கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்

 


கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்

-----

 

     கண்ணுக்கு அழகு தருவது எதுஎன்று வினவினால்கருவிழி என்றும்பெண்களாக இருந்தால்கண்ணுக்குத் தீட்டும் நல்ல அழகிய கரிய மைதான் என்று பலரும் விடை கூறுவர். இன்னும் சொல்லப் போனால்படக் காட்சிகளில் வரும் நங்கையர் கண்கள் எத்தனையோ விதமாகச் செயற்கையாக அழகு செய்யப்பட்டு உள்ளதைக் காணலாம். அவர்களும் அவ்வாறு நீட்டிகுறைத்து, மைதீட்டி,அழகு செய்வதையே கண்ணுக்கு அணிகலம் என்று கருதுகிறார்கள்.

 

     ஒவியக் கலையில் மிகவும் புகழ் வாய்ந்த தமிழ் நாட்டின் பழைய ஓவியங்களை எடுத்துக்கொண்டால்கண்ணை எவ்வாறு அவர்கள் கருதினார்கள் என்பது நன்கு விளங்கும். ஒவியம் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றிய கவிதைக் கலையிலும் கூடக் கண் பலபடியாக வருணிக்கப்பட்டு உள்ளது. உலகத்தை ஈன்ற அன்னையாகிய தேவிக்கு அங்கயற்கண்ணி (மீனாட்சி) என்றே ஒரு பெயரைச் சூட்டியுள்ளார்கள். அதாவதுகயல்மீன் போன்ற அழகிய கண்ணினை உடையவள் என்ற பொருளில் இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது. 

     "கண்ணில் சிறந்த உறுப்பு இல்லைஎன்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "நான்மணிக்கடிகை" கூறும். "முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்வேன்" என்று தமது இருகண்களையும் இழந்து வருந்திய சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடினார். கண்களுக்கு ஏன் இத்துணைச் சிறப்புஎன்றகேள்வி எழலாம். கண்கள் முகத்திற்கு அழகு செய்கின்றன  என்பது உண்மையாயினும் புறத்தில் உள்ள பொருள்களை விளக்கம் கண்டு கொள்வதால் கண்கள் இன்றியமையாதவை ஆகின்றன. புறத்தில் உள்ள கண்களைக் கொண்டு காண்பது போலவேஅகத்தில் உள்ள கண்ணின் இன்றியமையாமையும் சொல்லப்பட்டது."அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்என்ற திருக்குறள்உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகளை முகமே எடுத்துக் காட்டும் என்று கூறுகிறது. இதற்கு உவமை கூற வந்த திருக்குறள், கண்ணாடியானது உள்ளே இருக்கின்ற பொருளை ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டுவது போலமுகமும் காட்டும் என்று கூறுகிறது. முகம் என்று சொல்லும் பொழுது கண்மூக்குகாதுகள் அடங்கிய முழுப் பகுதியையுமே குறிக்குமா வாய் பேச வரவில்லையானாலும் ஒன்றும் குறைவு இல்லை. மூக்கு மணத்தை நுகரமுடியாவிட்டாலும் ஒன்றும் குறைவு இல்லை. காதுகள் கேட்கவில்லையானாலும் கூடகருவியை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் கேட்கும் திறன் இல்லையானாலும் கவலைப்படுவதற்கு ஏதும் இல்லை. ஆனால்சிறந்த உறுப்பு என்று சொல்லப்பட்டும் கண் இல்லையானால் முகம் அழகு பெறாது. கண் இழந்த பின் வாழ்தல் மிகவும் சிரமம். மற்ற உறுப்புக்கள் இல்லையானால் பிறரை நாடி வாழவேண்டிய அவசியம் இல்லாமல் போகும். ஆனால்கண் இழந்தால் வாழ்வு இல்லை. 

     எவ்வளவு சிறந்த சிற்பமாயினும்கண் திறக்கப் படாவிட்டால்அச்சிற்பம் முழுத் தன்மை அற்றதாகவே கருதப்படும். கை கால் முதலிய ஏனைய உறுப்புக்கள் சிதைந்து விட்டாலுங்கூடச் சிற்பத்தின் அழகு குறையாமல் இருப்பதையும் ஏனைய உறுப்புக்கள் அனைத்தும் இருந்துகண் மட்டும் சிதைந்த வழிசிற்பம் அழகு இழந்து நிற்பதையும் காணலாம். எனவேஎண் சாண்  உடம்பிற்கும் கண்ணே பிரதானம்என்று சொல்லலாம்.

     விலங்கினங்களில் இருந்து மனிதன் வேறாகக் கருதப்படுவதற்கு முக்கியமான  பல காரணங்களுள் அவன் மனமும் ஒன்று. அறிவு முதலியவற்றால் அவன் உயர்வு உடையவன் என்று கருதப்பட்டாலும்அதனைக் காட்டிலும் சிறப்பாக மனஉணர்வைப் பெற்றுள்ளமையால்சிறந்தவன் என்று கருதப்படுகிறான். அறிவின் பயனாக ஆராய்ச்சி தோன்றுவது போலமனத்தில் கருணை அல்லது அன்பு என்பது தோன்ற வேண்டும். அன்பின் முதிர்ச்சியே அருள் என்று சொல்லப்படும். தொடர்பு உடையவர்களாகிய உறவினர் மாட்டுச் செல்வதே அன்புஎனப்படும். இது சாதாரண மக்களிடமும் காணப்படுகின்ற ஒரு பண்பாகும். இதன் முதிர்ந்த நிலை அருள் என்று சொல்லப்படும். தொடர்பு உடையவர்கள் அல்லாமல்இன்னார் இனியார் என்று பாராமல்அனைவரிடமும் செல்கின்றதே அருள். அன்பு நன்கு வளர்ச்சி அடைந்து அருளாகப் பரிணமிக்கின்றது என்ற உண்மையை "அருள்என்னும் அன்பு ஈன் குழவிஎன்று அழகாகக் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

     மனிதன் தன்னிடம் இயல்பாக அமைந்துள்ளமனிதத் தன்மையின் அடையாளம் ஆகிய அன்பை மேலும் மேலும் வளர்த்து,  தெய்வத் தன்மையின் அடையாளம் ஆகிய அருளாகப் பரிணமிக்குமாறு செய்வதே வாழ்க்கையில் கைக்கொள்ளவேண்டிய தலையாய கடமையாகும். ஒரு மனிதன் தன்பால் உள்ள அன்பை வளர்க்கின்றானா இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வதுஅன்பு உடையவன் என்று ஒருவன் தன்னை வாய் நிறையக் கூறிக் கொண்டாலும்உண்மையில் அவன் அன்பு அற்ற மரமாகவே இருத்தல் கூடும். எனவேதான் உள்ளத்திலுள்ள அன்பைஅதன் முதிர்ச்சியாகிய அருளைஅறிந்து கொள்வதற்கு ஏற்ற கருவியாகக் கண்ணைப் பயன்படுத்தினார்கள். "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

     கண்ணோட்டம் என்பது திருவள்ளுவருடைய கருத்துப்படி ஒவ்வொரு மனிதனுக்கும்  இருக்க வேண்டிய இன்றியமையாத குணங்களுள் ஒன்றாகும். மனித சமுதாயம் முழுவதற்கும் பொதுவானது கண்ணோட்டம் அல்லது இரக்கம் அல்லது அருள்காட்டுதல் என்னும் பண்பு. கண்ணோட்டம் என்னும் சொல்லுக்குகுற்றம் குறைகளை மறந்து அருளுதல் என்று பொருள்.

"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்அஃது இன்றேல்

புண் என்று உணரப் படும்"

என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

     கண்ணுக்குப் பூணும் நகை போன்றது கண்ணோட்டம். அது இல்லாவிட்டால்,அந்தக் கண் ஒரு புண் என்று உணரப்பட வேண்டும் என்கின்றார் நாயனார். கண்ணாகத் தோன்றினாலும்புலனைப் பற்றுதலாலும்நோய்களாலும் தன்னை உடையவனுக்குத் துயர் விளைத்தல் நோக்கி "புண் என்று உரணப்படும்" என்றார்.

 

     பிற நூலாசிரியர்களும் இதனை வலியுறுத்திப் பாடி உள்ளனர் என்பதை அறியலாம்.

 

"தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை

கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி."                   ---  நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     தண்ணீர் நில நலத்தால் --- தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும்தக்கோர் குணம் கொடையால் --- நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் --- கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும்பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் --- பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும்கடல் சூழ்ந்த வையகத்துள் --- கடல் சூழ்ந்த பூமியினிடத்துஅற்புதம் ஆம் --- வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும்,என்று அறி --- என்று நீ அறிவாயாக.

 

            நில நன்மையினாலே தண்ணீருக்கும்கொடையினாலே நல்லோருக்கும்அருளினாலே கண்களுக்கும்கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.

 

"கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம், காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்

குறி உடையோர் கண்ணே உள."  --- திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் --- கண்களுக்குஅணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்;காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை --- கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி --- உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவுஇ மூன்றும் --- ஆகிய இம் மூன்றும்குறி உடையார் கண்ணே உள --- ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டுள.)

 

      கண்ணோட்டத்தால் கண்ணும்நாணத்தால் பெண்ணும்கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது.

 

       ண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமைஅது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி. கண்ணோட்டம் காரண ஆகுபெயர். நாணம் - பெண்கட்கு உரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன.  சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.

 

"கண்வனப்புக் கண்ணோட்டம்கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் -பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல்கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு."--- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் --- 

 

     கண் வனப்பு கண்ணோட்டம் --- கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் கண்ணோடுதலாம்; கால் வனப்பு செல்லாமை --- கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம்;

எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் --- ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தலாம்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் --- இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தலாம்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் --- புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவதுதனது நாட்டிலுள்ள குடிகளைஇவன் வருத்தா மாட்டான்இவனுடைய ஆட்சி நல்லதுஎன்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாம்.

 

"பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும்

     பணிந்து பசுபதியை நோக்கி

மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் 

     கோடையினும்,மதியம் போன்றான்;

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் 

     கண் ஆவான் இவனே அன்றோ?

'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்

     என்பது எல்லாம் கருணை அன்றோ?"  

                       --- வில்லிபாரதம்அருச்சுனன் தவம்.    

இதன் பொருள் ---

 

     பண் --- கல்லணைஉக்கு --- அறுந்து விழும்படிவாம் --- தாவி ஓடுகின்றபரி --- குதிரை பூட்டியதேர் --- இரதத்தை உடையஆதவனும் --- சூரியனும்பசுபதியை நோக்கி --- பரமசிவனைக் குறித்துபணிந்து --- வணங்கிமண்ணுக்கு --- (பாசுபத அத்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுதவம் புரியும் --- தவம் செய்கின்றதனஞ்சயற்கு --- அருச்சுனனுக்குகோடையினும் --- வெயிற்காலத்திலும்மதியம் போன்றான் --- சந்திரனை ஒத்துக் குளிர்ந்து இருந்தான்; (ஏனெனில்)எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் --- (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும்கண் ஆவான் --- கண் ஆகுபவன்இவனே அன்றோ --- இச் சூரியனேயாம் அன்றோகண்ணுக்கு --- நேத்திரத்துக்குபுனை மணி பூண் --- அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்பது எலாம் --- என்று சொல்லுவது எல்லாம்கண்ணோட்டம் --- (பிறர்மேற்) கண்சென்றவிடத்து உண்டாகின்றகருணை அன்றோ --- கிருபையையே அன்றோ?

 

    "கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது பிரசித்தமாதலால்உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவஞ்செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார்.

     திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள் உண்டு. தமிழ் நாட்டில் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற சேரமன்னன் ஒருவன் இருந்தான். அவன் கண்ணோட்டத்திலும் சிறந்து விளங்கினான். ஒரு முறை அவனைக் காண மோசிகீரனார் என்ற புலவர் வந்தார். அந்நிலையில் அரசன் வெளியே சென்றிருந்தான்அவனுடைய முரசம் வைக்கப்படுகின்ற முரசு கட்டில் காலியாய் இருந்தது. முரசு கட்டிலில்முரசத்தைத் தவிர வேறு ஒருவருடைய கை அல்லது கால் படுமேயானால்அதற்குத் தண்டனை உடனே அந்தக் கையும் காலும் வெட்டப்படுவதுதான். இந்த உண்மையை அறியாத மோசிகீரனார் மெத்தை விரித்திருந்த அந்தக் கட்டிலைக் கண்டவுடன் களைப்பு மேலிட்டவராய் அதன்மேல் படுத்து உறங்கிவிட்டார். வெளியே சென்றிருந்த அரசன் அரண்மனையின் உள் நுழைந்தான்.  புலவர்முரசு கட்டிலில் உறங்குவதைக் கண்டான். முரசு கட்டிலில் ஏறியவர்களைக் கொன்று விடவேண்டும் என்ற அரசநீதியை மன்னன் மறந்துவிட்டான்காரணம் அவனது உள்ளத்தில் இரக்கம் மேலிட்டு இருந்தது.  களைத்து வந்த ஒரு புலவர் பெருமகனார் தனது முரசுக் கட்டிலில் உறங்குவது தனது பாக்கியம் என்று கருதிஉடனே மயில் தோகை விசிறியை எடுத்துக் கொண்டு வந்து புலவருக்கு விசிறத் தொடங்கி விட்டான்விழித்து எழுந்த புலவர்அரசன் செயலைக் கண்டார். "ஆராயாமல் இப்படுக்கையில் ஏறிய என்னை இரண்டாக வெட்டித் தள்ளுவதை விட்டுவிட்டு உன்னுடைய பெரிய தோள்களால் குளிர்ச்சி பொருந்த விசினாயே!  இந்தக் கண்ணோட்டம் எனக்கு மட்டும் காட்டப்பட்டதாக நான் கருதவில்லை. அதற்குப் பதிலாக நான் கற்ற தமிழுக்கே இதனை நீ காட்டினாய் என்று கருதுகிறேன்"என்ற கருத்தில் பாடினார்.

"மாசு அற விசித்த வார்புறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்

குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்

நுரைமுகந்து அன்ன மென்பூஞ் சேக்கை

அறியாது ஏறிய என்னைத் தெறுவர

இருபால் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுது அறிதல்,

அதனொடும் அமையாது அணுக வந்துநின்

மதன்உடை முழவுத்தோள் ஓச்சித் தண்என

வீசியோயே! வியல் இடம் கமழ

இவண் இசை உடையோர்க்கு அல்லது,வணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே."   --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

     நன்றாக வார் கொண்டு இறுக்கிக் கட்டிகருமரத்தால் இருபுறமும் அழகுற அமைத்துஅழகிய மயில் தோகை சூட்டிநீலமணி மாலையும்பொன்னால் செய்த உழிஞைப் பூவும் அணிவித்துப் பாதுகாத்து வைத்து இருக்கும்வீரப் போரை விரும்பும்குருதி பலிகொள்ளத் துடிக்கும் உனது வீரமுரசுமங்கல நீராட்ட எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதை அறியாதுஎண்ணெய் நுரை தெளித்ததைப் போல்மெல்லிய பூக்கள் சிதறிக் கடந்த அந்த முரசுக் கட்டிலின்மேல்அறியாது படுத்து உறங்கிவிட்ட என்னைவாள் கொண்டு வெட்டிக் கொல்லாமல் விட்டாய். நீ தமிழ் அறிந்த பெருமைக்கு இதுவே சான்றாகும். அதுவும் அல்லாமல் கோபம் கொள்ள வேண்டிய நீஎன்னை நெருங்கி வந்துஉனது அழகிய மணித்தோள் கொண்டு என் மேல் குளிர்ந்த காற்றுப் படுமாறு எனக்குக் கவரி வீசினாய். வெற்றிப் புகழ் உடைய வேந்தனே! இவ்வுலகில் நிலையான புகழை உடையோர்க்கு அல்லது மற்றவர்க்கு அவ்வுலகத்தின் நிலைத்த பேரின்பம் கிட்டாது என்பதை எடுத்துக் காட்டவோ நீ இவ்வாறு செய்தாய்.

 

     இத்தகைய வரலாறுகளை நினைந்துதான் போலும்திருவள்ளுவ நாயனார்,

 

"பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்?"

 

என்று அருளிச் செய்தார்.

 

     "இசையானது பாடல் தொழிலோடு பொருந்துவது இல்லையாயின், அது என்ன பயனைச் செய்யும்? அதுபோல,கண்ணானது கண்ணோட்டம் இல்லாதபோது என்ன பயனைச் செய்யும்?" என்கின்றார் நாயனார்.இசையானது கேட்போர் மகிழும்வண்ணம் பாடப்படுதல் வேண்டும். பொருத்தம் இல்லாத பண் ஒன்றினால் பாடுகின்ற பாடல் பாடுகின்றவருக்கும் கேட்போர்க்கும் பயன்படாது. அதுபோல,மனிதனுக்குக்கண் இருந்தால், கண்ணோட்டம் இருக்கவேண்டும். அது இல்லையானால், கண்ணால் பயன் இல்லை.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...