சான்றாண்மைக்கு இலக்கணம்

                                                             சான்றாண்மைக்கு இலக்கணம்

-----

 

     நல்ல குணங்கள் அனைத்தையும் சேர்த்துசால்புஎன்ற ஒரு சொல்லால் வழங்கினர் நமது முன்னோர். "சான்றாண்மை" என்னும் ஓர் அதிகாரத்தையே திருக்குறளில் வைத்து அருளினார் திருவள்ளுவ நாயனார். உலகத்தார் அனைவருமே ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையிலும் அறத்தைச் சுருக்கிக் கூறிய பெருமைதிருவள்ளுவருக்கே உரியது. இந்த அருமையை நன்கு உணர்ந்த பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடுஎன்று வாயாரப் பாடினார்.

 

     உலகின் பல இடங்களில் அவ்வப்பொழுது அற நூல்கள் தோன்றியது உண்டு. திருக்குறளும் அப்படி ஒரு நூல்தான் என்று சொல்லிவிட முடியாது. இதற்கென்று தனி மதிப்பு உண்டு.  ஏனைய அற நூல்கள் அறநெறியை மக்கள் எவ்வளவு தூரம் பின்பற்ற முடியும் என்பது பற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மக்களின் பின்பற்றும் சக்தியை அடிப்படையில் கொண்டே திருக்குறளை வடிவமைத்தார் திருவள்ளுவ நாயனார். அவர் கூறிய அறநெறிகள் சாதாரணமக்களும் கடைப்பிடிக்கக் கூடியவையே என்றால் அது மிகையல்ல. ஒருசிலரால் மட்டுமே கடைப்பிடிக்கக்கூடிய சில கடினமான சட்டங்களும் அதில்இல்லாமல் இல்லை. தமிழ் இலக்கியங்களைப் புரட்டினால்எத்தனை பெருமக்களுடைய வாழ்வு எத்தனை திருக்குறள்கட்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்து என்பது புலப்படும்.

     திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதி  'சேதி நாடு’ என்று வழங்கப் பெற்றது ஒரு காலத்தில். அப்பகுதியைத் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, 'மெய்ப்பொருள்’ என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். "குறிக்கோள் இல்லாது கெட்டேன்!” என்று அப்பர் பெருமானே பாடுவாரானால்மனித வாழ்வில் குறிக்கோள் எத்துணைச் சிறந்தது என்று எடுத்துக் கூறத் தேவை இல்லை. பலருக்குத் தலைவனாய் அமைந்துள்ள அரசனுக்குக்  குறிக்கோள் என்பது எவ்வளவு இன்றியமையாதது! தம் உயிருக்குத் தீமை நேர்வதாயினும்அது பற்றிக் கவலை கொள்ளாமல்குறிக்கோளைக் கொண்டு செலுத்துபவரையே உலகம் 'மகாத்மாஎன்று போற்றுகிறது.

     சேதி நாட்டை ஆட்சி செய்து வந்த மெய்ப்பொருளும்ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்தார். சிவபெருமானுடைய அடியார்கள் தாங்கும் வேடத்தை யார் தாங்கி வந்தாலும்அவரைப் போற்றி உபசரித்து அவர் விரும்பியவற்றைக் கொடுக்கவேண்டும் என்பதே மெய்ப்பொருள் மேற்கொண்ட குறிக்கோளாகும். இந்தக் குறிக்கோள் சரியானதாதவறானதா என்பது பற்றி ஆராய நமக்கு உரிமை இல்லை. எதுவரை இதனை அவர் கொண்டு செலுத்துகிறார் என்பதை மட்டுமே நாம் காணவேண்டும்.

     சிற்றரசர் ஆயினும்பண்பாடு உடையவராயினும்மெய்ப்பொருளுக்கும் பகைவர் இல்லாமல் போகவில்லை. பக்கத்து நாட்டை ஆட்சி செய்த முத்தநாதன் என்பவன்அவருக்கு முழுப் பகைவனாக இருந்தான்.  பலமுறை மெய்ப் பொருளுடன் போர் தொடுத்துத் தோல்வியே அடைந்தான். பொருள் நட்டத்தோடு மானத்தையும் இழந்த முத்தநாதன்நல்லதொரு யோசனை செய்தான். நேரடியாகப் போர் செய்து மெய்ப்பொருளை வெல்ல முடியாது. எனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத் துணிந்தான். திருநீற்றுக்கும்அக்கமணிக்கும் (உருத்திராட்சம்) பெருமதிப்புத் தருபவர் மெய்ப்பொருள் என்பதை அறிந்த முத்தநாதன்உடனேசிவனடியாராக வேடம் தாங்கிப் புறப்பட்டான்அது உண்மை வேடம் அல்ல. பொய்த்தவ வேடம் என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

"மெய் எலாம் நீறு பூசி,வேணிகள் முடித்துக் கட்டி,

கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி,

மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து,

பொய்த்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்"

 

என்பது பெரியபுராணம்.


     கறுத்த மனத்தவன் ஆன அவன் உடம்பெல்லாம் திருநீறு பூசிசடைமுடி தாங்கிஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தக முடிப்பு ஒன்றைக் கையில் ஏந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியார் என வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயில் காவலனான தத்தன் “தருணம் அறிந்து செல்லல் வேண்டும். இது அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். இத்தகைய அறிவாளியாகிய ஒருவனைத் தான் மெய்க் காவலனாகக் கொள்ளவேண்டும் என்பதையும் திருவள்ளுவர், ‘குறிப்பில் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும்கொளல்,' என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.

     

       ‘வஞ்ச மனத்தவன் ஆன அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கு என வந்திருப்பதாயும்தன்னைத் தடை செய்யக்கூடாது எனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கே இருந்த அரசியார்அடியாரின் வரவு கண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயில் உணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்தில் இருந்து முத்தநாதன்தான் எங்கும் இல்லாத ஒரு சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப் பையைப் காட்டினான். அந்த ஆகமப் பொருளைக் கேட்பதற்கு அரசர் ஆர்வம் உற்றார். வஞ்ச நெஞ்சின் ஆன முத்தநாதன்தனித்த இடத்தில் இருந்தே ஆகமத்தை உபதேசம் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவனாகப் பொய் வேடம் பூண்டு வந்தவனுக்கு ஓர் ஆசனம் அளித்து அமரச் செய்தபின்தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அக் கொடியவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது வென்றார் மெய்ப்பொருளார். முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த  தத்தன்இக் கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்து விழும் நிலையில் இருந்த நாயனார்அடியவராக வந்தவர் நமது உறவினர் ஆவார் என்னும் பொருளில்,“தத்தாநமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ எனக் கேட்டுப் பணிந்து நின்றான். “இச் சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டு வா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தி அறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்று ஒழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித் தடுத்துநகரைக் கடந்து சென்றுநாட்டவர் வராத காட்டு எல்லையில் அக் கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறு இன்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும்அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலவாணப் பெருமான் திருவடி நிழலைச் சிந்தை செய்தார். அம்பலத்தரசர்,அம்மையப்பராக மெய்பொருள் நாயனாருக்குக் காட்சி அளித்தனர். மெய்பொருளார் திருவடி நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுது இருக்கும் பாக்கியர் ஆனார்.

     இத்தகைய ஒரு நிகழ்ச்சியை முழுவதும் மனத்தில் வாங்கிக்கொண்டு பார்த்தால்"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு ?" என்னும்திருக்குறளுக்கு உண்மையான பொருளை அறிய முடிகின்றது.

      இத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள்பாடியருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம். சென்னையின் ஒரு பகுதியான கொளத்தூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு உள்ள அருள்மிகு அமுதாம்பிகை உடனாய சோமேசர் மீது பாடப்பட்ட நூலாகும் இது.

 

"வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்

தொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு."

 

இதன் பொருள்---

 

      சோமேசா - சோமேசப் பெருமானே! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து?

 

      வன்மை சுயோதனற்கும் - கொடிய மனமுடைய துரியோதனனுக்கும்,தொன்மை நெறி தருமன் - பழமையாக வரும் தரும வழியிலே நிலைபெற்றுள்ள தருமபுத்திரன்வானோர் சிறை மீட்டான் - தேவர்களது சிறையை மீட்டு உதவி செய்தான் ஆகலான் என்றவாறு.

 

      பாண்டவர் சூதாடித் தோற்றுக் காடுறை வாழ்க்கையில் இருந்த நாளில்துரியோதனன் தனது பெருமையை அவர்களுக்குக் காட்ட எண்ணிகுடும்பத்துடன் அக்காடு புகுந்து அவர்கட்கு எதிரில் தன்  இராஜபோகத்தை எல்லாம் அனுபவித்துக் காட்டினான். அப்போது இந்திரன் ஏவலால் சித்திரசேனன் என்னும் கந்தருவ மன்னன் சில தேவருடன் வந்து துரியோதனனைக் கயிற்றால் கட்டி வானத்தில் தூக்கிச் செல்ல முயலஅது கண்ட கர்ணன் முதலியோர் அவர்களுடன் போரிட்டுத் தோற்று ஓடதருமபுத்திரர் அது கண்டு தனது தம்பியர்களான வீமார்ச்சுனர்களை ஏவித் துரியோதனனைச் சிறை மீட்டார்.

 

      ஞாதிகள் (அறிவு உள்ளவர்கள்) தமக்குள் பகைமை இருப்பினும்,பிறர்க்கு இடந்தராமல் சமயத்தில் சேர்ந்து கொள்ளுதலைக் குறித்து மீமாஞ்சையிலும், "குருபாண்டவ நியாயம்" என்று ஒரு நியாயம் இருத்தல் காண்க.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிரசை சாந்தக் கவிராயர் இயற்றிய "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

                                                            

"புத்தன்எறி கற்கும் புராரி பதம்அளித்தான்,

இத்தரணி போற்றும் இரங்கேசா! - மெத்தவே

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு."         

 

இதன் பொருள் ---

 

     இத் தரணி போற்றும் இரங்கேசா - இவ் உலகத்தார் வணங்கிப் புகழ்கின்ற திருவரங்கநாதக் கடவுளே!  புராரி - திரிபுர தகனம் செய்தவராகிய சிவபெருமான்புத்தன் எறி கற்கும் - புத்த மதத்தினராகிய சாக்கிய நாயனார் தம்மேல் எறிந்த கல்லுக்கும்பதம் அளித்தான் - (மகிழ்ந்து) சிவபதம் வழங்கினார்,(ஆகையால்இது) மெத்த - மிகவும்இன்னா செய்தார்க்கும் - துன்பம் செய்தவர்களுக்கும்இனியவே செய்யாக்கால் - (சால்புடையவர்கள்) இன்பம் தரும் செயல்களையே செய்யாவிட்டால்சால்பு - அவரது சான்றாண்மைஎன்ன பயத்ததோ?- (வேறே) என்ன பயன் உடையதாகுமோ? (என்பதை விளக்குகின்றது).

 

      கருத்துரை--- துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்தலே சான்றாண்மையாம்.

 

      காஞ்சிப்பதியில் இருந்த பௌத்த மதத்தினராகிய சாக்கிய நாயனார்க்கு சிவபத்தி முதிர்ந்திருந்தது. அதனால் அவர் தம்மைத் தம் மதத்தினர் சந்தேகித்து ஒறுக்காதபடிசிவலிங்கத்தின்மேல் கல் எறிவதையே நியமமாகக் கொண்டு தினந்தோறும் மறவாமல் அக் கடுந்தொழிலைச் செய்து வந்தார். ஆயினும்சிவபெருமான் தமக்குத் துன்பம் விளைத்த அத்தீய காரியம் செய்தவர்க்கும்இன்பம் விளைக்கும் தமது தூய பதவியை அளித்தார். மெத்த இன்னா செய்தவராகிய சாக்கிய நாயனார்க்கும்சிவபிரான் இனியவே செய்ததனால் அவருடைய சால்பின் பயன் இன்னது என அறிவுறுத்தப்பட்டமை காண்க. அப்படிச் செய்யாவிட்டால் சால்பு என்ன பயனுக்குத்தான் இருக்கிறதோஎன்கிறார் திருவள்ளுவ நாயனார்.இதனால்,இன்னா செய்தார்க்கும் இனிய செய்தலே சால்பு. அப்படிச் செய்யாக்கால் சால்பினால் பயனில்லை என்பது பெறப்பட்டது.  சாக்கிய நாயனார் பரமசிவனுக்கு இன்னா செய்யவேண்டும் என்று தம் மனத்தில் கொண்டவர் அல்லர். சிவனை மறவாமல் இருப்பதற்கு அடையாளமாகவும்அதற்காகத் தம்மைப் பிற சாக்கியர் வருத்தாமல் இருக்கவும் கல் எறிந்து வந்தார். அதனால்அவர் கொண்டிருந்த சிவபத்தியின் முதிர்ச்சிக்கு வியந்த சிவபெருமான் அவர் எறிந்த கல்லைப் பூவாகக் கொண்டார். 

 

     இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த சில பாடல்களைக் காணலாம்... 

 

"இடிப்பது என்று எண்ணி இறைவானைக் காயார்,

முடிப்பர் உயிர் எனினும் முன்னார் - கடிப்பக்

கன்று அமர்ந்து தீம்பால் கலுழுமே,நீண்மோத்தை

ஒன்ற உணராதார் ஊங்கு."         --- இன்னிலை.

 

இதன் பொருள் ---

 

     இடிப்பது என்று எண்ணி இறைவானை காயார் - இடிவிழச் செய்கின்றது என்று கருதிச் சிறிதும் மழைமேகத்தை ஒருவரும் வெறுக்க மாட்டார்உயிர் முடிப்பர் எனினும் முன்னார் - தம் உயிரைப் போக்குவார் (இவர்) என்று தெரிந்தாலும்(அத்தகைய கொடியோர் உயிரை நாம் முதலில் போக்குவது நலம் என்று (பெரியோர்) கருதமாட்டார். கன்று அமர்ந்து கடிப்ப தீ பால் கலுழும் - தனது கன்று விரும்பி மடியைக் கடித்தாலும் (தாய்ப் பசு) இனிய பாலினைச் சொரியும்ஒன்ற உணராதார் ஊங்கு நீள் மோத்தை - பொருந்த வாழ்வதனைஅறியாத மக்களைப் பார்க்கினும் நீண்ட ஆட்டுக் கடாக்கள் (நல்லனவாம்.)

 

     இடிவிழுந்தால் சிலர்க்குத் தீமை விளையும். அது கருதி மழைமேகத்தை வெறுப்பவர் ஒருவரும் இல்லை. இதனால்பலருக்கும் பல நன்மைகளைச் செய்யும் ஒரு மனிதனிடம் ஒரு குற்றம் இருப்பினும் அக்குற்றத்தை மட்டும் நோக்கி அவனை வெறுத்தல் தகாது என்னும் நீதி சொல்லப்பட்டது. கன்று கடித்தது என்று நினையாதுதாய்ப்பசுவானது பால் கொடுப்பது போலதமது அருமை அறியாத மாந்தர் வருத்தினாலும் பெரியோர் அதனைப் பொறுத்து நன்மையையே செய்வர். அவர் புரியும் தீய செயலையே தாமும் அவர்க்குப் புரிவதற்கு நினைக்கமாட்டார்.

 

     ஆட்டுக் கடாக்கள் ஒன்று மற்றொன்றை முட்டினால் மீண்டும் அதனை அது முட்டும். எத்தனை தரம் முட்டினாலும் விட்டுப் போகாமல் மேலும் மேலும் முட்டித் துன்பத்தை விளைவித்துக் கொண்டே நிற்கும். இது ஆட்டுக் கடாவின் செயல். அதுபோலப் பிறருக்குத் தீங்கு நினைக்காமல் வாழ்வது நல்வாழ்வு என்று உணர்த்தப்பட்டது.

 

"உபகாரம் செய்ததனை ஓராதே,தங்கண்

அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்

தாம்செய்வது அல்லால்,தவற்றினால் தீங்கு ஊக்கல்

வான்தோய் குடிப்பிறந்தார்க்கு இல்."   --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     உபகாரம் செய்ததனை ஓராது - தாம் முன்பு ஓர் உதவி செய்ததை எண்ணிப் பார்க்காமல்,தம் கண் அபகாரம் ஆற்றச் செயினும் - பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும்உபகாரம் தாம் செய்வது அல்லால் - அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வது அல்லாமல்தவற்றினால் தீங்கு ஊக்கல் - அவர் குற்றம் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல்வான் தோய் குடிப்பிறந்தார்க்கு இல் - உயர் குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

 

"நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்

கூர்த்து அவரைத் தாம்நலிதல் கோள் அன்றால் - சான்றவர்க்குப்

பார்த்(து) ஓடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின்

பேர்த்துநாய் கவ்வினார் இல்.   --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     நாய் கதம்பட்டு கவ்வின் - நாய் சினந்து தம்மைக் கடித்ததும்பார்த்து ஓடி சென்று - ஆராய்ந்து அதன்பின் ஓடிச் சென்று,பேர்த்து நாய் கவ்வினார் இல் - மீண்டும் நாயினைக் கவ்வித் துன்புறுத்தினவர்கள் ஒருவரும் இல்லை. நீர் தகவு இல்லார் நிரம்பாமை தம் நலியின் - நல்ல நேர்மையான குணங்கள் இல்லாதவர்கள் அறிவு நிரம்பாமையால் தம்மைத் துன்புறுத்துவராயின்கூர்த்து - மன ஊக்கம் கொண்டுஅவரை தாம் நலிதல் சான்றவர்க்கு கோள் அன்று - அவர்களைத் தாம் துன்புறுத்துதல் அறிவு சான்றவர்க்குக் கொள்கை ஆகாது.

 

     நமக்குத் துன்பம் செய்தவர்க்கும் அவர் நாணும்படியாக இனிமை செய்வதே சான்றோர் கொள்கை. அறியாமையால் தீங்கு செய்தவரைஅறிவு உடையார் துன்புறுத்துவது இல்லை என்பதைக் காட்ட,நாய் கடித்தால் திருப்பி அதனைக் கடிப்பார் இல்லை எனப்பட்டது.

 

"கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால்

பேர்த்துநாய் கௌவினார் ஈங்கு இல்லை - நீர்த்துஅன்றிக்

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ

மேன்மக்கள் வாயால் மீட்டு."          --- நாலடியார்.  

 

இதன் பொருள் --

 

     கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் - சினம் மிகுந்து நாய் தமது உடம்பை வாயினால் கடித்துத் தசையைப் பிடுங்குதலைப் பார்த்தும்தம் வாயால் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - அதற்கு எதிராகத் தமது வாயினால் திருப்பி நாயைக் கடித்தவர் இவ்வுலகத்தில் இல்லைஅதுபோல;  நீர்த்து அன்றிக் கீழ் மக்கள் கீழாய சொல்லியக்கால் - கீழ்மக்கள் தகுதி அற்ற தாழ்வான சொற்களைத் தம்மைக் குறித்துச் சொன்னால்சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு - மேன்மக்கள் தம் வாயினால் திருப்பி அத் தாழ்வான சொற்களையே சொல்வார்களோ? (கீழ்மக்களுக்கு எதிராக மேன்மக்கள் ஒருகாலும் தாழ்வான சொற்களைத் திருப்பிச் சொல்ல மாட்டார்கள்.)

 

     சான்றாண்மைக்கு உரிய நல்ல குணங்கள் குறித்துபதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "இன்னிலை" இலக்கணம் கூறுமாறு காண்க.

 

"நல்லினம் சாரல்,நயன்உணர்தல்,பல்லாற்றான்

நல்லினம் ஓம்பல். பொறை ஆளல்,- ஒல்லும் வாய்

இன்னார்க்கு இனிய புரிதல்,நெறிநிற்றல்

நல்நாப்பண் உய்ப்பதோர் ஆறு.              --- இன்னிலை.

 

இதன் பொருள் ---

 

     நல் இனம் சாரல் - நல்லோர் கூட்டத்தைச் சேர்ந்து இருத்தலும்,  நயன் உணர்தல் - நல்ல வழிகளை அறிவதும்பல் ஆற்றான் நல் இனம் ஓம்பல் - பலவழிகளாலும் நல்லொழுக்கம் உடையவர்களையே காத்தலும்பொறை ஆளல் - பொறுமை என்னும் குணத்தைக் கொள்வதும்இன்னார்க்கு ஒல்லும் வாய் இனிய புரிதல் - பகைவர்க்கும் காலம் வாய்த்தபோது நன்மையான செயல்களைச் செய்வதும்நெறி நிற்றல் - நல்லொழுக்க நெறியில் நின்று வாழ்வதும்நாப்பண் உய்ப்பது ஓர் ஆறு - மேல் உலகத்தில் சேர்ப்பதற்குரிய ஒரு வழியாம்.

 

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்" 

 

என்று திருவள்ளுவ நாயனார் அருளியதும் இங்கு வைத்து எண்ணத் தக்கது.

 

     கூடுதல் செய்தி --- கப்பல் ஓட்டிய தமிழர் என்றும்செக்கு இழுத்த செம்மல் என்றும் போற்றப்படும் அமரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கிதிருக்குறள் முதலான அரிய நூல்களுக்கு விளக்கம் எழுதியவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "இன்னிலை" என்னும் நூலுக்கும் உரை விளக்கம் கண்டுள்ளார் என்பது அறிந்து இன்புறத் தக்கது.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...