அதி தீரப் பெரியோனே --- (தனது அடியவரை உய்விக்கின்றதில்) உறுதி வாய்ந்த பெரியவரே!

 

     தேவ தேவ--- தேவதேவரே!

 

     தேவாதி தேவப் பெருமாளே--- தேவ அதிதேவர்களுக்கு எல்லாம் மேலான பெருமையில் மிக்கவரே!

 

     பேர் அவா அறா--- பேராசை நீங்காத நிலையில்,

 

     வாய்மை பேசற்கு அறியாமே--- வாய்மையைப் பேசுதற்கு உரிய அறிவு விளக்கம் இல்லாமல்,

 

     பேதை மாதராரோடு கூடிப் பிணி மேவா--- அறிவீனர்களாகிய பெண்களுடன் கூடி இருந்து,  நோய்களை அடைந்து,

 

     ஆரவாரம் மாறாத நூல் கற்று--- ஆரவாரம் மிக்க உலக நூல்களையே கற்று,

 

     அடி நாயேன் ஆவி--- அடிமை ஆகிய எனதுஉயிரானது,

 

     சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே--- தேவரீர் சிறிதே திருவுள்ளம் பற்றி அருள் புரிதல் வேண்டும்.

                        

பொழிப்புரை

 

     சூரர்களுக்குச் சூரனான சூரபதுமன் முதலியோருக்கும் எளிதாகக் காட்சி தந்து அருளியவரே!

 

     தோகையினை உடைய மயிலை வாகனமாக உடையவரே!

 

     குமாரக் கடவுளே!

 

     வேடர் குலக்கொடியாக வளர்ந்த வள்ளிநாயகியின் மணவாளரே!

 

      மனத்திட்பத்தில் மிக்கவரே!

 

     தனது அடியவரை உய்விக்கின்றதில் உறுதி கொண்ட பெரியவரே!

 

     தேவதேவரே!

 

     தேவ அதிதேவர்களுக்கு எல்லாம் மேலான பெருமையில் மிக்கவரே!

 

     பேராசை நீங்காத நிலையில்,வாய்மையைப் பேசுதற்கு உரிய அறிவு விளக்கம் இல்லாமல்அறிவீனர்களாகிய பெண்களுடன் கூடி இருந்து,  நோய்களை அடைந்துஆரவாரம் மிக்க உலக நூல்களையே கற்றுஅடிமை ஆகிய எனதுஉயிரானது பயன்றறுப் போகாமல் தேவரீர் சிறிதே திருவுள்ளம் பற்றி அருள் புரிதல் வேண்டும்.

 

விரிவுரை

 

பேரவா அறா வாய்மை பேசற்கு அறியாமே---

 

அவாஆசைபேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும். இன்னும் அது வேண்டும்இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும். பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும். எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விடநெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று பெயர்.

 

உள்ளது போதும் என்று அலையாமல்இன்னும் அது வேண்டும்இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும்பிறப்பைக் கொடுக்கும்.

 

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.              ---திருக்குறள்.

 

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்,அஃது உண்டேல்

தவாஅது மேல்மேல் வரும்.                ---திருக்குறள்.

 

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

 

இன்பம் இடையறாது ஈண்டும்அவா என்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.               --- திருக்குறள்

 

பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும்அவாவினும் கொடிது.

 

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசைமண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை விரும்புவது பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன்இந்திரன்சந்திரன்கீசகன் முதலியோர்கள். 

 

உலகமெல்லாம் கட்டியாள வேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணிஒரு கட்டுக்கடங்காதுகங்கு கரையின்றி தலை விரித்து எழுந்து ஆடுகின்ற அசுர தாண்டவமே பேராசை.

 

கொடும் கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான் அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரைமீது சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற உனக்குப் பாதரட்சை எதற்காகஎனக்குத் தந்தால் புண்ணியம்” என்றான்.

 

கேட்டவன் வாய் மூடுவதற்கு முன் குதிரை மீது சென்றவன் காலணியைக்  கழற்றிக் கொடுத்தான். ஐயா! குதிரையில் செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன். அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான். குதிரைமேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான். நடப்பவன் மனம் மிக்க மகிழ்ச்சியடைந்து, “ஐயா! தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையைக் கொடுங்கள்” என்றான். குதிரை மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான். நான் அடிக்கிறேன்நீ சிரிக்கிறாய்என்ன காரணம்?” என்று கேட்டான். இவ்வாறு கேட்டு அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும். செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன்நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதன்றுசந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.

 

"பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

 ஓரா வினையேன் உழலத் தகுமோ”  ---கந்தரனுபூதி

 

அவாவுக்கும் ஆசைக்கும் சிறிது வேறுபாடு உண்டு. அவாவை விட ஆசையின் கொடுமை குறைந்து இருக்கும்.

 

பேராசை என்பதையே ஒரு பிணி என்று அருணகிரிநாதப் பெருமான் சொன்னார் என்றால், பேராசையை விடக் கொடுமையானது பேரவா என்பது தெளிவாகும்.

 

ஆசை என்பது பண்டங்களில் ஒன்றி இருப்பது. அவா ஆணவத்தின் வெளிப்பாடு.

 

இத்தகு கொடிய பேராசை குடிகொண்டு இருக்கும் உள்ளத்தில் வஞ்சகம் எப்போதும் நிறைந்து இருக்கும். வஞ்சகம் உள்ள இடத்தில் பொய்யே மிகுந்து இருக்கும். வாய்மை என்பது இருக்காது.

 

எனவே, பேரவா அறாத நிலையில் வாய்மை பேசுவதற்கு இல்லை.

                                    

பேதை மாதராரோடு கூடிப் பிணி மேவா---

 

பேதை மாதர் என்றது விலைமகளிரைக் குறிக்கும். பேதைமை என்பது அறிவீனம். அறிவு என்பது நல்லதன் நன்மையையும், தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்ந்து தெளிதல் ஆகும். அன்பையும் அருளையும் சிறிதும் கருதாமல், பொருளையே கருதி இருப்பவர்கள் பொருட்பெண்டிர். அவர்களிடத்தில் நல்லறிவு சிறிதும் இருக்காது. எனவே, "பேதை மாதர்" என்றார். 

 

அரிதில் தேடிய பொருளை நல்வழியில் செலவழிக்காமல்பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்துஅவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய பிணிகளைத் தந்து அனுப்பவர். இவற்றை மாதர் தரு பூஷணங்கள் என்று காட்டுகின்றார் அருணை வள்ளலார். 

 

"வாதமொடு,சூலைகண்டமாலைகுலை நோவுசந்து

     மாவலிவியாதிகுன்ம ...... மொடுகாசம்,

வாயு உடனே பரந்த தாமரைகள்பீனசம்பின்

     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

 

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,

     பாயலை விடாது மங்க, ...... இவையால்நின்

பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,

     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,

 

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,

     ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்

ஈடு அழிதல் ஆனதின் பின்மூடன் என ஓதும் முன்புஉன்

     ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்"

 

என்பது அடிகளார் அருளிய திருப்புகழ்ப் பாடல்.

 

ஆரவாரம் மாறாத நூல் கற்று--- 

 

ஆரவாரம் -- பகட்டு, 

 

பகட்டு எப்போதும் அறிவுக்குத் துணை புரியாது. அறிவை மயக்கவே செய்யும். அதனால் துன்பமே மிகும். ஆரவாரம் என்னும் சொல்லுக்கு, துன்பம் என்றும் ஒரு பொருள் உண்டு. உண்மை அறிவைப் பெருக்குவதற்குப் பயன்படாத நூல்கள் ஆவாரம் மிக்கவை.

 

பிறவியாகிய பெருங்கடலில் வீழ்ந்த உயிர்கள்,ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும். ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

 

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயேதிருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும்அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

 

அநபாயன் என்ற சோழ மன்னன்சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோதுஅமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவநூல்.  இதனை நீ பயில்வதனால் பயனில்லை.  சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினார் என்பர்.

 

ஆதலின்அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின்அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல்ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்தி பெறவேண்டும்.

 

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

 

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவைகற்றபின் நிற்க அதற்குத் தகஇதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும். "கற்பவை என்பதனால்அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றிபிற பொருள் உணர்த்துவனசின்னாள்பல்பிணிசிற்றறிவினர்க்கு ஆகாது. "கசடு அறக் கற்றலாவதுவிபரீத ஐயங்களை நீக்கிமெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்.

 

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை "அறநெறிச்சாரம்" என்னும் நூல் உணர்த்துவது காண்க.

 

"மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்".

 

இதன் பொருள் --- 

 

பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும்பிறவற்றினை வளர்க்கும் நூல்களும்கலந்து நிறைந்த உலகில்அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்றவீட்டுலகினையுடையவராவர்.

 

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று "அறநெறிச்சாரம்" கூறுமாறு..

 

"நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல

அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்

மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே

கண்ணோடிக் கண்டதே கண்டு".

 

இதன் பொருள் ---   

 

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போலஅறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மைநூலை அடையலாம். கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக் கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

 

பொய் நூல்களின் இயல்பு இன்னது என "அறநெறிச்சாரம்" கூறுமாறு...

 

"தத்தமது இட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள்உரைப்பர்--பித்தர்,அவர்

நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்

மால்கள் எனஉணரற் பாற்று".

 

இதன் பொருள் ---   

 

தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள்,விருப்பம்காட்சிஎன்ற இவையோடுஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும்அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும்அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

 

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து "அறநெறிச்சாரம்" கூறுமாறு....

 

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்",

 

இதன் பொருள் ---   

 

மக்கட் பிறப்பில்கற்றற்கு உரியவற்றைக் கற்றலும்கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும்கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால்வேறு எந்தப் பிறப்பானாலும்மக்கட் பிறப்பினைப் போலஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை.

 

அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே--- 

 

சாவியாதல் - பயன்றறுப் போதல். சாவி என்பது மணி பிடிக்காமல் பதராய்ப் பொன கதிரைக் குறிக்கும். உள்ளீடாக இருக்க வேண்டியது இல்லாத ஒன்றை பதர் என்பர்.

 

ஆவி ஈடேற வேண்டுமானால், ஆசை அற வேண்டும். ஆசை அற்றால், பொதுமகளிர் கூட்டுறவு உண்டாகாது. அறிவுத் தெளிவு பெற அறிவுநூல்களைக் கற்கவேண்டும். அறிவு நூல்களைக் கல்லாதவர் மாடர் எனப்படுவார். அறிவு நூல்களை ஏன் கற்கவேண்டும்? என்று அடிகளாரை அடுத்துக் கேட்டால், கரை ஏறுவதற்கு என்று சொல்லுவார். "கரை ஏற அறிவு நூல் கல்லா மூடர்" என்றார் பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில்.

 

ஆவி சாவி ஆகாமல், ஈடேற வேண்டுமானால், இறைவன் திருக்கருணை வேண்டும். 

 

கருத்துரை

 

முருகா! அடியேன் பயனற்று வாழாமல் அருள் புரியவேண்டும்.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...