வறுமை தொலை வழி உண்டா?

 


வறுமை தொலைய வழி உண்டா?

-----

 

     இன்றைக்குப் பலப்பல கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் எல்லோரும்மக்கள் யாவரும் வறுமை இல்லாமல்வளமான வாழ்வு வாழ வழி வகுக்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனாலும் வறுமை தொலைந்த பாடு இல்லை. வறுமையில் உள்ளோர் அதிகம். வறுமை இல்லாமல் வாழவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றுவதாகவே எல்லோரும் சொல்கின்றார்கள்.

 

     வறுமை என்னும் சொல் "மிடி" என்றும் சொல்லப்படும். அது முழுதும் பெடுப்பது. "முழுதும் கெடுக்கும் மிடி" என்கிறார் அருணகிரிநாதப் பெருமான். வறுமை வந்தால் போதும்நல்லவர்கள்கெட்டவர்கள் என்று பாராமல் எல்லோரையும் அது கெடுத்து விடும்அழித்து விடும். வறுமையினால் கோபம்சண்டைகொலைகளவு முதலிய எல்லாத் தீங்குகளும் மலிகின்றன. அதனால்,"இன்மை என ஒரு பாவிஎன்று வறுமைக் கொடுமையைச் சாடுகின்றார் திருவள்ளுவ நாயனார்.  வறுமை வந்துவிட்டால்நம்மிடமுள்ள எல்லாப் பண்புகளும் கெட்டுவிடும். 

 

"மானம்,குலம்,கல்வி,வண்மை,அறிவுடைமை,

தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை,- தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல்,பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்." 

 

என்று ஒளவைப் பிராட்டி சொல்கிறாள். வறுமையால் பசி உண்டாஅந்தப் பசியின் கொடுமையினால் நற்குணங்கள் எல்லாம் கெட்டுப் போய்விடும்

 

     மானம் - தன்மான உணர்வுகுலம் - குலப்பெருமை பற்றிய சிந்தனைகல்வி - கற்ற கல்வியின் திறமைவண்மை - உடல் வளம்,அறிவுடைமை - எண்ணிப் பார்க்கும் அறிவுதானம் - கொடை வழங்கும் தன்மைதவம் - தவம் செய்யும் அறநெறிஉயர்ச்சி - உயர்வு பற்றிய எண்ணம்தாளாண்மை - செயலாற்ற முயலுதல்தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் - தேனைப் போல் இனிமையாகப் பேசும் துணைவியின் மீது ஆசைப்படுதல் ஆகிய பத்தும்,பசி வந்திடப் பறந்து போம். 

 

     நோயின் கொடுமை எப்படி இருக்கிறது என்பதை நோயாளி அனுபவித்து உணர்கிறான். நோயாளிக்கு நோயின் கொடுமை தெரிகிறதுஅதைப் போக்கும் மருந்து தெரியவில்லை. மருத்துவருக்கு நோயின் கொடுமையும்அதைத் தணிப்பதற்கு உரியஅந்த நோய் வராமல் தடுப்பதற்கு உரிய மருந்தும் தெரியும்.  இன்ன மருந்து சாப்பிடுகிறவர்கள் இந்த நோய்க்கு உள்ளாக மாட்டார்கள் என்று அவர் சொல்வார். 

 

     நமக்கு வறுமையின் கொடுமை தெரிகிறது. வளமான வாழ்வு குன்றி வருந்துவதாக வாய் விட்டும் அலறுகிறோம். நோயுற்றவன் நோயைப் போக்கும் மருந்து உட்கொள்ளாமல்தற்கொலைக்கு முயல்வது போலவறுமையின் கொடுமைக்கு ஆளானவன்முழுதும் கெடுக்கும் (மிடியைப்) வறுமையைப் போக்கும் வழி தெரியாமல்தவறான செய்கைகளைச் செய்து பின்னும் துன்புறுகிறான். இதற்கு அருணகிரிநாதப் பெருமான் ஒர் அரிய மருந்து சொல்கிறார்.

 

     வான வாழ்வைப் பார்த்து நின்றவர்கள் யாரும் வைய வாழ்வை மறக்கவில்லை. உடம்பொடு வாழும் வாழ்க்கையில் நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்பது போலவேவறுமை இல்லாமல் வாழவேண்டும் என்றும் விரும்பினார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நோக்கி எனக்குச் சோறு வேண்டும்நல்ல ஆடை அணிகள் வேண்டும் என்று கேட்டார்அதோடு மட்டும் நிற்கவில்லை. உடம்புக்குப் பூசிக்கொள்ள மணம் மிகுந்த கஸ்தூரி வேண்டும்புனுகு வேண்டும் எனக் கேட்கிறார். 

 

"முத்தாரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை 

அவை பூணத் தந்து அருளிமெய்க்கு இனிதா நாறும்

கத்தூரி கமழ் சாந்து பணித்து அருளவேண்டும்,

கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே."

 

"பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேல் ஓர்

  பொற்பூவும் பட்டிகையும் புரிந்து அருள வேண்டும்,

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்,

  கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீரே"

 

என்றெல்லாம் இறைவனை வேண்டிப் பாடுகின்றார். கேட்ட எல்லாவற்றையும் இறைவர் அருளப் பெற்றும் மகிழ்ந்தார். அவர் வான வாழ்வை நினைந்து வைய வாழ்வை மறந்தவர் இல்லை. வைய வாழ்வு வாழத் தெரியாதவரும் இல்லை. இறைவனைப் பார்த்துப் பொன்னையும் பொருளையும் போகத்தையும் புகழையும் கேட்கிறார். இம்மைக்கு மாத்திரம் அன்றி மறுமைக்கு மோட்சத்தையும் வேண்டுகிறார். இறைவனை நம்பினால் இந்த உலகத்திலும் வாழலாம்மறுமை வாழ்வும் ஒருங்கே கிடைக்கும் என்று அவர் சொல்கிறார். 

 

"இம்மையே தரும் சோறும் கூறையும்

     ஏத்தலாம்;இடர் கெடலும் ஆம்

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு 

     யாதும் ஐயுறவு இல்லையே." 

 

என்று இறைவனை வழிபடுவதால் பெறக்கூடிய பயன்களைச் சொலகிறார்.

 

     ஞானப் பாலைக் குடித்த குழந்தையாகிய திருஞானசம்பந்தர், "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்" என்கிறார். இந்த மண்ணிலேயும் நல்லவண்ணம் வாழலாம்ஒவ்வொரு நாளும் சுகமாக வாழலாம் என்கிறார். இறைவனை நம்புகிறவர்கள் இந்த உலகத்தில் நல்லவண்ணமே வாழலாம். இறைவனை நம்பாதவர்கள் என்றும் எப்போதும் முடியாத பிறவிக் கடலுக்குள் ஆழ்கிறார்கள்அவர்களே முழுதும் கெடுக்கும் மிடியால் விசனப்படுகிறார்கள். 

 

     கொடியது எதுஎன்று குழந்தைவேலன் கேட்க"கொடியது கேட்கின் நெடிய வெவ் வேலோய்! கொடிது கொடிது வறுமை கொடிது;அதனினும் கொடிது இளமையில் வறுமை"என்று பதில் இறுத்தார் ஔவைப் பிராட்டியார். வறுமையின் இயல்பு கொடியது. எல்லா இன்ப நலங்களையும்வளவாழ்வையும் குலைக்கின்ற பாவி அல்லவா அது

 

"வடிவும் தனமும் மனமும் குணமும் 

குடியும் குலமும் குடி போகியவா! 

அடி அந்தம் இலா அயில்வேல் அரசே! 

மிடி என்று ஒரு பாவி வெளிப் படினே"

 

என்று அருணகிரிநாதர் அநுபூதியில் சொல்கிறார். "இன்மை என ஒரு பாவி’ என்று சாடிய திருவள்ளுவரைப் போலவேஅருணகிரிநாதருக்கும் தோன்றுகிறது, "மிடி என்று ஒரு பாவி" என்று சொல்கிறார். 

 

     அந்தக் கொடிய பாவியின் கையில் அகப்பட்டு விசனம் அடையாமல் இருக்கவேண்டுமானால் இறைவனை நம்பவேண்டும். அவனை நம்பி வழிபடுபவர்கள் யாரும் மிடியால் விசனப்படமாட்டார்கள். இறைவனை நம்பினால் நற்குணங்கள் தாமே வந்து சேரும். யாரைக் கண்டாலும் கோபித்து அருவருக்கின்ற நிலை மாறிஅன்போடு நெருங்கிப் பழகும் நல்ல குணம் உண்டாகும். உலகத்திலுள்ள மக்கள் எல்லாரிடத்திலும் அன்பு பாலிக்க வேண்டுமானால்எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கும் இறைவனிடத்தில் அன்பு பாலிக்க வேண்டும். அவனிடத்தில் அன்பு பாலித்தால் எல்லோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் நற்பண்புகள் உண்டாகும். "அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே" என்று இறைவனிடத்தில் தனக்கு உள்ள அன்பின் திறத்தை வெளிப்படுத்தினார் குலசேகர ஆழ்வார். நாமும் இறைவனிடத்தில் தாயிடம் வைப்பது போல அன்பு செய்து நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனுக்கு நாம் குழந்தை என்ற பாவம் வரவேண்டும். குழந்தைப் பண்புகள் வளரக் குழந்தை வேலனை வணங்க வேண்டும்குழந்தை வேலனை வணங்குபவருக்கு இந்த இரண்டு பயன்களும் உண்டாகும் என்கிறார். "முடியாப் பிறவிக் கடலில் புகார்முழுதும் கெடுக்கும்  மிடியால் படியில் விதனப்படார்"என்பது அருணகிரிதாநரின் அருள்வாக்கு.

 

     குழந்தை வேலனை வழிபடுகின்றவர்கள்இந்தப் பிரபஞ்சத்திற்கு வசப்பட மாட்டார்கள். முடிவில்லாத பிறவிக் கடலுக்குள் புகமாட்டார்கள். அவர்களுக்குப் பிறவி இல்லாத முத்தி கிடைக்கும். மண்ணிலும் அவர்கள் நன்றாக வாழலாம். அவனை நம்புகிறவர்கள் மானம்குலம்கல்வி முதலிய எல்லாவற்றையும் கெடுக்கின்ற வறுமையில் சிக்கி விசனப்பட மாட்டார்கள் என்கிறார் அருணகிரிநாதர். முருகன் திருநாமம் புகல்கின்றவர்கள் முடியாப் பிறவிக் கடலில் புகார்மிடியால் விதனப்படார் என்றால் இன்பதுன்பம் இரண்டையும் கடந்த முத்தி நிலையை வாழுகின்றபோதே அடைந்து விடுவார்கள் என்று பொருள்.அவர்கள் வணங்குவது  "வெற்றி வேல்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள்" ஆகிய முருகப் பெருமானை. அவன் ஞானமாகிய வேலையே தன் ஆயுதமாக உடையவன். அது எப்போதும் வெற்றியை உடைய வேல். அந்த வெற்றி வேலைத் தன் திருக்கரத்தில் உடைய பெருமாள் அவன். 

          

     அவன் தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு இந்தப் பிறவியில் மிகுந்த அல்லல் விளைவிக்கிற தரித்திரத்தை உடனே போக்குவான். என்றென்றைக்கும் இன்பம் கொடுக்கிற முத்தியையும் வழங்குவான்அவன் தன்னை அண்டி வந்த அடியவர்களுக்குமிகவும் நல்லவன்அடியார்களைக் காப்பாற்றுவது ஒன்றையே தன் வேலையாகக் கொண்டு வெற்றிவேலைத் தாங்கி நிற்கிறான். செருக்கை ஒழித்துதலையைத் தாழ்த்திஅகங்கார மமகாரம் குறைந்துஅவன் திருவடியில் தொழுது அழுது நின்றால் அவர்களுக்கு அவன் மிகவும் நல்ல பெருமாளாக இருப்பான். 

 

     அவன் அவணரை அழித்தவன். அகங்கார மமகாரத்தால் தலை தருக்கி நின்றுதம்மை விட உயர்ந்தவர்கள் இல்லை என்று எண்ணி இறுமாந்துநல்லவர்களுக்குத் துன்பம் இழைக்கிறவர்களுக்கு அவன் பொல்லாதவனாக இருப்பான்.  சூரபதுமன் முதலிய அசுரர்கள் தம்மை விட உயர்ந்தவர்கள் இல்லை என்ற செருக்கால்,தங்கள் தொழிலை இறைவன் ஆணைவழி நின்று நடத்தி வந்த தேவர்களுக்குச் சொல்ல ஒண்ணாத துன்பங்களை இழைத்தார்கள். அந்த அசுரக் கூட்டத்தை அவர்களுடைய குலமே அடங்க அழிந்து போகும்படியாகப் பொடிப் பொடியாகச் சிதைத்த பெருமைக்கு உரியவர் வேலாயுதப் பெருமாள். 

 

     முடிவில்லாப் பிறப்பை ஒழித்துவைய வாழ்வில் எல்லா விதமான வளத்தையும் அளிக்கின்ற பெருமாளுக்கு மூன்று அடையாளங்களைச் சொன்னார். அவன் வெற்றி வேலை உடைய பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் என்றார். முருகன் இயல்பாக இருக்கும் நிலை வெற்றி வேலை உடையவனாக இருப்பது. அவன் சிஷ்ட பரிபாலனம் செய்கின்ற நிலை,அடியார்க்கு நல்ல பெருமாளாக இருப்பது. துஷ்ட நிக்கிரகம் பண்ணுகிற நிலை,அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாளாக இருப்பது. 

 

     இறைவன் தன்னுடைய இயல்பான நிலையில் இருந்தபடியே நல்லவர்களுக்கு அருள் செய்கிறான்.அல்லாதவர்களுக்குத் தீங்கு செய்கிறான். அசுரர்களுக்குத் துன்பத்தை விளைவித்துஅடியார்களுக்கு இன்பத்தை அளிக்கிறான். வெற்றிவேல் பெருமாளின் திருக்கோலத்தைப் பார்க்கும் போதே அவனுடைய கருணை புலனாகிறதுவீரம் தெரிகிறது. அடியார்களுக்கு இன்பத்தை அளிக்கவும் அல்லாதார்களுக்குத் துன்பத்தை விளைவிக்கவும் காரணமாக இருப்பவை அவனது கருணையும் வீரமும். வீரச் செயலாலே துன்பத்தை ஒழித்துகருணைச் செயலாலே இன்பத்தை ஆக்குபவன் அவன். மனிதர்கள் எல்லோரும் துன்பம் நீங்கி இன்பம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். நோய் நீங்கி நலம் பெற வேண்டும் என்றால்,  நோயை நீக்க மருந்து கொடுக்கின்ற மருத்துவரேஉடல் நலம் பெருகச் சத்து மருந்தும் கொடுக்கிறார். அதைப்போலமுருகன் தன்னுடைய வீரத்தால் துன்பத்தை நீக்கிகருணையால் அடியார்களுக்கு இன்பத்தை அளிக்கிறான். இன்பத்தை ஆக்குவதற்கும்துன்பத்தைப் போக்குவதற்கும் அவன் வெவ்வேறு ஆயுதம் வைத்திருக்கவில்லை. துன்பத்தை நீக்குகின்ற ஞானசத்தியாகிய வேலே இன்பத்தையும் ஆக்குகின்றது.

 

     அந்த வெற்றிவேல் பெருமாளின் திருநாமம் புகல்பவர் இந்த இருவகைப் பயனைப் பெறுவார்கள். அவனுக்குப் பல திருநாமங்கள். அடியவர்கள் தங்கள் தங்களுக்குப் பிடித்தபடியே அழைக்கட்டும் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட நாமம் உடையவனாக இருக்கிறான்.  அவன் நாமங்களில் எதை வேண்டுமானாலும் சொன்னால் போதும். முத்தமிழால் வைதாலும் கூடப் பரவாயில்லை. அவன் தன்னுடைய அடியார்களுக்கு வீரச் செயலினால் துன்பத்தை நீக்கிகருணைச் செயலினால் இன்பத்தை அளிப்பான். 

 

     எத்தனையோ தரம் முருகா முருகா என்று கத்துகிறேன். அவன் அருள் செய்யவில்லையே என்று சொல்வோர் நம்மிடையே இருக்கிறார்கள். உள்ளம் கலந்துகருத்து ஒன்றி உணர்ச்சியோடு சொன்னால் அவன் வருவான். நாடக மேடையில் நிற்கின்ற ஒருவன் 'அம்மாஎன்று அழைத்தால் உண்மையான அம்மாவா மேடைக்கு வருவாள்வெறும் வாயால் உலகமாகிய நாடக மேடையில் ஏறியுள்ள நடிகனைப் போல, 'முருகா முருகா!என்று அழைத்தால் அவன் வரமாட்டான். உள்ளத்தோடு கலந்து அழைக்க வேண்டும். 

 

     வாயிலிருந்து வருகிற சொல் நாவோடு மாத்திரம் நிற்காமல் உள்ளத்து உணர்ச்சியோடும் கலந்து வரவேண்டும். வாயிலிருந்து உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சி வெளிப்பட வேண்டும். கன்றுக் குட்டி தனது தாயைக் காணாமல் கதறுகின்றது. தனது குட்டி தன்னைக் காணாமல் கதறுமே என்பதை உணர்ந்த தாய்ப்பசுவானதுகன்று கதறுவதற்கு முன்னே கதறுகிறது. 

 

"கன்று அழைக்கும் முன்னே கதறி வரும் ஆப் போல

நின்று அழைக்கும் நாயேற்கு நேர் தோன்றி - ஒன்றினுக்கும்

அஞ்சாதே வா என்று அழைப்பாய்தென்போரூரா!

எஞ்சாத பேர் அருளால் இன்று"

 

என்று திருப்போரூர் முருகனை நோக்கித் கதறினார் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

 

     பல காலமாகக் காணாமல் இருந்த குழந்தையைக் கண்டவுடன் தாய் எப்படி அழைக்கிறாள்அப்படி முருகனை அழைக்க வேண்டும்அவன் திருநாமத்தை வாயாரச் சொல்ல வேண்டும். அதற்கு நிச்சயமாகப் பயன் உண்டு. மறுமை இன்பமாகிய பிறவாத பேறும்இம்மை இன்பமாகிய வறுமை இல்லா வளவாழ்வும் கிடைக்கும். "இசை பயில் சடாட்சரம் அதாலேஇகபர சௌபாக்கியம் அருள்வாயே" என்றார் அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழ்ப் பாடல் ஒன்றில். கந்தர் அலங்காரத்தில்,

 

"முடியாப் பிறவிக் கடலில் புகார்;முழுதும் கெடுக்கும் 

மிடியால் படியில் விதனப்படார்;வெற்றி வேற்பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள்அவுனர் குலம்அடங்கப் 

பொடி ஆக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே!"

 

என்று உத்தரவாதம் தருகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     வெற்றியைத் தரும் வேலைக் கரத்தில் தாங்கும் பெருமாளும்தன்னைப் பணியும் அடியவர்களுக்கு நன்மையைச் செய்யும் நல்ல பெருமாளும்அசுரர் குலம் முற்றும் அழித்துப் பொடி ஆக்கிய பெருமாளுமாகிய முருகப் பெருமானுடைய திருநாமத்தை விரும்பிச் சொல்கிறவர்கள்என்றும் முடியாமல் தொடர்ந்து வரும் பிறவியாகிய கடலிலே விழமாட்டார்கள். எல்லா நலங்களையும் அழியச் செய்யும் வறுமையினால் உலகத்தில் துயரம் அடைய மாட்டார்கள். 

 

     (மிடி - வறுமை. படி - உலகம். விதனம் - துயரம். அவுணர் - அசுரர். அடங்க - முழுதும். புகலுதல் - விரும்பிச் சொல்லுதல். மறுமை வாழ்வும் இம்மை வாழ்வும் பெறுவர் என்பது கருத்து.)

 

     இறைவன் திருவடியை வணங்கி வழிபடுவோர்கள் அடையும் பயன்களை குறித்துதிருஞானசம்பந்தப் பெருமான் பின்வருமாறு பாடி உள்ளார்.

 

"மண்புகார்,வான்புகுவர்,மனம் இளையார்,பசியாலும்

கண்புகார்,பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்

விண்புகார் என வேண்டா,வெண்மாட நெடுவீதித்

தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே."

 

இதன் பொருள் ---

 

     வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய குளிர்ந்த காவிரிப் பூம்பட்டினம் நகரில் விளங்கும் திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள எமது தலைவன் திருவடிகளைச் சார்ந்து,அவன் புகழைக் கற்றவரும் கேட்டவரும் இந்த நில உலகில் பிறவார்பேரின்ப உலகம் பெறுவர். மனச் சோர்வாலும் பசியாலும் துன்பம் அடைய மாட்டார். அவர்கள் நோய்களையும் அறியாதவர்களாக விளங்குவார்கள்.

 

     இறைவனை வழிபட்டுஅவனது திருநாமங்களை மனதாரச் சொல்லி வழிபட்டுஉலகியல் நலங்களும்அருளியல் நலங்களும் ஆகிய இகபர சௌபாக்கியங்களைப் பெற்று மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...